‘ருவன்டி-20’ கிரிக்கட் தொடரில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி – தொடரிலிருந்து அவுஸ்திரேலியா வெளியேற்றம்

muralitharan-sri-lankas.jpgஇங்கி லாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது உலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கட் சுற்றுத் தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது. இத்தொடரில் நேற்று தனது முதலாவது போட்டியில் பலம்வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரின் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அதேவேளை, தனது முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்தியதீவுகளிடம் தோல்வியடைந்த அவுஸ்திரேலிய அணி நேற்று இலங்கையிடமும் தோல்வியடைந்தததால் தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் அஜந்த மெண்டிஸ் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

160 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றியீட்டியது. இலங்கை அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் 53 ஓட்டங்களையும் அணித் தலைவர் குமார் சங்கக்கார ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும் பெற்றனர். இதுதவிர ஜெஹான் முபாரக் 11 பந்துகளுக்கு முகம்கொடுத்து 2 சிகஸர்கள் மற்றும் ஒரு 4 ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணியின் புதிய கப்டனாக நியமிக்கப்பட்ட குமார் சங்கக்கார தலைமையில் இலங்கை அணி பங்கேற்ற நேற்றைய முதலாவது போட்டியின் ஆட்ட நாயகனாக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும். 

Show More
Leave a Reply to ruban Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • ruban
    ruban

    வெற்றியீட்டிய இலங்கை அணிக்கும் அதன் தலைவர் சங்ககராவிற்கும் தமிழீழமக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஒரு துடுப்பாட்ட இரசிகனாக; இலங்கை துடுப்பாட்டஅணிக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    Reply