10

10

“நாட்டை மீட்க முன்வராது அமைச்சு பதவிகளுக்காக பேரம்பேசுகிறார்கள்.” – உதய கம்மன்பில விசனம் !

நாட்டை மீட்பதற்கான முன்மொழிவுகளை விவாதிப்பதற்குப் பதிலாக அமைச்சுப் பதவிகளைப் பகிர்வது தொடர்பில் இன்று பேரம் பேசப்படுவதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

பதவிகளைப் பகிர்வது பற்றிப் பேசாமல் நாட்டைக் காப்பாற்றுவது பற்றிப் பேசுவதே இன்று செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் இன்னும் அதிகாரப் போட்டியே நிலவி வருவதாகவும், நாட்டை கூட்டாக மீட்கும் முயற்சி இல்லை என்றும், இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலை என்றும் அவர் கூறினார்.

இது வரையில் அனைத்துக் கட்சி அரசாங்கம் கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்ததாகவும் பூமியில் இன்னும் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

10 கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு முன்பள்ளிகளில் இராணுவ அடாவடிகள் – நாடாளுமன்றில் சிறிதரன் !

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரது அடாவடித்தனம் அதிகரித்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவில் முன்பள்ளி பாடசாலைகளின் பெயர்கள் இராணுவத்தினரது தலையீட்டுடன் மாற்றப்படுவதாக நேற்று நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

இதனால் அங்கு கல்வி நிலைமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் இது வெறுக்கத்தக்க விடயம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு முன்பள்ளிகளின் பெயர் இராணுவத்தின் தலையீட்டுடன் மாறப்பட்டுள்ளமையை சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து கல்வி திணைக்களங்களின் கீழ் இருந்த முன்பள்ளிகள், சிவில் பாதுகாப்பு தரப்பின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் முன்பள்ளிகளை நிர்வகிப்பது பிறிதொரு இன அடக்கு முறை என்றும் சிறிதரன் குற்றம் சாட்டினார்.

இராணுவத்தினர் நிர்வாகத்தின் உள்ள முன்பள்ளி பாடசாலைகளை மாகாண கல்வி திணைக்களங்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருமாறு அவர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் இவ்வாறான செயற்பாட்டை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்களுக்கு தற்துணிவை கற்றுக்கொடுக்காத பள்ளிக்கூடங்கள் – பரீட்சை பெறுபேறு தொடர்பான அச்சத்தால் யாழில் மாணவி தற்கொலை !

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தவறான முடிவு ஒன்றை எடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப் பரீட்சைக்கு மருத்துவப் பிரிவில் தோற்றிய குறித்த மாணவி பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி மூன்றாவது முறையாக பரீட்சை எழுதியுள்ளார். தான் எழுதியவற்றை மீள் சோதனை செய்து குறைந்த புள்ளிகள் வரும் என்ற அச்சத்தில் மாணவி இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் மாணவி நேற்று (09) மாலை தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உதயசங்கர் நிவேதிகா வயது 22 என்ற மாணவியை உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் உடல் கூற்று சோதனை இடம்பெற்று உறவினர்களிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

………………………….

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் பதிவாகும் தற்கொலைகளில் பாடசாலை மாணவர்களின் தற்கொலைகளும் கனிசமான எண்ணிக்கையில் காணப்படும். இந்தப்பாடசாலைகள் மாணவர்களுக்கு தற்துணிவை வளர்ப்பதில்லை. பரீட்சைகளுக்கூடாகவும் – போட்டிகளுக்கூடாகவும் – மாணவர்களை இன்னமும் அதைரியப்படுத்துகின்றனவே தவிர தற்துணிவை கற்பிப்பதில்லை. பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை கற்பிப்பதுடன் நிறுத்தி விடுகின்றனர் . வாழ்க்கையிலுள்ள சவால்கள் பற்றியோ..? அவற்றை எதிர்கொள்ளும் பக்குவத்தையோ வளர்ப்பதில்லை. இதனாலேயே துணிவில்லாத சமூகம் ஒன்று தோன்றிவிடுகிறது. மேலும் பாடசாலைகளில் பரீட்சைகள் தொடர்பில் மாணவர்களை அவ்வளவு உளநெருக்கடிக்கு உற்படுத்துகின்றது இந்த பாடசாலையும் – இலங்கையின் கல்வி அமைச்சும். பரீட்சையை ஒரு போட்டியாக மட்டும் சொல்லிக்கொடுக்கும் பாடசாலைகளும் சரி – இலங்கையின் கல்வி முறையும் சரி பரீட்சைகளில் தோற்போர் – சித்தியடையாதோர் பற்றி கவனம் செலுத்துவதே கிடையாது. இந்த கல்வி முறையில் உள்ள சிக்கலே இலங்கையில் மாணவர்கள் தற்கொலைக்கு மிகப்பெரிய தூண்டுதல். வெறுமனே கற்பித்தலோடு நின்று விடாது ஆசிரிய சமூகம் மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான தற்துணிவை ஏற்படுத்தும் கல்வியை வழங்க முன்வர வேண்டும். அதுவே இந்த மாணவர் தற்கொலைகளை குறைக்க ஒரே ஒரு வழிமுறை.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் !

“கோட்டகோகம” போராட்டத்தின் முக்கிய செயட்பாட்டாளர்களில் ஒருவரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் இன்று (10) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்

அருட்தந்தை ஜீவந்த பீரிசுக்கு எதிராக கோட்டை பொலிசார் மற்றும் கொம்பனித்தெரு பொலிசார் இரண்டு தனித்தனி B ரிப்போர்ட்களை தாக்கல் செய்துள்ளனர் .

இதேவேளை காலிமுகத்திடல் போராட்ட சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும் முப்படையினரும் தம்மை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2022 பொதுநலவாய விளையாட்டு போட்டி – அவுஸ்திரேலியாவுக்கு முதலிடம் – இலங்கைக்கு..?

2022 பொதுநலவாய விளையாட்டுகள் நிறைவடைந்துள்ளன.

இலங்கை நேரப்படி இன்று (09) அதிகாலையுடன் இந்த விழா நிறைவிற்கு வந்தது.

பதக்கப்பட்டியலில் 67 தங்கம், 57 வௌ்ளி, 54 வெண்கலம் என 178 பதக்கங்களை சுவீகரித்த அவுஸ்திரேலியா இம்முறை பொதுநலவாய விளையாட்டுகளில் முதலிடத்தை பிடித்துள்ளது.

57 தங்கப் பதக்கங்களை வென்ற இங்கிலாந்து இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.

இலங்கைக்கு 04 பதக்கங்கள் கிடைத்ததுடன், பதக்கப் பட்டியலில் இலங்கை 31 ஆவது இடத்தை பிடித்தது.

Commonwealth Games: England secure record haul of 176 medals at Birmingham  2022 - BBC Sport

11 நாட்களாக இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற 2022 பொதுநலவாய விளையாட்டுகளில் 72 நாடுகளை சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.

2026 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுகளை அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் Geelong, Ballarat, Bendigo மற்றும் Gippsland ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

பல நகரங்களில் பொதுநலவாய விளையாட்டு விழா நடத்தப்படும் முதல் சந்தர்ப்பமாகவும் வரலாற்றில் இது பதிவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முடிவுக்கு வந்ததது காலிமுகத்திடல் போராட்டம் – ரணிலை ஜனாதிபதியாக்கியதை தவிர எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத சிறுபிள்ளை வேளாண்மை !

தொடர்ச்சியாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராஜபக்சக்களின் ஆட்சியே என குற்றஞ்சாட்டப்பட்டு காலி முகத்திடலில் ஆரம்பித்த போராட்டத்தால் ராஸபக்சக்களின் ஆட்சி கவிழ்க்கப்படவும்  இன்று கோட்டாபய சிங்கப்பூரில் அடைக்கலம் கோருவதற்கும் இலங்கை ஜனாதிபதியாக  ரணில் விக்ரமசிங்க பதவியேற்பதற்கும் காரணமானது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் நோ டீல் கம என ரணிலுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்ட இயக்கம் மௌனித்துப்போனதுடன் – அடுத்தடுத்து கோட்டா கோ கம போராட்டத்தின் முக்கியமான  போராட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டனர். ஒரு பக்கத்தில் ஆட்சியை பிடிப்பதற்கான இடதுசாரிகளின் போராட்டம் தான் கோட்டாகோகம என பேசப்பட்ட நிலையில் போராட்டத்துக்கு முன்னணியில் நின்ற செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டிலிருந்து கிடைத்த அதிகப்படியான நிதியுதவி, ரணில் பதவியேற்றதும் தொடர்ந்து பேணப்பட்ட  போராட்டக்காரர்களின் மௌனம் என பல விடயங்கள் போராட்டம் ரணிலுக்கு சார்பான மேற்குலக நாடுகளால் நகர்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பார்க்கப்பட்டது.

