வலுவடையும் இலங்கை – சீன உறவு:
சீன நிதியுதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட பாரிய திட்டங்களை வெள்ளை யானைகள் என சிலர் குற்றம் சுமத்திய போதிலும், அந்த திட்டங்கள் அனைத்தும் முன்னாள் அரசாங்கங்களின் கோரிக்கைக்கு அமைவாகவே நிர்மாணிக்கப்பட்டவை எனவும் அவை சீனாவின் முதலீடுகள் எனவும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். ஊடக நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நவம்பர் 28 இடம்பெற்ற சந்திப்பிலேயே தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அன்றைய இலங்கை அரசுகள் மோசமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் சில திட்டங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என சீனத் தூதுவர் குற்றம்சாட்டியிருந்தார்.
தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள தாமரை கோபுரத் திட்டம் தற்போது இலாபம் ஈட்ட ஆரம்பித்துள்ளதுடன், அது இலங்கையின் அடையாளமாக மாறியுள்ளதாகவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். சீனா முதலீடு செய்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகம் இலங்கை அரசாங்கத்திற்கு பெருமளவு வருமானத்தை கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக கொழும்பு துறைமுக நகரத் திட்டம் முழுக்க முழுக்க சீனாவின் முதலீடு என்று சுட்டிக்காட்டிய தூதுவர், இதற்காக இலங்கையினால் எந்தப் பணமும் செலவிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனக் கடன்கள் மற்றும் முதலீடுகளை, கடன் பொறி என்று நிறுவ முயற்சிக்கின்றன. ஆனால் அது பலநாடுகளிலும் குறிப்பாக ஆபிரிக்க நாடுகளினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. சீன – இந்திய உறவுகள் பற்றி குறிப்பிட்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இலங்கை இந்தியாவினதும் சீனாவினதும் கடன் பொறியில் சிக்கியிருப்பதாகக் குறிப்பிட்டது இங்கு கவனிக்கத்தக்கது.
வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சுதந்திர நாடாக எழுந்து நிற்க இலங்கைக்கு சீனா நிதியுதவி வழங்கியதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் சீன-இலங்கை உறவுகள் புதிய அத்தியாயத்தில் பிரவேசிக்கும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அனுரா இன்னும் சில வாரங்களில் ஜனவரியில் சீனாவுக்கு பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்தலுக்கு முன்னதாக அனுரகுமார திஸ்ஸநாயக்கா சீனாவுக்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததும் தெரிந்ததே.
சீனா – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 7 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் இதுவரையில்கைச்சாத்திடப்படவில்லை. சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் ஊடாக இலங்கை சந்தையை சீனா ஆக்கிரமிக்கும் என்ற தவறான அச்சம் காரணமாகவே அது நடைபெறவில்லை எனத் தெரிவித்தார் சீனத் தூதர். இதனை சாத்தியமாக்குவதற்கு சீன பெரும் விட்டுக்கொடுப்பைச் செய்யத் தயாராக உள்ளது. அதன்படி சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட ஒரு வருடத்திற்குள் இலங்கைக்குப் பாதகமான விடயங்கள் இருப்பின் அதனைத் திருத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் சீனத் தூதுவர் சி ஜான்ஹொங் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில், கொவிட் தொற்றுநோய் மற்றும் இலங்கை எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் அனர்த்த நிலைமைகளின் போது எவ்வாறு இலங்கைக்கு ஆதரவளித்ததோ அதேபோன்று எதிர்காலத்திலும் சீனா இலங்கையை உண்மையான நண்பனாக ஆதரிக்கும் என தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.