அகதிகளின் புலம்பலால் நாடு அல்லோலகல்லோலப்படும் நிலையில் இனவாதம் பேசும் இடதுசாரிகள் தேர்தல் மேதினம் நடத்துகின்றனர்

mayday01.jpgஅகதிகளின் புலம்பலால் நாடு அல்லோலகல்லோலப்பட்டு கிடக்கிறது. இனவாதம் பேசியே சில இடதுசாரிகள் தம்மை தொழிலாளர்களது தோழனாக காட்டிக் கொண்டிருக்கின்றனர். வேதனக் குறைவால் தோட்டத் தொழிலாளர் பலர் வேதனைக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், அடுத்து வரவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலை மையமாகக் கொண்டு சிலர் தேர்தல் மேதினம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

அதேநேரம், வடக்கில் வாடுவோருக்கு உதவுவோமென இன்னொரு பகுதியினர் கூறி வருகின்றனர். ஆனால், அந்த மக்களின் நிர்க்கதி நிலைக்கு காரணமானவற்றை களைந்தெறியவோ அதைப் பற்றி பேசவோ தொழிலாளர் தலைமைகள் பேசத்தயங்குவதும் மௌனிப்பதும் கவலைக்குரியதே. எனவே ஐக்கிய உணர்வோடு அவலங்களை கண்டித்தும், தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கவும் அனைவரும் முன்வர வேண்டும்.

இவ்வாறு நுவரெலியா கூட்டுறவுச் சங்க விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவரும் சட்டத்தரணியுமான கணபதிப்பிள்ளை தெரிவித்தார்.

மலையக சோசலிச சக்திகளினதும் இடதுசாரி தொழிற்சங்கங்களினதும் அரசியல் அமைப்புகளினதும் சார்பில் இடம் பெற்ற இம் மேதினக் கூட்டத்தை ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கம், இலங்கை செங்கொடிச் சங்கம், ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பன கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன.

கூட்டத்தின் ஆரம்பத்தில் உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து மௌனஞ்சலியும் செலுத்தப்பட்டது. செங்கொடிச் சங்க பொதுச் செயலாளர் ஒ.ஏ.இராமையா உரையாற்றுகையில்;

இலங்கையில் ஒருபக்கம் பொருளாதாரப்பிரச்சினை. மறுபுறம் யுத்தப் பிரச்சினை. இவ்விரண்டுமே இன்று சர்வதேச பிரச்சினையாகிவிட்டது. யுத்தம் முடிந்து விட்டதாக அரசு கூறுகிறது.வரலாறு காணாதளவு யுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். வடக்கில் சோசலிச இயக்கம் இல்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுவும் அரசுக்கு ஆதரவான குழுவும் அங்குள்ளன. வடக்கில் இன்று காணப்படும் நிலை நாளை எமக்கும் வரலாம். இதனை மறந்த நிலையில்தான் மலையகத்தில் பலர் வரலாற்றுத் துரோகம் இழைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

மலையகத்திலும் வடகிழக்கிலும் புதிய சோசலிச இயக்கம் உருவாக வேண்டும். எங்களது சக்தி உதிரியாக சிதறி இருக்காமல் அனைவரும் சேர்ந்து உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.  நாங்கள் நாட்டைப் பிரிக்கும் ஆதரவாளர் அல்ல. ஐக்கியப்பட்ட இலங்கையில் சமத்துவம் கோருகிறோம். தமிழர்கள் செறிந்து வாழுமிடத்தில் சுயாட்சியோடும் சுதந்திரத்தோடும் வாழவேண்டும். பொருளாதார நிலை அனைவரையும் பாதிக்கின்றது. எனவே அந்த வீழ்ச்சியிலிருந்து மீட்சி வேண்டும் என்றார்.

ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஆ.முத்துலிங்கம் தனதுரையில்;  உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற மார்க்சின் குரலை பலர் மறந்துவிட்டார்கள்.ஆனால் முதலாளிமார் மறக்கவில்லை.உலக முதலாளிகளே ஒன்றுபடுங்களென அவர்கள் அதனைப் பின்பற்றுகின்றார்கள். தொழிலாளர்களிடையே பிளவுகள், முதலாளிகள் ஐக்கியப்படுகிறார்கள். மலையகத் தொழிலாளர்களின் பிரச்சினை தீரவேண்டுமானால் சகல சங்கங்களும் ஒன்றுபடல் வேண்டும். ஒற்றுமை மூலம்தான் தொழிலாளியால் தலை நிமிர முடியும் என்றார்.

ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ்.ஜோதிவேல் உரையாற்றுகையில்;  மறைந்துபோன இடதுசாரி இயக்கம் மலையகத்தில் மீண்டும் துளிர்விட இம்மேதினம் அடிகோலுகிறது. தோட்டத் தொழிலாளரின் அடிப்படை உரிமைகள் பல்வேறு வழிகளில் பறிக்கப்படுகிறது.பலவந்த வெளியார் குடியேற்றத்தால் காணிகள் பறிபோகின்றன. தோட்ட வைத்தியசாலைகளில் மருந்தில்லை. கொழுந்துக்கு விலை அதிகரிப்பில்லை. தோட்ட சேவையாளர்களுக்கு மனிதாபிமான ரீதியாக ஏழுபேர்ச்சஸ் காணி கூட வழங்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. அரசு யுத்தத்தை காரணங்காட்டி தொழிலாளர்களை நசுக்கும் அதேவேளை, அமைச்சர்களது ஆடம்பர சொகுசு வாழ்வுக்கு வழி வகுக்கிறது. கேட்டால் யுத்தமென போலி முத்திரை ஒட்டப்படுகிறது என்றார்.

இக்கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளும் மரக்கறிக் தோட்டங்களும் சட்டரீதியாக அவர்களுக்கே உரித்தாக வேண்டும். பெருந்தோட்டங்களில் பெண்களே பெரும்பான்மையாக தொழில் புரிகின்றனர்.ஆனாலும் அவர்களுக்கு தகுந்த வசதிகள் வழங்கப்படுவதில்லை. எனவே அவர்களுக்கு பாதுகாப்பு உடை, மேலங்கி, தொப்பி, பாதணி உட்பட சீருடைகள் வழங்கப்பட வேண்டும்போன்ற தீர்மானங்களுடன் இன்னும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *