மலேசிய இளவரசரை மணம் புரிந்த இந்தோனேஷிய மாடல் அழகி, தம்மை இளவரசர் பாலியல் சித்ரவதை செய்ததாக புகார் கூறியுள்ளார். இந்தோனேஷியாவில் பிரபல மாடல் அழகியாக இருந்தவர் மனோகரா ஓடிலியா. அமெரிக்க-இந்தோனேஷிய அழகியான இவரை, மலேசியாவின் கேலன்டான் மாநிலத்தின் இளவரசர் முகமத் பக்ரி, அவரது அழகில் மயங்கி திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தம்மை திருமணம் செய்ததிலிருந்து தம்மை ஒரு பாலியல் அடிமையாக நடத்தி, சித்ரவதை செய்ததாக தமது கண்வரும், மலேசிய இளவரசருமான பக்ரி மீது ஓடிலியா பரபரப்பான குற்றச்சாற்றை கூறியுள்ளார். திருமணம் ஆன நாளிலிருந்து தம்மை அரண்மனையில் உள்ள படுக்கை அறையில் ஒரு கைதியை போன்று அடைத்து வைத்து, இளவரசர் தம்மை தினம் தோறும் பாலியல் சித்ரவதை செய்து வந்ததாக ஓடிலியா புகார் கூறியுள்ளார்.
தினமும் தம்மை அவதூறாக பேசி, கட்டாய பாலுறவுக்கு உட்படுத்தியதோடு, உடலில் பல இடங்களில் பிளேடை வைத்து கீறி சித்ரவதை செய்து வந்ததாகவும், அத்துடன் தினமும் போதை மருந்து ஊசியையும் போட்டு தம்மை ஒரு பாலியல் அடிமை போன்று நடத்தி வந்ததாகவும் இந்தோனேஷியா தப்பி வந்த ஓடிலியா,ஜகர்த்தாவில் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
தமது கணவரும், அவரது குடும்பத்தினரும் சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்தபோது தம்மையும் அழைத்து வந்ததாகவும், அப்போது ரகசியமாக சிங்கப்பூர் காவல் துறையினரை தொடர்பு கொண்டு அவர்களது உதவியுடன் தாம் ஜகர்த்தா தப்பி வந்ததாகவும் ஓடிலியா மேலும் கூறினார்.
தாம் இது தொடர்பாக இந்தோனேஷியா தூதரகத்தில் புகார் அளித்தும், அவர்கள் அதில் அலட்சியமாக இருந்ததாகவும் ஓடிலியா குற்றம்சாற்றினார். தமது கணவரிடமிருந்து விவகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக சிங்கப்பூர் காவல் துறையிடம் புகார் அளிக்கப்போவதாகவும் ஓடிலியா மேலும் தெரிவித்தார்.