15

15

சீனாவின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் 5 அமெரிக்க எம்பி.க்கள் குழு தாய்வான் பயணம் !

தாய்வானுக்கு உரிமை கொண்டாடி வரும் சீனாவின் கடும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2ம் தேதி தாய்வான் சென்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, தாய்வானை அச்சுறுத்தும் வகையில், அந்நாட்டின் எல்லையில் போர் விமானங்கள், போர் கப்பல்களை அனுப்பி தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதனால், போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்த பதற்றம் தணிவதற்குள், பெலோசியை தொடர்ந்து 5 அமெரிக்க எம்பி.க்கள் குழு நேற்று தாய்வானுக்கு சென்றது. தைபே நகரில் உள்ள சோங்சான் விமான நிலையத்தில், அமெரிக்க அரசு விமானம் நேற்றிரவு தரையிறங்கும் வீடியோ காட்சி ஒளிபரப்பானது. அமெரிக்க எம்பி.க்கள் குழுவின் இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, தாய்வான் நீரிணை பகுதியில் நேற்று 10 போர் விமானங்கள் உட்பட சீன இராணுவத்தின் 22 விமானங்கள், 6 கடற்படை கப்பல்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

நான்சி பெலோசியின் அண்மைய பயணத்தால் கடும் கோபமடைந்த சீனா,தாய்வானைச் சுற்றியுள்ள கடல் பகுதிக்கு ஏவுகணைகள், போர்க் கப்பல்கள், போர் விமானங்களை அனுப்பி, வான்வழியாகவும் கடல் வழியாகவும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

“புலம்பெயர்ந்தோரிடம் எமது நாட்டைப் பற்றி பேசும் பொறுப்பை என்னால் ஏற்க முடியும்.” –

“புலம்பெயர்ந்த உலக அமைப்புகளுடன் எமது நாட்டைப் பற்றி பேசும் பொறுப்பை என்னால் ஏற்க முடியும்.” என  நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (15) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் பல புலம்பெயர் தமிழ் மக்கள் மீதான தடையை நீக்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது கட்டார் தொண்டு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது.

இந்த தீர்மானங்களானது இலங்கை தொடர்பில் உலக நாடுகள் நம்பிக்கையுடன் நோக்கும் ஒன்றாகும்.

ரணில் விக்ரமசிங்க செய்த விடயம் மகிழ்ச்சிக்குரியது. ஆனாலும், குணதாச அமரசேகர, மொஹமட் முஸம்மில், விமல் வீரவன்ச போன்றவர்கள் எப்போதும் தவறாகவே இருந்தனர். அவ்வாறான தன்மை மாற வேண்டும். இவர்கள் தான் நாட்டை இன்று இருக்கும் நிலைக்கு கொண்டு வந்தவர்கள். இவை மாற வேண்டும். உலக அமைப்புகளுடன் எமது நாட்டைப் பற்றி பேசும் பொறுப்பை என்னால் ஏற்க முடியும்.

தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் முஸ்லிம்களும் நாட்டிற்கு வெளியே வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் புலம்பெயர் மக்கள்.

எனவே இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்கி, நிதிக் கட்டுப்பாட்டிற்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டும்” என்றார்.

நல்லூரில் மாணவனை தாக்கிய அதிபர் – விசாரணை ஆரம்பம் !

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள பாடசாலையொன்றில் மாணவன் மீது அதிபர் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதில் மாணவன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லூர் விநாயகர் வீதியைச் சேர்ந்த 14 வயது மாணவனே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.

தான் சொன்ன பணியைச் செய்யவில்லை என்று தெரிவித்து அதிபர், மாணவனை கடுமையாகத் தாக்கினார் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதுடன் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் இன்று பிற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாழ். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

காவல்துறை புலனாய்வுப் பிரிவும் இந்தச் சம்பவம் தொடர்பில் அறிக்கையிட்டுள்ளது.

மானிப்பாய் பகுதியில் வாள் வெட்டுத்தாக்குதல் – 21 வயது இளைஞன் படுகாயம் !

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் இளைஞன் மீது நேற்றைய தினம் வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தெல்லிப்பளையை சேர்ந்த ஜெயக்குமார் சஜீந்திரன் எனும் 21 வயதுடைய இளைஞன் மீதே வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் வாள் வெட்டுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“ராஜபக்ஸர்களின் குப்பைகளை இழுக்கும் குப்பை வண்டியாக செயற்பட தயாரில்லை.”- சஜித் பிரேமதாஸ

அண்மையில் ராஜபக்சக்களின் ஆட்சி ஒரு குப்பை எனவும் அந்த குப்பை வண்டியை ரணில் இப்போது இழுத்துச்செல்வதாகவும் அதற்கு அவருக்கு ஓட்டுபோட்டவர்கள் உதவுவதாகவும் ஜே.வி.பி குற்றஞ்சாட்டிருந்ததது.

 

இந்தநிலையில் , இந்நாட்டை இந்தளவு அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றது ராஜபக்ஸ ஆட்சிதான் எனவும், அந்த ராஜபக்ஸர்களின் குப்பைகளை இழுக்கும் குப்பை வண்டியாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரும் மாற மாட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று முழு நாடும் பொருளாதார சமூக அரசியல் ரீதியாக மோசமான நிலையில் உள்ளதாகவும், 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் மக்கள் சரியான பாதைக்கு பதிலாக தவறான பாதையை தேர்ந்தெடுத்தமையே இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

இந்த வங்குரோத்து நாட்டில் நடக்கும் சமீபத்திய அதிசயம் சர்வகட்சி அரசாங்கம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டுக்கு தேவை அமைச்சுப் பதவிகளை அணிந்து கொண்டு பதவிக்குப் பின்னால் செல்லும் நாடு அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது உடனடியாக மேற்கொள்ள வேண்டியது தேர்தலை நடத்தி மக்களின் முடிவைக் கேட்பதுதான் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்கு மேல் தீர்வொன்று இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் தங்கியிருந்த கோட்டாபாயவின் விடுதி கட்டணம் எவ்வளவு ..?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை விடுதிக்கான கட்டணமாக செலுத்தியதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்சவும் கடந்த 11 ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சேண்ட்ஸ் விடுதியில் தங்கியிருந்தனர்.

இதேவேளை, விடுதி தங்குமிட கட்டணமான 67 மில்லியன் ரூபாவை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவரான நிஸ்ஸங்க சேனாதிபதி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு வருவது தொடர்பில் கோட்டாபாய ராஜபக்ச கலந்தாலோசித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டில் மீண்டும் அரசியல் பதற்றம் தலைதூக்கக்கூடும் என்பதால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கோட்டா கோ கம போராட்டக்கள செயற்பாட்டாளரான தனிஸ் அலிக்கு பிணை !

கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டக்கள செயற்பாட்டாளரான தனிஸ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று(15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜீலை மாதம் 13ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் தனிஸ் அலி கைது செய்யப்பட்டிருந்தார்.

விமான நிலையம் ஊடாக வெளிநாட்டு ஒன்றுக்கு செல்ல முயற்சித்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

“ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவினை எந்தவிதமான சஞ்சலமும் இன்றி துணிச்சலாக வெளிப்படுத்தினோம்.” – அமைச்சர் டக்ளஸ்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான  தடையை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தினை நல்லெண்ணச் சமிக்கையாக புலம் பெயர் உறவுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவினை எந்தவிதமான சஞ்சலமும் இன்றி துணிச்சலாக வெளிப்படுத்திய ஈ.பி.டி.பி. கட்சி, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைுவேற்றும் வகையில் சுமார் 10 அம்சக் கோரிக்கை முன்வைத்திருந்தது.

அதில் ஒன்றாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடை நீக்கப்பட வேண்டும் என்பதும் உள்ளடக்கப்பட்டிருந்தது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடை நீக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தினை புலம்பெயர் உறவுகள் சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்தி, நாட்டில் வாழ்ந்து வருகின்ற தங்களுடைய உறவுகளின் பொருளாதார பலத்தை கட்டியெழுப்புவதற்கு முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் ஏனைய கோரிக்கைகளும் முன்னுரிமை அடிப்படையிலாயினும் நிறைவேற்றப்படுவதுடன், தடைசெய்யப்பட்டுள்ள முஸ்லீம் அமைப்புக்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியை  வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு டோர்னியர் விமானத்தை அன்பளிப்பு செய்தது இந்தியா – நாளை இலங்கை வருகிறது சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் !

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கிய டோர்னியர் விமானத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கையளித்தார்.

குறித்த டோர்னியர் விமானம் இன்று (15) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

“பரஸ்பர புரிந்துணர்வு,நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன் டோனியர்228 விமானம் பரிசளிக்கப்படுகின்றமை இந்த இலக்கிற்காக இந்தியா வழங்கும் சமீபத்திய பங்களிப்பாகும்”, என உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்நிகழ்வில் தெரிவித்தார்.

இலங்கை விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்ட டோனியர் 228 விமானம் இலங்கையின் பாதுகாப்பை மேம்படுத்த உதவும்.

வங்காள விரிகுடா மற்றும் இந்து சமுத்திர பிராந்தியங்களிலுள்ள, இலங்கை போன்ற அயல் மற்றும் நட்பு நாடுகளின் பலத்தினை வலுவாக்குவதிலும் இந்தியாவின் வல்லமை உறுதுணையாக நிற்கின்றமைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். இந்தியாவுடனான ஒத்துழைப்பினால் ஏனைய துறைகளில் கிடைக்கப்பெற்ற பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோனியர் பரிசளிக்கப்பட்டமையும் முக்கியமானதாக காணப்படுவதுடன், கடல் பாதுகாப்பு குறித்த தேவைகளை இலங்கை நிவர்த்தி செய்வதற்கான ஒரு படியாகவும் கருதப்படுகின்றது என இந்திய உயர்ஸ்தானிகராலய டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

………………………..

சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வர இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அக்கப்பல் வரும் 16 ஆம் திகதி அம்பாந்தோட்டை  துறைமுகத்தை அடைய இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனாவின் இராணுவ கப்பல் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இலங்கை சீனா கப்பலை அனுமதிப்பது இந்தியாவுக்கு செய்யும் துரோகம் என தொடர்ந்து இந்திய ஊடகங்களும் – அரசியல் தலைவர்களும் விமர்சித்து வந்த நிலையில் நாளை சீன கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவுள்ளது. இதற்கு ஒருநாள் முன்பே இந்தியா டோர்னியர் விமானத்தை இலங்கை விமானப்படைக்கு  வழங்கியுள்ளது.

ஆங் சான் சூகிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை !

மியன்மாரில் இராணுவ ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி பதவி நீக்கம் செய்யப்பட்டு  ஏற்கனவே கைதாகியிருந்த நிலையில் அவரை விடுவிக்குமாறு கோரி போராடுவோர் மீது கடுமையான இராணுவபலம் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சர்வதேசம் இந்த பிரச்சினைகள் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளாது இருக்கும் நிலையில் இராணுவ ஆதிக்கம் இன்னும் அங்கு உறுதிசெய்யப்பட்டு வருகின்றது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட மியான்மரின் தலைவர் ஆங் சான் சூகிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தண்டனை விதித்துள்ளது.

அவர் ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் புதிய உத்தரவின்படி மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (15) வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின்படி, அவர் ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் இனங்காணப்பட்டுள்ளார். 77 வயதான ஆங் சான் சூகி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதுடன் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.