06

06

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல் – இலங்கைக்கு எத்தனையாவது இடம்..?

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தயாரித்த அண்மைய கடவுச்சீட்டு தரவரிசையின்படி, ஒவ்வொரு நாட்டின் கடவுச்சீட்டும் சக்திவாய்ந்ததாகக் கூறப்படுகிறது.இந்தத் தரவரிசையில் இலங்கைக்கு 83ஆவது இடம் கிடைத்துள்ளதுடன், இலங்கை கடவுச்சீட்டுடன் வீசா பெறாமல் 12 நாடுகளுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பும், விசா ஒன் அரைவல்(On Arrival) வசதியின் கீழ் 37 நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர் உலகெங்கிலும் உள்ள 147 நாடுகளுக்குள் நுழைவதற்கு முன்கூட்டியே விசாவைப் பெற வேண்டும்.
கடவுச்சீட்டு சுட்டெண் இணையத்தளத்தின் படி, இலங்கை கடவுச்சீட்டுடன் முன் வீசா பெறாமல் நுழையக்கூடிய நாடுகள் பின்வருமாறு:
1. பஹாமாஸ்
2. பார்படோஸ்
3. டொமினிகா
4. காம்பியா
5. கிரெனடா
6. ஹெய்ட்டி
7. லெசோதோ
8. செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
9. சிங்கப்பூர்
10. செயின்ட். வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
11. தஜிகிஸ்தான்
12. வெனிசுவெலா
இதேவேளை, கடவுச்சீட்டு தரவரிசையை நடத்தும் மற்றொரு நிறுவனமான ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் வெளியிட்டுள்ள The Henley Passport Index: Q2 2022 Global Ranking இன் படி, இலங்கை 103ஆவது இடத்தில் உள்ளது.
இன்று, உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) கடவுச்சீட்டு என்று கருதப்படுகிறது. இது அதனை வைத்திருப்பவர் விசா இல்லாமல் 115 நாடுகளில் நுழைய அனுமதிக்கிறது.

இலங்கையில் மூன்று வேளை உணவுக்கே திண்டாடும் குடும்பங்கள் – ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்

இலங்கையில் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக குடும்ப உறுப்பினர்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள சத்தான உணவை உண்பதற்காக இலங்கை குடும்பம் மாதம் ஒன்றுக்கு 93 ஆயிரத்து 675 முதல் ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 868 ரூபாய் வரை வருமானம் ஈட்ட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இலங்கை குடும்பம் ஒன்றின் சராசரி வருமானம் மாதாந்தம் 76 ஆயிரத்து 414 ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சனத்தொகையில் 20 வீதமான வறிய குடும்பங்களின் மாத வருமானம் 17 ஆயிரத்து 572 ரூபாய் எனவும் உத்தியோகபூர்வ தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

“திட்டம் எதுவுமேயில்லாமல் இருக்கும் ரணில் பதவி விலக வேண்டும்.” – தம்மிக்க பெரேரா

பிரதமர் ரணில் விக்கிரமங்க நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

“இன்று முதல் உண்மையிலேயே நானும் போராட்டத்திற்கு என்னை தயார்படுத்திக்கொள்கிறேன். நான் அரசாங்கத்தினுள் வந்து 7 நாட்கள் ஆகிறது. இதில் என்ன நடக்கிறது என்று பார்த்தேன். நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்க ஆடும் இந்த அரசியல் விளையாட்டை நிறுத்த வேண்டும். ஏனென்றால் டொலர்களைக் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டத்தையும் இவர் நிறுத்துகிறார்.

நாட்டின் பணப்புழக்கம் குறித்து அவரிடம் எந்த திட்டமும் இல்லை. மக்களுக்கு எப்படி உணவளிப்பது என்பது பற்றி அவரிடம் எந்த திட்டமும் இல்லை. டொலர்களை எப்படி கொண்டு வருவது என்பது பற்றியும் எந்த திட்டமும் இல்லை. இந்த நேரத்தில் அவர் மக்கள் பிரச்சனைகளை சொல்லிக்கொண்டு திரியாமல் நிதியமைச்சர் என்ற விதத்தில் செயற்பட வேண்டும். உண்மையில் எனக்கு பிரதமர் பதவியில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஏனென்றால் பத்து வருட மல்டிபிள் விசா ஒரு மாதத்திற்கு முன்பே தயாரிக்கப்பட்டு, அமைச்சரவையில் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இன்று ஒரு மாதமாக திறைசேரியில் வைத்துக் கொண்டுள்ளனர்.

ஏனென்றால் அவருக்கு ஒரு பழக்கம் உள்ளது, டொலர் வருவது என்றால் உடனே திட்டத்தை நிறுத்த வேண்டும்.

சூரியனை விட்டு தொலைவாகும் பூமி – குளிர் அதிகரிக்குமா..? – உடல் வலி ஏற்படுமா..?

கடந்த சில நாட்களாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையே தூரம் அதிகமாவதால் குளிர் அதிகரிக்கும் எனவும் இதனால் உடல் வலி, காய்ச்சல், சுவாசக் கோளாறு போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும் எனவும் தகவல்கள் பரவுகின்றன. இது முற்றிலும் பொய் என இந்தியாவின் அறிவியல் பலகை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் அவர் கூறிய போது,

ஒவ்வொரு வருடமும் பூமி நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகையில் ஒரு கட்டத்தில் சூரியனுக்கு மிக அருகிலும், மற்றொரு காலகட்டத்தில் சூரியனிலிருந்து தூரமாகவும் செல்லும். சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் அதனுடைய வட்டப்பாதையில் எப்போது சூரியனிடமிருந்து தூரமாக இருக்கிறதோ அந்நிகழ்வுக்குப் பெயர் அப்ஹீலியன். எந்த நேரத்தில் மிக அருகில் இருக்கிறதோ அதற்குப் பெயர் பெரிஹீலியன். கிரேக்க மொழியில் ‘அபோ’ என்றால் தூரம். ‘பெரி’ என்றால் அருகாமை. அதே போல் பூமி அதனுடைய சுற்றுப்பாதையில் சூரியனிடமிருந்து மிக அதிகமான தூரத்தில் இருக்கும்போது அதை அப்ஹீலியன் என அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.

பொதுவாக இந்த அப்ஹீலியன் நிகழ்வு ஜூலை மாதத்தில் நடக்கும். இந்த காலகட்டத்தில் சூரியனிடமிருந்து பூமி கிட்டத்தட்ட 152மில்லியன் (15.2 கோடி) கிமீ தூரத்தில் இருக்கும். அதே போல் பூமி சூரியனுக்கு மிக அருகாமையில் அதாவது 147மில்லியன்(14.7 கோடி) கிமீ தூரத்தில் இருக்கும்போது அதற்குப் பெயர் பெரிஹீலியன். இது ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நிகழும். பூமியின் சுற்றுப்பாதை வட்டமாக இல்லாமல் கோழி முட்டைப் போல் நீள்வட்ட வடிவில் இருப்பதனால் இது ஏற்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளின்போதும் பூமியின் தட்ப வெட்ப நிலையில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என ஸ்ரீகுமார் தெரிவித்தார்.

அப்ஹீலியனின் போது சூரியன் பூமியிலிருந்து தூரமாகச் செல்வதால் குளிர் அதிகமாகும் என யாரோ சிந்தித்து, அதனால் காய்ச்சல், குளிர் ஏற்படும் என அவர்களே யூகித்து போலிச் செய்தியை வாட்ஸ் ஆப் மூலமாகப் பரப்பி வருகிறார்கள். அதுவும் அப்ஹீலியனை ‘அலிபென்’ என்ற தவறான பெயரில் மெசெஜ்கள் ஃபார்வர்ட் செய்யப்படுகின்றன இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். உண்மையான அறிவியலைத்தான் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டுமேத் தவிர, இது போன்ற போலிச் செய்திகளை பார்வார்ட் செய்வது தவறு எனவும் அவர் தெரிவித்தார்.

“எதற்கும் பயப்படாதீர்கள். நான் மீண்டும் வருவேன்.”- மஹிந்த ராஜபக்‌ஷ

நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன். எதற்கும் பயப்பட வேண்டாமென முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நேற்று பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இதன் போது கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷ, தனது மீள் அரசியல் பிரவேசம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
மே மாதம் 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்து அரசியல் நடவடிக்கையிலிருந்து ஒதுங்கியிருந்தார். எனினும் மீண்டும் அரசியல் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அவர் நேற்று தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்துக்கு வந்த பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். மஹிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அண்மையில் வெளியான செய்திகள் குறித்தும் வினவியுள்ளனர். “நானும் வீட்டிலிருந்து அந்த செய்திகளைப் பார்த்தேன்.
அவை அப்பட்டமான பொய். நான் நலமாக உள்ளேன். அரசியல் பணிகள் வழக்கம் போல் தொடங்குவேன். எதற்கும் பயப்பட வேண்டாம்” என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

IMF நிபந்தனைகளுக்கு அமைய புதிய வரவு செலவுத்திடம் !

இலங்கை அரசாங்கம் புதிய வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியம், முன்வைத்துள்ள யோசனைகளை கருத்தில் கொண்டு இதனைத் தயாரிப்பதாக அவர் கூறினார்.

 

ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹன்னா சிங்கர் – ஹம்டியுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போது அமைச்சர் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக, குறிப்பாக எரிபொருள், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் வதிவிட இணைப்பாளருக்கு விளக்கமளித்தார்.

இதன்போது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் நிறுவனங்களின் மனிதாபிமான உதவியின் தற்போதைய நிலை குறித்து வதிவிட ஒருங்கிணைப்பாளர் விளக்கினார். ஐக்கிய நாடுகள் சபையால், இலங்கைக்கு வழங்கப்படும் உடனடி உதவிகளில் பெரும்போகத்துக்கான யூரியா, மருந்துப் பொருட்கள், விதைகள் மற்றும் பாடசாலைகளுக்கு ஊட்டமளிக்கும் வேலைத்திட்டம் என்பனவும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

………………….

இதே நேரம் சர்வதேசநாணயநிதியத்தின் கடன் ஒரு மாயவலை எனவும் கிரேக்கம் சூறையாடப்பட்டது போலவே இலங்கையும் மீள முடியா கடன்வலைக்குள் சிக்கும் அபாயம் IMF நிபந்தனைகளால் உண்டாகலாம் என பல தரப்புக்களும் அரசை எசசரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பதவியை ஏற்க தயார் – அனுரகுமார பிரதமருக்கு பதில் !

நேற்றையதினம் பாராளுமன்ற அமர்வில் “அனுர குமார திசாநாயக்கவின் வேலை திட்டம் வெற்றி அளிக்கும் என்றால் அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணங்கினால் பிரதமர் பதவியை அனுர குமாரவிடம் ஒப்படைக்க தயார்” என்று இன்று நாடாளுமன்ற அமர்வில்  ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் பதவியை ஏற்க தாம் தயாராகவிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேசத்திற்கு மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். தற்போதைய அரசாங்கம் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கு மத்தியிலும் நம்பிக்கை இல்லை. எனவே, தற்போது நம்பிக்கை மிகுந்த நிலையானதொரு ஆட்சிக்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் குறுகிய காலத்தில் நாட்டை மீட்டெடுக்க எம்மால் முடியும் எனவும் தெரிவித்தார்.

இதற்காக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினா

ரஷ்யாவிடம் இருந்து கடன் கோரியுள்ளேன் – ஜனாதிபதி கோட்டாபய ட்வீட் !

இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவியைக் கோரினேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ருவிட்டரில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள பதிவிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் உரையாடினேன். கடந்த கால சவால்களை சமாளிக்க அவரது அரசாங்கம் வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், தற்போதைய பொருளாதார சவால்களை தோற்கடிப்பதற்காக இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய கடன் ஆதரவை கோரினேன்.
சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது நமது இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் நட்பை வலுப்படுத்துவதில் மிக முக்கியமானது என்பதை நாங்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டோம்” என பதிவிட்டுள்ளார்.

தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு – யாழ்.மாணவனின் அசத்தலான கண்டுபிடிப்பு !

யாழ்ப்பாணம் வடமராட்சி காட்லிக் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் செல்வச்சந்திரன் சிறிமன் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை இன்று அறிமுகம் செய்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் மோட்டார் பொருத்தியும், மீள் சுழற்சி பொருட்களை பயன்படுத்தியும் அதனை கண்டு பிடித்துள்ளார்.

 

இன்றைய தினம் குறித்த கலப்பு துவிச்சக்கர வண்டி அறிமுக விழா இளம் புத்தாக்குநர் கழக தலைவர் இராஜ அரவிந்தன் தலைமையில் காட்லிக் கல்லூரி ஆய்வுகூட மண்டபத்தில் இடம்பெற்றது.

 

இன்றைய தினம் குறித்த கலப்பு துவிச்சக்கர வண்டி அறிமுக விழா இளம் புத்தாக்குநர் கழக தலைவர் இராஜ அரவிந்தன் தலைமையில் காட்லிக் கல்லூரி ஆய்வுகூட மண்டபத்தில் இடம்பெற்றது.

 

இதில் பாடசாலை அதிபர் தம்பையா கலைச்செல்வன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்டுபிடிப்பை அறிமுகம் செய்து வைத்தார்.

 

தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறான கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியில் 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சி !

இத்தாலியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சி நிலையை அந்த நாடு எதிர்கொண்டுள்ளது.

குறிப்பாக இத்தாலியின் மிக நீளமான நதியான போ நதியை சுற்றியுள்ள 5 வடக்கு பிராந்தியங்கள் வறட்சியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வறட்சியால் இத்தாலியின் 30 விழுக்காட்டுக்கும் கூடுதலான விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் விவசாயச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மேசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள லோம்பார்டி, எமிலியா-ரோமக்னா, பிரியூலி வெனிசியா கியுலியா, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ ஆகிய 5 வடக்கு பிராந்தியங்களில் இத்தாலி அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவசர நிலை தற்போதைய சூழ்நிலையை அசாதாரண வழிமுறைகள் மற்றும் அதிகாரங்களுடன் நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலைமை சீரடையாத பட்சத்தில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.