கண்டி அஸ்கிரிய மைதானம் யாருக்கு சொந்தம் திரித்துவக் கல்லூரிக்கா, அஸ்கிரிய ஆலயத்துக்கா -இன்று கண்டியில் உயர்மட்டக் கூட்டம்

asgiriya.jpgகண்டி அஸ்கிரிய விளையாட்டு மைதானம் கண்டி திரித்துவக் கல்லூரிக்குச் சொந்தமானதா? அல்லது அஸ்கிரிய பீடத்துக்குச் சொந்தமானதா? என்ற சர்ச்சை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த மைதானத்தை விட்டு திரித்துவக் கல்லூரி இம் மாதம் 31 ஆம் திகதிக்குள் வெளியேற வேண்டுமென அஸ்கிரிய ஆலயம் திரித்துவக் கல்லூரிக்கு கடிதம் மூலம் அறவித்துள்ளது.

இதனால் இப்பிரச்சினை தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று திங்கட்கிழமை கண்டியில் நடைபெறவுள்ளது. இதில் திரித்துவக் கல்லூரி பிரதிநிதிகளும் அஸ்கிரிய ஆலயப் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரு தரப்பினரும் இம்மைதானம் தமக்குரியது என்று உரிமை கோரிவருகின்றனர்.

1911 ஆம் ஆண்டு இந்த மைதானக் காணியை இலங்கை அரசிடம் இருந்து திரித்துவக் கல்லூரி குத்தகைக்குப் பெற்றுக்கொண்டதுடன் அது தொடர்பான ஆவணத்தில் அன்றைய இலங்கையின் ஆளுநர் (கவர்னர்) ஒப்பமிட்டதாகவும் இக்கல்லூரியின் அதிபரும் ஒய்வு பெற்ற பிரிகேடியருமான டபிள்யூ.ஜீ.கே.ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இக்கல்லூரி மேலும் காணியை குத்தகைக்குப் பெற்றுக்கொள்ளும் அனுமதியும் வர்த்தமானி மூலம் பின்னர் வெளியிடப்பட்டது எனவும் அவர் கூறினார்.

1985 இல் மேலும் சில காணிகளை மைதானத்துடன் இணைத்துக் கொள்வதற்கு குத்தகை உடன்படிக்கை ஒன்று அரச காணி சட்ட விதிகளின் கீழ் கைச்சாத்திடப்பட்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா அதில் ஒப்பமிட்டார். 2005 இல் சில காணிகள் இதற்கு வாங்கப்பட்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அது தொடர்பான ஆவணத்தில் ஒப்பமிட்டுள்ளார்.

இது தொடர்பாக தகுந்த ஆவணங்களும் உறுதிகளும் எம்மிடம் உள்ளன. இதற்கான வரிகளும் எம்மால் செலுத்தப்பட்டுள்ளன எனவும் அதிபர் தெரிவித்தார். இதேவேளை, அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வண உடுகம ஸ்ரீ புத்தரஹிந்த தேரர் இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில்;

கண்டி திரித்துவக் கல்லூரியின் இந்த மைதானம் தொடர்பான குத்தகைக்காலம் காலாவதியாகிவிட்டது என்றார். நூறு வருடங்களுக்கு மேலாகக் கண்டி திருத்துவக் கல்லூரியுடன் இணைந்துள்ள இந்த மைதானம் 1980 களில் அன்றைய இலங்கைக் கிரிக்கெட் சபையின் தலைவரும் அமைச்சரும் இக் கல்லூரியின் பழைய மாணவருமான காமினி திஸநாயக்காவினால் சர்வதேச கிரிக்கெட் மைதானமாக தரமுயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்னர் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் பலிப்பான ஸ்ரீ சந்தானந்த சர்வதேச பாடசாலை அதிபரிடம் அஸ்கிரிய மைதானத்தை வைபவரீதியாக கையளித்துள்ளார். இதனையடுத்தே இந்தப் பிரச்சினை தற்போது எழுந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *