ஏப்ரல் 04ஆம் திகதி சர்வதேச ‘நிலக்கண்ணி வெடி’ விழிப்புணர்வு International Day for Landmine Awareness and Assistance -புன்னியாமீன்

nilakannikal.jpgநவீன உலகில் யுத்தப் பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறிக்கவும், அங்கவீனர்களாக்கவும் காரணமாக இருந்துவரும் நிலக்கண்ணி வெடி’  பற்றி மக்கள் மத்தியில் அறிவுறுத்தல் வழங்கி  விழிப்புணர்வை ஏற்படுத்து முகமாகவும், அதன் பிரயோகத்தை தடுப்பது தொடர்பாகவும் இத்தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

பொதுவாக நிலக்கண்ணி வெடிவகைகளில்  M14, Valmara 69, and VS-50A  போன்றன இன்று அதிகளவில் பாவனையிலுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஒரு தனி நபரை அல்லது ஒரு சிறு குழுவினரை அல்லது ஒரு வாகனத்தை அல்லது மிருகங்களை இலக்கு வைத்து நிலக்கண்ணிவெடி’கள் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவுள்ளன. பொதுவாக நிலத்தின் கீழும் நிலத்தின் மேலும் இக்கண்ணிவெடிகள் வைக்கப்படும். இக்கண்ணிவெடிகளை மிதிப்பதினூடாக வெடிக்கும் தன்மையும் அல்லது இக்கண்ணிவெடிகளை குறி வைத்து இயக்கி வெடிக்க வைக்கக்கூடிய தன்மையையும் இவை கொண்டவை.

நிலக்கண்ணிவெடி  வரலாற்றை பின்னோக்கிப் பார்க்கும்போது கிறிஸ்துக்குப் பின் 03ஆம் நூற்றாண்டில் சீனாவின் பிரதமர் சூஞ்லியான் என்பவர் மூலம் ஹ{ருலு பள்ளத்தாக்கு யுத்தத்தின்போது ஸிமா – ஈ படைக்கெதிராக பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக பிற்காலத்தில் சில பதிவுகளின்படி கூறப்பட்டாலும்கூட, பொதுவாக வெடி மருந்தின் கண்டுபிடிப்பு 10ஆம் நூற்றாண்டுகளில் இடம்பெற்றதினால் மேற்படி தகவலினை உறுதிப்படுத்துவது கடினமாகவுள்ளது. இருப்பினும், வெடி பொருள் கலக்கப்படாத முறையில் விசஊசிகள் அன்றேல் விசத்தைப் பாய்க்கக்கூடிய ஏனைய உலோகங்களை நிலத்தில் புதைத்து எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்த பயன்படுத்தப் பட்டிருக்கலாம். இதுவும் ஒரு நிலக்கண்ணியென்றே இங்கு கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு. அதேநேரம், 14ஆம் நூற்றாண்டில் சீனச்சட்டி குண்டுகள் வெடி மருந்து நிரப்பப்பட்ட முறையில் மொங்கோலியாவுக்கு எதிரான யுத்தத்தில் சீனா பயன்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் நிலக்கண்ணிப் பாவனை நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது என்பதை மேற்குறிப்பிட்ட தரவுகளிலிருந்து அறியமுடியும்.

பொதுவாக எல்லைப்புற யுத்தங்களின்போது; எல்லைப்புற பாதுகாப்பிற்கும், எதிரிகளை நகர விடாமல் பாதுகாப்பிற்கும் பெருமளவு நிலக்கண்ணிவெடிகள் பயன்படுத்தப்படுகின்றன. நிலக்கண்ணிவெடி பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் மாபெரும் குறை யுத்தங்கள் முடிந்த பின்பு உரிய நிலக்கண்ணிகள் அகற்றப்படாமையினால் சாதாரண மக்கள் அவற்றில் சிக்குண்டு பாதிப்புக்கு உட்படுவதாகும். உதாரணமாக கம்போடியாவில் யுத்தம் முடிந்த பின்பு 35,000 பொது மக்கள் அங்கயீனர்களாகியுள்ளனர். இதிலிருந்து இதன் அபாயத்தன்மையை உணர்ந்துகொள்ள முடியும். சில ஆய்வுகளின்படி நிலக்கண்ணிவெடிகளை வைத்தவர்களுக்கு தான் எந்த இடத்தில் வைத்தோம் என்று கூற முடியாதளவுக்கு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நிலக்கண்ணியின் ஆபத்தையுணர்ந்து நிலக்கண்ணி தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை 1992ஆம் ஆண்டு கனடா அரசு தீவிரமாக முன்வைத்தது. கனடாவில் ஜோடி வில்லியம் Jody Williams இதன் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார். இவரின் முயற்சிக்காக 1997ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1997ஆம் ஆண்டு நிலக்கண்ணிப் பாவனைக்கு எதிராக ஒட்டாவாவில் 122 நாடுகள் கைச்சாத்திட்டன.  ஒட்டாவா Ottawa  ஒப்பந்தம் Ottawa Treaty 1999ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது. ஒட்டாவா ஒப்பந்தப்படி நிலக்கண்ணி பாவனை, களஞ்சியப்படுத்தல், உற்பத்தி செய்தல், கொண்டு செல்லல், விற்பனை செய்தல்  என்பன தடைசெய்யப்பட்டன. இந்த ஒப்பந்தத்தில் யுத்ததாங்கி அழிப்பதற்கான நிலக்கண்ணி, கொத்தணிக் குண்டுகள், கிளைமோர் குண்டுகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. தற்போது 155 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்று கைச்சாத்திட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், 40 நாடுகள் கைச்சாத்திடவுள்ளதாக கூறப்படுகின்றது. கைச்சாத்திட்டுள்ள நாடுகளுள் 64 நாடுகள் பயிற்றுவிப்புக்காகவும், தற்பாதுகாப்புக்காகவும் இதைப் பயன்படுத்துவோம் என்ற அடிப்படையில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த ஒப்பந்தத்துக்கு இதுவரை கைச்சாத்திடாத நாடுகளாக  சீனா,  இந்தியா, இஸ்ரேல்,  பாக்கிஸ்தான்,  ரஸ்யா, ஐக்கிய அமெரிக்கா போன்ற பிரதான நாடுகள் இருப்பதும் அவதானிக்கத்தக்கதாகும்.  

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *