ஆர்ப்பாட்டமில்லாத இலங்கைக் கவிஞர் நீலாபாலன் -புன்னியாமீன்

13-neela-balan.jpgகவிதை பற்றிய ஆய்வு அல்லது கவிஞர்கள் பற்றிய செய்திகள் என்று வந்தால்.. எவருக்கும் இலங்கையில் கிழக்கு மாகாணம் தான் நினைவில் வரும். அந்தளவிற்கு கவிதைக்கும், கிழக்கு மாகாணத்திற்கும் நெருக்கமான சம்பந்தமுண்டு. கிழக்கு மாகாணத்தில் ‘கல்முனை’ பல கவிஞர்களின் தாய்வீடு. அந்தக் கல்முனை தந்த அற்புதமான, ஆளுமையுள்ள, ஆர்ப்பாட்டமில்லாத மூத்த கவிஞர்களுள் ஒருவராக “கல்முனைப் பூபால்” என்ற பெயரால் அறிமுகமாகி இன்று ‘நீலாபாலன்’ எனும் பெயரால் விரிந்து, விருட்சமாய், விழுதுகள் பரப்பி நிற்கிறார் பூபாலரத்தினம்.

மரபுக் கவிதை, புதுக்கவிதை பற்றிய எத்தகைய ஆய்வினை மேற்கொண்டாலும் கல்முனைப் பூபால் ‘நீலாபாலனை’ விடுத்து ஆய்வினை மேற்கொள்ள முடியாது. அந்தளவிற்கு நல்ல பல கவிதைகளை தமிழுலககுக்குத் தந்திருப்பவர் நீலாபாலன்.

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கல்முனை நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட நீலாபாலனது இயற்பெயர் பூபாலரத்தினம். தந்தை நல்லதம்பி, தாய் பூரணிப்பிள்ளை. இவர்கள் இருவருக்கும் ஏக புதல்வனாக கல்முனையில் 14.04.1948ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு மூத்ததும், இளையதுமாக இரண்டு பெண் சகோதரிகளுளர். இதில் இன்னும் சுவாரசியம், முக்கியம் என்னவென்றால் இந்த இருவரையும் திருமணம் செய்திருப்பவர்களும் இலங்கையில் புகழ்பூத்த கவிஞர்களே. அக்காவின் கணவர் கவிஞர் சடாட்சரம். தங்கையின் கணவர் கவிஞர் கலைக்கொழுந்தன். இப்படி ஒரு கவிதைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் நீலாபாலன்.

நீலாபாலன், பொருளாதார வளம்மிக்க ஒரு போடியார் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் தந்தையாரை இழந்திருந்தாலும் தாயின் தந்தையாரது ஆதரவில் சகல வசதிகளோடும் வளர்ந்தவர். இவருடைய பாட்டனார் கல்முனைப் பகுதியில் மிகப் பிரபலமான சித்தாயுர்வேத வைத்தியர். நாகமணி வைத்தியர் என்று இவரது பெயரைச் சொன்னால் அனைவரும் அறிவர். அதுமட்டுமன்றி இவர் தமிழறிந்த, தமிழ்ப் புலமைமிக்க பண்டிதராகவுமிருந்ததால் இவர்களில்லத்தில் அடிக்கடி இலக்கியச் சந்திப்புகள், கந்தப்புராணம், மகாபாரதம் போன்ற செய்யுள் வாசிப்புகள், ஓசையுடன் படிக்கப்படுவதும், அதற்கு பதவுரை, பொழிப்புரை சொல்லப்படுவதும் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். நீலாபாலன் பாட்டனாரின் மடியிலிருந்தபடியே ஓசையுடன் படிக்கப்படுகின்ற கவிதைகளை செவியேறலாகவே கேட்டு சுவைக்கவும், ரசிக்கவும் கற்றுக் கொண்டார்.

“இறைவ னெழிற்கதிர் மணிகளளுத்திய
தவசு நிறுத்தலுமே”… என்றும்,
திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்” என்றும்

ஓசையுடன் பாடப்பட்ட கவிதா வீச்சுக்கள்தான் என்னைக் கவிஞனாக்கியது என்பதை பின்னாளில் தனது கவிதை அரங்குகளில்,
அரங்குக் கவிதைகளில்..

“தாய்ப்பாலோடே கலந்து தமிழூட்டி பாவரசாய்ப்
பூப்படைய வைத்த என்தாய் பொன்னடியாம்
தாழ்ப்பணிந்தேன்”….. என்று குறிப்பிடுவதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

இப்படி சின்ன வயதிலிருந்தே கவிதை இலக்கணத்தை முறைப்படிக் கற்றுக்கொண்ட நீலாபாலன், இன்றுவரை வெல்லும் கவிஞராகவே விளங்குவதற்கு இந்த அடிப்படை இலக்கிய ஞானமே காரணமாகும். பழகுவதற்கு இனியவராகவும், பெரிய பதவியிலிருந்தாலும் ஒரு சாதாரண மனிதராகவே தன்னைக் காட்டிக் கொள்ளும் பண்பும், பிறருக்கு உதவி செய்யும் மனமும், புகழுக்காக ஓடி அலைவதில் நாட்டமும் இல்லாத உயரிய போக்கும் இவரது சிறந்த பண்புகளாகும்.

நீலாபாலன் தனது ஆரம்பம் முதல் க.பொ.த. உயர்தரம் (வணிகம்) வரையான கல்வியை மட்டக்களப்பு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலேயே பெற்றுக் கொண்டார். சுவாமி விபுலாந்தர், புலவர்மணி பெரிய தம்பிபிப்பிள்ளை ஆகியோர் கற்ற கல்முனை உவெஸ்லியே இவரையும் கவிஞராக இனங்காட்டி செம்மைப்படுத்தியது.
இவருடைய கல்லூரிக்காலம், கவித்துறையில் இவருக்கு முறையான அத்திவாரத்தையிட்ட முக்கிய காலமாகும்.

இக்காலத்தில்தான் வாரமலர்கள், மாத சஞ்சிகைகள் ஆகியவற்றில் இவர் முனைப்புடன் எழுத ஆரம்பித்தார்.. தினகரன், வீரகேசரி, தினபதி, சுதந்திரன், மித்திரன், பூரணி, கலைச்செல்வி, புதுயுகம், தேசாபிமாணி. கதம்பம், செய்தி, மாணிக்கம், வானவில், மல்லிகை, விவேகி, தேசிய முரசொலி இப்படி இலங்கையின் தேசிய பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இவரின் ஆக்கங்களை பிரசுரித்து வந்தன. இலங்கையில் மூத்த எழுத்தாளர்கள் பலரை ஊட்டி வளர்த்த இந்த ஊடகங்கள் நீலபாலனையும் செழித்து வளர களமமைத்துக் கொடுத்தன.

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக எழுதிவருகின்ற நீலாபாலனின் கன்னிக்கவிதை 1965 தினகரன் புதன்மலரில் “அன்னைத் தமிழ்” எனும் தலைப்பில் பிரசுரமானது. அதைத் தொடர்ந்து தினகரன் வாரமலர், வீரகேசரி, சுதந்திரன், தினபதி, சிந்தாமணி, செய்தி, வானவில், மாணிக்கம் இப்படி இலங்கையிலிருந்து வெளியாகும் எல்லாப் பத்திரிகைகளிலும் வாரம் தவறாமல் இவருடைய கவிதைகள் கல்முனை என். பூபாலரத்தினம் என்ற பெயரிலேயே பிரசுரமாயின. தமிழ், மனிதநேயம், காதல், சாதி ஒழிப்பு சம்பந்தமான பல நல்ல மரபுக்கவிதைகளை எழுதி வெளிப்படுத்தினார்.. கல்லூரியில் ‘அவதானிப்புக்குரியவராக’ ஆசிரியப் பெருந்தகைகளால் ‘கவிஞர்’ என்று அடைமொழி கூறி அழைக்குமளவிற்கு இவரது கவித்துறை விசாலமாகியிருந்தது.

13-neela-balan.jpgஇந்நாட்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் உரிமைப் போராட்டம், சத்தியாக்கிரகம், உண்ணாவிரதமென தமிழ் உணர்ச்சி, தமிழர் எழுச்சி கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்தது.. நீலாபாலனும் மாணவப் பருவத்திலேயே இவற்றில் அதிதீவிரமாக ஈடுபாடு காட்டினார்.

“தாய்மொழிக்கு வந்ததடா சூடு” என்றெல்லாம் உணர்ச்சிப்பொங்கும் கவிதைகள் ‘சுதந்திரனில்’ தொடர்ந்தெழுதினார். அப்போது சுதந்திரன் ஆசிரியராகவிருந்த மூத்த பத்திரிகையாளர் திரு. எஸ்.டி. சிவநாயகம் அவர்கள் மாணவக் கவிஞராயிருப்பது சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படுமென நினைத்து கல்முனை என். பூபாலரத்தினம் எனும் பெயரை, ‘கல்முனைப் பூபால்’ என மாற்றியதோடு, அன்றிலிருந்து கல்முனைப் பூபாலான இவர் 1968ல் சுதந்திரன் மாணவர் மன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றுக் கொண்டார்.

கல்லூரியில் “தமிழோசை” என்ற கையெழுத்துப் பத்திரிகை ஆசிரியராகவும், முத்தமிழ்மன்றத் தலைவராகவுமிருந்திருக்கிறார். மிகத் திறமைப் பேச்சாளரான இவர் பாடசாலையில் நடைபெற்ற பாரதிவிழாப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றார். அதுமட்டுமன்றி கல்முனைச் சுகாதாரப் பகுதியினர் நடாத்திய கவிதை எழுதும் போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் கவிதையெழுதி முதலிடம் பெற்றார்.

கல்முனை எழுத்தாளர் சங்க உறுப்பினர், சோசலிச சிந்தனைக்கழக உறுப்பினர், இளைஞர் முன்னணி செயலாளர், முத்தமிழ்மன்றச் செயலாளர், கிழக்கிலங்கை கன்னித் தமிழர் இயக்க பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளோடு கல்முனைக் கடற்கரைக் கண்ணகி ஆலய சபை செயலாளருமாகவிருந்திருக்கிறார்.

15 நாடகங்களுக்குமேல் எழுதி, இயக்கி, நடித்து மேடையேற்றியுள்ளார். ‘நிழல்கள்’, ‘சந்தனைச்சிலை’, ‘திருப்புமுனை’, ‘ஆயுதம்’ ஆகிய இவரது நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. “மாமனார் பறந்தார்” எனும் இவரது நகைச்சுவை நாடகம் 10 நாட்கள் டிக்கட் காட்சியாக நடாத்தப்பட்டது. கல்முனை இலக்கிய வட்டத் தலைவராயிருந்து, அப்பகுதியில் அப்போது வளர்ந்து வந்து கொண்டிருந்த பல கவிஞர்களுக்கு ஊக்கமும், ஊட்டமும் கொடுத்து, பிரசுரங்கங்களும் ஒழுங்குசெய்து அவர்களை வளர்த்தெடுத்தவராகவும் இவர் திகழ்கின்றார்.

1968ல் கல்முனையில்ää பொங்கலைச் சிறப்பிக்க இவர் ஒழுங்கு செய்திருந்த ‘தமிழ்க் கவிதை விழா’ இவரது திறமையை பறைசாட்டியது. இந்த விழாவை தினபதியும், மித்திரனும் விசேட மலர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தன. மூத்த கவிஞர்கள் பலர் இந்த விழாவிற் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாக் கவியரங்கில் மறைந்த கவிஞர் வி. ஆனந்தன், கல்லூரன் ஆகியோர் பங்குபற்றினர். இதுவே இவர்களது முதலாவது கவியரங்கமாகும்.

இந்தக் காலம் கல்முனைப் பூபாலுடைய கவிதா வளர்ச்சியின் உச்சக்கட்டமென்றால் அது மிகையல்ல. அதற்குக் காரணம் மூத்த கவிஞர்களான நீலாவணன், பாண்டியூரன், ஜீவாஜீவரத்தினம், மருதூர்க் கொத்தன் போன்றவர்களோடு ஒன்றிப் பழகக்கூடிய வாய்ப்பும், கவிதை சம்பந்தமான நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளக் கூடிய, கலந்துரையாடக்கூடிய வசதிகளும் இவருக்குக் கிடைத்தது. “இதனால் என்னால் பண்படமுடிந்தது” என பாசத்தோடும், நேசத்தோடும் இந்நாட்களை நினைவுபடுத்துகிறார் நீலாபாலன்.

“பூபால் கவிதை புனைவான். அவன் கவிதை
சாவாத பேறுடைய தாம்”
என்று மறைந்த கவிஞர் நீலாவணன் அவர்கள் சாற்ருறுதி செய்திருப்பது இங்கு நினைவுபடுத்தத்தக்கது.

நீலாபாலன் இந்த உறவு நெருக்கங்களால் 500 கவிதைகளை 1970க்கு முன்னரேயே எழுதிமுடித்துவிட்டார்.

1970களில் தமிழகத்தில் ‘வானம்பாடி’ என்ற கவிஞர் அமைப்பு புதிய முயற்சிகளீடுபட்டதோடு, ‘வானம்பாடி’ எனும் புதுக்கவிதைச் சஞ்சிகையையும் வெளியிட்டது. மானிடம் பாடப் புறப்பட்ட இந்த அமைப்பினுடைய செயற்பாடு, தாக்கம் இலங்கைக் கவிஞர்களையும் பாதித்தது. கல்முனைப் பிரதேச இளைய கவிஞர்களை இந்த அலை சிந்திக்க வைத்தது. கல்முனைப் பூபால் தனது சகாக்களை இணைத்துக் கொண்டு “கல்முனை புதிய பறவைகள் கவிதா மண்டலம்” என்றோர் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகவும் செயற்பட்டார்.

“இந்த யுகத்தின் இருள்கள் இறக்க
எங்கும் இனிய வசந்தம் பிறக்க
எங்கள் உழைப்பே எருவாய் அமைக” என்ற அமைப்பின் கோட்பாட்டு வரிகள் நீலாபாலனால் எழுதப்பட்டதே.

இந்த அமைப்பினூடாக மானுடம் பாடப்பட்டது. மனிதநேயம் முன்னெடுக்கப்பட்டது. பல இலக்கியச் சந்திப்புகள், கலந்துரையாடல்கள், கவிதைக் கருத்தரங்குகள், கவியரங்குகள் வாரந்தோறும் நடத்தப்பட்டன. கவிதையைப் புதிய கோணத்தில் முன்னெடுத்த அமைப்பு “புதிய பறவைகள் கவிதா மண்டலம்”. இதற்கு முக்கிய ஊக்கியாயிருந்தவர் நீலாபாலன்.

எல்லோராலும் கவிதை எழுத முடியும். ஆனால், எழுதிய கவிதையை உணர்வோடு சொல்ல முடிவதில்லை. கவிதை செவிநுகர் கனிகள் அல்லது “தேன்வந்து பாயுது காதினிலே” என்ற பாரதியின் வாக்கைச் சில கவிஞர்களால் எண்பிக்க முடிவதில்லை. ஆனால், கவிதை செவிநுகர் கனிதான் என்பதை நிரூபிக்க கவிஞர்களில் முதல் வரிசைக் கவிஞர் நீலாபாலன் விளங்கினார்.

இவரது எழுத்துப் போலவே இவரது கவிதைப் பொழிவும் சிறப்பாகவே இருக்கும். வானொலியில் இடம்பெற்ற “பௌர்ணமி” கவியரங்கொன்றில் நீலாபாலனது கவிதைப் பொழிவில் லயித்துப் போன அப்போதைய இலங்கை வானொலி தமிழ்ப் பகுதிப் பிணப்பாளர் திரு.வி.என். மதியழகன் அவர்கள் 1990ல் வானொலியில் கவிதை சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை நடத்தும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க நீலாபாலனால் வானொலியில் ஆரம்பிக்கப்பட்டதே “கவிதைக்கலசம்” எனும் நிகழ்ச்சி.

எழில்வேந்தன் தயாரிப்பில் நீலாபாலன் தொகுத்து வழங்கிய “கவிதைக்கலசம்” இலக்கிய உலகில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாக விளங்கியது. இலங்கை பூராகவுமிருந்த இளைய கவிஞர்கள் பலரது கவிதைகளைத் திருத்தம் செய்து சங்கையாக அரங்கேற்றி அவர்களை உற்சாகப்படுத்தி உயரத்தில் ஏற்றிவைத்தவர் இவர். இன்று பிரபலங்களால் மிளிருகிற நூற்றுக்கணக்கான கவிஞர்களைத் தூசுதட்டித் துடைத்து உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். 1996 வரை இவரால் நடாத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை இவருக்குப் பின்னர் பலர் நடாத்தியிருந்தாலும் இவர் நடாத்திய காலம் கவிதைப் பொற்காலமென கவிதையாளர்கள், கவிதா ரசிகர்கள் அறிவார்கள்.

இவர், இலங்கை எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதற்காக வானொலியில் “முத்துப் பந்தல்” எனும் மகுடத்தில் இன்னுமொரு நிகழ்ச்சியை நடாத்தினார். சர்வானந்தா அவர்கள் இந்நிகழ்ச்சியைத் தயாரித்தளித்தார். இலைமறை காயாயிருந்த ஏறத்தாழ 37 எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிறுகதையாசிரியர்கள் நீலாபாலனால் நேர்காணப்பட்டு விலாசப்படுத்தப்பட்டார்கள். 1992ல் இந்நிகழ்ச்சி பலரது வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

இதுவரை 75 கவியரங்குகளில் பங்கேற்றுள்ள நீலாபாலன், வானொலியில் மட்டும் 12 கவியரங்குகளைத் தலைமைதாங்கி நடாத்தியுள்ளார். ஊவா மாகாணசபை, அமைச்சினுடைய சாஹித்திய விழா கவியரங்குகள் ஐந்திற்கு தலைமைதாங்கி நடாத்தியுள்ளார். 1978ல் பதுளை அல். அதானில் நடைபெற்ற மீலாத் விழாக் கவியரங்கிற்கும் தலைமைதாங்கி நடாத்தியுள்ளார். கிழக்கிலங்கை, மன்னார், யாழ்ப்பாணம், புத்தளம், திருக்கோணமலை, பலப்பிட்டிய, கண்டி ஆகிய நகரங்களில் நடைபெற்ற கவியரங்குகள் பலதில் கலந்தும், தலைமைதாங்கியும் நடாத்தியுள்ளார்.

இவரது கவிதை கேட்பதற்காகவே ரசிகர்கள் திரள்வார்கள்.
இலங்கை வானொலியில் 1993ம் ஆண்டு புத்தாண்டு சிறப்புக் கவியரங்கொன்றை நடாத்தினார். மூத்த கவிஞர்கள் அம்பி, நாவற்குழியூர் நடராஜன், சில்லையூர்ச் செல்வராஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மூத்த, அனுபவம் வாய்ந்தவர்களோடு பங்குபற்றியிருந்தாலும் இவரது ஆளுமை மேலோங்கிப் பளிச்சிட்டதை பலரும் பாராட்டியிருந்தார்கள். இதுவொரு வரலாறு. இலங்கை ரூபவாஹினியிலும், கவியரங்கு, இலக்கியச்சந்திபுக்களை நீலாபாலன் நடாத்தியுள்ளார். வானொலியில் முஸ்லிம், சிங்கள, கிறிஸ்தவ, இந்து கவிஞர்கள் கலந்து கொண்ட புத்தாண்டு சமாதானக் கவியரங்கொன்றை நீலாபாலன் தலைமை தாங்கி நடாத்தியுள்ளார்.

இவர், புகழ்தேடி ஓடாத, புகழுக்காக அலையாத, விளம்பரத்தின் மேல் விருப்பமில்லாத ஒருவர் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
1976ம் ஆண்டு அரசாங்க உத்தியோகத்திலிருந்து விலகி, பெருந்தோட்டத்துறையில் உத்தியோகம் பெற்று, மலையகத்திலேயே திருமணமும் செய்து, முழுக்க முழுக்க மலையகவாசியாகிவிட்ட பின்னர் கல்முனைப் பூபால் என்று மிகப் பிரபலமாகியிருந்த தனது பெயரில் பிரதேசவாடை தொணிக்கின்றது என்பதால் அதை மாற்றினார்.
தன்னுடைய மனைவியின் பெயரில் முன்பாதியையும் (நீலா) தனது பெயரின் பின்பாதியையும் (பாலன்) இணைத்து நீலாபாலன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். ஒரு கவிஞனுக்கு முகமும், முகவரியும் அவனது எழுத்துகளே என்பதற்கொப்ப இவரது எழுத்துகளே இவரை இனங்காட்டியது..

பெயர் மாற்றத்தோடு அக்கினிப் பாவலன் என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி 1976ல் சிந்தாமணிக்கு அனுப்பியிருந்தார்.

“பசியோடு உலவிடும் மனிதனின் துயரினை
பாடிடும் பாவலன் நான்
பாவையர் சதையினில் காவியம் தேடிடும்
பாவலர் வைரியும் நான்” என்றும்

“இது ஒரு புதுவிதி என ஒரு தனிவிதி
எழுதி நான் பாவிசைப்பேன்”
என்று எழுதப்பட்ட அந்தக் கவிதை மறுவாரமே பிரசுரமானதோடு, ஆசிரியர், சிவநாயகத்திடமிருந்து தொடர்ந்து எழுதும்படி கடிதமும் இவருக்கு வந்திருந்தது. அதற்குப் பின்னர் சிந்தாமணியில் தொடர்ந்து இவரது கவிதைகள் வெளியாகின. தினகரன், வீரகேசரி மற்றும் இலங்கையிலிருந்து வெளிவரும் எல்லா ஏடுகளிலும் எழுதிய இவர், இந்தியாவிலிருந்து வெளிவரம் ராணி, தீபம், ஆனந்த விகடனிலும் கவிதைகள் எழுதியுள்ளார்.

தற்போது ஊவா இலக்கியவட்ட ஆலோசகர், ஊவா தமிழ்ச்சங்கத் தலைவர், இன்னும் பல அமைப்புகளின் காப்பாளர் ,இப்படி அனேக இலக்கியவ முயற்சிகளில் சம்பந்தப்பட்டுள்ளார் நீலாபாலன் 1996ம் ஆண்டு பண்டாரவளை இந்து இளைஞர் மன்றத்தோடு இணைந்து கவிதைப்பெருவிழா ஒன்றை நடாத்தியுள்ளார். இலங்கை வானொலி, ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இவ்விழாவிற் கலந்து சிறப்பித்தனர். இவ்விழாவில் 20 இலக்கியவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

உத்தியோக ரீதியாக பெருந்தோட்ட துறையில் 30 ஆண்டுகள் பெரிய கிளாக்கர், அதன் பின்னர் நிர்வாக அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். இந்த உத்தியோக உயர்வால் பல இலக்கிய இழப்புகளுக்கு ஆளானார் நீலாபாலன்.

கடந்த ஏப்ரல் 2008ல் ஓய்வுபெற்றதிலிருந்து இன்றுவரை வெளிமடைகிறீன் ரீ எஸ்டேட்டின் முகாமையாளராக சேவையாற்றி வருகிறார். நீலாபாலன் அகில இலங்கை சமாதான நீதவானாகவும், ஜுரிமார்சபை, சமாதான சபை உறுப்பினராகவும் இருக்கிறார்.

நீலாபாலனது மனைவி நீலாதேவி ஒரு ஆசிரியை. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவர் கிஷோத். தேயிலை உற்பத்திச்சாலை அதிகாரியாகவிருக்கிறார். இளைய மகன் மனோஜ் கணித ஆசிரியராகவிருக்கிறார். தற்போதெல்லாம் தனது மகனுடைய குழந்தை விதுர்ஷிகாவுடன் விளையாடுவதும், கவிதை , கட்டுரை, விமர்சனம் என்று எழுதுவதிலுமே பொழுது போவதாகச் சொல்லும் நீலாபாலன், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளையும், நுற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், உருவகக் கதைகள், நாடகங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளையும், விமர்சனங்களையும் எழுதியுள்ளார். இவரது புனைப்பெயர்கள் கல்முனைப் பூபால், நீலாபாலன், பாலா, எரியீட்டி, கவிவலன், கவிஞானகேசரி, கல்முனைக் கவிராயர் என்பதாகும்.
மரபுக் கவிதையா? புதுக்கவிதையா? நீலாபாலன் எழுதுவது கவிதை. சாதாரண வாசகர்களுக்கும் புரியக்கூடிய வார்த்தைகள். படிமம் என்ற பெயரில் விளக்கமில்லாத வார்த்தைச் சூத்திரங்களை இவர் எழுதுவதில்லை.

இவருடைய இலக்கிய சேவைகளைக் கருத்திற் கொண்டு பின்வரும் அமைப்புக்கள் விரதுகளையும், கௌரவங்களையும் வழங்கியுள்ளன.

