ஐ.பி.எல்:டெக்கான் சார்ஜர்ஸ் அணி சாம்பியன்

ipl-2009-01.jpg
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை (24.05.2009) இரவு நடைபெற்ற, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் (இந்தியன் பிரிமியர் லீக்) இருபது ஓவர்கள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில்  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி  சாம்பியன் பட்டத்தை வென்றது.

கடந்த மாதம் 18 ந் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கிய 2 வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம்  நேற்று நடந்தது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் கடந்த முறை 7 வது இடம் பெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கடைசி (8 வது) இடம் பெற்ற ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் நேற்றைய இறுதிப் போட்டியில் மோதியது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி பேட் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. கிப்ஸ் 48 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன்னுடனும், ஹாரிஸ் 5 பந்துகளில் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

பின்னர் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய, அனில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கியது.

வழக்கமாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *