ஈராக்கிலிருந்து வெளியேற அமெரிக்கப் படைகள் ஆயத்தம்

us-army.jpgஈராக் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் ஓராண்டுக் காலத்திற்குள் வெளியேற வேண்டிய அமெரிக்கப் படைகள், அதற்கான பணியைத் தாம் ஆரம்பித்திவிட்டதாக அதன் தளபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக்கில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பேரழிவு ஆயுதங்களை வெளிக்கொணரப் போவதாகக் கூறியே அந்நாட்டின் மீது 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா படையெடுத்தது.

தனது நிலையில் இருந்து மாறிய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ், ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே தங்கள் நோக்கம் என்று கூறினார். அமெரிக்கப் படைகளிடம் பிடிப்பட்ட அந்நாட்டு அதிபர் சதாம் உசேன் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.

ஈராக்கின் எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றி, அவற்றை நிரந்தரமாக அமெரிக்காவின் பிடியில் கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியை, அதன் துணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசே முறியடித்துவிட்டது. அதே நேரத்தில் ஈராக்கில் நிலைபெற்ற அமெரிக்க படைகள் மீது அந்நாட்டு தீ்விரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர். ஈராக்கில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி அமெரிக்கா கடந்த ஆறரை ஆண்டுகளாக நடத்திய தாக்குதல்களில் 12 லட்சம் ஈராக்கியர்களே கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படையினர் 4,000 பேருக்கு மேல் பலியாகினர். இந்த நிலையில் அந்நாட்டில் இருந்து 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதிக்குள் வெளியேறுவது என்று அமெரிக்க அரசு, ஈராக் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

அதன்படி, தனது படையணிகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையைத் தாம் தொடங்கிவிட்டதாக அமெரிக்கப் படைத் தளபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ராடார்களில் இருந்து கனரக வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் என்று 15 லட்சம் போர்க் கருவிகள் உட்பட ஒரு பெரும் படையை அங்கிருந்து மீண்டும் அமெரிக்கா கொண்டு செல்ல, பல நூற்றுக்கணக்கான கோடி டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *