மக்கா செல்ல 100 இலவச விசாக்கள்; சவூதி வழங்கியுள்ளது

ரமழான் மாத காலத்தில் உம்றா கடமையை நிறைவேற்றுவதற்கு மக்கா செல்வோருக்காக சவூதி அரேபிய அரசாங்கம் 100 விசாக்களை இலவசமாக வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவின் வேண்டுகோளுக்கு அமையவே கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம், உம்றா கடமைமை நிறைவேற்றச் செய்யும் 100 ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விசாக்களை வெளிவிவகார அமைச்சிடம் வழங்கியுள்ளது.

இந்த இலவச விஸாக்கள் இன்று லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் வைத்து அமைச்சர் போகொல்லாகமவினால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும். முஸ்லிம்களுக்கு ரமழான் மாதத்தில் இலவச விசாக்களை வழங்கியமைக்காக அமைச்சர் போகொல்லாகம சவூதி அரேபிய அரசாங்கத்துக்கும் சவூதி அரேபியத் தூதுவர் ஜமாசுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் சவூதி அரேபிய அரசாங்கம் வைத்துள்ள நம்பிக்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் கூறியுள்ளார்.

ரமழான் மாதத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா செல்வது வழக்கம். பல்வேறு காரணங்களுக்காக சவூதி அரசாங்கம் இம்முறை உலக நாடுகளிலிருந்து உம்றா கடமைக்காக வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையினை குறைத்திருந்தது. இதனடிப்படையில் இலங்கையிலிருந்து செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருந்தது. இதனைக் கேள்வியுற்ற அமைச்சர் போகொல்லாகம இது குறித்து விசேட கவனம் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சவூதி அரேபிய தூதுவர், அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க முதற் தடவையாக இலவச விசாக்களை வழங்கவிருப்பதாக கூறினார். அமைச்சரினால் தெரிவு செய்யப்பட்டு பெயர் வழங்கப்பட்ட, முதல் தடவையாக உம்றா கடமையில் ஈடுபடுவதற்காக செல்லும் 100 பேருக்கே இந்த இலவச விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *