கிழக்கு மாகாணக் கட்டடங்களில் புலிகளின் பெயர்கள் : உடன் அகற்றுமாறு உத்தரவு

கிழக்கு மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கும் கட்டிடங்களுக்கும் ஏற்கனவே சூட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் பெயர்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.கே.யூ.கே. வீரவர்தனா சகல வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த உத்தரவை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில்,

“இதனை அமுல்படுத்த தவறும் வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”என்றும் தெரிவித்துள்ளார். ‘பாடசாலை மற்றும் கட்டிடங்களுக்கு தனி நபர் பெயர் சூட்டப்படல்’என்னும் தலைப்பிலான அந்த சுற்றறிக்கையில்,

“கடந்த காலங்களில் அரசாங்க பாடசாலைக் கட்டிடங்களுக்கு பயங்கரவாத அமைப்பின் பிரதேச தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதை அண்மையில் மூதூர் மற்றும் சம்பூர் பிரதேச பாடசாலைகளுக்கு சென்றிருந்த போது அவதானிக்க முடிந்தது.

பாடசாலைகள் ஆரம்பத்தில் என்ன பெயரில் அழைக்கப்பட்டதோ அந்த பெயரே அமுல் படுத்தப்பட வேண்டும்.பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் ஏற்கனவே இருந்த பெயர்,வலயம் மற்றும் தற்போதைய பெயர் ஆகிய விபரங்கள் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.

ஒரு பாடசாலைக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டியிருப்பின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்துடனும் மாகாண கல்விப் பணிப்பாளரின் சிபாரிசுடனும் எனது அனுமதிக்காக முன் வைக்கப்பட வேண்டும்.

பிரதேச பயங்கரவாத தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தால் அதனை உடனடியாக நீக்க வேண்டும்.வலய கல்விப் பணிப்பாளர்கள் மேற்பார்வை செய்து இதனை உறுதிப்படுத்த வேண்டும்.இந்தத் தவறை திருத்தம் செய்யாத வலய கல்விப் பணிப்பாளர்கள் தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளர்கள் எனக்கு அறிவிக்க வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நிச்சயமாக செய்ய வேண்டிய விடயம்…..

    Reply
  • msri
    msri

    கல்வியமைச்சர் ஏன் இவ்வளவு சிரமப்பட்ட சுற்றறிக்கை விட்டு அதிபர்களை வெருட்டுகிறார்! பேசாமல் புலிகளின் பெயர்கள் உள்ள இடங்களில்> கிழக்கின் விடிவெள்ளிகள்>கருணா அம்மான்> பிள்ளையான் போன்றவர்களின் பெயரைப் போட்டால் போச்சே! பாடசாலைகளுக்கும் விடிவு வந்தமாதிரியும் இருக்கும்!

    Reply