தோட். தொழிலாளர் சம்பள அதிகரிப்பு கூட்டு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

080909teawomen.jpg* 405 ரூபா சம்பள அதிகரிப்பு
* 6 மாத சம்பள நிலுவையை 3 கட்டங்களாக வழங்க முடிவு
* மருத்துவ சிகிச்சையில் சலுகை
* ஞாயிறு, போயா தினங்கள் விடுமுறை தினங்களாக கருதப்படும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 405 ரூபாவை வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. தொழிற்சங்க பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு அமுலுக்கு வரும் விதத்தில் இவ்வொப்பந்தம் நேற்று ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளன அலுவலகத்தில் கைச்சாத்தானது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம், தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் எஸ். இராமநாதன் ஆகியோர் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அதிகரிக்கப்பட்ட சம்பளத்திற்கான நிலுவைத் தொகையை மூன்றுகட்டங்களாக வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 50 வீத சம்பள நிலுவையை வழங்கவும் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 25 வீத சம்பள நிலுவையையும் ஜனவரி மாதம் தைப்பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்துடன் எஞ்சிய 25 வீதத்தை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் 75 வீத வருகைக்கு ஞாயிற்றுக்கிழமை, போயா தினம் மற்றும் விடுமுறை தினங்களும் இதுவரை காலம் உள்வாங்கப்பட்டிருந்தது. இனிமேல் ஞாயிறு, போயா தினம், விடுமுறை தினங்கள் நீக்கப்பட்டுள்ளன.

தொழிலாளி ஒருவர் சுகயீனம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் 75 வீத வருகை இல்லாத இடத்து அவர் தொழிலுக்கு வந்தவராகவே கருதப்படுவார்.

சம்பள அதிகரிப்புடன் தோட்டத் தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 285 ரூபாவாகவும், 75 வீத வருகைக்கான கொடுப்பனவு 90 ரூபாவாகவும், உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு 30 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட தொகையைவிட கூடுதலான கொழுந்து அல்லது இறப்பர் பால் சேகரிப்பவர்களுக்கு முறையே 12 ரூபா 15 ரூபாவை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 2009 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இதன்படி தற்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2011 மார்ச் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி என்பன செய்து கொண்ட சம்பள அதிகரிப்பு ஒப்பந்தத்துக்கு எதிராக மலையகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றனவே என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் ஆர். யோகராஜனிடம் கேட்டபோது 90 வீதமான தோட்டத் தொழிலாளர்கள் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். 40 வீத சம்பள அதிகரிப்பு ஒன்று இன்று கிடைத்திருக்கிறது. சில தொழிற் சங்கங்கள் இதனை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த முயற்சி செய்கின்றன என்று கூறினார்.

வாங்கும் சக்தி எங்களுக்கு இருப்பது போன்று கொடுக்கும் சக்தி முதலாளிமாருக்கு இருக்கிறதா என்பது பற்றியும் நாம் பார்க்க வேண்டும். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் ஆராய்ந்த பின்னரே ஒரு முடிவுக்கு வந்தோம் என்றும் இ. தொ.கா உப தலைவர்களில் ஒருவரான ஆர். யோகராஜன் தெரிவித்தார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள இ. தொ. காவின் ‘செளமிய பவன்’ கட்டடத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போதே ஆர். யோகராஜன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *