ஊடகவியலாளர் கெளரவத்துடன் கடமையை நிறைவேற்ற வழிவகை செய்வதே அரசாங்கத்தின் நோக்கம்

ஊடக அடக்குமுறையை நோக்காகக் கொண்டு பத்திரிகை பேரவையை மீண்டும் அரசாங்கம் ஏற்படுத்தவில்லை என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பத்திரிகைப் பேரவையின் ஊடாக பத்திரிகைகளுக்கோ, பத்திரிகை ஆசிரியர்களுக்கோ எதிராக செயற்படுவதும் அரசின் நோக்கமல்ல என்றும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அரசாங்கம் பத்திரிகைப் பேரவையை மீண்டும் இயங்கச் செய்வதன் ஊடாக, ஊடக அடக்கு முறையை அரங் கேற்ற முயற்சிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்தார்.

சபாநாயகர் வி. ஜே. மு. லொக்கு பண்டார தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துப் பேசினார்.

1973 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பத்திரிகைப் பேரவைச் சட்டத்தினூடாக ஊடகவியலாளருக்கு தண்டனை வழங்கவும், சிறைத் தண்டனை வழங்கவும் ஏதுவாக இருக்கிறது என சுட்டிக்காட்டினார். இதனை மீண்டும் கொண்டு வருவதே அரசின் நோக்கமாக இருக்கிறது என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பேசும் போது, 1973 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பத்திரிகைப் பேரவை சட்டத்தின் கீழேயே பத்திரிகைப் பேரவை உருவாக்கப்பட்டது. இந்த பேரவைக்கு உறுப்பினர்களை நியமி க்காமல் விட்டதனால் பத்திரிகைப் பேரவையை இயங்கவிடாமல் செய்தது. அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே.க. வினர் செயற்பட்டனர்.

ஆனால், தொடர்ந்து வந்த எல்லா அரசுக ளும் பத்திரிகை பேரவையை ஒழிக்க செயற்படவில்லை. பல வருடங்களாக பேரவை செயற்படாமல் இருந்தது. இருப்பினும் சுமார் 20 பேர் பேரவையின் நிரந்தர சேவை யில் இணைக்கப்பட்டிருந்தனர். வருடக் கணக்காக அவர்களுக்கு எந்த கடமைப் பொறுப்புகளும் வழங்கப்படாமல் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன. பேரவை செயற்படாமல் இருந்த போதும் 209 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளோம்.

இந்த விடயம் தொடர்பாக கணக்காய்வுகள் நடத்தப்பட்ட போதும் பொது நிறுவனங்களுக்கான பாராளுமன்ற தெரிவுக் குழு மீண்டும் பத்திரிகை பேரவையை இயங்கச் செய்யுமாறு அமைச்சரவைக்கு பரிந்துரை செய்தது. இதனடிப்படையிலேயே பத்திரிகைப் பேரவையை மீண்டும் இயக்கச் செய்ய முடிவு செய்தது.

பத்திரிகைப் பேரவையை மீண்டும் இயங்கச் செய்வதன் ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது போன்று ஊடகவியலாளர்களை அடக்குவதற்காக அல்ல என்பதை நான் பொறுப்புடன் கூறுவேன். பேரவையின் எதிர்பார்ப்பு ஒருபோதும் ஊடகங்களுக்கு தடைகளை போடுவதும் அல்ல.

பேராசிரியர் சோமரட்ன பாலசூரிய, பேராசிரியர் சுனந்த மகேந்திர, லங்காதீப ஞாயிறு பத்திரிகையின் ஆசிரியர் ஆரியநந்த தொம்பகஹவத்த, சட்டத்தரணி பிரசாத் சூரியஆராச்சி, உழைக்கும் பத்திரிகையா ளர் சங்கத்தின் பிரதிநிதி உட்பட இன்னும் சிலர் நியமிக்கப்படவுள்ளனர். தகவல் திணைக்களத்தின் தலைவரும் பேரவையின் உறுப்பினராக இருப்பார்.

பத்திரிகைப் பேரவையின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் தொடர்பாக நோக்கும் போதும் இந்த உறுப்பினர்கள் ஒருவரும் ஊடக அடக்கு முறைக்கு ஆதரவு வழங்குபவர்களாக வும், தொடர்புடையவர்களாகவும் தெரியவில்லை.

ஊடகவியலாளர்களுக்குத் தேவையான பயிற்சிகள், வழிகாட்டல்கள், அவர்களது கடமைகளை நிறைவேற்றக் கூடியவாறு ஒத்துழைப்புகள், வழங்குதல் போன்ற விடயங்களுக்காகவே பத்திரிகைப் பேரவை செயற்படவுள்ளது.

ஊடகவியலாளர்கள் கெளரவத்துடன் தங்களது கடமையை நிறைவேற்றுவதற்கு வழிவகைகளை செய்து கொடுப்பதே அரசின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *