12

12

11 வயதுடைய  மாணவனை கொடூரமான வகையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 15வயது பாடசாலை மாணவர்கள் !

தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 11 வயதுடைய   மாணவன் ஒருவன் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இரு மாணவர்களும் அந்தப்  பாடசாலையின் 10ஆம் தரத்தில் பயிலும் மாணவர்கள் எனவும், பாதிக்கப்பட்ட மாணவன் அதே பாடசாலையில் 6ஆம் தரத்தில் கல்வி பயில்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவனை சந்தேகிக்கப்படும் இரு மாணவர்கள் பல சந்தர்ப்பங்களில் கொடூரமான முறையிவ் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்களான இரு மாணவர்களும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மரணம் – உடற்கூற்று பரிசோதனையில் வெளியாகியுள்ள தகவல் !

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் மரணம் தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என வவுனியா பொலிசார் நேற்று (11) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை (07) காலை தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

சிவபாலசுந்தரம் கௌசிகன் என்ற 42 வயதுடைய நபர், அவரது மனைவி 36 வயதுடைய கௌசிகன் வரதராஜினி மற்றும் மகள்களான 09 வயதுடைய கௌசிகன் மைதிரா மற்றும் 03 வயதான கௌசிகன் கேசரா ஆகியோரின் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை புதன்கிழமை (08) இரவு மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்திற்கான சரியான காரணம் வெளியாகவில்லை. ஆனால் அவர்கள் நஞ்சு அருந்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் அரசாங்க மரண விசாரணை திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் முடிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும். அதன் முடிவுகள் வந்த பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும். குறித்த சம்பவம் தொடர்பில் சிசிரிவி காட்சிகள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

போராட்டக்காரர்களை கலைக்க காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்திய பொலிஸார்..?

எதிர்ப்பாளர்களை கலைக்கும் போது, தாம் காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்துவதில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளால் உரிய பயன் கிடைக்காது என்பதால் அவற்றை பயன்படுத்துவதில்லை என்று பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

பொதுவாக, திறந்த கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட முறைப்படி கண்ணீர் புகைக்குண்டுகள் பெறப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எதிர்ப்பாளர்களை கலைக்க, காவல்துறையினர் காலாவதியான கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்தியதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எனினும் எந்தவொரு தயாரிப்பு காலாவதியானாலும், அது சிறந்த முடிவுகளைத் தராது. காலாவதி திகதிக்கு பின்னர் எரிவாயு உரிய வகையில் இயங்காது. எனவே அதனை பயன்படுத்துவதால் பயன் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் துறையின் கலகக் குழுவின் அதிகாரிகளின் கூற்றுப்படி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளே போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்தப்படுகின்றன. முன்னதாக, கடந்த வாரத்தில் கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதல் காரணமாகவே எதிர்ப்பாளர்கள் மூன்று பேர் இறந்தனர் என்று தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குற்றம்சுமத்தியிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள பொலிஸ் பேச்சாளர், மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கைகள் இன்னும் வரவில்லை என்பதால், இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.