சிறுவர்கள் இரட்டைக் கொலை: பிரதான சந்தேக நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

baby-01.jpgஅக்மீமன பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபர் நேற்றுமுன்தினம் காலை (20) பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததோடு மற்றைய சந்தேக நபர் இனந்தெரியாத கும்பலொன்றினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்மீமன நுகேகந்த பகுதியில் வைத்து 10 வயது சிறுமி ஒருவரும் மூன்று வயது சிறுவன் ஒருவனும் கடந்த 15ஆம் திகதி காணாமல் போயிருந்தனர். பின்னர் இவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். கடந்த 18ஆம் திகதி சிறுமியின் சடலமும் 19ஆம் திகதி சிறுவனின் சடலமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள வீட்டில் வசித்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து கிடைத்த வாக்குமூலத்தின்படி, மறைத்து வைத்துள்ள ஆயுதங்களை மீட்பதற்காக பிரதான சந்தேக நபர் நேற்றுமுன்தினம் காலை (20) சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன்போது மறைத்து வைத்திருந்த கைக்குண்டை சந்தேக நபர் பொலிஸார் மீது வீசித் தாக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சந்தேக நபர் கராபிடிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, யக்கலமுல்ல கொட்டாவ காட்டுப் பகுதியில் இருந்து நபரொருவரின் சடலமொன்று நேற்றுக்காலை (20) மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த சடலம் பிரதான சந்தேக நபரின் உறவினர் ஒருவருடையது என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர். இவருக்கும் சிறுவர்களின் கொலையுடன் தொடர்பு இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதுவரை சடலம் அடையாளங் காணப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

இருவரினதும் பிரேத பரிசோதனை பத்தேகம நீதவானின் முன்னிலையில் நேற்றுமுன்தினம் பிற்பகல் நடைபெற்றது. இதேவேளை, கொல்லப்பட்ட 10 வயது சிறுமியரின் இறுதிக் கிரியைகள் நேற்று பிற்பகல் நடைபெற்றது. ஊர் மக்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இதில் கலந்துகொண்டனர். இவரின் உடலில் 12 வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *