உனது உரிமை எனது மூக்கு நுனி மட்டும்… :ஜனநாயகத்தின் பாதுகாவலனாக திகழும் ஊடகங்கள் – புன்னியாமீன் –

iworld-press-freedom-day.jpgஇன்று மே -3 உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day)

சம்பவங்களையும், புதினங்களையும், நிகழ்ச்சிகளையும், படங்களையும் தொகுத்துத் தரும் அச்சடித்த தாள்களாக மாத்திரம் பத்திரிகைகளை கருதமுடியாது. அவை ஒரு நாட்டின் நலன்களுக்கும், அபிவிருத்திக்கும் அவசியமான சமுதாய மேம்பாட்டிற்கு வேண்டிய கருத்துக்களை வழங்கும் அதே வேளை ஜனநாயகத்தின் பாதுகாவலனாகவும் விளங்குகின்றது.

ஒரு நாட்டின் ஜனநாயக மேன்மைக்கும், ஜனநாயக விரோதிகளினதும் அடக்கு முறையாளர்களினதும் வீழ்ச்சிக்கும் பேருதவி புரிகின்றதென்பதை வரலாறு உலகிற்கு பலமுறை எடுத்துக்காட்டியுள்ளது. பத்திரிகையானது ஒரு நாட்டினை கட்டியெழுப்பும் அல்லது நிர்மாணிக்கும் சாதனமாகவும் விளங்குகின்றது. நவீன காலத்தில் இலத்திரனியல் ஊடகங்களின்அபரிமிதமான வளர்ச்சியின் பின்னணியில் பத்திரிகை சுதந்திரம் என்பது இன்று ‘ஊடக சுதந்திரம்’ என்ற நிலையில் விரிவுபட்டுள்ளது.

மனிதனின் ஒரு அடிப்படை உரிமையாக பத்திரிகைச் சுதந்திரம் காணப்படுகிறது. இச்சுதந்திரமானது ஒருவரின் சொந்தக் கருத்துக்களை மாத்திரமன்றி, ஏனையோரின் கருத்துக்களையும் தெரிவிப்பதற்கான சுதந்திரத்தையும் தெளிவுபடுத்துகின்றது. பத்திரிகையின் பங்களிப்பானது மனித உரிமைகளின் பாதுகாவலனாகவும் அங்கீகரிக்கப்படுகிறது. பத்திரிகைகளின் சுயாதீனமானது சுதந்திரம், பொறுப்புணர்வு, தார்மீகம் ஆகிய முத்தூண்களில் சார்ந்திருக்கிறது. இப்பண்புகள் பத்திரிகைகளுக்கு தேசத்தின் வாயில் காப்போன் எனும் அந்தஸ்தையும் வழங்குகின்றன.

பத்திகைச் சுதந்திரத்துக்காக அடிப்படை ஐ.நா.வின் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனத்தில் 19உறுப்புரையில் குறிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குடியியல், அரசியல் உரிமைகள் சாசனத்திலும் 19வது உறுப்புரிமையில் இதற்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் அரசியல் யாப்புக்களிலும் பத்திரிகைச் சுதந்திரத்திற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் நடைமுறையில் அரச கொள்கைகளுக்கமைய இந்த பத்திரிகைச சுதந்திரத்திற்குஅச்சுறுத்தல் ஏற்பட்டு வந்துள்ளது. அமெரிக்க நீதியரசர் கார்டோஸோ மற்றைய சுதந்திரத்திற்கெல்லாம கருவாக திகழ்வது சிந்தனை, மற்றயது பேச்சுச் சுதந்திரம் என்றார். informed public is the Essence of working democracy எனக்கூறப்படும். ஒரு ஜனநாயக நாட்டில் பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் இக்காலத்தில் வலியுறுத்தப்படுகிறது.

இதுபற்றிய மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையினால் உலக பத்திரிகை சுதந்திர (World Press Freedom Day) சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

பத்திரிகை மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு அறிவியற்கலையாகும். மனிதனையும் சமூகத்தினையும் பற்றியறியும் ஒரு சாரளமாகும். சமுதாய மேன்மைக்காக சகலதுறைகளையும் சேர்த்து எண்ணப்படும் ஒரு தொழிற்துறையாகும். ஒரு நாட்டின் அல்லது அரசின் நான்காவது கூறாக வைத்து இத்துறை எண்ணப்படுகிறது. அரசுத் தலைவர், பாராளுமன்றம், நீதித்துறை, பத்திரிகைத்துறை போன்ற நான்கும் மக்களாட்சியின் கூறுகளாகக் கொள்ளப்படுகின்றன. இவ்வகையில் பத்திரிகைத் துறையின் முக்கியத்துவம் காலம் காலமாக உணரப்பட்டு வந்தது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே “பத்திரிகை சுதந்திர சாசனம்” (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது.

இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு வருடாவருடம் யுனெஸ்கோ நிறுவனத்தினர் விருது (UNESCO/Guillermo Cano World Press Freedom Prize) வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது 1986 டிசம்பர் 17 இல் கொல்லப்பட்ட கொலம்பியஸ பத்திரிகையாளர் “கில்லெர்மோ இசாசா” (Guillermo Cano Isaza) என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது.

பத்திரிகை சுதந்திரம் என்பது மக்களின் தகவல் பெறும் உரிமை, தகவல் வழங்கும் உரிமை, பேச்சு, எழுத்து, கருத்து வெளிப்பட்டு உரிமை என்பவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்ட அடிப்படைச் சுதந்திரமாகும். பத்திரிகைச் சுதந்திரம் 4 சுவர்களைக் கொண்டு கட்டியெழுப்பட்டுள்ளது. அவை

1.உண்மைக்கு பாதுகாப்பு
2.சனநாயகத்துக்குப் பாதுகாப்பு
3.மக்கள் சுதந்திரத்திற்குப்பாதுகாப்பு
4.பொது நலன்களுக்குப்பாதுகாப்பு என்பனவாகும்.

இலங்கை அரசியல் அமைப்பின் அத்தியாயம் 3 இல் 14 (1) (அ) உறுப்புரிமையாக எழுத்து, பேச்சு, வெளிப்பாட்டுச்சுதந்திரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் நலன், நாட்டு நலன், பொதுப்பாதுகாப்பு, பொதுச்சுதந்திரம், பிறர் உரிமை பாதுகாக்கப்படல் போன்ற பல்வேறுகாரணங்களுக்காக இந்த அடிப்படைச்சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும் பல சட்டதிட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம், தேசிய பத்திரிகைப் பேரவைச் சட்டம், தண்டனைச் சட்டக்கோவை, பாராளுமன்ற அதிகாரங்கள், சிறப்புரிமை சட்டம், நீதிமன்ற அவமதிப்புக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் என்பன பத்திரிகைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றது.

கி. பி. 10ம் நூற்றாண்டில் சீனாவில் ஒரு செய்தி ஏடு அரச சார்பாக தொடங்கப்பட்டுள்ளதை பிரித்தானியக் கலைக்களஞ்சியம் உறுதிப்படுத்துகின்றது. 1609ம் ஆண்டில் ஜேர்மனியில் பல நகரங்களில் செய்தித்தாள்கள் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்திப் பத்திரிகைகளின் தோற்றம் உலகளாவிய ரீதியில் வியாபித்தது. 1832ல் கொழும்பு ஜேர்னல் எனும் நாளிதழ் இலங்கையில் வெளியிடப்பட்டது.

உலகில் எவ்விடத்திலும் நிகழும் எவ்வகையான செய்திகளையும் உடனுக்குடன் அறிய சமூகம் ஆவலோடுள்ளது. நம்பகத்தன்மையான, உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை வழங்குவது பத்திரிகையின் பொறுப்பாகும். இதன் மூலமே சமூகத்தில் மறுமலர்ச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும். 16ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சி இத்தாலி, ஜேர்மன் ஆகியவற்றின் ஐக்கியம், பிரான்சியப் புரட்சி, ரஷ்ய புரட்சி மற்றும் அமெரிக்க சுதந்திரப் புரட்சி போன்றவற்றுக்கு பத்திரிகைகள் வழங்கிய பங்களிப்பு வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறந்த செயற்றிறன் கொண்ட ஜனநாயகத்திற்கு பத்திரிகைச் சுதந்திரம் அத்தியாவசியமானதும் உண்மையான ஜனநாயகத்தின் பண்பும் என்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. எனினும் பத்திரிகைச் சுதந்திரத்தை மீறும் வகையிலான தடைகளும் பத்திகையாளர்கள் துன்புறுத்தப்பட்டமை, கொலை செய்யப்பட்டமை, சிறைவைக் கப்பட்டமை, கடத்தப்பட்டமை, தாக்கப் பட்டமை போன்ற சம்பவங்கள் பற்றியும் சர்வதேச அறிக்கைகள் மூலம் அறியக் கிடைக்கின்றது.

பத்திரிகைச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாகவும் அவமானமாகவும் உள்ள சட்டங்கள் பண்டைய ஆங்கிலக் கோட்பாட்டில் அடிப்படையில் பிறந்தவையாகும்; அதாவது மன்னன் தவறு செய்வதில்லை என்ற அடிப்படையாகும்.பிரித்தானியப் பாரளுமன்றத்தில் மன்னனின் செலவீன ஒதுக்கீடுபற்றிய விமர்சித்த ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது தண்டிக்கப்பட்டார்கள். மன்னரின் இத்தகைய எதேச்சாதிகாரப் போக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கும் நோக்கில் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் சட்டரீதியாகப்பட்டுள்ளது.

இன்றையவுலகில் மிக ஆபத்துள்ளதாக பத்திரிகைத் தொழிலும் பத்திரிகையாளன் பணியும் மாறியுள்ளன. சர்வதேச பிராந்திய மற்றும் தேசிய ரீதியாகவும் பத்திரிகையாளர் சங்கங்கள் தமது பாதுகாப்புக்காகப் போராட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. 1992ம் ஆண்டு ஜனவரி 01ம் திகதி முதல் 2009 ஏப்ரல் 3ம் திகதி வரை சர்வதேச ரீதியில் 734 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோக பூர்வமான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆண்டு ரீதியாக ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட விபரம் வருமாறு: 2009 ஏப்ரல் 3ம் திகதி வரை 11, 2008: 41, 2007: 66, 2006: 56, 2005: 48, 2004: 60, 2003: 42, 2002: 21, 2001: 37, 2000: 24, 1999: 36. 1998: 24, 1997: 26, 1996: 26, 1995: 51, 1994: 66, 1993: 57, 1992: 42

1992ம் ஆண்டு ஜனவரி 01ம் திகதி முதல் 2009 ஏப்ரல் 3ம் திகதி வரை சர்வதேச ரீதியில் நாடுகள் ரீதியாக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட விபரம் வருமாறு: இப்பட்டியலில் ஈராக் முதலாம் இடத்திலும், இந்தியா 6ம் இடத்திலும், இலங்கை 11ம் இடத்திலும் இருப்பதை அவதானிக்கலாம். 1) Iraq: 138, 2) Algeria: 60, 3) Russia: 50, 4) Colombia: 41, 5) Philippines: 34, 6) India: 26, 7) Somalia: 25, 8) Pakistan: 21, 9) Bosnia: 19, Turkey: 19, 11) Afghanistan: 18, Sri Lanka: 18, 13) Rwanda: 16, Sierra Leone: 16, Tajikistan: 16, Brazil: 16, 17) Mexico: 15, 18) Bangladesh: 12, 19) Israel: 9, 20) Angola: 8, Cambodia: 8, Georgia: 8, Yugoslavia: 8 (தகவல் – நன்றி : the Committee to Protect Journalists )

சுதந்திர ஜனநாயகக் கொள்கை நிலைநாட்டப்பட வேண்டுமாயின் அந்நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் மேலோங்க குரல் கொடுக்க வேண்டியுள்ளது. அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு என்பன ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. நிலையான வளர்ச்சி வீதம், துரித அபிவிருத்தி வறுமை ஒழிப்பு என்பன மூலம் மூன்றாம் மண்டல நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளில் தங்கியுள்ளன. இவற்றைப் போக்க பத்திரிகைகளின் பங்களிப்பு அவசியமாகும். பத்திரிகைகளினதும் பத்திரிகையாளரினதும் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக இந்த உன்னத தினத்தில் திட்சங்கற்பம் கொள்வோம்

செய்தியாளர்களை தாக்குவோரை சட்டத்தின் முன் நிறுத்த சகலவித முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்- உலக பத்திரிகை சுதந்திர தின செய்தியில் பான் கீ மூன் 
 
உலகெங்கிலும் செய்தியாளர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாவது அதிகரித்து வருவது குறித்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். உலக பத்திரிகை சுதந்திர தினமும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவும் இவ்வருடம் கொண்டாடப்படும் நிலையில், செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சகலவித முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து சமுதாயங்களையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஒரு சமூகத்தின் மிக இளம் உறுப்பினர்களில் இருந்து முழுமையான பிரஜைகள் வரை அவர்களது அரசியல் தலைமைத்துவத்துடன் அனைவரும் தகவலை அறிந்து கொள்வதற்கான வசதிகள், உயிர் வாழ்வுக்கு நீர் எவ்வளவு அவசியமோ அவ்வளவுக்கு அவசியமானவை. அறிவானது எதையும் கற்பனை செய்வதற்கும் மாற்றியமைப்பதற்குமான எமது ஆற்றலை நிலைநாட்டுகிறது.

தகவல் தாராளமாக பரப்பப்படும் போது, மக்கள் அவர்களது வாழ்க்கையை கட்டுப்படுத்துவதற்கான சகல அம்சங்களையும் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், தகவல் பிரவாகம் தடைப்படுத்தப்படும் போது அரசியல் காரணமாக இருந்தாலும் தொழில்நுட்பக் காரணங்களாக இருந்தாலும் செயற்பாட்டுக்கான எமது ஆற்றல் முடக்கப்படுகிறது.

60 வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை வரைந்தவர்கள் 19ஆவது சரத்தை அதில் புகுத்திக் கொண்டார்கள். அபிப்பிராய மற்றும் கருத்து வெளியிடுவதற்கான ஒவ்வொருவரினது சுதந்திரத்திலும் எதுவித குறுக்கீடுகளும் இன்றி அபிப்பிராயத்தை வெளியிடுவதற்கும் கேட்டறிவதற்கும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் பூரண உரிமை உண்டு என்று இந்த 19ஆவது சரத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. துரித உலக மயமாக்கலின் பயனாக சுதந்திரமானதும் பன்முகமானதும், தாராளமானதுமான தொழிற்புலமைப் பெற்று ஊடகத்தின் அபிவிருத்தி மேலும் வலுவடைந்துள்ளது.

தாராளமானதும், பாதுகாப்பானதும், சுதந்திரமானதுமான ஊடகம் சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான அத்திபாரங்களில் ஒன்றாகும். பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கும் மனிதநேயத்திற்கும் சுதந்திரத்திற்கும் எதிரான தாக்குதல்களாகும். ஐக்கிய நாடுகள் ஆதரிக்கும் அனைத்து விடயங்களுக்கும் எதிரான தாக்குதல்கள் ஆகும். இன்று செய்தியாளர்கள் உலகெங்கிலும் தாக்குதல்களுக்கு உள்ளாவது அதிகரித்து வருவது குறித்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். மேலும், இத்தகைய குற்றச்செயல்கள் விரிவாக விசாரணை செய்யப்பட்டு பொறுப்பானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படாதமை எனக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

உலக பத்திரிகை சுதந்திர தினமும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 60ஆவது ஆண்டும் இந்த வருடம் கொண்டாடப்படும் இவ்வேளையில் செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களை நடத்துவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சகலவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சகல சமுதாயங்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். தாராளமான, பாகுபாடற்ற தகவல்களை எங்களுக்குத் தருவதற்காக மிக சிரமமானதும் அபாயகரமானதுமான சூழ்நிலையில் பணியாற்றுவோருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தப் பகுதியிலும் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் பாடுபடுமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை கோட்பாடுகளை கொண்டதாகும்.

இதேவேளை, பத்திரிகை சுதந்திரத்தை மதிப்பிடுவதற்கும், ஊடகங்களின் சுதந்திரம் மீதான தாக்குதல்களில் இருந்து அவற்றை காப்பாற்றுவதற்கும் கடமையின் போது உயிர்துறந்த பத்திரிகையாளர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் உலக பத்திரிகை சுதந்திர தினம் சந்தர்ப்பமளிக்கிறது. 1991ஆம் ஆண்டின் யுனெஸ்கோ பொது மாநாட்டின் 26ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விதப்புரையை தொடர்ந்து 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை உலக பத்திரிகை சுதந்திர தினத்தை பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *