ஊவா, யாழ்ப்பாணம், வவுனியாவில் இன்னும் 5 தினங்களில் வாக்களிப்பு – 909 வேட்பாளர்கள் களத்தில்; 66 பேர் தெரிவு செய்யப்படுவர்

election_cast_ballots.jpgஊவா மாகாணசபை, யாழ்ப்பாண மாநகரசபை, வவுனியா நகரசபைக்கான வாக்களிப்பு எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்தச் சபைகளுக்கு 66 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் 909 பேர் போட்டியிடுகின்றனர்.

யாழ்.மாநகர சபை தேர்தலில் 23 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 4 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேச்சைக்குழுக்களைச் சேர்ந்த 174 பேர் போட்டியிடுகின்றனர். மாநகரசபையின் மொத்த வாக்காளர் தொகை 1,00,417 ஆகும். 67 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு இடம்பெறவுள்ளது.

வவுனியா நகரசபை தேர்தலில் 11 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 6 அரசியல் கட்சிகள், 3 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 135 பேர் போட்டியிடுகின்றனர். நகர சபையின் 24,626 பேர் 18 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கவுள்ளனர்.

ஊவா மாகாண சபை தேர்தலில் மொத்தமாக 8,75,456 வாக்காளர்கள் 814 நிலையங்களில் வாக்களிக்கவுள்ள நிலையில் 32 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 600 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் 23 அரசியல் கட்சிகளையும் 7 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்தவர்களாவர்.

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 21 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 14 அரசியல் கட்சிகள் மற்றும் 4 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 432 பேர் போட்டியிடுகின்றனர். 9 தொகுதிகளிலுள்ள 574,814 பேர் 507 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கவுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 9 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 168 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 3 தொகுதிகளைச் சேர்ந்த 3,00,642 பேர் 307 தொகுதிகளில் வாக்களிக்கவுள்ளனர்.

இதேவேளை, ஊவா மாகாண சபை மற்றும் யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகியவற்றில் மொத்தமாக 25,360 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் ஊவாவில் 75 சதவீதமும் வவுனியா நகரசபை மற்றும் யாழ். மாநகரசபையில் 75 வீதமும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதை தாம் மதிப்பிட்டுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் தபால் மூல வாக்களிப்பு நீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெற்ற நிலையில் தேர்தல் தினத்தில் இதே சூழ்நிலையை பாதுகாப்பதற்கு அரசியல் கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் தொடர்ந்து முன்வரவேண்டுமென கேட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்த மக்களில் 4,388 பேர் யாழ்.மாநகர சபை தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.ஏ.எம்.நபீல் தெரிவித்துள்ளதுடன் இவர்கள் வாக்களிப்பதற்கு அங்கு 6 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தில்லையடி முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இரு வாக்குச் சாவடிகளும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி, பாலாவி சிங்கள மஹா வித்தியாலயம், கற்பிட்டி அல்அக்ஷா தேசிய கல்லூரி, புளிச்சாக்குளம் உமர் பாஷருக் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்படவுள்ளது.

வாக்குகள் யாவும் புத்தளம் மாவட்ட செயலகத்தில் எண்ணப்பட்டு அதன் பெறுபேறுகள் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுமென்றும் அம்மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேர்தல் தொடர்பில் 29 முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான மற்றுமொரு அமைப்பான கபே தெரிவித்ததுடன், இதில் தாக்குதல் சம்பவங்கள் 15 இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.

15 சம்பவங்கள் பதுளையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மொனராகலையில் 7, வவுனியாவில் 4, யாழ்ப்பாணத்தில் 3 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் சட்டவிதிகளை மீறிய சம்பவங்கள் 7 இடம் பெற்றுள்ள நிலையில் அச்சுறுத்தல் தொடர்பில் 3 சம்பவங்களை பதிவு செய்துள்ளோமெனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்.மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல் 1998 இல் இடம்பெற்றது. 1998 க்கு பின்னர் இவ்விரு உள்ளூராட்சி மன்றங்களும் 2003 வரை விசேட ஆணையாளரின் கீழ் இருந்தன.

ஊவா மாகாண சபை மே 28 ஆம் திகதி கலைக்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *