June

June

ரஸ்ய பிரஜைகளளாக மாறி உக்ரைனுக்கு எதிராக போரிடும் இலங்கையர்கள் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

உக்ரைனிற்கு எதிராக போரிடும் இலங்கையை சேர்ந்த கூலிப்படையினரில் பலர் ரஸ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அவர்கள் ரஸ்ய பிரஜாவுரிமையைபெற்றுக்கொண்டுள்ளனர் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் முனைகளில் சிக்குண்டவர்களை மீட்டுதருமாறு கோரும் 446 முறைப்பாடுகள் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு கிடைத்துள்ளன என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அவர்களில் பலர் ரஸ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர் ரஸ்ய குடியுரிமையை பெற்றுக்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்னுமொரு நாட்டின் பிரஜாவுரிமையை நீங்கள் பெற்றுக்கொண்டால் இலங்கையின் பிரஜாவுரிமையை நீங்கள் இழந்துவிடுவீர்கள் நீங்கள் இலங்கை பிரஜை இல்லை என்பதால் உங்களின் சார்பில் பேசுவதற்கு எங்களிற்கு உரிமையில்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சிலர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் போல தோன்றுகின்றது முகாம்களில் உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக சேர்க்கப்படுவதாக தெரிவித்து அவர்களை போருக்குள் சிக்கவைத்துள்ளனர் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.ஏனையவர்கள் தெரிந்தே இணைந்துகொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனிற்கு எதிராக போரிடும் இலங்கையை சேர்ந்த கூலிப்படையினரில் ரஸ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அவர்கள் ரஸ்ய பிரஜாவுரிமையைபெற்றுக்கொண்டுள்ளனர் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் முனைகளில் சிக்குண்டவர்களை மீட்டுதருமாறு கோரும் 446 முறைப்பாடுகள் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு கிடைத்துள்ளன என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அவர்களில் பலர் ரஸ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர் ரஸ்ய குடியுரிமையை பெற்றுக்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்னுமொரு நாட்டின் பிரஜாவுரிமையை நீங்கள் பெற்றுக்கொண்டால் இலங்கையின் பிரஜாவுரிமையை நீங்கள் இழந்துவிடுவீர்கள் நீங்கள் இலங்கை பிரஜை இல்லை என்பதால் உங்களின் சார்பில் பேசுவதற்கு எங்களிற்கு உரிமையில்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சிலர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் போல தோன்றுகின்றது முகாம்களில் உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக சேர்க்கப்படுவதாக தெரிவித்து அவர்களை போருக்குள் சிக்கவைத்துள்ளனர் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.ஏனையவர்கள் தெரிந்தே இணைந்துகொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது கட்சிக்கு ஜே.வி.பியினரே ஆயுதங்களை வழங்கினர் – பிள்ளையான்

எனது கட்சிக்கு ஜே.வி.பியினரே ஆயுதங்களை வழங்கியிருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக அநுர குமார திசநாயக்க தெரிவித்திருந்தார்.

அநுர குமார திசநாயக்க தரப்பினரே எங்களுக்கு முதல் முறையாக ஆயுதங்களை வழங்கினர். அதன் பின்னர் மக்களை சுடுவதற்கு எங்களிடம் ஆயுதம் கேட்டார்கள். ஆனால் நாங்கள் அதனைக் கொடுக்கவில்லை.

பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளைப் பெற்றது யார்? எனவே ஜனநாயகத்தை பற்றி பேசுவதாக இருந்தால் அநுர குமார திசாநாயக்க யோசித்து பொறுப்பான தலைவராகப் பேச வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் ”இந்த நாட்டை அழிக்க நினைக்கின்ற தலைவர் எங்கள் மண்ணில் வந்து பேசியதையிட்டு கவலையடைகின்றேன். அவர்கள்தான் ஒரு பிரபல்யமான ஆயுத குழு. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆயுதம் தந்தவர்களும் அவர்கள்தான். பின்னர் அதனைக் கைமாற்றியதும் அவர்கள்தான். எனவே அந்த ஆயுதங்களை தேடி எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அநுர குமார திசநாயக்காவுக்கு தெரிவிக்கின்றேன்” இவ்வாறு சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மொத்த சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டைத் தாண்டியது !

இலங்கையின் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்பட்ட மொத்த சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

944 மெகாவாட் கூரை சூரிய சக்தி பேனல்களும் 156 மெகாவோட் நிலத்தடி சூரிய சக்தி பேனல்களும் தேசிய மின் அமைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள், கூரை சூரிய சக்தி பேனல்கள் மூலம் 1,000 மெகாவாட்களுக்கு மேல் தேசிய மின் அமைப்புடன் சேர்க்கப்படும்.

மின்சார சபையின் நீண்டகால உற்பத்தித் திட்டத்தின்படி, அடுத்த 4 ஆண்டுகளில் கூரை சூரிய சக்தி பேனல்கள் மூலம் தேசிய மின் அமைப்புடன் ஒவ்வொரு ஆண்டும் 150 மெகாவாட் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் மட்டும் 132 மெகாவாட் கூரை சூரிய சக்தி பேனல்கள் தேசிய மின் அமைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

“இந்த நாட்டில் உள்ள முழு அரசியலும் இனவாதத்தினை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றது.” – அனுரகுமார திசாநாயக்க

“இந்த நாட்டில் உள்ள முழு அரசியலும் இனவாதத்தினை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றது.” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் பெயரை வைத்தே சஜித் பிரேமதாச கட்சியின் தலைவராகயிருக்கின்றார். அவரது தந்தை ஒரு முன்னாள் ஜனாதிபதியாக இல்லாமலிருந்தால் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினராக கூட வருவதற்கு சஜித் பிரேமதாசவுக்கு தகுதியில்லை இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு நேற்று (27) பிற்பகல் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள வில்லியம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ச. அ. டெஸ்மன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பங்கேற்றார்.
கல்வி முடிந்தது! ஆசிரிய மாணவர்களின் உரிமையை வென்றெடுப்பது எப்படி எனும் தலைப்பில் இம் மாநாடினை இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிந்த ஜயசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிர்வாகம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் சிறப்புரைகளும் நடைபெற்றன. இங்கு உரையாற்றிய அனுரகுமார திசாநாயக்க,
இந்த நாட்டில் மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து நிற்கின்றனர். அந்த மாற்றம் எங்கு ஏற்படவேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். இன்று ரணிலுக்கு மாற்றத்திற்காக சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் இன்று ரணிலுக்கான ஆதரவினை இன்னும் மொட்டுக்கட்சி தெரிவிக்கவில்லை. இன்னும் தீர்மானம் எடுக்கவில்லையென மகிந்த ராஜபக்ஸ சொல்கின்றார். பசீல் ராஜபக்ஸவிடம் கேட்டாலும் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லையென்கின்றார்.
தீர்மானம் எடுத்தவர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் யார் என்று பார்த்தால் மகிந்தானந்த அலுத்கமகே. இவர் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக கூறியிருக்கின்றார். இவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். ரொகான் ரத்வத்தை ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக கூறுகின்றார். இவர்தான் சிறைச்சாலை அமைச்சராகயிருந்த போது சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை பிஸ்டோலைக்காட்டி அச்சுறுத்தி மண்டியிடவைத்து அவர்களின் தலைகளில் துப்பாக்கியை வைத்தார். அவர் மாற்றத்திற்காக ரணிலுக்கு ஆதரவு வழங்குகின்றாராம். அதேபோன்று கப்பம் வாங்கி உயர்நீதிமன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க இன்று ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கின்றார்.
இதேபோன்று மட்டக்களப்பிலும் மாற்றத்திற்காக ரணிலுக்கு ஆதரவு வழங்கப்படும் என பிள்ளையான் அறிவித்துள்ளார்.மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முன்பாக மாற்றமான தலைமைத்துவம் ஒன்று தேவையாகும்.
பல தசாப்தமாக இந்த நாட்டினை ஆட்சி செய்து, பல ஆண்டுகளாக அமைச்சர்களாகயிருந்து பல ஆண்டுகளாக பிரதமராகயிருந்தவர்கள் மாற்றத்தினை எதிர்பார்க்கின்றார்கள். இவர்களது மாற்றம் என்னவாகும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். மக்களின் எதிர்பார்ப்பு ஒரு மாற்றமாகயிருந்தாலும் ரணில் விக்ரமசிங்கவினால் அந்த மாற்றத்தினை கொண்டு வரமுடியாது.
அதேபோன்று சஜித் பிரேமதாசவினாலும் பொதுமக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தினை வழங்கமுடியாது.சஜித் பிரேமதாச முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகனாக இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும்.அவர் ஒரு கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதி வேட்பாளராகவும் இருப்பதற்கு அவரிடம் உள்ள ஒரேயொரு தகுதி அவரது தந்தை ஜனாதிபதியாக இருந்தது மாத்திரமேயாகும்.
அவரது தகப்பன் ஜனாதிபதியாக இல்லையென்றால் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினராக வரக்கூடிய தகுதியும் அவரிடம் இல்லை. அவரைப்பற்றி சரத்பொன்சேகாவே பேசுகின்றார். அவர் ஆட்சிக்காலத்தில் சரத்பொன்சேகாவினை மேடையில் வைத்துக்கொண்டு திருடர்களை பிடிக்கப்போவதாக கூறினார்.ஆனால் அவர் ஆட்சிக்காலத்தில் சஜித் பிரேமதாசவையே கசினோ விடயத்தில் பிடித்திருந்தார்.
மாற்றம் ஒன்று வேண்டுமென்றால் அந்த மாற்றத்தினை செய்யக்கூடியவர்கள் யார் என்றால் தேசிய மக்கள் சக்தியினர் மட்டுமேயாகும். இந்த நாட்டு மக்கள் மீண்டும் அந்த மிகமோசமான பாதையில் செல்லமாட்டர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.
இன்று ஆசிரியர்கள் தமக்காக வரவு செலவு திட்டத்தில் கொண்டுவரப்பட்ட சம்பள அதிகரிப்பையே கோருகின்றனர். ரணில் விக்ரசிங்கவுக்கு 865 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீடானது வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படாத ஒதுக்கீடாகும்.வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை ஆசிரியர்களுக்கு வழங்கமுடியாது என கூறிவிட்டு தனக்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்ளுகின்றார் ரணில் விக்ரமசிங்க.
ஆசிரியர்கள் சாதாரண ஒரு போராட்டத்தினையே முன்னெடுத்தனர்.தமக்கான கொடுப்பனவுக்காகவே அவர்கள் போராட்டம் செய்தார்கள். ஆனால் ரணில் அவர்கள் கண்ணீர்ப்புகை, தடியடி, குண்டாந்தடி பிரயோகம் செய்து அவர்களது போராட்டத்திற்கு பதிலளித்தார்.அவருக்கு அந்த பலம் இருந்ததனால் ஆசிரியுர்கள் மீது இந்த தாக்குதலை முன்னெடுத்தார். அவர் ஒன்றை நினைவில்கொள்ளவேண்டும் இன்னும் மூன்று மாதத்தில் ரணிலிடம் உள்ள அதிகாரம் மக்களிடம் வரும்.
இந்த நாட்டில் இனவாதம் மிகப்பெரும் பிரச்சினையாக மாறியிருக்கின்றது. இந்த நாட்டில் உள்ள முழு அரசியலும் இனவாதத்தினை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றது. வடக்கில் ஒரு அரசியல் தெற்கில் ஒரு அரசியல் கிழக்கில் ஒரு அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நாட்டினை ஐக்கிய படுத்துவதற்கான அரசியல் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நாட்டில் கோத்தபாயவின் வெற்றியானது முஸ்லிம் மக்களுக்கு எதிரான அரசியலிலேயே கிடைத்தது.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை வேறுபடுத்துகின்ற அரசியலுக்கு பதிலாக அனைவரையும் ஒற்றுமைப்படுத்துகின்ற அரசியலே செய்யவேண்டியுள்ளது. அந்த மாற்றத்தினையே தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கும்.இந்நாட்டில் இனவாத ரீதியான அரசியலை நாங்கள் முறியடிப்போம்.
இந்த நாட்டிற்கு புதிய அரசியல் ஒன்று தேவையாகும்.மக்கள் பணத்தை சூறையாடுவது முற்றாக நிறுத்தப்படும்,மக்கள் பணத்தை வீணடிக்காத அரசியல் முன்னெடுக்கப்படும், நீதித்துறைக்கு அடிபணியும் அரசியல் அந்த மாற்றத்தினையே நாங்கள் கொண்டுவருவோம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒன்று உருவானால். தற்போதுள்ள அரசியலானது குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியலாகவே உள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் கேகாலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மகிந்தானந்த அலுத்கமகே ரணிலை சிறையில் அடைப்போம் என்று கூறினார். ஆனால் நேற்று கூறுகின்றார் ரணில் விக்ரசிங்கவுக்கு ஆதரவு வழங்குவோம் என்று.எவ்வாறு இவர்களால் மட்டும் முடிகின்றது. ரணில் மத்திய வங்கினை கொள்ளையிட்டுள்ளார் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று மாற்றத்திற்காக ரணிலுக்கு வாக்களிக்குமாறு கோருகின்றனர்.
இந்த நாட்டில் மக்கள் அமைதியான முறையில் தாங்கள் விரும்பும் ஒருவரை ஆதரிக்கும் உரிமையிருக்கின்றது. இன்று மட்டக்களப்பில் அச்சுறுத்தும் ஒரு அரசியலே இருக்கின்றது. ஆசிரியர்கள் கதைப்பதற்கு பயம், அரச உத்தியோகத்தர்களுக்கு பயம். தாங்கள் விரும்பிய ஒரு அரசியலை செய்வதற்கு நாட்டு மக்களுக்கு உரிமையிருக்கின்றது. பிள்ளையானுக்கு அச்சப்படும் நிலைமையே இருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் இருக்கும் அனைத்து ஆயுதங்களும் களையப்படும்.ஒரு கூட்டம் நீதிக்கு சட்டத்திற்கு முரணாக அரசியல்செய்வதை அனுமதிக்கமுடியாது. அரசாங்கத்தின் ஆதரவுடன் அவ்வாறு செயற்படுவதற்கு இடமளிக்கமுடியாது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான குழுக்களை முழுமையாக கட்டுப்படுத்துவோம். அதுஅவசியமான ஒன்றாகும். அவ்வாறு இல்லாவிட்டால் மக்கள் உரிமையினை பாதுகாக்க முடியாது.
கடந்த காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றது. அது தொடர்பில் ஆராய்ந்துசென்றால் இந்த ஒட்டுக்குழுக்கள் பற்றிய விடயங்கள் வெளியேவந்தது. சட்டரீதியாகவுள்ள இராணுவம் மட்டுமே ஆயுதங்களை வைத்திருக்க முடியும். வேறு யாரும் ஆயுதங்களை வைத்திருக்கமுடியாது. அவை களையப்படவேண்டும் என தெரிவித்தார்

காரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டு – ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை !

கடத்தல் வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான 18 குற்றச்சாட்டுகளின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 டிசம்பரில், தெமட்டகொட பிரதேசத்தில் தமது டிஃபென்டர் காரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேகநபர்கள் குழுவிற்கு எதிராக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்திருந்தனர்.

பாடசாலைக் கல்வி நேரத்தின்போது ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட இடமளிக்கபோவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

”எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட இடமளிக்கபோவதில்லை என்றும் அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம்” என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பலாங்கொட ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவெனாவுக்கு நேற்றைய தினம் ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டிருந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்நாட்களில் ஆசிரியர் சங்கங்களின் நடவடிக்கைகளால் ஆசிரியர் பணியின் மரியாதை கேள்விக்குறியாகியுள்ளது. கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலுக்கு மத்தியில் பாதுகாப்பு தரப்பினரின் தடைகளை தகர்த்துச் செல்லும் ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியாது.

எனவே, எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட இடமளிக்கபோவதில்லை. விசேட சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம்”இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நான் நளவன் என்பதை தவிர வேறெந்த குற்றத்தையும் யாழ்.வெள்ளாளியம் நிரூபிக்கவில்லை – அருண் சித்தார்த் ஆதங்கம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் புரையோடிப் போயுள்ள சாதிய கட்டமைப்பு அது சார்ந்த வரலாற்று சுரண்டல்கள் ஆகிய விடயங்களை முன்வைத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவராக அருண் சித்தார்த் அறியப்படுகிறார் . இந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.க கட்சியில் இணைந்த அவர் அக் கட்சியில் இருந்து விலகி சில தினங்களுக்கு முன் மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்துள்ள நிலையில் அது தொடர்பான விடயங்களையும் – சாதிய பிரச்சினைகள் பற்றி சித்தார்த் கூறுவதன் பின்னணி பற்றியும் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் பரபரப்பான கலந்துரையாடல் .

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

இலங்கையில் ஒரே நாளில் மீட்கப்பட்ட 52 கிலோ 616 மில்லிகிராம் ஹெரோயின், 142 கிலோ ஐஸ் வகை போதைப்பொருள்!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 24 மணித்தியால விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 773 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் உள்ள 34 சந்தேக நபர்களும் உட்பட 807 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி 52 கிலோ 616 மில்லிகிராம் ஹெரோயின், 142 கிலோ ஐஸ், 453 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த விசேட நடவடிக்கையின் போது 03 பாதாள உலக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 778 பாதாள உலக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கள அரசாங்கத்தினுடைய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்குரிய பரிசுகளாகவே கிழக்கில் அமைச்சு பதவி – இரா.சாணக்கியன்

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் இடங்களில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடிப் பகுயில் அமைந்துள்ள இந்து ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை அவர் நேற்று(26.06.2024) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதி ரணில் மட்டக்களப்புக்கு வரும்போது அவருக்கு உணவு வழங்கினால் அமைச்சுப் பதவி பெறக் கூடிய அளவிற்கு நிலமை வந்துள்ளது.

இந்த அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டு தொடர்ந்தும் தெற்கின், அரசாங்கத்தினுடைய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்குரிய பரிசுகளாகவே இவர்களுக்கு விசேடமான நிதி, இலஞ்சம் கிடைப்பதாகவும் நாம் அறிகின்றோம்.

இதனை மக்கள் நன்கு அறிந்து, இந்த மாவட்டம் தொடர்ந்து தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாவட்டமாக இருக்க வேண்டும் என நாம் நினைத்தால் மக்கள் எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கடத்தல் கும்பல் அட்டகாசம் – 24 நாட்களின் பின்னர் தப்பிய நபர் போலிஸில் தஞ்சம் !

கிளிநொச்சியில் 24 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட நபரொருவர் சித்திரவதைக்குள்ளான நிலையில் இன்று பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 2ஆம் திகதி கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்டிருந்த நிலையில், தன்னை அடைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று தஞ்சமடைந்துள்ளார்.

இதன்போது தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்து சித்திரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்த அவர், குறித்த கும்பல் தன்னை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் தப்பி சென்ற வீட்டுக்கு அழைத்துச் சென்ற பொலிஸார் அங்கு சாட்சியங்களைப் பதிவு செய்ததுடன், தடயவியல் சான்றுகளையும் பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.