குடிநீரை மாசுபடுத்தினால் இரட்டிப்புத் தண்டனை – விரைவில் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம்

sri-lanka-parliament.jpgசட்ட விரோதமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ளுதல், குடிநீரை மாசுபடுத்தல், குளங்கள், ஓடைகளுக்கு கழிவுநீரை திறந்துவிடல் போன்ற நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும் விதத்தில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

1974 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நீர்வழங்கல் சட்டம் 1992 ஆம் ஆண்டு முதன்முறையாக திருத்தம் செய்யப்பட்டது. இன்று 16 வருடங்கள் கடந்த நிலை யிலும் இதனையே அமைச்சு இன்னும் பின்பற்றி வருகிறது.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு அன்றையதை விட இன்று மிகக் கூடுதலான நீர்வழங்கல் திட்டங்களை பராமரித்துவருகிறது. எனவே இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவகையில் சட்டத்தை திருத்தவேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளதையடுத்தே அமைச்சு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

நீரை மாசடையச் செய்தல், நீர்த்தேக்கங்கள், குளங்கள், நீரோடைகள் போன்றவற்றுக்குள் கழிவு நீரை திறந்து விடல், கழிவுகளை வீசுதல், குடிநீர் வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் நீர் மானியில் மோசடி செய்தல், சட்டவிரோதமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ளல் போன்ற குற்றங்களுக்காக இதுவரை அறவிடப்பட்ட தண்டப்பணத்தை இரட்டிப்பாக்குவதும் சட்டதிருத்தத்தில் பிரதானமாக கருதப்படுகிறது.

சட்டவிரோதமாக குடிநீரைப் பெறுவதையும் நீரை வீண் விரயம் செய்வதையும், தடுக்கும் நோக்குடனேயே இச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக நீர் வழங்கல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *