துரோகிகள் …….??? : ரி கொன்ஸ்ரன்ரைன்

Pro_LTTE_Protest_in_Bernதுரோகிகள் என்றதும் நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று ஒரு கணம் எண்ணியிருப்பீர்கள். இன்றைய புலிகளின் தலைவர் பத்மநாபனா…….? அல்லது நடேசனா?? புலித்தேவனா??? இளந்திரையனா???? அல்லது மறைந்த தலைவர் பிரபாகரனைத் தான் குறிப்பிடுகிறேனா?????

அரசியலில் மாற்றுக் கருத்தாளர்களை, அரசியல் எதிரிகளை, விமர்சகர்களை அனைவரையும் வரிசையாக துரோகிகள், எட்டப்பர்கள் என்று கூறி சுட்டுக் கொன்றதை விடுதலையின் பேரில் மௌனமாக ஏற்றுக் கொண்டவர்களும் அரசியல் வியாக்கியானங்கள் கொடுத்து நியாயம் கற்பித்தவர்களும் வாயடைத்துப் போய் மௌனிகளாக நிற்கின்றனர். இன்று மக்களைக் காப்பாற்றுகிறோம் விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் எனக்கூறி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிப்பதைக் கண்டித்து இலட்சக்கணக்கில் படை எடுத்துள்ளனர்.

அன்று புலிகள் எந்த வாதத்தை மூலகாரணமாக வைத்து தமது அரசியல் விமர்சகர்களையும் சக போராளிகளையும் அழித்தனரோ, அதே வாதம் ஸ்ரீலங்கா அரசினால் முன்வைக்கப்பட்டு கொடூர இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த காலம் சென்ற நடேசனும் புலித்தேவனும் சரணடைய எடுத்த முனைப்புகளை Times (UK) பத்திரிகையாளரான Marie Covin தனது குறிப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார். நடேசனும் புலித்தேவனும் சரணடைய விடுத்த விடயம் ஜனாதிபதி ராஜபக்ச உட்பட, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டாக்டர் பலிதகோகன்ன, ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் அனைவரிடமும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதை திகதி கால குறிப்புடன் வெளிப்படுத்துகிறார் மேரி. இவ்வாறான ஒரு தெளிவான சரணடையும் விடயம் தெரிவிக்கப்பட்டும் ஸ்ரீலங்கா அரசு நடந்து கொண்ட விதம் சர்வதேச போர் விதிகளுக்கு புறம்பானது என தற்போது பலதரப்பட்டவர்களால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.       

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களும் ஆதாரங்களும் எந்தளவு சர்வதேச நீதிமன்றம் வரை சென்றடையும் என்பது பெரிய கேள்விக்குறி. விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கைகள், அதிலும் குறிப்பாக முன்னாள் இந்தியப் பிரதமரின் கொலையை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்பட்ட சர்வதேச தடை, இவற்றுடன் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு எடுத்த நடவடிக்கை சர்வதேச நீதிமன்றத்தை எட்டும் சாத்தியம் மிகமிக குறைவு என்றே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக ஸ்ரீலங்கா அரசின் இந்த மூர்க்கத்தனமான இராணுவ முன்னெடுப்பின் பின்னணியில் சீனா, இந்தியா போன்ற பலம் மிக்க நாடுகள் வெளிப்படையாக உடந்தையாக இருந்திருக்கும் நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் சர்வதேச நீதிமன்றம் வரை போக சாத்தியம் இல்லையென்றே கூறவேண்டும்.

சர்வதேச சட்ட முனைப்புக்களை விடுத்து சாதாரண முறையில் ஸ்ரீலங்கா அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் வித்தியாசமான வாதத்தை தனிப்பட்ட முறையில் முன்வைக்கிறார்கள். பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தின் போதும் ஜனாதிபதி ராஜபக்சவின் ஆட்சி ஆரம்பத்தின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கிழக்கு மாகாணத்தில் சரணடைந்த நிராயுதபாணிகளான சிங்கள பொலிசாரை விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்ற சம்பவங்களை அவர்கள் கூறுகின்றனர்.

