17

17

ஜனாதிபதியிடம் மக்களின் பிரச்சினைகளை முறையிடும் திட்டம் !

தீர்க்கப்படாத பிரச்சினைகளை மக்களுக்கு நேரடியாகத் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகம் 03 தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இதன்படி, 0112-354 550, 0112-354 354, 0114-354 354 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக உங்களது பிரச்சினைகளைத் தெரிவிக்க முடியும்.

 

இந்த மூன்று தொலைபேசி இலக்கங்களும் 24 மணி நேரமும் செயற்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது – நாட்டு மக்களுக்கான உரையில் ரணில் விக்ரமசிங்க !

அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது. புதியவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தோல்வியடைவார்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் குறித்த அறிக்கையில்,

 

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் முன்னோக்கி நகர்வதற்கும் தன்னுடன் இணைந்து செயற்பட்ட அனுபவசாலிகள் நாடாளுமன்றத்திற்கு செல்வது அவசியம். உங்களது எதிர்காலத்தை புதிய நாடாளுமன்றம் தீர்மானிக்கின்றது.

இதன் காரணமாக காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மேலும், நான் ஜனாதிபதி தேர்தலில் காஸ்சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டேன் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஐக்கியதேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் புதிய கூட்டணி ஆகியன ஒன்றிணைந்து எனக்கு ஆதரவளித்தன.

 

இவர்கள் அனைவரும் எனது தலைமையின் கீழ் செயற்பட்டனர். இவர்கள் அனைவரும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒன்றிணைகின்றனர்.புதிய ஜனநாயக கட்சியாக போட்டியிடுகின்றனர்.

எனது தலைமைத்துவத்தின் கீழ் அவர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இவர்கள் அனைவரும் உரிய அனுபவம் உள்ளவர்கள்.

 

இவர்கள் கடந்த காலங்களில் தங்கள் பணியை ஒழுங்கான முறையில் முன்னெடுத்துள்ளனர். கடந்த இரண்டு வருடகாலமாக என்னுடன் இணைந்து செயற்பட்டவர்களிற்கு நாட்டின் பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கான அனுபவம் உள்ளது.

 

ஆகவே அவர்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெறவேண்டும்.அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது,நீங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தோல்வியடைவீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு குறுகிய காலத்தில் 3,045 முறைப்பாடுகள் !

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவற்றுள் 811 முறைப்பாடுகளை விசாரணை செய்யுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதுடன் சுற்றிவளைப்பில் 67 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 20 பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குகின்றனர்.

கிடைத்த 620 முறைப்பாடுகள் இலஞ்ச ஊழல் சட்டத்திற்கு புறம்பான வகையில் அமைந்துள்ளதால் அவை குறித்த நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதை உடனடியாக நிறுத்திய இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி !

அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் இராணுவம் போர் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி காணப்படுகிறது.

இந்நிலையில், “காசா பகுதியில் போர் நீட்டிப்பை தொடர்ந்து, இத்தாலியில் இருந்து இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து புதிய உரிமங்களுக்கும் உடனடியாக நிறுத்தப்படுகிறது என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் மீதான எதிர்த் தாக்குதலை மட்டுப்படுத்துவதாக இஸ்ரேல் அமெரிக்காவிற்கு உறுதியளித்துள்ளது.

அதன் படி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட இஸ்ரேலிய அதிகாரிகள், ஈரான் மீதான எதிர்த் தாக்குதல் எண்ணெய் அல்லது அணுசக்தி நிலையங்களுக்குப் பதிலாக இராணுவ இலக்குகளுக்கு மட்டுப்படுத்தப்படும் என்று அமெரிக்காவிற்கு உறுதியளித்துள்ளனர்.

 

இதனை தொடர்ந்து, நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், “நாங்கள் அமெரிக்காவின் கருத்துக்களைக் கேட்கிறோம், ஆனால் எங்கள் தேசிய நலன்களின் அடிப்படையில் எங்கள் இறுதி முடிவுகளை எடுப்போம்” குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீது போரை தொடங்கியது. இதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை உயிரிழந்த நிலையில் ஒரு ஆண்டை கடந்தும் போர் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இத்தாலி நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

கண்டியில் பாடசாலைக்கு முன்னாள் அமைச்சர் ஹெகலியவின் பெயர் – மாகாண கல்வி அமைச்சு விடுத்த உத்தரவு!

கண்டி  – வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை  பிரிவிலுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலையின் பெயரை மாற்ற மத்திய மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலையை பெயர் மாற்றம் செய்வதற்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கட்டமைப்புக் குழு சமர்ப்பித்த யோசனைக்கு நேற்றைய தினம் (16.10.2024) ஆளுநர் எஸ்.பி.எஸ்.அபயகோன் அனுமதியளித்துள்ளார்.

கடந்த காலங்களில் கெஹலிய ரம்புக்வெல்ல மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயரை மாற்ற வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே, இக்கல்லூரிக்கு குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை என பெயரிடுவதற்கு ஆளுநர் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

2012 ஆம் ஆண்டு மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் இப்பாடசாலைக்கு கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை என பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சீ ஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக இலங்கையைச் சேர்ந்தவர் பதவிப்பிரமாணம்!

சீ ஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக இலங்கையைச் சேர்ந்த வின்சென்ட் பெரேரா பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அரச சபையில் நேற்று (16) அவர் சட்டமா அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக சீ ஷெல்ஸ் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இலங்கையில் பிறந்த வின்சென்ட் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்று உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக அவர் பிஜியில் சட்டத்தரணியாகவும், மன்றாடியார் நாயகமாகவும் பணியாற்றியுள்ளதுடன், சிங்கப்பூரில் உள்ள மத்தியஸ்த மையத்தில் அங்கீகாரம் பெற்ற மத்தியஸ்தராகவும் தகுதி பெற்றுள்ளார்.
சீ ஷெல்ஸின் சட்டமா அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, வின்சென்ட் பெரேரா, சீ ஷெல்ஸின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் சிவில் வழக்குகளில் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

பகிரங்கமாக வெளியிடுவதாக இருந்தால் என்னிடமுள்ள ஈஸ்டர் அறிக்கையை வழங்க தயார் – உதய கம்மன்பில

அரசாங்கம் பகிரங்கமாக வெளியிடுவதாக உறுதியளித்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத தன்னிடமுள்ள இரண்டு அறிக்கைகளையும் கையளிக்க தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

 

என்னிடமுள்ள அறிக்கையை பெற்றுக்கொண்ட பின்னர் அதனை அரசாங்கம் பகிரங்கப்படுத்தாவிட்டால் என்ன நடக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ஜனாதிபதியோ அமைச்சரவை பேச்சாளரோ நான் வழங்கும் அறிக்கைகளை வெளியிடுவோம் என உறுதியளிக்கும் வரை நான் அரசாங்கத்திடம் அவற்றை கையளிக்க தயாரில்லை என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

 

நான் வேண்டுகோள் விடுத்தபடி ஏழுநாட்களிற்குள் அறிக்கைகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிட்டால், நான் அவற்றை இணையத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

காசா மீது தொடரும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் – உணவு, குடிநீர் இன்றி இறக்கும் நிலையில் நான்கு லட்சம் பாலஸ்தீனியர்கள்!

இரண்டு வாரங்களாக மருந்து, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை இஸ்ரேல் ராணுவம் தடை செய்துள்ளது. இதனால் வடக்கு காசா வில் உள்ள 4,00,000 பாலஸ்தீனர்கள் பட்டினியில் தள்ளப் பட்டுள்ளனர். இதனால் அதிக மக்கள் உயிர்ப் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள் ளது என ஐரோப்பிய – மத்திய தரைக் கடல் மனித உரிமை கள் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. வடக்கு காசாவில் சுமார் 2, 00,000 பாலஸ்தீனர்கள் பத்து நாட்களாக உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தூக்கி எறிந்தது போல என்னையும் தூக்கி எறிந்து விடாதீர்கள்- ஜீவன் தொண்டமான்

நாட்டை மீட்டெடுத்த முன்னாள் ஜனாதிபதி ரணிலை மக்கள் தூக்கி எறிந்தவாறு தம்மை மக்கள் தூக்கி எரியாமல் இருந்தால் சரி என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சலுகைகளை வழங்கிய புதிய ஜனாதிபதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றையதினம் (16) நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், “பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள விடயத்தில் 1350 ரூபாய் அடிப்படை சம்பளமும் மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவை அதிகரிக்குமாறு சம்பள நிர்ணய சபையில் நாங்கள் கோரிக்கையை முன்வைத்த போது அதனை நிராகரித்தது தற்போதய ஜனாதிபதியுடைய கட்சியான தேசிய மக்கள் சக்தி.

விமர்சனங்கள் பல இருந்தாலும் நான்கு வருடகாலமாக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன் அதேபோல் மக்களின் பிரச்சினைகளுக்கு களத்தில் இறங்கி நான் குரல் கொடுத்திருக்கின்றேன் எந்த இடத்திலும் நான் ஓடி ஒழியவில்லை நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை 30 சுயாதின கட்சிகள் உருவாகியுள்ளன.

 

எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ் பிரதி நிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்ற பட்டியலை எடுத்து நோக்கினால் முன்னாள் அமைச்சர் திகாம்பரம் நான் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராமகிருஷ்ணன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராமேஸ்வரன் உதயகுமார் போன்ற அநேகமான பெயர்கள் காணப்படும்.

 

ஆனால் தற்போது ரவிந்திரன் என்பவருடைய பெயரும் காணப்படும் அவர் தான் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வேட்பாளர் அவர் யார் புரொடொப் தோட்டபகுதியில் முகாமையாளராக இருந்து மக்களை தாக்கி தொழிற்சாலையில் அடைத்து வைத்திருந்தவர்.

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு நாங்கள் தான் சென்று அம் மக்களை விடுவித்தோம் அவர் போன்ற ஒருவருக்காக மலையகத்தில் சிலர் கொடியினை உயர்த்தி கொண்டு ஆதரவு வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.

தனக்கு கிடைத்த வளங்களை வைத்து மாத்திரம் வேலை செய்ய முடியுமே தவிர வளங்களை உருவாக்க முடியாது நாடு வங்குரோத்து அடைந்த போது கூட மலையகத்தை பொறுத்தவரையில் இரண்டு சம்பள உயர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

 

ஆரம்பகாலம் முதல் நான் சொல்லி வருவது எம்மிடம் இருப்பது 10000ம் வீடுகள் ஆனால் 10000ம் வீடுகளை வைத்து ஆறு அரசியல்வாதிகள் ஒன்றறை இலட்சம் பேரை ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள்.

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாக்குகளுக்காக ஒரு தவறான வதந்திகளை பரப்பாது கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் அமைக்கும் போது அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கட்சிகளும் இல்லாமல் போயுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார தரப்பினரும் கடந்த காலங்களில் மதுபானசாலை அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொண்டார்களா..? – கீதநாத் காசிலிங்கம் குற்றச்சாட்டு!

கடந்த ஆட்சி காலத்தில் ஜேவிபியினரும் மதுபான சாலைகளை பெற்றார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா பொது ஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று(16) மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கீதநாத் காசிலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “ கடந்த ஆட்சி காலத்தில் பெறப்பட்ட மதுபான சாலைகள் தொடர்பான விபரங்களை அநுர குமார திஸாநாயக்க வெளியிடுவேன் என தெரிவித்தார்.

 

தற்போது சில வாரங்களுக்கு முன்னர் ஊடக சந்திப்பை நடத்திய அக்கட்சியின் பிரமுகர் வசந்த சமரசிங்க மதுபான சாலைகளை பெற்றவர்கள் மற்றும் சிபாரிசு செய்தவர்களின் விபரங்களை வெளியிடப்போவதாக கூறினார்.

ஆனால் மூன்று வாரங்கள் கடந்தும் இதுவரை அந்த பட்டியல் வெளியிடப்படவில்லை.

 

இதன்மூலம் ஜேவிபியினரும் மதுபான சாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நான் மகிந்த ராஜபக்சவுடன் 15 வருடங்களாக இணைந்து வேலை செய்கிறேன். இதுவரை மதுபான சாலை அனுமதிப்பத்திரமோ, மதுபான போத்தலையோ நானும் பெற்றதில்லை. எவருக்கும் பெற்றுக்கொடுத்ததில்லை.

தான் மதுபான சாலை அனுமதிப்பத்திரத்தை பெறவில்லை என தெரிவித்து சத்தியக்கடதாசியை தயாரித்து ஊடக சந்திப்பில் வெளிப்படுத்தினார்.

 

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை வெளிப்படுத்த வேண்டும்”என அவர் தெரிவித்துள்ளார்.