‘2025இல் தடைகளைத் தகர்த்து இனவிடுதலை காப்போம்!’ ரீல் இருக்கட்டும், ‘2025இல் யாழுக்கு குடிக்க தண்ணீர் வருமா வராதா?’ யாழ் பா உ கள் பதில் சொல்லுங்கள் !
யாழ் மக்களை இன்று மிகவும் பாதிக்கின்ற பிரச்சினை குடிதண்ணீர்ப் பிரச்சினை, இப்பிரச்சினைக்கு 2025 தீர்வு வரவேண்டும் என கால் நூற்றாண்டுகளுக்கு முன்னரே யாழ் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவப் பேராசிரியர் மருத்துவ கலாநிதி நடராஜா சிவராஜா எச்சரிக்கை விடுத்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் யாழ் மக்களின் குடி தண்ணீர் ஒரு பிரச்சினையில்லை, தண்ணீர் தாகத்தோடு “2025இலும் இனவிடுதலை நோக்கிய லட்சியப் பயணத்தில் இணைந்து சவால்களை எதிர்கொள்வோம்” என அழைப்பு விடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒளிவிழாவிலேயே தன்னுடைய வழமையான உணர்ச்சிபொங்கிக் கொதிக்கும் உரையை வழங்கினார். யாழ் மக்களுக்கு தண்ணீரை மறுத்து, அவர்களுடைய மலசல கூடக் கழிவுகள் குடிநீரை அடைவதைத் தடுக்கும் மத்தியப்படுத்தப்பட்ட கழிவகற்றல் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வீணடித்து, மோசடி செய்து அதனைக் கிடப்பில் போட்டதன் அறம் பற்றிப் பேசாமல் யாழில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றியைப் பற்றிக் குறிப்பிடுகின்ற போது, “அறம் பிழைத்தோரின் ஆணவம் நிறைந்த வெற்றிகள் நீடிக்கவோ, நிலைக்கவோ மாட்டாது எனச் சாபம் இட்டார்.
இதுதொடர்பான கட்டுரைகள் தேசம் சஞ்சிகையில் 2000 மாம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டு இருந்தது. யாழ் மருத்துவ பீடத்தில் சமூக மருத்துவப் பாடத்தை தனது இறுதிக்காலங்கள் வரை கற்பித்த மருததுவ கலாநிதி நடராஜா சிவராஜா, நூலகவியலாளர் நடராஜா செல்வராஜாவின் மூத்த சகோதரர். அவர் தேசம் சஞ்சிகைக்கு 2000ம் ஆண்டு காலங்களில் வழங்கிய நேர்காணல்களில் யாழ் கிணறுகளில் நைற்றஜனின் அளவு ஆபத்தான அளவிலும் அதிகமாக இருப்பதையும் யாழ் கிணறுகளில் சனத்தொகை நெருக்கம் காரணமாக மலசலக்கழிவுகள் கலப்பதன் ஆபத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். யுத்த காலங்களில் உயிர்காக்கும் முதலுதவிக் கை நூலை வெளியிட்டதுடன், முதலுதவிப் பயிற்சிகளையும் வழங்கி வந்தவர். அதேபோல் யாழ் மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினையை பா உ சிறிதரன் பாராளுமன்றம் செல்வதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னரேயே எச்சரித்திருந்தவர்.
மருத்துவ கலாநிதி நடராஜா சிவராஜா சுட்டிக்காட்டிய விடயங்களை பொறியில் பீடத்தின் பேராசிரியராகவும் நீர் முகாமைத்துவ நிபுணராகவும் இருந்து ஓய்வுபெற்றுள்ள கலாநிதி சுப்பிரமணியம் சிவகுமார் 2010 கலங்களில் இருந்து தற்போது வரை மிக அழுத்தமாகச் சுட்டிக்காட்டி வருகின்றார். இலங்கை அரசும் இப்பிரச்சினையை யாழ் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே அணுகி இருந்தது. ஒரு சிறு முதலீட்டையும் மேற்கொண்டு இத்திட்டத்திற்கான முழுமையான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பெற்றிருந்தது. இரணைமடுவின் அணைக்கட்டை உயர்த்துவது, மேலதிக நீரை யாழ் மாவட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான நீர்வழங்கல் கட்டமைப்புகளை உருவாக்குவது, யாழ் நகரில் மத்தியப்படுத்தப்பட்ட கழிவகற்றலைக் கட்டமைப்பது ஆகிய மூன்று விடயங்களுக்கும் 266 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதற்காக ஒதுக்கப்பட்டது. ஆனாலும் பா உ சிறிதரன் யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொண்டு போனால் கிளிநொச்சியில் விவசாயம் செய்ய முடியாது என்ற பொய்யான தகவல்களை கிளிநொச்சி மக்கள் மத்தியில் விதைத்து அவர்களை யாழ் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு எதிராகத் திருப்பி உள்ளார்.
யாழ் மக்களின் குடி நீர்ப் பிரச்சினை மற்றும் நீர்ச் சுகாதாரம் தொடர்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் என்ன தீர்வை வைத்துள்ளனர் என்பதை மக்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். அதே போல் தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி இது தொடர்பில் என்ன தீர்வை வைத்துள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சுயேட்சை பா ராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பா உ சிறிதரனிடம் சரியான கேள்வியை முன்வைத்தார், ஆனால் அவர் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக முன் வைக்க வேண்டும். மேலும் ஊடகங்களும் சமூக ஊடகங்களும் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இது தொடர்பில் கேள்விகளை எழுப்ப வேண்டும். பா உ சிவஞானம் சிறிதரன் மேலதிக இரணைமடுத் தண்ணீரை யாழ் மக்களுக்கு வழங்குவது தொடர்பான அறிவியல் விஞ்ஞானரீதியான கலந்துரையாடலுக்கு பொதுத்தளத்தில் வர வேண்டும். தேசம்நெற் அவரிடம் ஒரு நேர்காணலுக்கான நேரத்தை கோருகின்றது.