வவுனியாவில் தஞ்சமடைந்துள்ள வடபகுதி அகதிகளுக்கு இவ்வார இறுதிக்குள் மாத்தளையிலிருந்து மற்றுமொரு தொகை அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மாநகர பிதா முகம்மது ஹில்மிகரீம் தெரிவித்தார்.
மாத்தளை நகர சர்வமதத் தலைவர்கள், பாடசாலைகள் சமூகநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரால் சேகரிக்கப்பட்ட ஒரு தொகை அத்தியாவசியப் பொருட்களை கடந்த வாரம் முற்பகுதியில் வவுனியாவுக்கு எடுத்துச் சென்று கையளித்தபோது அங்கு கடமையில் ஈடுபட்டுவரும் மாத்தளையைச் சேர்ந்த பிரிகேடியர் ஷவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் சஹீட் ஆகியோர் எம்மை சந்தித்து மேலும் ஒரு தொகை அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்குமாறு எம்மிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அத்துடன் வவுனியாவில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு பெருந்தொகையான அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுவதாகவும் நாட்டுமக்கள் இன, மத, மொழி பேதமின்றி மனிதாபிமான ரீதியில் இம்மக்களுக்கு நம்மாலான உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரச, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் பாடசாலை மாணவர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் உடை, தண்ணீர்ப் போத்தல், மருந்துவகைகள், பால்மா, உணவுப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை எதிர்பார்க்கிறோம்.
பொருட்களை அன்பளிப்பு செய்ய விரும்புவோர் அவற்றை மாத்தளை நகர சர்வமதத் தலைவர்களில் இவ்வார இறுதிக்குள் ஒப்படைக்கலாம், வாரநாட்களில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரையிலான காலப்பகுதிக்குள் மாத்தளை மாநகரசபை காரியாலயத்தில் ஒப்படைக்கலாம்.