வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்

Part_Of_the_Audienceமனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு இன் போது தீர்மானிக்கப்பட்டபடி அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களின் நலன்கள் தொடர்பான செயற்குழுவொன்றை அமைப்பதற்கான சந்திப்பு மே 17 அன்று லெய்டன் ஸ்ரோன் குவார்கஸ் ஹவுஸில் இடம்பெறவுள்ளது. மாலை 4:30 மணி முதல் 7:30 வரை இடம்பெறும் இச்சந்திப்பில் செயற்குழுவொன்று உருவாக்கப்படுவதுடன் அதற்கான பெயரும் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும். மேலும் குறுகிய கால நீண்டகால வேலைத் திட்டங்கள் பற்றிக் கலந்தரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

குறிப்பாக என்ஜிஓ மற்றும் அரச முகவர் ஸ்தாபனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவலத்திற்கு உள்ளான மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் அந்த ஸ்தாபனங்களை ஈடுபடச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது. மேலும் இதற்கு சமாந்தரமான மற்றுமொரு பிரிவு மக்களை அவர்களுடைய கிராமங்களில் மீளக்குடியமர்த்தவும் அரசின் நலன்புரி முகாம்களை குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரவுமான அழுத்தக் குழுவாகச் செயற்படுவது. இவை பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டு குறுகியகால வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்கவும் மே 17 சந்திப்பில் தீர்மானிக்கப்பட உள்ளது. இவ்வாறான விடயங்களில் ஆக்கபூர்வமான வகையில் பங்களிக்க விரும்புபவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்வதையும் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதையும் தேசம்நெற் வரவேற்கின்றது.

Little Aid – லிற்றில் எய்ட்

மேலும் Little Aid – லிற்றில் எய்ட் என்ற உதவி அமைப்பு தேசம்நெற் நண்பர்களால் உருவாக்கப்பட்டு உள்ளது. ஈழத்தமிழ் மக்களின் வரலாறு காணாத இந்த அவலத்தில் சிக்குண்ட மக்களுக்கு முடிந்த அளவிலான சிறிய உதவிகளைச் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இவ்வமைப்பு பிரித்தானியாவின் பொதுஸ்தாபன ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டும் உள்ளது. இவ்வுதவி அமைப்பிற்கான வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டதும் அவ்விபரங்கள் தேசம்நெற்றில் வெளியிடப்படும்.

மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு

‘மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி’ என்ற தலைப்பிலான சந்திப்பு மே 2ல் லண்டன் புறநகர்ப் பகுதியான சறேயில் இடம்பெற்றது. தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்த இச்சந்திப்பில் வன்னி மக்களை நோக்கி தங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டிய பலரும் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்கள் பலரும் பல்வேறு கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருந்த போதும் மக்களுக்கான அவசர உதவிகளைச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தனர். இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களை பாதுகாத்து ஆதரவளிக்க வேண்டிய பொறுப்பில் இருந்து தவறி இருப்பதாகத் தெரிவித்த நியூஹாம் துணை மேயர் போல் சத்தியநேசன் இலங்கை அரசாங்கம் தனது பொறுப்பைச் சரிவரச் செய்வதற்கு அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இக்கருத்தை சந்திப்பில் கலந்துகொண்ட பலரும் வலியுறுத்தினர்.

இச்சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் நேரடியான உதவிகளை முடிந்த அளவு செய்வதுடன் முக்கியமாக என்ஜிஓ க்களுடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இடம்பெயர்ந்து வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிர்வாகம் அரசாங்க அதிபரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் எவ்வாறான நிவாரணப் பணிகளும் அரசாங்க அதிபரின் அனுமதி பெற்று மேற்கொள்ளப்படுவது தவிர்க்க முடியாதது என்பதும் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வன்னி மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வெளியே வருகையில் இலங்கை அரசு அவர்களை விடுவிப்பதாகக் கூறிக்கொண்டு கம்பி வேலிக்குள் அடைத்து வைப்பதாக ஆர் புதியவன், சந்திப்பினை ஆரம்பித்து வைத்துப் பேசுகையில் குறிப்பிட்டார். தங்கள் வளர்ப்பு விலங்குகளைக் கூட கம்பி வேலிக்குள் அடைக்காத மக்களை அரசு கம்பி வேலி அடைத்து வைத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தாங்கள் பின்வாங்கிச் சென்ற இடங்களில் எல்லாம் மக்களை விட்டுவிட்டுச் செல்லாமல் ஆடு மாடுகள் போல் அவர்களையும் சாய்த்துக் கொண்டு சென்று இன்று தங்கள் தலைமையைப் பாதுகாக்க பணயம் வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டிய ஆர் புதியவன் அவர்களுக்கு புதுமாத்தளன் தான் பூர்வீக மண் என்று கதையளப்பதாகத் தெரிவித்தார். அடங்கா மண் வணங்கா மண் என்று புலத்தில் சேர்த்தெல்லாம் எங்கே? என்று கேள்வி எழுப்பிய ஆர் புதியவன் அரசாங்கத்தின் நலன்புரி முகாம்களில் செல்விழமாட்டாது என்ற ஒரே உத்தரவாதம் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார். கம்பி வேலிக்குள் மாளிகையைக் கட்டி குடியேற்றினாலுமே அது ஒடுக்குமுறையின் குறியீடே என்று தெரிவித்த ஆர் புதியவன் அரசாங்கத்தின் வன்னி நலன்புரி முகாம்கள் படுமோசமான நிலையிலேயே உள்ளதாகத் தெரிவித்தார்.

Paul_Sathyanesanஆர் புதியவனைத் தொடர்ந்து நியூஹாம் துணைமேயர் போல் சத்தியநேசன் உரையாற்றும் போது ‘இந்த மக்களுடைய அவலம் இரு தரப்பினராலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் மக்களுக்கு பாதுகாப்பையும் அடிப்படைத் தேவைகளையும் வழங்க வேண்டிய அரசாங்கம் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது. இந்த மக்களை கௌரவமாகப் பராமரித்து அவர்களை மிக விரைவில் மீளக் குடியமர்த்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது அதனை இலங்கை அரசு தட்டிக்கழிக்க முடியாது’ என்று குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘மிகப்பெரிய அவலம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கையில் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு உணர்வு ரீதியான பொறுப்பும் கடமையும் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்ததை உடனடியாகச் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். ஆனால் அவர்களது உதவி ஒரு சிறிய அளவினதாகவே இருக்கும்’ என்று தெரிவித்தார். அதனால் ‘என்ஜிஓ க்களை அரச நிறுவனங்களைச் சந்தித்து அவர்களை பாதிக்கப்பட்ட மக்களை நோக்கிய செயற்திட்டங்களை இயக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். சுனாமி காலகட்டத்தின் போதும் தேசம் சஞ்சிகை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

துணைமேயருடைய உரையை அடுத்து நிகழ்வில் கலங்துகொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.

அண்மையில் இலங்கை சென்று வன்னி முகாம்களைப் பார்வையிட்டுத் திரும்பிய எஸ் சூரியசேகரம் கருத்துத் தெரிவிக்கையில் தாங்கள் சென்று பார்வையிட்ட முகாம்கள் குறிப்பிடத்தக்க அளவு வசதிகளுடனேயே இருந்ததாகவும் ஆனால் அண்மையில் மேலும் ஒரு லட்சம் மக்கள் அதிகரித்து இருப்பதால் நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார். அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் மிகவும் அணுகக் கூடியவர் என்று தெரிவித்த சூரியசேகரம் நிவாரணப் பணிகள் அவர்களுக்கூடாக செய்யப்படுவது தவிர்க்க முடியாதது எனத் தெரிவித்தார். இதே கருத்தை வெளிப்படுத்திய இலங்கைக்கு விஜயம் செய்த குழுவிலும் இடம்பெற்றிருந்த ரி கொன்ஸ்ரன்ரைன் புலத்தில் உள்ளவர்கள் அங்குள்ள மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். அம்மக்கள் மிக மோசமான வாழ்நிலையை எதிர்நோக்கி இருப்பதாகத் தெரிவித்த கொன்ஸ்ரன்ரைன் புலம்பெயர்ந்த சமூகம் அவர்களது வாழ்நிலையை மேம்படுத்த இயலுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

‘இலங்கை அரசாங்கம் ஒரு இனவாத அரசாங்கம். அது இனப்படுகொலை புரிகிறது. இங்குள்ள நீங்கள் அதனைச் சொல்லத் தயாராக இல்லை.’ என்று குற்றம்சாட்டிய சபா நாவலன் ‘அங்கு நீங்கள் எதுவும் செய்ய முடியாது. இனவாத அரசு உங்களை அதற்கு அனுமதிக்காது. அப்படி எதாவது செய்வதாக இருந்தாலும் அதனை கைக்கூலிகளாக இருந்தே செய்ய முடியும்’ எனத் தெரிவித்தார். சபா நாவலன் தொடர்ந்தும் பேசுகையில், ‘ஏசியன் டெவலொப்மன்ற் பாங்க் போன்ற பல்வேறு என்ஜிஓ க்கள் மூட்டைமூட்டையாக பணத்தைக் கொண்டு அலைகிறார்கள். ஆனால் இனவாத அரசாங்கம் அவர்கள் யாரையும் அந்த முகாம்களுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை’ எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ‘இனவாத அரசாங்கம் மக்களை அடைத்து வைக்கிறது. அவர்களுக்கு இப்ப புத்தகம் கொடுக்கிறம் என்றதெல்லாம் எப்படிப் போகும் எப்படிப் பயனளிக்கும்’ என்றும் சந்தேகம் எழுப்பினார்.

David_Jeyam‘இன்று ஏற்பட்டுள்ள நிலைமை அரசியல் சார்ந்ததாக இருந்தாலும் நாங்கள் இங்கு அரசியல் விவாதம் ஒன்றை நடத்த விரவில்லை. அவலத்திற்கு உள்ளான மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியே பேச வந்துள்ளோம்.’ என்று தனது கருத்தை வெளியிட்டார் டேவிட் ஜெயம். இவர் வன்னி நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய கருத்தைப் பலரும் பிரதிபலித்தனர்.

அதே கருத்தை வெளியிட்ட எஸ் முருகையா முடிந்த அளவில் சிறிய அளவில் செய்யப்படும் உடனடி உதவிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். தேசம்நெற் மேற்கொண்டுள்ள நூல் அன்பளிப்பு போன்றவை மிகுந்த பலனளிக்கும் என்று குறிப்பிட்ட முருகையா சூரியசேகரம் அவர்களிடம் முகாமில் இருந்த மாணவர்கள் புத்தகம் தரும்படி கேட்டதை அங்கு சுட்டிக்காட்டினார்.

‘போருக்கு உதவி புரிந்த புலத்து தமிழர்கள் வன்னி மக்கள் உதவியைக் கேட்கும் போது செய்யத் தயாரில்லாதவர்களாக உள்ளனர்’ எனக் குற்றம்சாட்டினார் ரி சோதிலிங்கம். ‘இன்று புலத்துதமிழர்கள் யுத்த முனையில் இருந்து உயிர்காக்க ஓடி வந்த மக்களை துரோகிகளாகப் பார்க்கின்றனர். இந்த மக்கள் பற்றிப் பேசுவது அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளாமல் எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் பற்றிக் கதைப்பது அர்த்தமற்றது’ என்றும் குறிப்பிட்ட சோதிலிங்கம் ‘ஒரு செயற்குழு உருவாக்கப்பட்டு நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட வேண்டும்’ என்றும் கூறினார்.

இதே கருத்தை ஆதரித்த ஈசன் அரசாங்க அதிபருக்கு ஊடாகவோ எவ்வகையிலோ உதவிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறூத்திய அவர் இலங்கை அரசாங்கம் முகாம்களை சர்வதேச தரத்தில் வைத்திருக்கவில்லை என்றும் முகாம்களில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாயும் குற்றம்சாட்டினார். உடனடி உதவிகள் உடனடியாகவே செய்யப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

‘நீங்கள் உதவிகளைப் பெற்று நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறீரகள். ஆனால் ஏற்கனவே சேர்க்கப்பட்ட பொருட்கள் வணங்கா மண் கப்பலில் உள்ளது. நீங்கள் ஏன் அந்தக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய முயற்சி எடுக்கக் கூடாது?’ எனக் கேள்வி எழுப்பினார் எஸ் ஆர் நிஸ்தார் மொகமட். ‘வணங்கா மண் ஏற்பாட்டாளர்களுடன் கதைத்து இலங்கை அரசாங்கத்துடனும் கதைத்து அந்தக் கப்பலில் உள்ள பொருட்களை இலங்கைக்கு அனுப்ப முயற்சிக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா இஸ்லாமிக் போறத்தைச் சார்ந்த மஹ்சூர் தனது கருத்தை வெளியிடுகையில் இஸ்லாமிக் போறம் மேற்கொண்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டதுடன் ‘பல்வேறு பிரிவுகளாக அல்லாமல் இணைந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றாகச் செயற்பட முன்வர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். தவறான நோக்கங்களுக்காக இருந்தாலும் எல்ரிரிஈ இன்று ஒற்றுமைப்பட்டு அவர்களுடைய போராட்டத்தை உயிரோட்டமாக வைத்துள்ளது’ என்று குறிப்பிட்ட அவர் ‘ஒன்றிணைந்து செயற்பட நாமும் முன்வர வேண்டும்’ என வலியுறுத்தினார்.

‘வன்னி மக்களுடைய இந்த அவலத்திற்கு இலங்கை அரசும் புலிகளும் சமபொறுப்புடையவர்கள்’ என்று தன் கருத்தை வெளியிட்ட த ஜெயபாலன் ‘இலங்கை அரசு இனவாத அரசு என்பதும் அது இவ்வாறுதான் நடந்த கொள்ளும் என்பதும் 60 ஆண்டுகளாக தமிழ் மக்கள் கண்ட அனுபவம். அது பற்றி தமிழ் மக்களுக்கு வகுப்பெடுக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய அவல நிலைக்கு இரு தரப்பினருமே பொறுப்பு’ என்று ஜெயபாலன் குற்றம்சாட்டினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ஒரு பொட்டலத்திற்காக எத்தினை கைகள் போட்டி போடுகின்ற நிலையை நாம் உருவாக்கி விட்டுள்ளோம். அந்தக் கைகளில் ஒன்று எம் குழந்தைகளாக இருந்தால் நாம் தாங்குவோமா?’ என்று கேள்வி எழுப்பிய அவர் போராட்டம் தத்துவம் பற்றி நாம் இங்கிருந்து நாட்கணக்கில் கதையளக்கலாம் ஆனால் அந்த மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நாம் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். ‘நாம் நமது பிள்ளைகளுக்கு தனியார் கல்வி, கிரம்மர் ஸ்கூல் என்றெல்லாம் நேரமில்லாமல் ஓடித் திரிகிறோம். ஆனால் அந்த முகாமில் உள்ள மாணவர்களுக்கு அடிப்படைக் கல்விக்கு எம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்பதற்காக தேசம்நெற்றும் சிந்தனை வட்டமும் இணைந்து புலமைப்பரிசில் நூல்களை முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். இது எமக்கு ஏற்பட்டுள்ள குற்ற உணர்வினைக் களையவும் ஒரு வடிகாலாகிறது எனத் தெரிவித்தார் ஜெயபாலன். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘அம்மக்களுடைய தேவைகள் மிக அதிகம் அதனை ஒரு தனி அமைப்பாகவோ ஒரு சிலராலோ செய்துவிட முடியாது. அதனால் இயலுமானவர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை தாங்கள் அறிந்த வழிகளில் உதவிகளை மேற்கொள்ள வேண்டும். ஒற்றுமையாக ஒரே கொடியின் கீழ் என்பதெல்லாம் யதார்த்தமற்றது’ என்றும் தெரிவித்தார். ‘முதலில் வன்னி மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். அவர்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.’ என்று கூறி தனது கருத்தை நிறைவு செய்தார் ஜெயபாலன்.

Varathakumar_TICஇறுதியாகக் கருத்து வெளியிட்ட தமிழர் தகவல் நடுவத் தலைவர் வரதகுமார், ‘இன்று ஏற்பட்டுள்ள அவலநிலை அரசினாலேயே கையாள இயலாதநிலையில் உள்ளது. தற்போது பெரும்பாலான என்ஜிஓ க்கள் வவுனியா முகாம்களுக்குள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்குள்ள நிலைமைகளை மதிப்பீடு செய்கின்றனர்’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘இன்றைய இவ்வாறான சந்திப்பு மிகவும் அவசியமானது என்றும் புலம்பெயர்ந்தவர்கள் உடனடி உதவிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும்’ என்றும் தெரிவித்தார். தேசம்நெற் ஊடகம் என்ற வகையில் இம்மக்கள் தொடர்பாக முக்கிய பொறுப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த வரதகுமார் ‘அங்குள்ள மனித உரிமை விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். ‘அந்த மக்கள் கைவிடப்பட்ட மக்கள். அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டக் கூடியவர்கள் புலம்பெயர்ந்த மக்களே’ என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சந்திப்பின் இறுதியில் அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களின் நலன்கள் தொடர்பான குழுவொன்றை அமைப்பது என்றும் அதற்கான சந்திப்பினை அடுத்த இரு வாரங்களிற்குள் தேசம்நெற் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Show More
Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

17 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //‘போருக்கு உதவி புரிந்த புலத்து தமிழர்கள் வன்னி மக்கள் உதவியைக் கேட்கும் போது செய்யத் தயாரில்லாதவர்களாக உள்ளனர்’ எனக் குற்றம்சாட்டினார் ரி சோதிலிங்கம். ‘இன்று புலத்தமிழர்கள் யுத்த முனையில் இருந்து உயிர்காக்க ஓடி வந்த மக்களை துரோகிகளாகப் பார்க்கின்றனர்.//

    இதுதான் உண்மை.எந்த மக்களுக்காக “புலன்” பெயர்ந்து போராடுகின்றோம் என்று படம் காட்டினார்களோ, அந்த மக்களுக்கு இன்று ஆவன செய்ய இந்தப் “புலன்” பெயர்ந்த புண்ணாக்குகளுக்கு மனமில்லை. இதிலிருந்தே தெரிகின்றது இவர்கள் நடத்தும் போராட்டம் மக்களைக் காக்கவா அலலது புலிகளைக் காக்கவா என்பது!! வெறுமனே அரசை மட்டும் குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு அந்த மக்களுக்காக நாம் ஒரு துரும்பையாவது எடுத்துப் போடடோமா என்று எத்தனை பேர் சிந்திக்கின்றீர்கள். வவுனியா அரச அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் எத்தனையோ முறை உதவுமாறு கோரிக்கை விட்டும் எத்தனை பேர் முன்வந்து உதவினார்கள்.

    அநாதையாக வந்த எம்மக்களுக்கு ஓடோடிச் சென்று கைகொடுத்தது சிங்கள மக்களும், இஸ்லாமியச் சகோதரர்களும், மாற்றுக் கட்சியினரும் தானே. இதன் பின்பாவது வெறும் விமர்சனங்களில் காலங்களைக் கடத்தாது ஆக்கபூர்வமான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த மக்களின் துயரங்களை ஓரளவாவது குறைக்க முடிந்ததைச் செய்வோம்.

    Reply
  • yarl
    yarl

    Hi thesam boys please do your part we are waitting to join together with you

    Reply
  • Pearl Thevanayagam
    Pearl Thevanayagam

    The Tamil diaspora has shown great compassion towards their brethren in Wanni. However, there have been instances when groups claiming to assist the suffering civilians have profited themselves in the way of producing T-shirts, mementos and money purportedly to hold meetings on how to alleviate the sufferings of the civilians. This happened during Tsunami, it is happening among those who are close to the British establishment who procure funds from internaitonal BGOs and government to redress the needs of Tamils in the UK such as teaching English or working on asylum applications, (immigration solicitors come a crop)filling in forms for council matters etc.
    The hardworking youth of UK Tamils working in factories and supermarkets give their meagre earnings to profit these sharks hoping they would reach the needy. There need to be checks and balances how the funds are utilised.
    It is advisable to appoint a committee to oversee funds received.

    Reply
  • Anonymous
    Anonymous

    //இதுதான் உண்மை.எந்த மக்களுக்காக “புலன்” பெயர்ந்து போராடுகின்றோம் என்று படம் காட்டினார்களோ, அந்த மக்களுக்கு இன்று ஆவன செய்ய இந்தப் “புலன்” பெயர்ந்த புண்ணாக்குகளுக்கு மனமில்லை. இதிலிருந்தே தெரிகின்றது இவர்கள் நடத்தும் போராட்டம் மக்களைக் காக்கவா அலலது புலிகளைக் காக்கவா என்பது!!//

    அப்படியே ‘புலன்’ க்கு பதிலாக ‘மாற்ருக்கருத்து’ புலி க்குப்பதிலாக ‘மகிந்த அரசு’ எண்டு போடுங்க்கோ இன்னும் மணியா வரும். இலக்கிய, பெண்ணிய, தலித்திய (ஓ,,அவர் இப்ப கிழக்கில் விடி வெள்ளி !!!) கூட்டம் நடத்த்த்தான் சரி இவர்கள். நீங்கள் தானே ‘புலன்’ பெயர்ந்த கூட்டம் புலிக்கூட்டம் எண்டு சொல்லுறியள். ’புலன்’ பெயராத புலம்பெயர் மாற்றுக்கருத்துக் கூட்டத்துக்கும் தோழரின்ர, கழகக்காரரின்ர கட்சி அலுவலகம் திரந்தவை கூட ஒண்டும் செய்யேல்லையே? ஏன் இன்னும் புலிக்கூட்டத்தை திட்டுறியள். மாற்றுக்கருத்தையும் கேளுங்கோ. அது சரி மண்னைத்திண்டெண்டாலும் புலியை துலைப்பம் எண்டு சொன்னவையோடை நிக்கிறவையளிட்ட என்னண்டு சாப்பாடு எதிர்பாக்கிறது?

