அபிவிருத்தி திட்டங்களை கண்மூடித்தனமாக வடக்கு மக்கள் எதிர்க்கின்றனர் – ஆளுநர் வேதநாயகன் விசனம் !
கறைபடியாத கரங்களுடன் இருந்தால்தான் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையைச் செய்ய முடியும். கௌரவ ஜனாதிபதி அவர்களும் இதைத்தான் வலியுறுத்தியிருக்கின்றார்கள். எங்கள் அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகவேண்டும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வடக்கு மாகாண விவசாய அமைச்சும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய உலக மண் தின நிகழ்வில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் வேதநாயகன் தனதுரையில், எமது மாகாணத்தில் விவசாயிகள் தங்களை இன்னமும் ஏழை விவசாயிகள் என்று விளித்துக்கூறிக்கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும். அவர்களுக்கு நவீன முறைமையிலான விவசாயத்தை அறிமுகப்படுத்தவேண்டும். அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது கண்மூடித்தனமாக எதிர்க்கின்றார்கள். அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது ஆகக்குறைந்த சூழல் பாதிப்பு இருக்கும். அதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைத்து நாம் செய்யவேண்டும். அதைவிடுத்து எல்லாவற்றையும் எதிர்க்கும் மனநிலையில் நோக்கிக் கொண்டிருந்தால் நாம் முன்னேற முடியாது.
பல அரசு அதிகாரிகள் பிழையானவற்றுக்கு பழகிவிட்டார்கள். எங்கள் வடக்கு மாகாணமும் அதிலிருந்து விதிவிலக்கானது அல்ல. நேர்மையானவர்கள் பழிவாங்கப்படுகின்றார்கள் அல்லது பந்தாடப்படுகின்றார்கள். அதைப்போலத்தான் வசதிபடைத்த செல்வாக்கானவர்கள் அரச திணைக்களங்களுக்கு வந்தால் அவர்களுக்கு மரியாதையுடன் விரைந்து சேவை வழங்கும் அதிகாரிகள், ஏழை எளிய மக்கள் வந்தால் அலைக்கழிக்கின்றனர். இந்த நிலைமை மாறவேண்டும். புதிய அரசாங்கம் மக்கள் நேய சேவையைக் கொண்டு செல்லவே விரும்புகின்றது. அரச அதிகாரிகள் அதற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும், என்று ஆளுநர் குறிப்பிட்டார்.