இன்று இல்லாத ஒருவர் உயிருடன் இருப்பதாக கூறி அரசியல் நடாத்த பலர் தயாராகின்றனர். நடைமுறை இப்படி இருக்கும் போது பிரபாகரனின் குடும்பத்தில் ஒருவரையோ அல்லது விடுதலைப் புலிகளின் உயர் தலைவர் ஒருவரையோ உயிருடன் பிடித்திருந்தால் அது தேவையில்லாத அரசியல் தலையிடியை தமக்குத் தந்து சிங்கள இராணுவ வீரர்கள் இதுவரை செய்த தியாகங்களை வீணடித்திருக்கும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தமாக பார்க்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிப்பும், அதனை ஒட்டிய அரசியல் அழுத்தங்களும் காலப்போக்கில் மங்கிப் போகும். அதற்குரிய சகல நடவடிக்கைகளையும் அரசு அதிகூடிய வேகத்தில் செயலாற்றி வருகின்றது. வரும் ஓகஸ்ற் மாதத்தில் வடமாகாணத்திற்கான தேர்தல் என்ற அரசின் அறிவிப்பும், 180 நாட்களில் பெரும்பாண்மையான அகதிகளை மீள் குடியமர்த்துவோம் என்ற அறிவிப்பும், தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளிநாடுகளில் செய்யப்படும் அரச எதிர்ப்பு பிரச்சாரங்களை முற்றாக தவிடுபொடியாக்கப் போகின்றது. மற்றும் தற்போது புலம் பெயர்ந்த நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மிகவும் மோசமாகவும் கோமாளிகளாகவும் ஆக்கப்போகின்றது.

இன்று விடுதலைப் புலிகளின் பெயரில் சேர்க்கப்பட்ட பணம் லண்டனில் கோயில்களாகவும், நகைக்கடைகளாகவும், வீடுகளாகவும், தனிப்பட்டவர்களின் பெயரிலும், சில வசரளவ களிலும் உள்ளன. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல இன்றைய நிலையில் பல லட்சக்கணக்கான புலிகளின் சொத்துக்கள் சில தனிப்பட்டவர்களை சென்றடைய இருக்கின்றன. இதன் முதற்கட்டமாக விடுதலைப் புலிகளை மையப்படுத்தி வன்னியில் இயங்கும் வெண்புறா, அம்மன் வசரளவ போன்ற அமைப்புக்களின் கணக்கு விபரங்களை ஆராய்வதற்கு புலிகளின் உண்மையான விசுவாசிகளையும் சில பொதுவானவர்களையும் நியமித்து விசாரணை குழுக்கள் அமைக்கப்படல் வேண்டும். அதன் முதற்கட்டமாக வணங்கா மண் வேலைத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட பணத்தைப் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் பெயரில் சேர்க்கப்பட்ட பணம் மீள வசூலிக்கப்பட்டு வன்னிப் பிரதேசத்தில் அகதிகளாக உள்ள மக்களுக்கு செலவிடப்படல் வேண்டும். அத்துடன் ஆயிரக்கணக்கில் அநாதரவாக விடப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு காத்திரமான பங்களிப்பை செய்ய புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும். இன்றைய யதார்த்த அரசியலைப் புரிந்து, ஆதாரம் பெற முடியாத கோசங்களை முன்வைத்து, நடைமுறை சாத்தியம் இல்லாத அரசியல் வேலைத் திட்டங்களை கைவிட்டு, யதார்த்த அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மே 18ம் திகதி இடம்பெற்ற சம்பவம் புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு தூரம் கனவுலகத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்பதை கோடிட்டு காட்டியுள்ளது. இனிமேலாவது தமிழ் மக்கள் துரோகி, எட்டப்பர் என்ற வெற்று பதங்களை மறந்து ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க உடந்தையாக இருக்க வேண்டும்.

Show More
Leave a Reply to santhanam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தின் போதும் ஜனாதிபதி ராஜபக்சவின் ஆட்சி ஆரம்பத்தின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கிழக்கு மாகாணத்தில் சரணடைந்த நிராயுதபாணிகளான சிங்கள பொலிசாரை விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்ற சம்பவங்களை அவர்கள் கூறுகின்றனர்.//

    ஏன் இதற்கு முன் சரணடைந்த ரெலோ தோழர்களுக்கும், இதற்கு பின் கருணாவுடன் வெளியேறிய சக புலிப்போராளிகளுக்கும் புலிகள் செய்ததும் இதைத் தானே.

    //இன்று இல்லாத ஒருவர் உயிருடன் இருப்பதாக கூறி அரசியல் நடாத்த பலர் தயாராகின்றனர். நடைமுறை இப்படி இருக்கும் போது பிரபாகரனின் குடும்பத்தில் ஒருவரையோ அல்லது விடுதலைப் புலிகளின் உயர் தலைவர் ஒருவரையோ உயிருடன் பிடித்திருந்தால் அது தேவையில்லாத அரசியல் தலையிடியை தமக்குத் தந்து சிங்கள இராணுவ வீரர்கள் இதுவரை செய்த தியாகங்களை வீணடித்திருக்கும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது.//

    உண்மையில் புலித்தலைமை யாராவது உயிருடன் பிடிபட்டிருந்தாலும்,அவரை இராணுவம் கொன்றொழித்திருக்கும் என்பதும் மறுக்க முடியாது. உதாரணமாக பிரபாகரன் கூட உயிருடன் பிடிபட்டிருந்தால், அவரை வைத்தே பல வெளிநாடுகளின் தலையீடுகளும், கோரிக்கைகளும் தொடர்ந்திருக்கும். அத்துடன் இதனை வைத்து வழமை போல் புலிப்பினாமிகளும் தங்களின் அன்றாட பிழைப்பிற்காக காவடி எடுப்பதையும் தொடர்ந்திருப்பார்கள். இப்படியான செயற்பாடுகளைத் தவிர்க்கவே இராணுவமும் விரும்பியிருக்கும்.

    // மற்றும் தற்போது புலம் பெயர்ந்த நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மிகவும் மோசமாகவும் கோமாளிகளாகவும் ஆக்கப்போகின்றது.//
    இங்கே தான் தப்பாக எழுதியுள்ளீர்கள். ஏனெனில் அவர்கள் கோமாளிகளாகவும், மனநோயாளர்களாகவும் மாறி மாதக்கணக்காகி விட்டது.

    Reply
  • மாயா
    மாயா

    புலித் துரோகிகளை துரோகிகள் என்று சொல்ல எங்களுக்கு ஒரு சான்ஸ் தேவை. 30 வருசம் அவை எம்மை சொன்னவை. அதை திருப்பிச் சொல்ல வேணும். இல்லாட்டி தொடர்ந்தும் எங்களைத்தான் துரோகி என்பார்கள். தேவையா?

    Reply
  • Mohan
    Mohan

    சரணடைய நடேசனும் புலித்தேவனும் வந்தபோது பின்னாலிருந்த புலிகளே அவர்களைச் சுட்டுக்கொன்றனர் என்று அரசாங்கம் எப்போதோ விளக்கம் கொடுத்துவிட்டது.
    இத்தனை போராளிகள் பின்னால் இருந்து சண்டையிட்டு மடிந்துகொண்டிருக்க இவர்கள் மாத்திரம் சரணடைந்து உயிர்தப்ப நினைத்தால் போராளிகள் போட்டுத்தள்ளுவார்கள்தானே.

    Reply
  • மாயா
    மாயா

    மோகன்,
    ஆயிரக்கணக்கான போராளிகளை குப்பி கடிக்கவும் , போரிட்டு சாகவும் , தற்கொலை போராளிகளாக சாகவும் ஊக்குவித்து இறுதியில் சரணடைந்த மற்றும் சரணடைய உலக நாடுகளை யாசித்த அனைத்து தலைவர்களும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை துரோகிகளே. பிரபாகரன் ஒரு பயந்தாங்கொள்ளி. மாவீரன் என்பதெல்லாம் டூமச். பிரபாவும் துரோகிதான். இன்று சரணடைந்து சிறைகளில் உள்ள அனைத்து இரண்டாவது மட்ட புலித் தலைவர்களும் துரோகிகளேயன்றி வேறென்ன? சரணடைந்து போட்டுக் கொடுக்கும் புலிகள் …………………. ….புலிகள் ஏனையவர்களுக்கு சொன்ன அத்தனை வசைகளையும் சொல்ல ஆசை . ஆனால் தெரியவில்லை. முகாம்களில் அடைபட்ட அனைத்து மக்கள் மட்டுமே அப்பாவிகள்.

    Reply
  • Kulan
    Kulan

    // மற்றும் தற்போது புலம் பெயர்ந்த நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மிகவும் மோசமாகவும் கோமாளிகளாகவும் ஆக்கப்போகின்றது.//
    ஏன் பிரபாகரன் கோமாளி இல்லையா? இவர் பக்தர்கள் எப்படிக் கோமாளியாகாமல் இருக்க முடியும்? தமிழனின் வரலாற்றில் துரோகம் என்பதற்குச் சான்று காட்டவேண்டும் என்றால் பிரபாகனைத்தவிர வேறு யாரைக்காட்டலாம் சொல்லுங்கள்? இராஜபக்சவையே நல்லவனாக்கி விட்டார்களே புலிகள். இவர்கள் தமிழ் துரோகிகள் மட்டுமல்ல மனித இன விரோதிகள்…மனிதவின விரோதிகள்

    Reply
  • Kusumbo
    Kusumbo

    இனத்துவேசமான பாடல்களை தேசியப்பாடல்கள் என வரையறுத்து தமிழ்மக்களிடையே துவேசத்தை வளர்த்தது புலிகளே. அரசாங்கம் ஒன்றும் புதிதாகச் செய்து விடவில்லை. புலிகள் செய்ததைப்பார்த்து அப்படியே அதை அவர்கள் மேல் பயன்படுத்தினார்கள். அரசைக் குறைகூறும் போது அதைப் புலிகளும் செய்திருக்கிறார்கள் என்பதை புலிப்பினாமிகள் உணர்வது முக்கியம். கொன்ரன்ரையின் அவர்களே; கடைகள் கோவில்கள் தேவாலயங்களில் மட்டுமல்ல தனிப்பட்ட மனிதர்களின் பைகளிலும் புலிப்பணம் கிடக்கிறது. கடைகளில் உண்டியலுக்காகக் கொடுத்து பணத்தை வாங்கினாலும் அது ஒரு தனிப்பட்ட புலிப்பினாமியின் பையில்தான் போகப்போகிறது. கடற்புலிகளுக்கெனக் கடைவைத்த ஒரு நபருக்கு ஒரு பெரிய தனிவீடும் 2 மாடிவீடுகளும் உள்ளன. இவை அனைத்துமே பலமில்லியன் ஈரோக்களாகும். வீடுகளை வாங்கி புலிகள் வாடைக்கு விட்டுள்ளார்கள். எத்தனை வருடங்கள் கணவன் மனைவி இருவரும் நல்ல வேலையில் இருந்தாலும் ஒரு மாடியில் ஒரு வீடுவாங்கவே முடியாது தவிக்கிறார்கள். புலிப்பினாமிகளால் இது எப்படி முடிகிறது. இதை அனைத்தும் ஊரை அடித்து உலையில் போட்ட பணங்கள்தான்

    Reply
  • santhanam
    santhanam

    மாவீரரை வணங்கி வளர்க்கபட்ட புலித்தலைமை கடசியாக அந்தமக்களிற்கு செய்தகொடுமையை அவர்களது போரளிகளே நேற்றைய பி பி சி செய்தியில் அந்த கோரதாண்டவத்தை விபரித்தனர் மாவிரரின் வீடுகளிற்குள் பிள்ளைபிடியையும் நடாத்தி பெத்ததாய்க்கும் துவக்காள் அடித்ததாகவும் மிகவும் மனவேதனையுடன் விபரித்தனர்

    Reply
  • yoganathan
    yoganathan

    30 வருடங்களாக புலிகள் மற்ற இயக்கத்தவர்களையும் தமக்கு பிடிக்காதவர்களை புலம் பெயர் தமிழர்களுமாக துரோகிப்பட்டம் சூட்டி மகிழ்ந்த வரலாற்றை இலகுவாக மறந்து விடமுடியாது என்பதை கொன்ஸ்ரன்ரைன் மறந்து விடவேண்டாம் குறைந்தது அடுத்த 5 வரடங்கள் என்றாவது இந்த புலிகளின் துரோகத்தை எழுதியும் பேசியும் விமர்சிக்க வேண்டியுள்ளதை கட்டுரையாளர் மறந்து விடலாகாது.

    இன்றும் கூட மற்ற இயக்கத்தவர்களை துரோகிகள் என்று கூறி புலிச் சொத்துக்களை தமதாக்கிக் கொள்ளவே இப்படி இன்றும் மற்றவர்களை துரோகிகள் என் கூறிக்கொள்கிறார்கள்.

    எனவே பிரபாகரனும் அவரது சகாக்களும் சரணடைந்தது துரோகத்தனமே எப்படி மற்ற குழந்தைகளுக்கு சயனைட்டை கொடுத்துவிட்டு தான் தனது குடும்பத்துடன் சரணடைவார் இவரை இலங்கை அரசு எப்படி சாதாரண கைதி பொல பார்க்க முடியும் இலங்கையை துண்டாடி மக்களை அழிவின் பாதையில் கொண்டு போனவரை சிறையில் வைத்து…….

    லண்டனில் பிரித்தானிய தமிழர் அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் 22000 மக்கள் கொலையில் உடந்தையாக உள்ளனர் அந்த மக்களை முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறாமல் வைத்திருக்க உடந்தையானவர்கள்.

    புலி அமைப்பும் அதன் காரண அமைப்புக்களும் – புலிக்கொடி – பிரித்தானிய தமிழர் அமைப்பு எல்லாம் குழிக்குள் போட்டு மூடப்பட வேண்டும்.

    தற்போது புலிகளின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளின் 3000 குடும்பங்கள் புலிக்கு வேலை செய்வதன் மூலமே தமது குடும்ப சம்பாத்தியத்தில் இருந்தவர்கள் தான் இப்போ பெரும்பாடு என்று கனேடிய வானொலி சொல்லியுள்ளது.

    Reply
  • raman
    raman

    விமர்சனம் அற்ற அமைப்பு முறையின் விளைவே இந்த தோல்விக்கும் இத்தனை அழிவுக்கும் காரணமாய் அமைந்துள்ளது.எனவே இனியும் அந்நிலை தொடர இடங்கொடுக்காது யாவும் விமர்சனத்திற்கு உட்படுத்தவேண்டும்.அந்தவகையில் புலத்தில் புலிகளுக்காக பணிபுரிந்தவர்கள் தங்கள் சொத்துகள் கணக்கு விபரங்களை மக்கள் முன்வைக்க வேண்டும்.அதற்கு சம்மதிக்காதவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த ஊடகங்கள் தயங்கக்கூடாது.யார்யாரிடம் என்ன சொத்துகள் வைத்திருக்கின்றனர் என்ற விபரம் மக்களுக்கு தெரியவேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் எழுதவேண்டும்.சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைக்க மறுத்தால் அவர்களை எல்லா ஊடகங்களிலும் அம்பலப்படுத்தவேண்டும். புலிகளுக்குள்ளே பலர் சந்தர்ப்பம் கிடைக்குமாயின் யாரிடம் எவ்வளு சொத்துக்கள் உள்ளன என்பதை தெரிவிக்க மிகவும் ஆர்வமாக உள்ளனர். இதை முன்னெடுக்க பலர் தயாராக உள்ளனர். அதுமட்டுமல்ல லண்டனில் இவ்வாறு முன் உதாரணம் காட்டப்படுமாயின் இதைப்பார்த்து மற்ற நாடுகளிலும் செய்ய வாய்ப்பு நிறைய உண்டு. போராட்டத்தின் பேரால் யாரும் பணம் சம்பாதிக்க அனுமதிக்க முடியாது. இதனை நாம் நடைமுறையில் காட்டி நல்ல பாடத்தை கற்பிக்க வேண்டும்.

    Reply