1972ல் இளம் எழுத்தாளர்மன்றம் ‘பாவரசு’ பட்டம் கொடுத்தது.
1977ல் வெளிமடை இலக்கியவட்டம் கவிதை வித்தகன் பட்டம் கொடுத்தது
1991ல் ஊவா மாகாண சாஹித்திய விழாவில் ‘கவிமணி’ பட்டம் கிடைத்தது.
1993ல் நோர்வூட் இலக்கியவிழாவில் ‘தமிழ்மணி’ பட்டம் கிடைத்தது.
1996ல் பண்டாரவளை கவிதைப் பெருவிழாவில் ‘கவிமாமணி’ பட்டம் கிடைத்தது
2003ல் ஊவா சாஹித்திய விழாவில் ‘கவிதைப் பரிதி’ பட்டம் கிடைத்தது
2003ல் அகில இன நல்லுறவு ஒன்றியம் ‘சாமஸ்ரீ கலைத்திலகம்’ பட்டம் கிடைத்தது

இருப்பினும் நீலாபாலனது கவிதைத் தொகுப்பு இதுவரை வெளிவாரமலிருப்பது பெரும் குறைபாடாகவே காணப்படுகின்றது. இலங்கையில் இதுபோல பல திறமையான எழுத்தாளர்களின் நூல்கள் வெளிவராமலிருப்பது பெரும ;குறைபாடாகவே குறிப்பிட வேண்டும். இந்தியாவைப் போல இலங்கையில் தமிழ்நூல் வெளியீட்டு வசதிகள் மிகக் குறைவு. இலங்கையில் எழுத்தாளனே வெளியீட்டாளனாகவும் மாற வேண்டிய நிலை தமிழ்நூல் வெளியீட்டு வளர்ச்சிக்கு பெரிதும் பின்னடைவை எடுத்துக் காட்டுகின்றது. அதுமட்டமன்றி வெளியிடப்படும் நூல்களை சந்தைப்படுத்துவதிலும் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.. இந்நிலையினால் பல திறமையான எழுத்தாளர்கள் எந்தவித நூல்களையும் வெளியிடாமலே உள்ளதையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டுதல் பொருத்தமானதாகும்.

ஆயினும் ‘அலைகள்’ ‘மாணிக்க விழுதுகள்’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிடக்கூடிய நடவடிக்கைகளை நீலாபாலன் மேற்கொண்டுள்ளார் என்பது மகிழ்ச்சி தரும் ஒரு செய்தியாகும்..

இன்னும் 07 தொகுதிகள் வெளியிடக்கூடியளவு கவிதைகளும், 03 தொகுதிகள் வெளியிடக்கூடியளவு கவியரங்கக் கவிதைகள், கவிதைக்கலசம் நிகழ்ச்சித் தொகுப்புகள், முத்துப்பந்தல் நிகழ்ச்சி முன்னுரைகள்..இப்படி ஏராளமான ஆக்கங்கள் பதிவுகளின்றியே முடங்கிக் கிடக்கின்றன. இவையும் விரைவில் வெளிவர வேண்டுமென்பதே இலக்கிய ஆர்வளர்களின் எதிர்பார்ப்பாகும்.

தோட்டப் புறத்திலுள்ள எரியும் பிரச்சினைகளுக்கு நேரடியாக முகம் கொடுப்பவர் நீலாபாலன். ஆகவே அப்பிரச்சினைகளை தனது கவிதைக்குள் படம்பிடித்து அதற்கான முடிவுகளையும் தத்துவ ரீதியாக வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் இவருக்குக் கிடைக்கிறது. ஆகவே மலையகத்திலிருந்து வெளியான பிறருடைய கவிதைகளைவிட நீலாபாலனுடைய கவிதைகள் கவித்துவமும், தனித்துவமும் மிக்கதாக வெளிப்படுகிறது. உதாரணத்திற்கு..

“அப்பன் உரம்போட ஆயி கொழுந்தெடுப்பாள்
அதுதானே இதுவரை எம் சரித்திரம் – உடல்
ஆட உழைத்தும் என்ன… லாபங்களை ஈட்டி என்ன…
அடுக்களையில் படுத்திருக்கே தரித்திரம்…”

இந்த மூத்த கவிஞர் நீலாபாலனின் இலக்கிய படைப்புகள் நூலுருவாவதன் மூலம் இவரின் திறமைகள் என்றும் பதிவாக்கப்பட வேண்டும். அது தார்மீக இலக்கியக் கடமையாகும்.

இவரின் முகவரி:-

N. POOBALARATNAM
NO: 65, HADDAWULA,
WELIMADA.

T/P: 0094-57-5670990
Mobile: 0094-77-6671581

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *