புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் வீரமரணச் செய்தியை அடுத்து புலிகளுக்குள் பிளவு! : த ஜெயபாலன்

LTTE LOGOPirabakaran_Vபுலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்து அவருடைய உயிரிழப்பு உறுதிப்படுத்துவதற்கு முன்னரேயே புலிகள் அமைப்பிற்குள் பெரும் பிளவு உருவாகி உள்ளது. மே 18ல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதை புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் என்று அறியப்பட்ட கே பி மறுத்திருந்தார். ஆனால் நேற்று மே 24ல் அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் கே பி புலிகளின் தலைவர் முக்கிய தளபதிகள் வே பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி உள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த விடயம் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ள கே பி ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து ஆயுதப் போராட்டம் தவிர்ந்த வழிகளில் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே கே பி உடைய அறிக்கையை மறுத்து அவரைத் தேசத் துரோகி எனச் சித்தரித்து புலிகளின் மற்றுமொரு அணி தமிழகத் தலைவர்கள் வைக்கோ நெடுமாறன் ஆகியோருடாக ‘தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை’ எனத் தெரிவித்து அறிக்கைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த புலிகளின் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் தலைமைப்பீடத்தை கைப்பற்றுவதற்கான போட்டியாக அவதானிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் உயர்மட்டம் முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில், இந்த அழிவில் இருந்து மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுத் தளபதி ராம் மற்றுமொரு தளபதி நகுலன் ஆகியோரும் சில நூற்றுக்கணக்கான போராளிகளுமே எஞ்சியுள்ளனர்.

இதற்கிடையே புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பொறுப்பாளர் அறிவழகன் மே 22ல் தமிழ் நெற்றிற்கு அறிக்கை ஒன்றை வழங்கி இருந்தார். அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாகவும் அவர் இறந்தது என்பது திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தேசம்நெற் இற்கு கிடைக்கும் தகவல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்தலக வெளியுறவுத் செயலகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைக்குமிடையே அதிகார இழுபறி ஒன்று ஏற்பட்டு உள்ளதை உறுதிப்படுத்துகின்றன. மே 18ல் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முற்றாக அழிக்கப்படுவதற்கு அண்மையாக புலம்பெயர் நாடுகளில் உள்ள முக்கிய பொறுப்பானவர்கள் மாற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது. குறிப்பாக வே பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சார்ந்தவர்கள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று (மே 24 2009) வே பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்துவதற்கு முன்னதாக வே பிரபாகரன் உயிரிழந்த விடயம் சர்வதேச நாட்டுப் பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களுடாக அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கும் இது தெரியப்படுத்தப்பட்டது. கடந்த 72 மணி நேரத்தில் ஏற்படுத்தப்ட்ட தொடர்புகளில் முதலில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் மறுநாள் இல்லை உயிருடன் இருப்பதாகவும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. வே பிரபாகரனின் உயிரிழப்புத் தொடர்பாக கே பி புலிகளின் சர்வதேச நாடுகளின் பொறுப்பாளர்களிடம் இருந்து கடுமையான கேள்விகளை எதிர்கொண்டு உள்ளதாகத் தெரியவருகிறது. சர்வதேச நாடுகளின் பொறுப்பாளர்களும் தங்களின் உறுப்பினர்களிடம் இருந்து பலத்த கேள்விக்கணைகளை எதிர்நோக்கி இருந்தனர்.

புலிகளின் ஆதரவாளர்கள் தங்களின் நாட்டுப் பொறுப்பாளர்களிடமும் சர்வதேசப் பொறுப்பாளர்கள் கே பி இடமும் எழுப்பியதாக அறியவந்தள்ள கேள்விகளே இவை. ஆனால் இதற்கான பதில் இன்னமும் அவர்களுக்குத் தெரியவில்லை.

தலைவர் கொல்லப்பட்டாரா? இல்லையா?
அவர் எவ்வாறு கொல்லப்பட்டார்?
அத்தனை தளபதிகளும் எவ்வாறு ஒரே இடத்தில் இருந்தனர்?
அத்தனை பேரும் தலையிலும் நெஞ்சிலும் காதிலும் மட்டுமே சுடப்பட்டு உள்ளனர்?
அவர்கள் சரணடைவதற்கு நம்பிக்கையூட்டப்பட்டு உள்ளனரா?
அந்த நம்பிக்கையைக் கொடுத்தது யார்?
அந்த நம்பிக்கை ஏன் காப்பாற்றுப்படவில்லை?
நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்டு இருந்தால் ஏன் அதனை அம்பலப்படுத்தவில்லை?
தலைவர் கொல்லப்பட்டால் அது எதற்காக மறைக்கப்பட்டது?
தலைவர் கொல்லப்பட்டதை மறைத்தவர்கள் இப்போது ஏன் அதனை வெளிப்படுத்தினர்?

இவ்வளவு கேள்விகளுக்கு மத்தியில் கே பி ”எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.” எனத் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே புலிகளுக்குள் ஏற்பட்டுள்ள இப்பிளவு ஊடகங்களுக்குள்ளும் பரவியுள்ளது. விடுதலைப் புலிகளின் காணொளி ஊடகமாக விளங்கிய ஜிரிவி கே பி உடைய அறிக்கையை வெளியிட்டு இன்று (மே25 2009) முதல் துக்க தினம் அனுஸ்டிக்கப்படப் போகிறது. மறுமுனையில் விடுதலைப் புலிகளின் வானொலியாக விளங்கிய ஐபிசி வே பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லி உயிருடன் இருப்பவருக்கு என்ன அஞ்சலி என்று துக்க தினத்தை நிராகரித்து உள்ளனர்.

ஜிரிவி கே பி சார்பான நிலைப்பாட்டையும் ஐபிசி புலனாய்வுப் பிரிவு சார்பான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன. அடுத்த சில நாட்களில் இந்தப் பிளவுகள் ஊடகங்களில் வெளிப்படையாகத் தோண்றுவதைக் காணலாம். மேலும் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களும் ஆதரவாளர்களும் தாங்கள் அணியை தெளிவுபடுத்த வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

புலிகளின் அனைத்துலகச் செயலகம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தி உள்ளது. நேற்று அம்பாறையில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்து ஐபிசி புதினம் ஆகிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து இருந்தது. இவ்விரு ஊடகங்களும் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் கே பி யின் அறிக்கையை வெளியிடவில்லை.

இவ்விடயத்தில் தமிழ்நெற் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் கே பி யின் அறிக்கையை வெளியிடாத போதும் அவர்கள் இவ்விடயத்தில் நடுநிலை வகிக்க முற்பட்டு இருப்பதை அவர்களது ஆசிரியர் குழு அறிக்கை தெரிவிக்கிறது. ”பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா ஆயுதப் போராட்டம் தொடர வேண்டுமா இல்லையா போன்ற கேள்விகளால் தமிழ் தேசிய போக்கு பிளவுபடுவதோ சுரண்டப்படுவதோ ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. – The Tamil national cause cannot afford to be deviated and exploited by others through questions such as whether Pirapaharan is alive or not or whether the armed struggle has to be continued or not.”

இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? யார் எந்த அணியில் செல்வார்கள்? என்பது விரைவில் வெளிவரலாம்.

இப்போது ஏற்பட்டுள்ள பிளவு ஒரு உடன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் தீர்த்துக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அருகி வருகிறது. இப்பிரச்சினையில் புலிகளின் பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களும் சம்பந்தப்பட்டு இருப்பதால் இப்பிளவுகள் இன்னமும் ஆழமாவதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றது. பல்வேறு ஆவணங்களும் தொடர்புகளும் அழிக்கப்பட்டுள்ள நிலையில் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட பல முதலீடுகள் அவரவரின் சொந்த சொத்துக்களாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சில குழு மோதல்களுக்கும் வித்திடும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சர்ச்சையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் தளபதிகளுக்குமான அஞ்சலி நிகழ்வுகள் பந்தாடப்படப் போகின்றது. இப்போது ஏற்பட்டுள்ள முரண்நிலையால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலகளின் முன்னாள் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஆதரவாளர்கள் பெரும் குழப்பம் அடைந்து உள்ளனர்.

இலங்கையில் இன்னமும் ஆயுதங்களை வைத்துக்கொண்டுள்ள நூற்றுக் கணக்காண இளைஞர்களின் நிலையும் ஆபத்தானதாக உள்ளது. கே பி ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு உள்ளதால் அந்த இளைஞர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதற்கான பாதுகாப்பான வழிமுறை ஒன்றை மேற்கொள்ள முயற்சிப்பதாக அறியப்படுகிறது. அதே சமயம் ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாக புலனாய்வுப் பிரிவுப் புலிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மாறுபட்ட அறிக்கைகள் அந்த நூற்றுக் கணக்கான இளைஞர்களை ஆபத்தில் தள்ளியுள்ளது.

Show More
Leave a Reply to Tamil Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • karamy
    karamy

    ஏற்கனவே ஏற்பட்ட பிளவுகள் காரணமாகவே விடுதலை இயக்கம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது. கருணா அம்மானின் இழப்பும் இன்றைய தோல்வி நிலைக்கு பிரதான காரணமெனலாம். எனவே இன்னும் இன்னும் பிளவுபட்டு செயற்பதடுவதனை விட்டு ஓரணியில் நின்று ஒற்றுமையாக எம்மக்களுக்குப் பெற்றுத்தரமுடியுமான உரிமைகளைப் பெற்றுத்தாருங்கள்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /குறிப்பாக வே பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சார்ந்தவர்கள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன./-
    மறுபடியும் புதைக் குழியை நோக்கி…..”வல்வெட்டித் துறையாய் இருந்தால் என்ன, யாழ்ப்பாணமாய் இருந்தால் என்ன!”. வெளிநாட்டில் வசித்த இலங்கைத் தமிழர்கள் தான் இந்தப் பிரச்சனையில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். இவர்கள் பூர்வீக ஊர்களிடையே உள்ள தூரத்தை விட, இலண்டனுக்கும், கனடாவுக்கும் தூரம் அதிகம்- மனதில்தான் இருக்கிறது தூரம்- குண்டுசட்டி. மிகப் பெரிய தோல்வி அடைந்திருக்கிறீர்கள் என்பதை உணர்கிறீர்களா?. இலங்கைத் தமிழர் அனைவரும் திடீரென்று “தாவிரப் பட்சியாக மாறி பூணூல் அணிய துவங்கினல்”, உண்மையான “பிராமணர்கள்” நிலை என்னாவது?. இந்த இணைய தளமும் கே.பி. பக்கம் சாய்வதாக தெரிகிறது- சமாதானம் தேவைதான். தோல்வியை எற்படுத்தியவர்கள், “மிகக் கச்சிதமாக” வெற்றிப் பெற்றிருக்கும் இந்த வேளையில், அதன் அடுத்த கட்டம் என்னவென்பதற்கான விவாதம் தேவை. போதும் இரும்புத் திரைகள், “புலனாய்வுப் புண்ணாக்குகள்”. “பிரத்தியேக வெளிபாடுகள்” இல்லாத, “தகவல் ஒழுங்கமைப்பிற்குள்”, இலங்கைத் தமிழர் பிரச்சனையை, ஒரு இராணுவ கட்டமைப்பிற்குள் நிறுவனப்படுத்தி, அதற்குள், பிரபாகரனையும், அப்பாவி இளைஞர்களையும், பலிக்கடாவாக்கி, நிர்வாணமாக படுக்க வைத்து விட்டார்கள். இதற்கு பொறுப்பானவர்கள் தப்பித்துக் கொள்ள சமாதான நாடகத்தில் “கவர்” எடுக்கிறார்கள்.

    ஒரு “கிளாசிக்கல்”(இலங்கை, இந்தியா) இராணுவ நிறுவனம், மிக சுலபமாக மிகப்பெரிய வெற்றியை, ஒரு இனத்திற்காக போராடுபவர்கள்? என்று கூறிக் கொண்டவர்களுக்கு எதிராக, ஒரு “கிளாசிக்கல் தோல்வியை” ஏற்படுத்துமளவுக்கு, புலி வேஷம்? போட்டவர்களுக்கு எந்தவிதமான “இன்டிஜின்னொஸ்” ஸும் இல்லை, “இம்ப்ரொவைஸ்” தான் இருந்திருக்கிறது. தனி நபர்களின் “பலவீனங்கள்” எதிரிகளால், சரியாக கையாளப் பட்டிருப்பது தோல்விக்கான முக்கிய காரணம். அதற்கு “சிங்கள பெளத்த தேசிய” நிறுவன கட்டமைப்பு போல, இந்திய “எக்ஸ்ட்ரா பார்லிமெண்ட் நிர்வாகம்” போன்ற, அரசியலுக்கு, “தனி மனித” விருப்பு- வெறுப்புகளுக்கு அப்பாற்ப்பட்ட நிறுவன(ஆன்மீக) கட்டமைப்பு தமிழர்களுக்கு வெற்றிடமாக இருப்பதுவும் தோல்விக்கான காரணமாகும். சைவ சிந்தாந்தம் மேற்குலக திரிபுகளில் சிக்கி, எரிகிற தீயில் எண்ணை ஊற்றியதே தவிர, அப்பாவி மக்களின் உயிரை “வியாபாரமாக்கியதே தவிர”, கதறியழும் பிஞ்சிக் குழந்தைகளின் மீது கூட “ஈவிரக்கம் காட்டவில்லை”.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    கள்ளகோழிகள் அடிச்சுத்தின்ற அடையாளமாக சிறகுகள் பரவிக்கிடப்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில் “கோழிவளர்ப்பு” திட்டமும் வேறையா? உரிமைகள் என்ற சொல்லுக்கு ஒரு விவஸ்தையே இல்லையா?

    Reply
  • Tamil
    Tamil

    பணம் பத்தும் செய்யும் ஐந்து பில்லியன் பவுண் சொத்துக்களுக்கான உரிமைக் குரலின் ஆரம்பம் இது இன்னும் நிறையவே எதிர்பாருங்க்ள்

    Reply
  • சுயாட்சி சுப்பிரமணி
    சுயாட்சி சுப்பிரமணி

    சந்திரன் ராஜா!,.தமிழக முதல்வர் நாற்காலியிலேயே உட்கார முடியாத அளவுக்கு, தற்போது ஒட்டு மொத்த “தமிழர்களது நிலையும்”, உட்காரும் இடத்தில் “பைல்ஸ்” ஏற்படுத்தப் பட்டிருக்கிறது!, இந்த சூழ்நிலையில், “ஆஃப்ட்ரால்” வடக்கு மாகாண முதல்வர் என்பது அவ்வளவு பெரிதா?, இலாபகரமானதா?. பொதுவாக சிந்திப்பது என்ற சொல்லையே தமிழர்களது அகராதியிலிருந்து எடுத்துவிட வேண்டியத்தானா?.

    Reply
  • santhanam
    santhanam

    தயவு செய்து மனிதத்தை எனியாவது வாழவிடுங்கள் புலம் பெயர்தமிழர்களால் இதை தடுக்கமுடியாத இந்த அழிவுக்முலகர்த்தாக்கள் அவர்களது பிளவு தவிர்க்முடியாதது. இவைகள் எல்லாம் உண்மைகள் வெளிவரும் வரைதான்.

    Reply
  • thurai
    thurai

    தமிழீழம் என்ற விருட்சத்திற்கு, பிரபாகரன் என்ற பாங்கரவாதியே ஆணிவேராக இருந்துள்ளார். புலத்தில் இருந்து கொண்டே தமிழீழம்பற்ரிப் பேசியவர்களின் செயல்கள், அவ்ர்களின் சுயரூபங்களை விரைவில் வெளிக்கொண்டுவரும்.

    துரை

    Reply
  • rohan
    rohan

    எங்கள் கேபி தமிழீழ்ததையும் கை விட்டு விட்டார். அவர் ஆங்கிலத்தில் விடுத்திருக்கும் அறிக்கையில் தமிழ் ஈழத் தமிழர்களை முழுமையாக மறந்து விட்டார்.

    We share the sorrow and despair of all the Tamils in Sri Lanka, The Diaspora and the Tamil speaking people of the world.

    Reply
  • BC
    BC

    சந்திரன் ராஜா உரிமைகள் என்றாலே இப்போ கோழிவளர்ப்பு திட்டம் தான்.அவ்வளவு சுவை கண்டுவிட்டனர்.

    Reply
  • Raj
    Raj

    போராட்டம் தொட்ர்ந்தாலும் சரி வணங்காமண் அனுப்பினாலும் சரி இறுதியாக புலம்புகுந்த நாட்டில் புலிச்சொத்துக்காகவும் வரவிருக்கும் பதவிகளுக்காகவும் குடும்மிச்சண்டை போட்டாலும் சரி இதற்குள் நாம்(கிழக்கான்) பார்வையாளன் மட்டுமே. இது பிரதேசவாதமல்ல பிரதேசப்பாசம் .இக்கருத்திலுள்ள உண்மையை மட்டுமே பிரித்துப்பார்க்கவும். 30 வருடங்களில் {க.பி-கருணாவுக்குப்பின்}5 வருடத்தைக்கழித்தால் 25வருடமும் பயத்திலோ அல்லது தேசியப்பிரச்சினை என்ற மாயையிலோ விரும்பியோ விரும்பாமலோ முடிந்த பங்களிப்பினைச் செய்தும் கண்டபலன் எதுவுமில்லை. மனிதவளம் கல்விவளம் பொருள்வளம் என்று பாரபட்சமின்றியே எல்லாம் இழந்துள்ளோம். இதுவரை கிழக்கிலிருந்து எவனும் நாலெழுத்தது பெயர் வைத்து தலைமைத்துவத்திற்காக இயக்கம் தொடங்கிய வரலாறு இல்லையென்றெ எண்ணுகின்றேன்.

    கல்வியறிவில் உச்சம் என்று மார்தட்ட முடியாவிட்டாலும் மனிதநேயம் விட்டுக்கொடுப்பு ஒத்துவாழுதல் போன்றவற்றில் மறுக்கமுடியாத வரலாற்றுத்தடங்களை பதித்து நிருபித்து வந்துள்ளார்கள். என்னசொல்ல விழைகின்றேன் என புத்தியுள்ள தேசம் வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்வார்களென்பதுடன் ஆமோதிப்பார்கள் என்றும் நம்புகின்றேன். நமது குறைகளை நம்மோடுதான் பகிரவேண்டும். கிழக்கின் உதயமோ அல்லது மறைவோ அதனை அந்த மக்களே பார்த்துக்கொள்ளட்டும். அழிவற்காக யாரும் பிறக்கவில்லை மாறாக வாழ்வதற்கே! பட்டது போதும். கருணாவைத் திட்டவும் எவருக்கும் இனித்தேவையும் இருக்காது. நடப்பவை நல்லதாகத்தான் படுகின்றது. மாற்றம் நிகழும் காலகட்டத்திற்கான ஓர் பாத்திரத்தினை உருவாக்கியதன்படி கருணாவின் சுயநலனாக இருந்தாலும் கூட பல உயிர்கள் வன்னியில் காவுகொள்ள இருந்தமை தடுக்கப்பட்டுள்ளதை எண்ணி பல பெற்றோர்கள் ஆறுதலை என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். இனி எமது போராட்டம் எதுவெனில் எமது அரசியலில் அத்துமீறல்களை அவதானித்து தடுப்பது மட்டுமே!

    Reply
  • வன்னி மாறன்
    வன்னி மாறன்

    நான் ஓர் ஆடு மேய்த்தவனின் கதைக்கு வருகின்றேன்.
    தனது ஆடுகளை மேயவிடுவதற்காய் காட்டுக்கு அழைத்துச் சென்ற வேலனின் மனத்திற்குள் ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியதாம். அதாவது பக்கத்து வயலிலே களைபிடுங்கிக் கொண்டிருக்கும் கூலித்தொழிலாழர்கள் அத்தனை பேரையும் முட்டாளுகள் ஆக்குவதென்று. அவர்களை எப்படியாவது ஏமாற்றி தன்பக்கம் ஓடிவரசெய்யவேண்டும் என்பதுதான் அவனது திட்டம். ஒருநாள் தனது ஆட்டு மந்தைகளை மேயவிட்டுக் கொண்டிருந்த வேலன் ஐயோ! புலி வருகுது புலிவருகுது என்று கத்தினானாம். அவனது கூக்குரலைக்கேட்ட கூலித்தொழிலாழர்கள் தங்களிடம் இருந்த அருவாள் கத்தி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு குரல் வந்த திசை நோக்கி ஓடினார்களாம். ஓடிச் சென்று எங்கேயப்பா புலி புலியைக் கண்டாயா என்று கேட்டார்களாம். அதற்கு வேலன் சொன்னானாம் ஐயோ இப்பத்தான் அந்தப்புலி ஒரு வெள்ளை ஆட்டுக்குட்டியை தூக்கிக் கொண்டு அந்தப் புதர்பக்கமாய் சென்று மறைந்து விட்டது என்று. அப்போ புதர்பக்கமாய் அந்த வயல் தொழிலாழிகள் ஓட முயற்சி செய்யவே. அந்தப்பக்கம் போகாதீர்கள் உரிய நேரத்தில் என்னை வந்து காப்பாத்தினீர்களே அதுவே போதும் என்று நன்றி சொல்லி அவர்களை திருப்பி அனுப்பி வைத்து விட்டு, -போங்கடா வெண்ணைகளா- என்று என்று சொல்லி எக்காளமிட்டுச் சிரித்தானாம்.

    பின்னர் அவ்வாறே அதன் மறுநாளும் அதேபோன்று ஐயோ! புலி வருகுது ஐயோ! புலி வருகுது என்று மறுபடியும் கத்தினானாம். முதல்நாள் சம்பவம் போன்றே மறுநாளும் அந்த விவசாயிகள் தங்கள் வாளுகள் கொட்டானுகளுடன் வேலன் நின்ற திசையை நோக்கி ஓடிச் சென்று எங்கேயப்பா புலி என்று மறுபடியும் கேட்டார்களாம். அதற்கு அவன் ஐயோ என்டை சிவப்பு ஆட்டுக்குட்டியை தூக்கிக் கொண்டு மறுபடியும் அதே புதருக்குள் சென்று மறைந்து விட்டது என்று கையை காட்டினானாம். இப்பொழுது அந்தக் கூலித்தொழிலாளர்களுக்கு வேலன் மேல் சந்தேகம்வந்துவிட்டது. எனினும் எதுவுமே பேசாமல் திரும்பிச் சென்று விட்டார்களாம்.

    இப்பொழுது மூன்றாவது நாள் இன்றும் வேலனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கூலித்தொழிலாளர்கள் ஓடிவரும் காட்சியை ரசிப்பதில் அவனுக்கும் அலாதியானதோர் பிரியம். எனவே தனது கைவந்த கலையை காட்டுவதற்கு மறுபடியும் ஐயோ! புலி ஐயோ புலி என்று கத்தினானாம். ஆனால் இந்தத் தடவை அவனது சத்தத்தை யாருமே காது கொடுத்தே கேட்கவில்லையாம். இந்தச் சந்தர்ப்பம் பார்த்து புலியும் உண்மையாகவே வந்து விட்டதாம். வந்த புலி ஆடுகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வேலனையே அடித்து இழுத்துக் கொண்டு புதர்ப்பக்கமாய் சென்று விட்டதாம். பாவம் புலியும் வரவில்லை வேலனும் சாகவில்லை. இவன் சும்மா காட்டுக் கத்து கத்துறான். என அந்தக் கூலித்தொழிலாளிகள் நினைத்தது போன்றே இன்று பிரபாகரனுக்கும் நடந்துவிட்டது.

    -வன்னி மாறன்-

    Reply
  • மாயா
    மாயா

    கருணாவால் இனனும் சிறுபான்மையினம் மீதமாகயிருக்கிறது. இல்லாவிட்டால் மகிந்த சொல்வது போல இனி சிறுபான்மையினம் என்று ஒரு இனம் இல்லாமலே போயிருக்கும்.

    Reply
  • வெள்ளைவாகனன்
    வெள்ளைவாகனன்

    புலன்பெயர்ந்து வாழும் புலிகஆதரவாளர்களின் கவனஈர்ப்பு போராட்டங்களும், சாலைமறிப்பு போராட்டங்களும் புலிகளின் தலைவரை காப்பாற்ற தவறியிருந்தனத, பிரித்தானிய உட்பட சில மேற்கத்திய நாடுகளின் ஊடாக யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்தி தலைவரை காப்பாற்றுவதற்கு புலிகளின் சர்வதேச தொடர்பாளர் பத்மநாதன் உட்பட பல முக்கியஸ்தர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இலங்கைஅரசு இணங்கவில்லை. பிரபாகரனின் உயிருக்கு ஏதாவது நிகழ்ந்தால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும்போன்ற புலி ஆதரவு தமிழ கட்சிகளின் மிரட்டல்களுக்கு இந்திய மத்தியஅரசு மசியவில்லை.

    இவ்வகையான ஒரு இக்கட்டான நிலையில் தமிழ்தேசியகூத்தமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சந்திரகாந்தன் பசில் ராஜபக்சேயுடன் இரகசிய பேரம் பேசலில் ஈடுபட ஆரம்பித்து இருந்தனர். அரசு முன்வைத்த நிபந்தனைகளை புலிகள் நிறைவேற்றும் பட்சத்தில் பிரபாகரனை அவருடன் சேர்த்து 10 பேர்களை அரசபடையினர் தப்பி செல்ல அனுமதிப்பது என்ற உடன்படிக்கைக்கு தமிழ் தேசிய் கூத்தமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் பசில் ராஜபக்சேயுடன் உடன்பட்டு இருந்தனர்.

    புலி தலைவர்களை வெளிநாட்டிற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை பத்மநாதன், புலி ஆதரவு தமிழக தலைவர் ஒருவர், ஐயிரோப்பிய சமாதான தூதுவர் ஆகியோர் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அரசின் நிபந்தனைக்கு இணங்க புலிகள் ஒரு வாரத்திற்கு முன்னரே ஆயுத கிடங்கினை வெடிக்க வைத்து இருந்தனர். அடுத்த நிபந்தனையாக 16 ஆம் திகதி அவர்களுடன் வைத்திருந்த 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை செல்வதற்கு அனுமதித்து இருந்தனர். இதனை தொடர்ந்து 100மீற்றர் நீளமும் 200மீற்றர் அகலமும் உள்ள பிரதேசத்திற்குள் புலி தலைவர்கள் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டனர். புலி தலைவர்களை தப்பி செல்வதற்கு அனுமதிப்பது என்ற இரகசிய உடன்படிக்கைக்கு மாறாக அரச படையினர் அவர்களை சுற்றி வளைத்து இருந்தனர். பசில் ராஜபக்சே உறுதியளித்தமைக்கு மாறாக அரசபடையினர் புலி தலைவர்களை சுற்றி வளைத்ததும், பிரபாகரன் தனது செய்மதி தொலைபேசியில் பத்மநாதன் ஊடாக ஐரோப்பிய சமாதான தூதுவருடன் தொடர்பு கொண்டு நிலமையினை அறிவித்து இருந்தார். நிலைமை மோசமாகி போனதை சமாதான தூதுவர் உணர்ந்து கொண்டார், ஆனால் அவரினால் ஏதும் செய்ய முடியாத நிலையில் இருந்தார்.

    மாற்றுவழியின்றி அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனும் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனும் முன்வரிசையில் வெள்ளைகொடியுடன் செல்ல பிரபாகரன், பொட்டம்மான், சூசை உட்பட ஏனையோர் அவர்களை பின்தொடர்ந்து சென்று 17ஆம் திகதி அதிகாலை அரசபடையினரிடம் சரண் அடைந்தனர். ஜனாதிபதி 17ஆம் திகதி இலங்கை வந்த பின்னர் பசில் ராஜபக்சே கோத்தபாய ராஜபக்சே சரத் பொன்சேகா ஆகியோருடன் ஆலோசித்து விட்டு பிரபாகரன் உட்பட அனைத்து உயர்மட்ட தலைவர்களையும் கொல்வது என முடிவு எடுத்தனர்.

    சரணடைந்த புலி தலைவர்கள் விசாரனைக்கு உடபடுத்தப்பட்ட பின்னர் மிக குறுகிய தூரத்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்டனர். புலனாய்வு துறை பொறுப்பாளர் பொட்டம்மானிடம் கடந்த 26 வருட கால செய்திகளை சேகரிப்பதற்கு அரசபுலனாய்வுதுறையினருக்கு குறைந்தது 6 மாதம் ஆவது வேண்டும். பசில் ராஜபக்சே தமிழ் தேசிய கூத்தமைப்பினர் மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சந்திரகாந்தன் ஊடாக புலி தலமையினை சாதூர்யமாக சரணடைய செய்து விட்டு நயவஞ்சகமாக சரிக்கப்பட்டது. –வெள்ளைக்கொடி வெள்ளைவாகனன்

    Reply
  • அம்மணி
    அம்மணி

    //பல உயிர்கள் வன்னியில் காவுகொள்ள இருந்தமை தடுக்கப்பட்டுள்ளதை எண்ணி பல பெற்றோர்கள் ஆறுதலை என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்//
    தடுக்கப்பட்டுள்ளது? ஓகோ…

    Reply