மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை விடுதலை செய்யவும். : வீ. ஆனந்தசங்கரி – தலைவர் த.வி.கூ

Anandasangaree V _ TULF Leaderமேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,                        
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

அன்புடையீர்,

மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை விடுதலை செய்யவும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பிரதேச சுகாதார சேவைகளின் பணிப்பாளர்களாக கடமையாற்றிய வைத்திய கலாநிதிகள் ரி. சத்தியமூர்த்தி, ரி. வரதராஜன், முல்லைத்தீவு வைத்திய அத்தியட்சகர் கலாநிதி வி. சண்முகராஜா ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சம்பந்தமாக தலையிட அனுமதிக்கவும். வன்னிப் பகுதி வைத்தியர்கள் தப்பி வர இம் மூவர் மட்டும் அங்கே தங்கியிருந்து இராணுவம் முன்னேற முன்னேற வைத்தியசாலையையும் நகர்த்திக் கொண்டு இரவு பகலாக நோயாளிகளுக்கும், காயமடைந்தோருக்கும் வைத்திய சேவையினை மேற்கொண்டிருந்தனர். தனி ஒருவரால் சமாளிக்க முடியாத பெரும் எண்ணிக்கையினரை இவர்கள் மூவரும் கவனி;த்து வந்தனர். பல நாட்கள் தேநீர் மட்டும் அருந்தி உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சிசு ஒன்றிற்கு வைத்தியம் செய்த ஒரு வைத்தியர், தனக்கு போதித்த ஒரு சிங்கள பேராசிரியரிடம் ஆலோசனை பெற்று அக் குழந்தையை காப்பாற்றியுள்ளார். இரவு பகலாக மோசமான காலநிலையையும், தம்மைச் சுற்றி பாய்ந்து கொண்டிருந்த துப்பாக்கிக் குண்டுகளையும் பொருட்படுத்தாது பணி புரிந்தார்கள்.

தொடர்ந்து செல் தாக்குதல் காரணமாக அரச நிர்வாகம் முடங்கிய நிலையி;ல் உணவுக் கப்பலுக்கு துணைபோவதையும் காயமுற்றோரை மீட்டுச் செல்வதையும் இதே காரணத்துக்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மறுத்திருந்த வேளை, வேறு வழியின்றி இவர்களும்  தமது சேவையிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். இவர்களின் சேவையாலேயே இடம் பெயர்ந்தோரில் பெரும் பகுதியினர் உயிர் வாழ்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்கிய போதும் இனி மக்களுக்கு சேவை செய்யும் நிலை இல்லை என்பதை உணர்ந்த பின்பே தமது சேவையை நிறுத்திக் கொண்டனர். அவ்வேளை அவர்களுக்கு தோன்றிய ஒரேயொரு வழி, ஏனைய இடம்பெயர்ந்தவர்கள் போல தாமும் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறி நலன்புரி முகாம்களுக்கு வந்து சேர்வதே. அவர்கள் குற்றவாளிகளாக தப்பியோடவில்லை. ஆனால் பாதுகாப்புக்கருதி முகாமுக்கு வந்தவேளை முகாமில் வைத்து இருவரும், காயங்களுடன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்றாவது வைத்தியரும் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் விடயத்தில் பின்வரும் உண்மைகள் கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டியவையாகும்.

1. இவர்கள் அரச ஊழியர்களாக வன்னிப் பகுதியில் நீண்டகாலம் சேவை செய்தவர்கள்.

2. அரச ஊழியரோ தனியார்துறை ஊழியரோ விடுதலைப் புலிகளின் கட்டளையை மீறிச் செயற்பட முடியாத நிலையில் அவர்களின் கட்டளைக்கமையவே, ஊடகங்களுக்கு அறிக்கை விடும் விடயங்கள் உட்பட, சகல விடயங்களிலும் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.

3. இவ் வைத்தியர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமைய செயற்பட்டமைக்கு தண்டிக்கப்பட்டால் அப் பகுதியிலே சேவை செய்த அரச ஊழியர் ஒருவர் தன்னும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

4. கடமை உணர்வுடன் அவர்கள் கடைசி நிமிடம் வரை கடமையாற்றியதால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

5. விசேடமாக மிக இக்கட்டான வேளையில் காயமுற்றோருக்கு பணியாற்றி அரசினுடைய பெயரையும் காப்பாற்றியமையால் அவர்கள் பராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட வேண்டியவர்களாவர். சுகாதாரத் திணைக்களம் இவர்களுடைய சேவையை பாராட்ட கடமைப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்களே! இவர்கள் மீது எதுவித குற்றமும் இல்லையென  இவர்களை விடுவிப்பீர்கள் என நம்புகிறேன். இன்றுவரை நான் அறிந்த வரையில் வன்னிப் பகுதியில் சேவை செய்த ஒரு ஊழியர் தன்னும் அரச கட்டுப்பாட்டுப்பாட்டு கோவையை மீறி செயற்பட்டமைக்கு தண்டிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.

எத்தகைய தண்டனை கொடுக்கப்பட்டாலும் அது சரித்திரத்தில் பெரும் தவறாகவே கணிக்கப்படும்.

நன்றி,

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

Show More
Leave a Reply to Vannikumaran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • chandran.raja
    chandran.raja

    நியாமான கோரிக்கை. தமிழ்மக்கள் இனிமேல் காலங்களில்லாவது யார்கோருவதாக இருந்தாலும் துணிகரமாக குரல் கொடுக்க முன்வரவேண்டும்.
    நியாமானது ஒவ்வொன்றும் ஒவ்வொரு அரசியல் போராட்டமே!.
    புலிக்கட்டுப் பகுதியில்லிருந்தார்கள் புலிசொன்னதை சொன்னார்கள் என்பதெல்லாம் பழி தீர்க்கும் நடவடிக்கைகளே. இவற்றிக்கு குரல்கொடுக்க முடியாதவர்கள் வரும் காலத்திற்கும் குரல்எழுப்ப முடியாதவர்களே.

    Reply
  • rohan
    rohan

    சங்கரி அவர்களின் கருத்துக்காக எனது brownie points அவருக்கு. குடை கொடி ஆலவட்டம் என்றில்லாது தனது கருத்தை உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.

    Reply
  • palli
    palli

    சந்திர ராஜாவின் கருதில் பல்லி உடன்படுகிறேன்; உன்மையில் சரியோ தவறோ இப்போது அங்கு நடக்கும் அவலத்தை புலியின் கடந்த காலத்தை சொல்லி வெறுப்போமாயின் மிக கொடிய தமிழ் துரோகிகள் நாமேதான்; புலியை ஆயுதத்தால் மட்டுமல்ல மக்களது கடமகளை கவனிப்பதில் மக்கள் இனி எமக்கு புலி வேண்டாம் என எண்ணுகிறார்களோ அப்போதுதான் புலியோ அல்லது பூனையோ மீண்டும் எம் மக்கள் மீது நாட்டாண்மை செய்யாது; இதுக்கு ஒரு உதாரனம் சதாம் உஸையின் கோட்டிலே நீதிபதிக்கு முன்னால் சொல்லுவார்; ஈராக் மக்களை மட்டுமல்ல அமெரிக்க ராணுவத்தை கூட தன்னால் மட்டுமே காப்பாற்ற முடியும் என; அப்போது அது பலருக்கும் அவரது பேச்சு கோமாளிதனமாக இருந்தது; ஆனால் அதன் அர்த்தம் இன்று வரை ஈராக்கில் பார்க்கிறோம்;

    Reply
  • BC
    BC

    //குடை கொடி ஆலவட்டம் என்றில்லாது தனது கருத்தை உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.//
    உங்கள் அரசாட்சியில் கருத்து சொல்போருக்கு எப்போதாவது அனுமதி இருந்ததா?

    Reply
  • BC
    BC

    எப்படியாவது கருத்து சொல்வதை பாராட்டிய கொடுமையான அந்த கூட்டத்தில் இருந்து வந்த உங்களை பாராட்டுகிறேன்.

    Reply
  • tax
    tax

    2. அரச ஊழியரோ தனியார்துறை ஊழியரோ விடுதலைப் புலிகளின் கட்டளையை மீறிச் செயற்பட முடியாத நிலையில் அவர்களின் கட்டளைக்கமையவே, ஊடகங்களுக்கு அறிக்கை விடும் விடயங்கள் உட்பட, சகல விடயங்களிலும் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.//

    புலி ஊடகங்களில் வரும் எண்ணிக்கையினைக் காட்டிலும் இந்த மருத்துவர்களால் பி.பி.சியிடம் கூறிய மருத்துவமனைக்கு வந்த படுகொலை செய்யப்பட்ட மக்களின் உடல்களின் எண்ணிக்கையும் கப்பல் கப்பலாக 25தடவைக்கு மேற்பட்ட தடவை திருமலைக்கும் புல்மோட்டைக்கும் கொண்டுவந்த காயக்காரரின் எண்ணிக்கையும் புலியின் நிர்ப்பந்தத்தாலோ இந்த மருத்துவர்கள் சொன்னவர்கள் அல்லது காயப்பட்டுவந்த அனைவரையும் இந்த மருத்துவர்களா காயப்படுத்தி அனுப்பினர் சங்கரியே சொல்லும் பார்ப்பம். சங்கரியே அண்மைக்காலமாக நீர் அனுப்பிய மகிந்தவுக்கான எந்த கடித்தத்துக்கு உங்களின் மாண்பு மிகு சனாதிபதி பதில் தந்தார் அல்லது உங்களின் வேண்டுகையை நிறைவேற்றீனார் சொல்லும் பார்ப்பம். தேவா சு.கட்சியில் சேரச்சொல்லிவிட்டார் இனி இவ்வளவுநாளும் புலி ஏகபோக தலையை விமர்சித்தீர்…மகிந்த இப்போது செய்வது …..

    Reply
  • rohan
    rohan

    tax //சங்கரி அண்மைக்காலமாக நீர் அனுப்பிய மகிந்தவுக்கான எந்த கடித்தத்துக்கு உங்களின் மாண்பு மிகு சனாதிபதி பதில் தந்தார் அல்லது உங்களின் வேண்டுகையை நிறைவேற்றீனார் சொல்லும் பார்ப்பம். //

    சரியான கேள்வி.
    சங்கரி சுடச் சுட ஒரு கடிதம் எழுதிய இரண்டொரு நாட்களில் மகிந்த கூட்டிய தமிழ் கட்சிகளின் கூட்டம் நடந்தது. சங்கரி ஐயா தான் முன்னால் மகிந்தவுக்கு அண்மையில் அமர்ந்திருந்தார். தனது கடிதம் கிடைத்ததா என்று கூட ஒரு கேள்வி கேட்டிருக்க மாட்டார் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இருக்கவில்லை.

    Reply
  • Vannikumaran
    Vannikumaran

    ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுததாம்
    சங்கரியின் இந்த அறிக்கையும் அது மாதிரித்தான் உண்மையான புலம்பல் இல்லை.
    யாரும் இதை நம்பி கனவுகண்டு ஏமாந்து விடாதீர்கள்.
    பல்லி நீங்களுமா ஏமாந்து விட்டீர்?

    வன்னிக்குமரன்

    Reply