சிறுமி தினுஷிக்கா சடலமாக மீட்பு

thinu.jpgமட்டக்களப்பு நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை மர்மமான காணாமல் போலிருந்த கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா (வயது 8)  இன்று காலை கிணறு ஒன்றிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை சென்றிருந்த போது மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார். இன்று காலை கல்வியங்காடு சேமக்காலைக்கருகில் உள்ள வளவு ஒன்றிலிருந்த கிணறு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்..

சடலம் இவரது தாயாரால்; அடையாளம் காணப்பட்டு தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவரது தந்தை எஸ். சதீஸ்குமார் (உடற்கல்வி ஆசிரியர்) 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இனந்தெரியாதோரால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல போயிருந்தார். இதே பாணியில் கடந்த மார்ச் 18ஆம் திகதி திருகோணமலை சென் மேரிஸ் வித்தியாலய முதலாந்தர மாணவி ஜூட் வர்ஷா காணாமல் போய் பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கிழக்கில் கடத்தப்பட்ட மாணவர்களை விடுவித்து சுமுகநிலை தோன்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் – கூட்டமைப்பு எம்.பி.க்கள் கோரிக்கை

கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டு இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டு, சிவில் நிர்வாகம் நடைமுறையில் இருப்பதாக அரசாங்கம் கூறும் இவ்வேளையில் மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் காணாமல் போய் இருக்கும் சம்பவமானது பலத்த சந்தேகத்தையும், பேரதிர்ச்சியினையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட மாணவர்கள் மனிதாபிமான முறையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட எம்.பி.க்களான த.கனகசபை, செல்வி.தங்கேஸ்வரி, பா.அரியநேத்திரன், எஸ்.ஜெயானந்த மூர்த்தி ஆகியோர் விடுத்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்திற்குத் தமது தாத்தாவுடன் பாடசாலைக்குச் சென்ற எட்டு வயது மாணவியான செல்வி சதீஸ்குமார் தனுஷா இதுவரை வீடுதிரும்பவில்லை. இவரை யாரும் கடத்திச் சென்றிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இந்த மாணவியின் தந்தையான சதீஸ்குமார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இனம் தெரியாத ஆயுதக்குழுவினர் விசாரணைக்கென அழைத்துச் சென்று இதுவரை அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாத நிலையில் ஏக்கத்துடன் இரண்டு வருடங்களாகத் தனது அப்பாவைக் காணாமல் அல்லல் அடைந்திருந்த இம்மாணவி கடத்தப்பட்டுள்ளார்.

ஏறாவூர் விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் வள்ளுவன் மதிசுதன் (வயது 15) ஆகியோரும் காணாமல் போயுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது எனவும் அறியமுடியாத நிலையுள்ளது.

இவ்வாறு மட்டக்களப்பில் மர்மமான முறையில் மாணவர்கள் காணாமல் போயிருப்பதால் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருப்பதுடன், பாடசாலைகளுக்கும், பிரத்தியேக கல்வி நிலையங்களுக்கும் மாணவர்களை கல்வி கற்க அனுப்ப முடியாத பதற்ற நிலை தோன்றி இருப்பதைக் காணமுடிகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி புனித மரியாள் கல்லூரியில் கல்விபயிலும் ஆறுவயது மாணவியான யூட் ரெஜிஸ்ரா என்பவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு சரியாக 41 நாட்களின் பின் மட்டக்களப்பில் இவ்வாறு மாணவர்கள் கடத்தப்பட்டிருப்பது மீண்டும் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது.

உடைமை இழந்து, உயிர் இழந்து, உரிமை இழந்து தவிக்கும் தமிழ் சமூகம் எது இழந்தாலும் கல்வியை இழக்காமல் தொடர்ந்து கல்விக்காக உழைத்துவரும் வேளையில் இவ்வாறான சம்பவங்கள் மூலம் இன்று கல்வியையும் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம் மாணவர்கள் காணாமல் போன செய்தி கேட்டவுடன் அனைத்துப் பாடசாலைகளும் இயங்கவில்லை, தனியார் கல்வி நிலையங்களுக்கும் மாணவர்களை அனுப்பப் பெற்றோர் அஞ்சுகின்றனர்.

ஒட்டு மொத்தமாக மாணவர் தொடக்கம் வயோதிபர் வரை சுதந்திரமாக நடமாட முடியாத நிலை தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தோன்றி இருப்பதை இம்மாணவர்களின் கடத்தல் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, கடத்தப்பட்ட இம்மாணவனை உடனடியாக மனிதாபிமான முறையில் விடுதலை செய்யவேண்டுமெனவும், இது தொடர்பாக சட்டத்தையும் ஒழுங்கையும் கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறும் அரசு இம்மாணவர்கள் கடத்தலுக்குப் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் இவ்வாறு செய்வதன் மூலமே தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தோன்றியுள்ள அச்சநிலை தணியும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Rohan
    Rohan

    மிக்க நன்றி பிள்ளையான். மிக்க நன்றி கருணா அம்மான்.

    நாம் எமது குடுமி பிடி சண்டையில் இருப்போம். மக்களைப் பற்றி கவலைப்பட யாருக்கு நேரம் இருக்கிறது?

    Reply
  • palli
    palli

    எழுத என்னிடம் வார்த்தையில்லை.

    Reply