இந்திய அகதி முகாம்களிலுள்ள இலங்கையர்களை மீள் அழைக்க பா.ம. தெரிவுக்குழு பரிந்துரை

parliament-of-sri-lanka.jpgஇந்திய அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்களைத் திருப்பி அழைத்து, அவர்களை மூன்று மாத காலத்திற்குள் மீளக் குடியமர்த்த வேண்டுமென- அந்த விடயம் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக் குழு பரிந்துரைத்துள்ளது. திருப்பி அழைக்கப்படுவோரை விரைவாக அவர்களின் சொந்த வாழ் விடங்களில் மீளக்குடியமர்த்தும் வரையில் தற்காலிகமாகத் தங்கவைக்கவென இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்படவேண்டு மென்றும் இந்தக் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அகதி முகாம்களில் உள்ள அகதிகளைத் திருப்பி அழைப்பதற்கும், அவர்களுள் பிரஜாவுரிமை அற்றவர்களுக்கு அதனை வழங்குவதற்குமாக ஆராய்வதற்காக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு அதன் இடைக்கால அறிக்கையை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. குழுவின் தலைவர் சந்திரசேகர் எம்.பி. அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

2008 ஜனவரி மாதம் 8 ஆந் திகதி பாராளுமன்றத்தில் இரண்டு சட்டமூலங்களை நிறைவேற்றியதன் மூலம், அகதி மக்களை மீள அழைத்துக்கொள்வதிலுள்ள சட்டச் சிக்கல் நீங்கியுள்ளதாகவும், முகாம்களிலுள்ள 95 ஆயிரம் பேரில் பிரஜாவுரிமையற்றிருக்கும் 28,500 பேருக்குப் பிரஜாவுரிமை வழங்குவதற்கும் வழியேற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதுபற்றி பாராளுமன்ற கட்டடத்தில் செய்தியாளர் மாநாடு நடத்தி விளக்கம் அளிக்கப்பட்டது. இதன்படி, திரும்பி வருவோருக்குச் சொந்தமாக நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொடுப்பது, தற்காலிகமாகத் தங்குவதற்கு இடைத்தங்கல் முகாம்களை அமைத்தல், கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்குத் தொழில்வாய்ப்பு, தொழில் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுத்தல், வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தல் போன்ற செயற்பாடுகள் தொடர்பாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலிருந்து வருவோருக்குச் சிக்கல் ஏற்படாதவாறு, குடிவரவு, குடியகல்வு சட்டங்களைத் தளர்த்தல், இந்தியாவில் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு உரிய தொழில் வாய்ப்புகளை அளித்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுக்க இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இலங்கையில் பல்வேறு அரச துறைகளையும் சார்ந்த 20 அதிகாரிகளும், இந்தியாவின் 30 அதிகாரிகளும் இணை ந்து அகதிகளின் முகாம்களுக்குச் சென்று நேரடியாகத் தகவல்களைத் திரட்டவேண்டு மென்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் 25 மாவட்டங்களில், 117 அகதி முகாம்களில் 95, 219 இலங்கையர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் 28, 500 பேர் நாடற்றவர்களாக உள்ளனர். மேலும் ஓர் இலட்சம் இலங்கையர்கள் உறவினர்களின் இல்லங்களில் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்குவதற்காக பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், குழுவின் ஏனைய உறுப்பினர்களான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, பாராளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் ஜயலத் ஜயவர்தன, பிமல் ரட்னாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • anpu
    anpu

    இந்திய அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்களைத் திருப்பி அழைத்து அவர்களையும் மூன்று மாத காலத்திற்குள் மீளக் குடியமர்த்த…..என்று அவர்களுக்கும் காலக்கெடுவும் முகாம்வாழ்வும்தான் பிளான் போலிருக்கிறது..

    Reply