“தமிழ் தேசமும் சிங்கள தேசமும் சேர்ந்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டு ஒரு முற்போக்கு பாதைக்கு இட்டுச்செல்வதற்கு சிங்கள தேசம் முன்வரவேண்டும்.” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, படுவான்கரை பகுதியை உலுக்கிய மகிழடித்தீவு படுகொலையினை நினைவு தினம் இன்று (14) அனுஷ்டிக்கப்பட்டது.
1987 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி இறால் வளர்ப்பு பண்ணையில் இடம்பெற்ற படுகொலையும், 1992 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி இடம்பெற்ற மகிழடித்தீவு படுகொலையும் சேர்த்து ஏறக்குறைய 180 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களை நினைவுகூரும் வகையில் வருடாந்தம் இந்த நினைவு தினம் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் பங்களிப்புடன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது..
இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுரை நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
தமிழ் தேசத்திற்குரிய நீதிக்கான போராட்டத்தினை தீவிரப்படுத்தியுள்ள இந்த சூழலில் தமிழினப் படுகொலை நடைபெற்ற இந்த வாரத்தில் இலங்கை அரசாங்கம் தனது நாட்டின் வங்குரோத்து தன்மையினை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தங்களது இனத்துக்கு மட்டும் தான் இந்த நாடு என நினைத்து தமிழினத்தை அடக்கியொடுக்கி அழிப்பதற்கு எடுத்த முயற்சியின் ஒட்டுமொத்த சுமைதான் ஒட்டு மொத்த பொருளாதாரத்தினையும் அழித்து வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்றாவது சாதாரண சிங்கள அப்பாவி மக்கள் தங்களது தலைவர்கள் செய்த அநியாயங்களை இனவாத அடிப்படையில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அநியாயங்களை இன அழிப்பினை சரியான வகையில் புரிந்து கொண்டுள்ளனர்.
இனவாதத்தினை காட்டி தனது சொந்த தேசத்தின் சொத்துகளை சூறையாடி தங்களது நலனைமட்டும் பேணிய தலைமைத்துவங்கள் 74 வது ஆண்டுக்கு பின்னர் அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த உண்மையினை சாதாரண சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ் தேசத்தின் இருப்பினை அங்கீகரித்து, தமிழ் தேசமும் சிங்கள தேசமும் சேர்ந்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டு ஒரு முற்போக்கு பாதைக்கு இட்டுச்செல்வதற்கு சிங்கள தேசம் முன்வரவேண்டும். அவ்வாறான ஒரு அடிப்படையான மாற்றம்வரும் போது தான் இந்த இலங்கை தீவின் முழுமை அடையக்கூடியதாகயிருக்கும்.
இலங்கை அரசு வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் உழைப்பு இலங்கை அரசின் உழைப்பினைவிட அதிகமாகவுள்ள நிலையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த தமிழ்தேசத்தின் இருப்பினை உறுதிப்படுத்தக்சுகூடிய வகையில் இலங்கையின் அமைவினை மாற்றியமைப்பதன் ஊடாக சிங்கள தேசமும் தமிழ் தேசமும் இணைந்து இந்த நாட்டினை ஆக்கபூர்வமான வகையில் கட்டியெழுப்புவதற்கு தமிழினம் தயாராகயிருக்கின்றது என்று கூறினார்.
………………………………………………………………………
தமிழ் மக்களை இப்படியான கஜேந்திரகுமார் போன்ற தலைவர்கள் தான் இன்னமும் முட்டாள்களாக்கி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் எந்தகாலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை தான். அதற்காக தமிழர்களின் சாபம் நாட்டை இப்படி ஆக்கிவிட்டது எ்ன்பதெல்லாம் எந்த வகையிலான புரிதல் என்பதே தெரியவில்லை. இந்த பொருளாதார நெருக்கடியினால் சிங்கள மக்கள் படும் அதேயளவு துயரத்தை தமிழர்களும் தான் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் தான் இந்த பொருளாதார நெருக்கடியினாலும் சிதைந்து சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சொல்வது போல் விதி வலியது தான் எனின் சிங்கள மக்களை மட்டும் தாக்க வேண்டியது தானே இந்த விதி.., மக்களை இன்னமும் முட்டாள்களாக்கி வைத்திருப்பதில் தமிழ்தேசிய தலைவர்களுக்கு அவ்வளவு அக்கறை.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை கவனித்து தமிழ் மக்களுடைய பொருளாதார தேவைக்காக என்ன செய்கிறார்கள் – செய்தார்கள் இந்த தமிழ்தேசிய தலைவர்கள்..? மக்களிடையே சுயதேவை உற்பத்தியை முன்னெடுக்க என்ன திட்டங்களை முன்மொழிந்துள்ளார்கள்..? எதுவுமேயில்லை. இந்த தமிழ்தேசியமும் இல்லாது விட்டால் இவர்களுக்கு ஒன்றுமே இல்லை என்பதே உண்மை.
இது போக முன்னணியினர் இன்னமும் போலித்தேசியம் பேசிக்கொண்டிருப்பதில் காலத்தை வீணடிக்கிறார்களே தவிர மக்களை அரசியல்மயப்படுத்த முனையவில்லை என்பதே வருத்தமான உண்மை. சட்டத்தரணி மணிவண்ணனை ஒதுக்கி விட்டு இவர்கள் செய்யும் அரசியலே இவர்களுடைய தராதரத்தையும் – தமிழ்தேசிய உணர்வையும் படம்பிடித்து காட்டுகின்றது. அரச தேர்தலை புறக்கணியுங்கள் என கூறிய இதே நபர்கள் தான் இன்று பாராளுமன்றிலும் அங்கத்துவம் பெற்றுள்ளார்கள்.
மக்கள் உணர்ச்சிவசப்படும் அரசிலயலுக்கு முக்கியத்துவம் கொடுக்காது சிந்தித்து செயற்படும் நிலைக்கு மாறவேண்டியதே இப்போதுள்ள ஒரே வழி. மக்கள் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்யாத – மக்களுக்கான தலைவர்களை தேர்வு செய்வது அவசியமாகிறது.
தமிழ் மக்கள் சுதாகரிக்காது விட்டால் இதே நபர்கள் தான் தொடர்ந்தும் எங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கப்போகிறார்கள்.
விழித்துக்கொள்ளுங்கள் மக்களே..!