05

05

ரஷ்ய விமானம் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் – 4 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை இழக்கும் நிலையில் இலங்கை !

ரஷ்யாவின் ‘ஏரோபுளோட் ‘ விமானம் ஒன்றினை இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி உருவாகியுள்ள நிலைமையை அடுத்து ரஷ்ய சுற்றுலா பயணிகள் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்யர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்  புட்டினின் உத்தரவுக்கு அமைய அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று முற்பகல் 10.10 மணிக்கு வெறுமையாக கட்டுநாயக்கவை வந்தடைந்த ரஷ்ய விமானம் பிற்பகல் 12.50 மணிக்கு மேலும் 275 சுற்றுலா பயனிகளை ரஷ்யா நோக்கி அழைத்து சென்றுள்ளது.

இவ்வாறான நிலையில், இலங்கைக்கு சுற்றுலா வர எதிர்ப்பார்த்திருந்த சுமார் நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகளை இலங்கை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக சுற்றுலாத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தாயின் காதலனால் சிறுமி கர்ப்பம் – பாதுகாப்பற்ற நிலையில் இலங்கை சிறுவர்களின் எதிர்காலம் !

15 வயதுடைய மகளை வன்புணர்வு செய்த தாயின் காதலன் புத்தளை பொலிசாரால்  இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்னர், அவரது தாயார் அப்பகுதியைச் சேர்ந்த வேறொரு நபருடன் வசித்து வந்துள்ளார். அவர் சிறுமியை பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

வயிற்றில் வலி இருப்பதாக கூறி இன்று வைத்தியசாலை சென்ற சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தனர்.

மேலும் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி நீதித்துறை மருத்துவ அதிகாரிகளிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, 44 வயதான சந்தேக நபர் வெல்லவாய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

………………………..

இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்ச்சியாக கேளவிக்குள்ளாகி வருகின்ற நிலையில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக பாலியல் துஷ்பிரயோகங்கள் வெளி நபர்களிலிருந்து ஏற்படுவதை விட  தெரிந்த – பழகிய குடும்ப உறவினர்கள் – குடும்ப நண்பர்களினாலேயே ஏற்படுகின்றது. பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர்கள் ஆகக்கூடிய கவனம் எடுப்பதும் – பிள்ளைகளுக்கு நல்ல தொடுகை – தவறான தொடுகை என்பவற்றை அடையாளப்படுத்தி காட்டுவதும் – பிள்ளைகளுடன் பெற்றுார் நல்ல புரிதலுடனான தொடர்பை பேணுவதுமே பிள்ளைகளை பாதுகாக்க உள்ள ஒரே வழி.

நீரிழிவு நோயாளிக்கு அதிக சீனி உள்ள உணவை வழங்குவது போல் செயற்படும் ரணில். !

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் மத்திய வங்கியின் சுயாதீனத் தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என மத்தியவங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன வலியுறுத்தி உள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக ஆராயும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்றுக் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.

மேலும் அவர் மத்திய வங்கி மீதான எந்தவொரு தலையீடுகளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை வலுவிழக்கச் செய்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

ஊழியர்களுக்கான கொடுப்பனவை இடையூறின்றி மேற்கொள்வதற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை அச்சிடவேண்டும் என்று பிரதமர் வெளியிடப்பட்ட கருத்து பல்வேறு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த நடவடிக்கையானது நீரிழிவு நோயாளிக்கு சீனி அதிகளவில் உள்ள உணவை வழங்குவதைப் போன்ற ஒரு செயற்பாடு என்றும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மத்திய வங்கியின் மீதான அநாவசிய தலையீடுகள், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

21 ஆவது திருத்தம் தொடர்பில் ஒரு முடிவுக்காக ஒன்று கூடுகின்றன தமிழ் கட்சிகள் !

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் குறித்து ஒருமித்த முடிவை எட்டுவதற்காக தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளன.

நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள குறித்த கலந்துரையாடல் இணைய வழி ஊடாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், டெலோ, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி என்பன கூடி இது குறித்து கலந்துரையாடியிருந்தன.

இருப்பினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும் கூட்டத்தில் எட்டப்படும் முடிவுகளை வைத்து தாம் ஒரு இணக்கப்பாட்டிருக்கு வர அன்றைய தினம் முடிவு செய்தனர்.

அதன்படி பிரதமர் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தில் 21 ஆவது திருத்தம் குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

எனவே நாளை கூடவுள்ள தமிழ் கட்சிகள், 21 ஆவது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடி தமது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியிலும் முழுமையாக விற்றுத்தீர்ந்த கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு – இலங்கையில் யாருக்கு பொருளாதார நெருக்கடி..?

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ரி20 போட்டிகளுக்குமாறு அனைத்து நுழைவுச் சீட்டுக்களும் விற்றுத் தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இரண்டு போட்டிகளுக்குமான அனைத்து நுழைவுச் சீட்டுக்களும் விற்றுத் தீர்ந்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி எதிவரும் 7 ஆம் திகதியும், இரண்டாவது ரி20 போட்டி 9 ஆம் திகதியும் கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
…………………………………………………………………….
இலங்கையில் ஒரு பக்கமாக பொருளாதார நெருக்கடி – மக்கள் ஒரு நேர உணவுக்கு கஷ்டப்படகிறார்கள் என ஒரு பக்கத்தால் பேசப்பட்டுக்கொண்டிருந்தாலும் கூட இவ்வாறு எல்லா டிக்கெட்டுக்களும் விற்கப்பட்டுள்ள தன்மையானது எல்லோருக்குமே உண்மையாக பொருளாதார நெருக்கடியா..? என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கே.ஜி.எப், பீஸ்ட் எனும் எனும் தென்னிந்திய திரைப்படங்கள்  வெளியாகியிருந்த போது வடக்கு – கிழக்கில் கூட்டம் குவிந்திருந்ததது. அப்படியான ஒரு கூட்டம் அலைமோதியது.

பெற்றோல் செட்களில் கூட்டமாக நிற்பதையும் – எரிவாயுவுக்காக வரிசையில் நிற்பதையும் வைத்து இலங்கையில் பொருளாதார நெருக்கடி என சாதாரணமாக கடந்து விடுகிறோம். உண்மையில் இந்த பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பது மத்தியதரவர்க்க குடும்பங்கள் அல்ல. மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த சொற்பமான குடும்பங்களும்  அதிகமான சாதாரண – ஏழைக்குடும்பங்களுமே அதிகம் இந்த பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மக்களையே அரசாங்கம் அடையாளம் கண்டு வறுமையை போக்க உதவி செய்ய வேண்டும்.

 

அப்படியானால் போராடுவது யார்..? மூன்று வேளையும் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உடைய குடும்ப பின்னணி உள்ளவர்களும் – அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் குழுக்களுமே போராட்ட களத்தில் உள்ளன.

 

தினசரி வேலைக்கு சென்றால் மட்டுமே சாதாரண ஏழை குடும்பங்களின் வீடுகளில் அடுப்பு எரியும். இந்த மக்களை நோக்கியே ஊடகங்களின் பார்வையும் திரும்ப வேண்டும். இந்த பொருளாதார நெருக்கடியால் தினம் தினம் அழுது வாடிக்கொண்டிருப்பது இந்த ஏழைக்குடும்பங்களே. இவர்களை திருப்திப்படுத்த நடவடிக்கை எடுக்காது சமூக வலைத்தளங்களிலும் – காலி முக்த்திடலிலும் போராடிக்கொண்டிருப்போரை திருப்பதிப்படுத்த அரசாங்கம் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.

அடித்தட்டு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்வரை ஒரு நாட்டின் அபிவிருத்தி சுட்டி சுழியமாகவே இருக்கும் – இந்த நிலையே தொடரும்.

ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினை – சஜித்பிரேமதாச விசனம் !

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினையை கையாளும் முறை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை கண்டித்துள்ளார்.

நாட்டின் சுற்றுலா துறையின் பிரதான ஆதாரமாகவும், இலங்கையின் தேயிலை ஏற்றுமதியின் பிரதான ஏற்றுமதித் தளமாகவும் ரஷ்யா விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இராஜதந்திர மட்டதிற்கு செல்லும் முன்னர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் ஏன் தலையிடவில்லை என்றும் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

நிலைமையை மோசமாக்க அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் தனது திறமையின்மையை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இதனால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் கடுமையாக சாடினார்.

உணவுப்பற்றாக்குறையால் 20வீதமான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு !

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 20% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறையே போஷாக்கின்மைக்குக் காரணம் எனக் கூறப்பட்டாலும், குழந்தைகளுக்கு அதிகளவு காய்கறிகளை உண்ணக் கொடுத்தால் இந்த நிலைமையைத் தவிர்க்க முடியும் என மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

“கடந்த வாரம் மருத்துவமனையின் வார்டு எண் 02 இல் 53 குழந்தைகளை பரிசோதித்தோம். அவர்களில், 20% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என்பதை நாங்கள்அறிந்தோம். அவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது ஒரு சவாலான சூழ்நிலை.

“குழந்தைகள் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் மற்றும் விற்றமின்கள் தேவையான அளவுகளில் பெறாததே இதற்குக் காரணம். குழந்தை பிறந்து 6 மாதங்களுக்குப் பிறகு, குழந்தைக்கு ஊட்டச்சத்தை வழங்க தாய்மாருக்கு தாய்ப்பால் போதுமானதாக இல்லை, எனவே தாய்மாருக்கு சில உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.

ரஷ்ய விமானம் இடைநிறுத்தப்பட்ட சம்பவம் – அமெரிக்காவை திருப்திப்படுத்த முனைகிறதா ரணில் தரப்பு..?

நேற்றைய தினம் இலங்கை ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்ட முக்கியமான விடயம் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனத்தின் விமானத்தை இலங்கை இடைநிறுத்தியிருந்த விடயமாகும். அடுத்தடுத்த சர்வதேச ஊடகங்கள் கூட இது தொடர்பில் செய்திகளை அதிகம் வெளியிட்டிருந்தன.

2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி இலங்கையில் விமான சேவையை ஆரம்பித்த ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் எட்டு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.

குத்தகை நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2ஆம் திகதி, ரஷ்ய விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு 16 ஆம் திகதி வரை அமுலில் உள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு மொஸ்கோவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகேவை வரவழைத்து விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் உதவியை இலங்கை முன்னதாக எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ரணில் விக்கிரமசிங்கவின் வருகையுடன் சர்வதேசநாணய நிதியத்தையும் – மேற்கத்திய நாடுகளையும் மையப்படுத்திய வகையில் இலங்கை நகர ஆரமப்பித்துள்ளதன் எதிரொலியாகவே இந்த சம்பவத்தை பார்க்க முடிகிறது. ரஷ்ய எதிர்ப்பு கொள்கையை பின்பற்றி மேற்கத்திய – முக்கியமாக அமெரிக்க – பிரித்தானிய நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள இலங்கை நகர்வது போல தோன்றுகிறது.

இந்த வருடம்  மகிந்த பிரதமராக இருந்த போது ரஷ்ய – உக்ரைன் விவகாரம் தொடர்பில் எந்த பக்கமான முடிவையும் எங்களால் எடுக்க முடியாது என இலங்கை குறிப்பிட்டிருந்ததது.இந்த நிலையில் ரணில் பிரேமதாசவின் வருகையை தொடர்ந்து ரஷ்யாவுடனான நட்பு நிலை மேலும் விரிசல் நிலையை எட்டியுள்ளது.

எரிபொருள் உதவி முன்னதாக கோரப்பட்ட நிலையில் அது தொடர்பில் இன்று பேச்சே இல்லை. இதனை அண்மையில் ஜே.வி.பி சுட்டிக்காட்டியிருந்ததது. இதன் அடுத்த கட்டமாக ரஷ்யவிமானம் இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த போக்கு தொடருமாயின் ரஷ்யாவுடனான உறவு வெளியுறவுக்கொள்ளை மிக வேகமாக பாதிக்கப்படவாய்ப்புள்ள அதே நேரம்  தீவிரமாக இலங்கை மேற்கத்திய நாடுகளுக்கு வளைந்து கொடுப்பதானது இலங்கை அமெரிக்காவி்ன் கைப்பொம்மை ஆவதற்கான இன்னும் கூடுதல் வாய்ப்புக்களை ஏற்படுத்தும். சர்வதேச நாணய நிதியம் – உலக வங்கி போன்றவற்றின் கடன்கள் பிரச்சினைகளை தீரப்பது போல தோன்றினாலும் அவை அப்படி இல்லை.  இன்னுமொரு கிரீஸ் ஆக இலங்கை மாறிவிடும் என பல தரப்பினரும் எச்சரித்தும் வருகின்றனர்.