21

21

“நாடாளுமன்றில் இருப்பதில் எந்த பயனுமில்லை. நான் போகிறேன்.”- வடிவேல் சுரேஷ் ஆவேசம் !

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையால் மலையக மக்களுக்கு உண்பதற்கு கூட வழியில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சபையில் உரையாற்றிய வடிவேல் சுரேஷ்,

இந்த நாட்டுக்கு டொலர்களை கொண்டுவந்தவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள். அவர்கள் பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அவர்களுக்கு சாப்பிட இல்லை. எரி​வாயு இல்லை, பெட்ரோல் இல்லை. பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு போக முடியவில்லை. ஆக, இந்த சபையில் இருப்பதில் எவ்விதமான பிரயோசமும் இல்லையெனத் தெரிவித்த அவர், நான் வெளியேறுகின்றேன் எனக் கூறி சபையில் இருந்து வெளியேறினார்.

“சிங்களவர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு. .” – நாடாளுமன்றில் இனவாதத்தை தூண்டும் வகையில் சரத் வீரசேகர பேச்சு !

இலங்கையில் சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை இருப்பதாகவும், அதனை கேலிக்குட்படுத்தவேண்டாம் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(21) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமையை தாம் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரபாகரனின் கட்சி எனவும் தெரிவித்த அவர் கோணகல கிராமத்தில் 54 சிங்களவர்கள் கொல்லப்பட்டபோது, கொழும்பில் இந்து மத வேல் திருவிழா இடம்பெற்றிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் வடக்கில் பௌத்த நடைமுறைகளுக்கு கௌரவம் வழங்கப்படவில்லை.அண்மையில் நாகவிஹாரையில் புத்த பெருமான் சிலையை நிறுவுவதற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சின்னங்கள் பல நூற்றாண்டுளுக்கு முற்பட்ட பௌத்த சின்னங்களாகும். கடந்த 9ஆம் திகதி குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர் பாரிய தடைகளை ஏற்படுத்தினர்.

இவர்களால், அழைத்து வரப்பட்டவர்கள் கிராம மக்கள் அல்லர் என குற்றம் சுமத்திய அவர், அவர்கள் ஏனைய பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

……………………………..

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இனங்கள் சார்ந்த ஒற்றுமை வளர்ந்து வரும் நிலையில் சரத்வீரசேகர போன்ற இனவாத அரசியலை வைத்து மட்டுமே அரசியல் செய்வோரின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிக்கொண்டிருக்கிறது. மேலும் ராஜபக்சக்கள் செய்த எல்லா சர்வாதிகார ஏற்பாடுகளுக்கு பின்னும் வீரசேகரவினுடைய ஆதரவும் காணப்பட்டது. இந்த நிலையில் இவர்கள் ஆட்சி வீழ்ச்சி அடைய ஆரம்பித்துள்ள நிலையில் மீண்டும் இனவாதத்தை கையெிலெடுக்க ஆரம்பிபத்துள்ளது சிங்கள ஆளுந்தரப்பு.

மக்கள் இவர்களின் மாயவலைக்குள் சிக்கிவிடாது தெளிவாக இருக்கவேண்டும்.

 

15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் தம்பி !

மட்டக்களப்பு வந்தாறு மூலை பகுதியிலுள்ள காணி ஒன்றின் அனுமதியை பெறுவதற்கு அதன் உரிமையாளரிடம் 15 இலட்சம் ரூபா இலஞ்சமாக வாங்கியதாக தெரிவித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சகோதரர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட இருவரை இன்று செவ்வாய்க்கிழமை (21) ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.

வந்தாறு மூலை பிரதேசத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரின் காணியை பிரித்து விற்பனை செய்யப்பட்டு அதில் மக்கள் குடியேறியுள்ளனர். இந்த காணியை வாங்கிய மக்கள் பிரதேச சபையில் வீடு கட்டுவதற்கான அனுமதியை பெறுவதற்கு சென்றால் அங்கு கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரனின் சகோதரரான சதாசிவம் மயூரன் அவர்களிடம் இந்த காணி போலி என கூறி அனுமதி வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர்;.

இந்த நிலையில் காணி விற்பனை செய்த காத்தான்குடியை சேர்ந்தவரிடம் காணியை வாங்கிய மக்கள் சென்று இந்த காணி உறுதி போலியானது என அனுமதிவழங்க முடியாது என குறித்த நபர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து காணியை விற்பனை செய்தவர் அமைச்சரின் சகோதரரிடம் குறித்த காணியை சட்டரீதியாக நாங்கள் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரிடம் வாங்கி எமது பதிவு செய்யப்பட்ட கம்பனி ஊடாக இதனை சிறு சிறு பகுதிகளாக விற்பனை செய்துவருவதாக தெரிவித்த நிலையில் அமைச்சரின் சகோதரரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து பிரதேச சபையில் அனுமதி வழங்க 20 இலட்சம் ரூபா இலஞ்சமாக வழங்குமாறு அவரிடம் கோரியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த காணியை விற்பனை செய்த காத்தான்குடியைச் சேர்ந் நபர் கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவுடன் தொடர்பு கொண்டு அறிவித்ததன் பிரகாரம் அவர்களின் ஆலோசனையின்படி சம்பவதினமான இன்று மாலை 6.30 மணிக்கு இலஞ்சம் கோரியவர்களிடம் கோரிய 15 இலச்சம் ரூபா பணத்தை தருவதாக தெரிவித்து மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வருமாறு தெரிவித்ததையடுத்து அவர்கள் குறித்த ஹொட்டலில் சென்று கோரிய 15 இலட்சம் ரூபா பணத்தை அமைச்சரின் சகோதரரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து காணி உரிமையாளரிடம் பெற்று அதனை சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

இதன் போது அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவழைத்து இருவரையும் கைது செய்ததுடன் இலஞ்சமாக பெற்ற பணத்தை மீட்டு மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பரபரப்பான ஆட்டத்தில் 4 ஓட்டங்களால் தொடரை வென்றது இலங்கை !

இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் தனது கன்னி சதத்தை பதிவு செய்த சரித் அசலங்க 110 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதன்படி, வெற்றி இலக்கான 259 என்ற ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் டேவிட் வோர்னர் 99 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பெட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் தனஞ்ச டி சில்வா சாமிக்க கருணாரத்ன மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதற்கமைய, 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

எரிபொருளை பெற இரண்டு நாள் காத்திருப்பு – மாரடைப்பால் ஒருவர் பலி !

பண்டாரகம பிரதேசத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள ஒன்றரை நாள் நீண்ட வரிசையில் காத்திருந்து வீடு திரும்பிய பின்னர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி பண்டராகமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக சென்று வீடு திரும்பிய பின்னரே குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் போது குறித்த நபர் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 42 வயதுடைய பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் தாக்கியதற்கு நட்ட ஈடு கேட்கும் விசுவமடு மக்கள் !

முல்லைத்தீவு, விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள இராணுவக் காவலில் இருந்த இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரன்பாடுகாரணமாக கடந்த 18 ஆம் திகதி இரவு விசுவமடுசந்தியில் பெரும் அமையின்மை ஏற்ப்பட்டது.

இதன்காரணமாக பொதுமக்கள் இராணுவத்தினர் மீது போத்தள்கள் வீசப்பட்டதையடுத்து இராணுவத்தினர் மேல் நோக்கி துப்பாக்கிபிரயேகம் மேற்கொண்டனர்.

மேலும், ஒருசிலர் மீது இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த சம்பவத்தின்போது இராணுவத்தினரின் செயற்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கான நஷ்டஈட்டினைப் பெற்றுத் தர வேண்டும் என்று மனித உரிமைகள் ஆனைக்குழுவிடம் தமது முறைப்பாட்டினை பதிவுசெய்யவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.