 

இந்த நிலையில், காலிமுகத்திடல் பகுதியில் கடந்த 125 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் அங்கிருந்து வாபஸ் பெறப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் நேற்றையதினம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக  09.08.2022 காலி முகத்திடல் போராட்டத்திற்கு மக்கள் வராவிட்டால் தானும் ஏனைய மக்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்ட களத்தில் தங்கியிருந்த வணக்கத்திற்குரிய தம்ம சுஜாத தேரர் தெரிவித்திருந்தார்.

அரசுக்கெதிரான இன்றைய போராட்டத்தில் மக்களை சுனாமியாக கொழும்புக்கு வருமாறு கோரப்பட்ட போதிலும் இன்று காலி முகத்திடலில் மக்கள் எவரும் ஒன்றுதிரளவில்லை.இதனால் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

இந்த நிலையிலேயே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

 

போராட்டத்தில் எந்தவொரு வலுவான கோரிக்கைகளையும் இந்த போராட்டக்காரரர்கள் முன்வைக்கவில்லை. பாரிய மக்கள் போராட்டம் என கூறப்பட்டதே தவிர ஆக்கபூர்வமான வெற்றிகள் எவையுமே கிடைக்கவில்லை. பொருளாதார மீட்பையே வலியுறுத்தியதாக இந்த போராட்டக்காரர்கள் கூறியிருந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நிலை இன்னமும் அதளபாதாளத்திலேயே வீழ்ந்து போயுள்ளது. சுருக்கமாக சொல்வதாயின் சமூக வலைத்தளங்களில் இயங்குநிலையில் உள்ள ஒரு இளைஞர் கூட்டமும் – அரசியல் லாபமீட்ட முனைந்த சில பெரியவர்களுமாக சேர்ந்து செய்த இந்த போராட்டம் சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது போல எந்த வெற்றியும் தராது முடிந்து போயுள்ளது.

 

இந்த போராட்டங்களின் ஒரே விளைவு மக்களின் ஆணையால் வழங்கப்படாத ரணிலின் நீண்ட கால ஜனாதிபதி இருக்கையை அவர் பிடித்துக்கொண்டது மட்டுமே. வேறு எந்த மாற்றத்தையுமோ – சிங்களவர்களின் ஆதிக்க மனோநிலை சார்ந்த எந்த மாற்றத்தையுமோ இந்த போராட்டங்கள் வழங்கவில்லை என்பதே உண்மை.

அமெரிக்க – ஐஎம்எப் க்கு எதிரான பதிவை பேஸ்புக் முடக்கி உள்ளது!!!

தேசம்நெற்றில் அமெரிக்க – ஐஎம்எப் க்கு எதிராக எழுதப்பட்ட கட்டுரையை: “ராஜபக்சா அன் அமெரிக்க – ஐஎம்எப் ரொம் அன் செரித் தொடர்! வெல்வது யாரோ?” சமூகவலைத்தளமான பேஸ்புக் முடக்கி உள்ளது. யூலை 30இல் இல் தேசம்நெற்றில் வெளியான கட்டுரை, அதனை எழுதிய கட்டுரையாளரால் அவருடைய முகநூல் தளத்திலும் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் படத்தோடு வெளியான கட்டுரையை பேஸ்புக் முடக்கியுள்ளது. குறிப்பிட்ட கட்டுரையை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். https://www.thesamnet.co.uk//?p=87861

அமெரிக்க ஐஎம்எப் இன் மிலேச்சத்தனமான திறந்த பொருளாதாரக் கொள்கையை கடுமையாக விமர்சித்து இருந்த இக்கட்டுரை, காலிமுகத்திடல் போராட்டத்தை அதன் தொடர்ச்சியாக குறிப்பிட்டதுடன் பாகிஸ்தானில் இம்ரான் கானை ஆட்சித் தலைமையில் இருந்து நீக்கிவிட்டு தங்களுக்கு சாதகமானவர்களை அங்கு ஆட்சியில் அமர்த்தி இருந்ததையும் அக்கட்டுரை சுட்டிக்காட்டி இருந்தது. கோட்டாபாய ராஜபக்ச ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் அமர்த்தப்பட்டதும், இலங்கையில் அமெரிக்க – ஐஎம்எப் நலன்களைப் பாதுகாக்கவே என்பதையும் அக்கட்டுரை தெளிவுபடுத்தி இருந்தது.

சமூக வலைத்தளமான பேஸ்புக் – முகநூல் கருத்தியல் சர்வதிகாரத்தை நிறுவுவதில் பெரும்பிரயத்தனம் செய்து வருகின்றது. இவ்வாறு கட்டுரைகள் ஆக்கங்கள் முடக்கப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. பல ஆயிரக்கணக்கானோரின் லட்சக்கணக்கானோரின் முகநூல்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. முன்னர் பயங்கரவாத நடவடிக்கைகள், தொடர்கொலைகள், மற்றும் குற்றச்செயல்களுக்காகவே குறிப்பாக அறியப்பட்ட படங்களை வைத்து பதிவுகளை நீக்கி வந்த முகநூல் தற்போது பதிவுகளின் உள்ளடக்கத்தையும் அதன் ஆழமான கருத்தியலையும் ஆராய்ந்து அதற்கேற்ப பதிவுகளை நீக்கி வருகின்றது. இதன் மூலம் கருத்தியல் சர்வதிகாரம் ஒன்றை நிறுவ முயல்கின்றது. இதில் தேசம்நெற் போன்ற சின்னஞ்சிறு இணையங்கள் மட்டுமல்ல முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம் கூட மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பை இழக்கின்றார். எந்த பேஸ்புக் அவரை ஜனாதிபதி ஆக்கியதோ அதே பேஸ்புக் இன்று அவரை ஓரம்கட்ட முயற்சிக்கின்றது.

உலகம் தட்டை என்றும் சூரியன் தான் பூமியைச் சுத்துகிறது என்று முகநூல் தீர்மானித்தால் அதுவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக்கப்பட்டுவிடும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. முதலாளித்துவத்தின் அதீத உற்பத்தியும் ஆதிக்கமும் (mass production) எவ்வளவு ஆபத்தானதோ அதனைக்காட்டிலும் ஆபத்தானது சமூகவலைத்தளங்களின் பெரும் தொடர்பாடல் (mass communication). உலகத்துக்கு ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்கிறோம் என்ற பெயரில் முதலாளித்துவ தொழில்நுட்பம் வழமைபோல் உலகை தன்னுடைய சர்வதிகாரத்திற்குள் கொண்டுவந்து இதுவரை பொருளாதார அடிமைகளாக இருப்பவர்களை கருத்தியல் அடிமைகாகவும் என்றென்றைக்கும் கட்டுக்களை உடைக்க முடியாதவர்களாகவும் ஆக்குகின்றது.

யாழ்.மல்லாகத்தில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம் !

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் நேற்று மாலை நுழைந்த வன்முறைக் கும்பலால் இந்த தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் 14 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டனை !

2016 ஆம் ஆண்டு வவுனியா – மணிப்புரம் பகுதியில் 14 வயது சிறுமியை ஆட்கடத்தல் மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட நபருக்கு  கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு இக்குற்றச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்து எதிரி கைது செய்யப்பட்டுவவுனியா மேல் நீதிமன்றில் எதிரிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்து.

இந்நிலையில், வழக்கு விசாரணையின் போது எதிரி தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக சிறுமி சாட்சியம் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட எதிரிக்கு ஆட்கடத்தல் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், துஸ்பிரயோக குற்றத்திற்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து  தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், 5 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடும், செலுத்த தவறும் பட்சத்தில் இரு மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

தேர்தல்களின் கட்டமைப்பில் திருத்தங்களை முன்மொழிய பாராளுமன்ற சிறப்புக் குழு !

தேர்தல் மற்றும் தேர்தல்களின் கட்டமைப்பில் திருத்தங்களை முன்மொழிய பாராளுமன்ற சிறப்புக் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அமுல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுவான உடன்பாட்டுக்கு வந்துள்ளன.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள முதல் தேர்தலுக்கான வாக்கெடுப்புக்கு முன்னர் அதன் பரிந்துரைகளை ஏற்று நடைமுறைப்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அவற்றில், தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துதல், முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் வாக்கெடுப்பு நாளில் விசேட வாக்கெடுப்பு நிலையங்களை அமைத்தல், மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

தேர்தல் காலத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் ஊடக உப-நடவடிக்கைகளை அமுல்படுத்துவது அந்த பரிந்துரைகளில் ஒன்றாகும்.

மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளின் உறுப்பினர்களின் பதவிக் காலம் முடியும் வரை தேர்தல் ஆணைக் குழு வெளியிடும் நெறிமுறைகள் செல்லுபடியாகும் என்றும் அதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்குவதும் அதில் அடங்கும்.