    //ஒரு துரும்பையாவது எடுத்துப் போடடோமா என்று எத்தனை பேர் சிந்திக்கின்றீர்கள்.//
    ’மாற்ருக்கருத்து’ கோஷ்டிக்கு துரும்மைக்கூட போட ஏலாது எண்டு தானே ஸ்ரீலங்கா அமைச்சர் சொல்லிப்போட்டாரே (இங்கிலண்டில 30,000 பேர் இருக்கினம் ஒண்டும் செய்யுறாங்களில்லை எண்டு) இதைவிட என்ன வேணும்?

    அது சரி அனுப்பின மருந்தும் பால்மாவும் முல்லைத்தீவில இறக்கேலாது வெணுமெண்டால் யாழ்ப்பானம் அனுப்பிவிடுறம் எண்டு 5 நாளைக்குமுன்னர் ’மஹிந்த அரசு’ இங்க ஒரு அமைப்புக்கு சொல்லிப்போட்டினம். இவையளும் வாயப்பொத்திக் கொண்டிருக்கினம். வெளியில சொன்னால் வெக்க்ககேடெண்டு! நீங்கள் என்னண்டால் தும்பு தும்முக்கட்ட எண்டு கதை விடுறியள். எழுதவும் கேள்வி கேக்கவும் ஈஸி ஓஸி!!!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //வெளியில சொன்னால் வெக்க்ககேடெண்டு! நீங்கள் என்னண்டால் தும்பு தும்முக்கட்ட எண்டு கதை விடுறியள். எழுதவும் கேள்வி கேக்கவும் ஈஸி ஓஸி!!!- Anonymous //

    வன்னி மக்களைச் சாட்டி சுனாமிக்கென்றும், கண்ணீர்த்தளிகள் என்றும், வணங்காமண் என்றும் சுருட்டிய உங்களைப் போன்றவர்கள் எப்படி வெட்கமில்லாமல் அடுத்தவர்களை விமர்சிக்க வெளிக்கிடுவதே கேவலமாகத் தெரியவில்லையா?? புலிகளின், புலியாதரவாளர்களின் சுருட்டல்களைச் சுட்டிக் காட்டினால் மாற்றுக் கருத்தாளர்கள் என்பீர்கள். ஆனால் உங்களால் மாற்றுக் கருத்தாளர்கள் என்று வர்ணிக்கப்படுவோர் எவரையும் சுருட்டி வாழவில்லை. அந்த மக்களுக்கு குழுவாகச் சேர்ந்து உதவி செய்ய முற்பட்டாலும், அதை எப்படி முறையாக அனுப்பலாமென்று ஆராய்ந்து அது சரிவரும் எனத் தெரிந்த பின்னரே அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள். ஆனால் நீங்களோ போகாத ஊருக்கு வழி சொல்வது போல, எந்தவித ஏற்பாடும் செய்யாமலே வணங்காமண் இன்ன திகதி புறப்படுகின்றதென்று பொய் சொல்லியே, பொருளும் பணமும் சுருட்டி புலித்தலைமை போல் அடுத்தவன் பணத்தில் உல்லாசமாக வாழத் துடிப்பவர்கள். உங்களுக்கு யார் எக்கேடு கெட்டால் என்ன உங்கள் வாழ்வு வசதியானால் போதும்.

    Reply
  • thevi
    thevi

    அனுப்பின மருந்தும் பால்மாவும் முல்லைத்தீவில இறக்கேலாது வெணுமெண்டால் யாழ்ப்பானம் அனுப்பிவிடுறம் எண்டு 5 நாளைக்குமுன்னர் ’மஹிந்த அரசு’ இங்க ஒரு அமைப்புக்கு சொல்லிப்போட்டினம். இவையளும் வாயப்பொத்திக் கொண்டிருக்கினம். வெளியில சொன்னால் வெக்க்ககேடெண்டு”

    அந்த அமைப்பு எது? இது முகாங்களில் பாலியல் கொடுமை என சனல்-4 விட்ட செய்தி மாதிரி ஆதாரமற்றுப் போக கூடாது!

    Reply
  • BC
    BC

    Anonymous சொன்ன மருந்தும் பால்மாவும் அனுப்பின செய்தி புதுசாக இருக்கு. சனல் 4ல் செய்தி சொன்னதோ!

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    பேர்ள் தேவநாயகம் அவர்களுடைய கருத்து மிகவும் ஆரோக்கியமானது. பலரும் பல வழிகளிலும் பல்வேறு உதவி நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. தேவைகள் அவ்வளவு அதிகமாக இருக்கும் போது உதவிகளும் பல்வேறு வகைகளிலும் தேவைப்படுகிறது. அதேசமயம் இவற்றுக்கிடையேயான ஒரு சமநிலை பேணப்பட வேண்டும்.

    தேசம்நெற் நிவாரண நடவடிக்கைகளைப் பொறுத்தவரை அனைத்தும் லிற்றில் எய்ட் ஊடாகவே மேற்கொள்ளப்படும். அதன் விபரங்கள் வங்கி மாதாந்த அறிக்கை உட்பட அவை இணையத்தில் பிரசுரிக்கப்படும். உதவி சென்றடைந்ததற்கான பத்திரங்களும் இணையத்தில் பிரசுரிக்கப்படும். அதற்கான தனியான வகைப்படுத்தல் ஒன்றும் உருவாக்கப்படும்.

    மேற்கொண்டு வருகின்ற ஆலோசணைகள் பற்றியும் நிச்சயமாகப் பரிசீலிக்கப்படும்.

    த ஜெயபாலன்.

    Reply
  • Anonymous
    Anonymous

    தேவி, பீசீ
    அமைப்புக்காரர் தயவுசெய்து எங்கட பெயரை வெளியில சொல்லிப்போடாதையுங்கோ எண்டு கேட்டிருக்கினம். ஏன் எண்டு கேட்டதுக்கூ இன்னும் எங்கட சனத்துக்கு நாங்கள் ஏதாவது செய்யவேணும் அதையும் கெடுத்துப்போடாதையுங்கோ எண்டு கேட்டபடியால் தான் சொல்லேலாமல் கிடக்கு. நான் அங்க கேள்விப்பட்டனான் இஞ்ச கேள்விப்பட்டனான் எண்டு கதை விடேல்ல. இந்த அமைப்புக்காரரை எனக்கு நல்லாத்தெரியும். கால் கை இல்லாமல் பால்மா இல்லாமல் தவிக்கிற சனத்தை நினைச்சுத்தான் வெளியில சொல்ல ஏலாமல் இருக்கு. சுனாமிக்கதை கனக்க எங்களிட்ட இருக்கு. எப்பிடி தண்ணி சுத்திகரிப்பு மிசினுகலை ஹாபரில வச்சு அடிச்சவை, மருந்துகளை எடுத்து வித்தவை எண்டு எங்களுக்கு தெரியாதாக்கும். கடசியா எம்பசிக்காரர் போய் கேக்கேக்கதான் முழிசிக்கொண்டு ஐயையோ தெற்குக்கு அனுப்பிப்போட்டம் எண்டு கதை விட்டு வழிஞ்சவை எண்டெல்லாம் ஆதாரத்தோட இருக்கு.

    சுனாமியில காசை கொளளை அடிச்சவை எண்டு குற்ரம் சாட்டுறவை ஏன் இன்னும் ஒரு ‘துரும்பை’ கிள்ளிப்போடேலாமல் கிடக்கு. நான் சொல்லேல்ல,ஏனெண்டால் எனக்கு அவையின்ர ‘கதை அளப்புகள்’ எனக்குத்தெரியும் ஆனால் அமைச்சருக்கு தெரியாமல் போனதேன்?
    கொழும்பில கூட்டம் எண்டு மஹிந்தா சொல்லேக்க்கை விழுந்தடிச்சுக்கொண்டு ஓடினவை கூடவா ‘துரும்பை’ கூட தூக்கிப்போடேல்லை? ஒரு மாததுக்கு முதல் முல்லைத்தீவில பால்மா இறக்கினது எண்டு படங்கள் பாத்திருப்பியள்தானே. எல்லாம் அரசு குடுத்ததெண்டுதான் படங்காட்டினவயள். ஆனால் ஆர் அதெல்லாம் குடுத்ததெண்டு நினைக்கிறியள்? எங்களிட்ட இன்வொய்சோடை ஆதாரம் இருக்கு. இரண்டாவது சிப்மன்ற் இப்ப தடைபட்டு யாழ்ப்பானம் போகுது!

    அதுசரி எப்படி முறையாக அனுப்பலாமென்று ஆராய்ந்து அது சரிவரும் எனத் தெரிந்த பின்னரே அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள் எண்டு சொல்லுறியள். அப்ப ஏன் அமைச்சர் உங்களை (33,000) வசைபாடுறார். அவருக்குச் சொல்லுங்கோ சாப்பாடு அனுப்பக்கூட ‘எது சரிவரும்’ எண்டெல்லாம் ஆராய வேண்டிய நிலையில இருக்கிரம் நாங்கள் எண்டு. ஆனால் கொழும்பில மீற்ரிங் எண்டெேக்க மகளுக்கு பீஎம்டபிள்யூ எண்டால் நல்லவிருப்பம், மகன் பெரிய யூனிவசிற்றியில படிக்கிறார் எண்டு அலம்புரது ஈசிதானே? புலிப்பினாமியள், ’புலன்’ பெயர்ந்தவய விடுங்கோ கொழும்பில மீற்றிங் கண்ட பீபிசியில பேட்டி குடுத்த கோஷ்டி எங்க போச்சுது. துரும்பு எடுக்க போயிட்டினமோ?

    Reply
  • thevi
    thevi

    Anonymous இதுவும் ஒரு கதை அளப்புத்தான். நீண்ட நெடிய யுத்தத்தில் நொந்து போயுள்ள எமக்கு இந்த சுற்றி வளைப்பு கதைகளை உள்வாங்கி ஊகித்து உண்மைகளைக் கண்டு பிடிக்க இயலவில்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ஒரு மாததுக்கு முதல் முல்லைத்தீவில பால்மா இறக்கினது எண்டு படங்கள் பாத்திருப்பியள்தானே. எல்லாம் அரசு குடுத்ததெண்டுதான் படங்காட்டினவயள். ஆனால் ஆர் அதெல்லாம் குடுத்ததெண்டு நினைக்கிறியள்? எங்களிட்ட இன்வொய்சோடை ஆதாரம் இருக்கு. இரண்டாவது சிப்மன்ற் இப்ப தடைபட்டு யாழ்ப்பானம் போகுது!- Anonymous //

    அட கரகாட்டக்காரன் கவுண்டன் செந்தில் வாழைப்பழக்கதை உங்களுக்கு நன்றாகத்தான் கைகொடுக்கிறது. பிரித்தானியாவே உத்தியோகபூர்வமாக வணங்காமண்ணிற்கு தான் தமது துறைமுகங்களில் அனுமதி கொடுக்கவில்லை என்று அறிவித்ததாவது தெரியுமா?? பங்குனி 31ம் திகதி புறப்படும் வணங்காமண்ணென்று சுருட்டிய வணங்காமண் பின்பு பறந்தா போனது. உலக உணவுத் திட்டமும் அரசாங்கமும் தான் இன்றுவரை வன்னி மக்களுக்கு உணவு அனுப்புகின்றதென்று எல்லோருக்கும் தெரியும். அதற்குப் பின்னும் சுருட்டின ருசியிலை எப்படித் தான் கதை விட முடிகின்றது. இன்வொய்சோடை இருக்கிறியளோ. உப்பிடி எத்தனை படம் காட்டி விட்டீர்கள். எனியும் காடடுவீர்கள் என்பதும் தெரியும். சுனாமியின் பின் புலித்தலை உடனடி நிவாரணமென்று 30 கோடி அறிவிச்சவர். ஆனால் ஒரு கொட்டில் கூட சனத்திற்கு கட்டிக் கொடுக்கவில்லை. ஆனால் மாறாக யூனிசெப் கட்டிய வீடுகளை ஓடிப்போய் திறந்துவைத்து ஏதோ தாம் கட்டிய வீடுகள் போல் படம் காட்டினார்கள். அதுபோல் நோர்வே இலவசமாக வழங்கிய படகுகளை மக்களுக்கு வித்து காசு பார்த்தினம். இப்ப கூட உலக உணவுத்திட்டமும் அரசும் இலவசமாக அனுப்பும் உணவை புலிகள் அபகரித்து அதிகவிலை வைத்து அம்மக்களுக்கு விற்பதை அம்மக்களே சொன்னதை எல்லோரும் தான் பார்த்தோம். அப்ப “புலன்” பெயர்ந்த புலிவாலுகள் புலத்தில் என்ன செய்வினம் என்று சொல்லியா தெரிய வேணும். சுருட்டியவை எல்லாம் எங்கே என்று கேட்டால் அடுத்தவனின் கதையை அளக்கின்றீர்கள்.

    அரசாங்கததுடன் சந்திப்பில் கலந்து கொண்டு அங்குள்ள அகதி முகாங்களையும் பார்த்து வந்த சிலர் உடனடியாக நாடு திரும்பி தாம் இருந்த நாடுகளில் தமக்கு தெரிந்தவர்களிடமும் பணமும் சேர்த்து நேரடியாகவே வவுனியா சென்று அந்த மக்களுக்கு மாதக் கணக்காக நின்று உதவியதை வானொலிகள் கூட அறிவித்த போதும் தாங்கள் அறியாதது வேடிக்கை தான். ஓ உங்களுக்கு புலிவால் ஊடகங்கள் மட்டும் தானே தெரியும். பின்பு எப்படி உலக நடப்புகளை தங்களால் அறிந்து கொள்ள முடியும். முடிந்தால் உலக நடப்புகளையும் அறிந்து கொள்ளப் பாருங்கள்.

    Reply
  • thevi
    thevi

    எப்படி முறையாக அனுப்பலாமென்று ஆராய்ந்து அது சரிவரும் எனத் தெரிந்த பின்னரே அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள் எண்டு சொல்லுறியள்”

    அவ்வளவு வில்லங்கப்பட்டு ஏன் செயற்பட வேண்டியுள்ளது? கடந்த காலங்களில் என்ஜிஒ ஆடகள் செய்த தில்லுமுல்லுகள் துஸ்பிரயோகங்களாலேயே கெடுபிடிகள் கூடிக்கொண்டு போகின்றன. என்ஜிஒ புலிகள் சார்பாக பல தேவையற்ற வேலைகளை செய்து அரசிற்கு சாட்டுக்கள் சொல்லக் கூடிய மாதிரி ஆக்கிவிட்டன. இன்று மக்கள் அதன் பலனை அனுபவிக்க வேண்டியுள்ளது. சுனாமி நிவாரண கப்பலில் கெலிகெப்ரர் உபகரணங்கள் கொழும்பில் இறங்கியதை மறந்திருக்க மாட்டீர்கள்.

    Reply
  • Thirumalaivasan
    Thirumalaivasan

    லிட்டில் எய்ட் திட்டம் வரவேற்கத்தக்கது. எமது சமூகத்தில் இத்தகைய சமூக நோக்குடன்கூடிய திட்டங்களை சந்தேகக்கண்கொண்ட பார்க்கும் வழமை தொன்றுதொட்டு உள்ளது. அதற்கு நாம் தாயகத்திலும்> புகலிடத்திலும் கண்டு கேட்ட நிகழ்வுகள் ஏராளம். இன்று புகலிடத்தில் உள்ளவர்கள்> ஒன்று கேள்விகேட்காமல் நிதியைக் கொடுப்பார்கள்- அது புலிக்கோ> புலியின் நிதியமைப்புகளுக்கோ போய்ச் சேருமென்று. தமது நம்பிக்கையையும்> இயக்க ஆதரவையும் காட்டிக்கொள்ள இந்த நிதி வழங்கல் ஒரு வாய்ப்பாகின்றது. வணங்காமண் பணம் பொருள் போய்ச்செர்ந்ததா? மண்மீட்பு நிதிக் கணக்கு என்ன என்நறல்லாம் கேட்க மாட்டார்கள். இதே புகலிடத்தில் உள்ள மறுசாரார் (புலி எதிர்ப்பாளர்களும் பிறரும்) நிச்சயமாக மேற்கண்ட வகையில் நிதி உதவிகளை வழங்க மாட்டார்கள். ஆனால் கேள்விகளை மாத்திரம் ஆயிரம் வகையில் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

    இன்று லிட்டில் எயிட் தொடங்கிய தேசத்திடமும் இதே கேள்வியை எதிர்காலத்தில் கேட்பார்கள். இப்பொழுதே பின்னூட்டங்களில் அதன் சாயல் அடிக்கின்றது. தேசம் நெட் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் வழங்கிக்கொண்டிருக்காமல்> சிறிய அளவிலாவது ஒரு வேலைத்திட்டத்தை செய்து முடித்து அதன் கணக்குகளை இதே இணையத்தளத்தில் அறிவித்து விட்டு அடுத்த திட்டத்தை தன்பாட்டுக்குத் தொடங்க வேண்டியதுதான். பதில்சொல்ல இப்பவே கிழம்பிவிட்டால் வேலை எதுவும் நடவாது சலிப்படைய நேரிடும். உங்கள் செயற்பாடுகளே இந்தச் சந்தேகப்பிராணிகளுக்கு பதிலாக அமைந்துவிடவேண்டும். காலக்கிரமத்தில் அவர்களும் தமது நிதியை வழங்க முன்வரக்கூடும். இங்கு ஆர்.எஸ்பி.சி.ஏ> கான்சர் சொசைட்டி என்று ஏராளமான நிதிகள் சேகரிக்கப்படுகின்றன. அதற்கு கேள்விகேட்காமல் தமது உழைப்பில் டிரெக்ட் டெபிட் அனுப்பி வைக்கும் மக்கள் வாழம் ஒரு நாட்டில் இந்த லிட்டில் எயிட் ஒரு மூலையில் தன் பணியைத் தொடரட்டும். புதிய சிந்தனையை எமது வரண்ட இதயங்களில் ஊற்றெடுக்க முனையட்டும்.

    Reply
  • அறிவானவன்
    அறிவானவன்

    Good work please keep it up. Nice to see some democratic values among our community.

    Reply
  • மாயா
    மாயா

    புலிகள் சாதாரணமாகவே தம்மைத் தவிர வேறு யாரும் வாழவோ அல்லது அடுத்தவருக்கு உதவி செய்யவோ அல்லது ஏதாவது ஒரு விழா செய்யக் கூட விடுவதில்லை. அனைத்தையும் தமது கட்டுப்பாட்டிலேயே நடக்க வேண்டும் என்ற கருத்தில் நடந்து கொண்டவர்கள். நடப்பவர்கள். அதிகம் போனால் துரோகி பட்டியலில் இணைத்து அவர்கள் வாழ்வை பாழாக்கி போடுவார்கள்.

    என்னைப் பொறுத்தவரை மூச்சு விடுவது கூட அவர்கள் அனுமதியால்தான் முடியும் என்ற நிலை இருந்தால் அதையும் கூடத் செய்யத் தயங்காதவர்கள். அப்படி ஒரு கேடு கெட்ட ஒரு அமைப்பு.

    எனவே இந்த பயத்திலேயே பலர் புலி சார்பாளராக நடிப்பது பலரும் அறிந்த விடயம். இவர்களில் பலர் வீட்டு முகப்பில் வைத்திருந்த தலைவரின் படங்களை தூக்கிவிட்டார்கள். எதிர்காலத்தில் அச்சம் நீங்க உண்மையான முகம் அனைவருக்கும் தெரியத்தான் போகிறது?

    புலிகள் தமக்கு சார்பாக எதையாவது பாவிக்க முடிந்தால் உடனே பாவிப்பார்கள். அது எல்லை மீறுமானால் அதை இல்லாமல் அழிக்க ஒரு கணம் கூட தாமதிக்காதவர்கள். உதாரணத்துக்கு:

    இந்தியாவை வென்றதாக சொல்வார்கள்.
    இந்தியர்கள் துரோகிகள் என்பார்கள்.
    இந்தியா தொப்புள் கொடி உறவு என்பார்கள்.
    இந்தியா எம்மை அழிக்கப் போகிறது என்பார்கள்.
    இராணுவ உதவிகளை செய்கிறது என்பார்கள்.
    இந்தியாதான் எம்மை காப்பாற்ற வேண்டுமென்பார்கள்.
    இந்திய படங்களுக்கு – தொலைக் காட்சிகளுக்கு தடை என்பார்கள்.
    இந்திய கலைஞர்களை உதவிக்கு கால் பிடிப்பார்கள்.

    இப்படி ஒரு கொள்கையே இல்லாத சுயநல சிந்தாத்தம் கொண்ட அமைப்பு என்றால் அது புலிகள் அமைப்புதான்.

    இறுதி யுத்த முடிவு இவர்களது மாயையிலிருந்து அநேகரை மீட்கும். உண்மைகளை உலகுக்கு தெரிவிக்கும். அதுவரை இருந்தது போல் பொறுமை காப்பதே ஏனையோருக்கு நல்லது.

    Reply
  • padamman
    padamman

    இன்று புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர் சிறுமிகள் இளைஞர்கள் தங்கியுள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு சென்று உள்ளனர். plote.org

    Reply
  • thevi
    thevi

    அரசங்கத்தின் வரைமுறை கட்டுப்பாடுகளுக்கு அமைய அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயல்படுமானால் அவற்றுக்கான பூரண ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் அரசாங்கத்தின் வரையறைகளுக்கும் கட்டுப்பாட்டுக்கும் அமைய தொழில்படும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கு இலங்கையில் தொழில்படுவதற்கான உரிமைகளை வழங்க இந்தக் கருத்தினை வெளியிட்டார் அலரி மாளிகையில் ஜனாதிபதிக்கும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் போது கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்தக் கருத்தினை வெளியிட்டார் இந்தச் சந்திப்பின் போது வடக்கு மக்களிற்கான மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால் அரச சார்பற்ற அமைப்புக்கள் முகம் கொடுக்க வேண்டிய பிரச்சனைகளைக் குறித்தும் அந்த மக்களின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்தும் வழி முறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது”

    இது சரியான அணுகுமுறையாக இருக்குமல்லவா? என்ஜிஒ நபர்கள் கோழிக்காலை யாரிடமும் பெறமுடியாது.

    Reply