மீள்குடியேற்றத்தை துரிதமாக்க ரூ.35கோடி குறைநிரப்பு பிரேரணை: சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்

26parliament.jpgஇடம் பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக் குடியமர்த்துவதற்கேதுவாக 35 கோடி ரூபாவுக்கான குறைநிரப்புப் பிரேரணையொன்று நேற்று (22) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு இந்த நிதியை வழங்க சபை அங்கீகாரம் வழங்கியது.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சமர்ப்பித்த பிரேரணை விவாதத்தின் பின்னர் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 இற்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நிறைவடைந்ததும் அமைச்சர் பதியுதீன் குறைநிரப்புப் பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றினார். மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தி வருவதாகக் கூறிய அமைச்சர் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் வெகுவிரைவாக தமது சொந்த மண்ணில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார்.

மீளக் குடியமர்த்தும் பணிகளை மிகவும் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றோம். முதலில் வயது முதிர்ந்தவர்களை விடுவித்தோம். தற்போது காயமுற்றோர் மற்றும் பெண்களை அனுப்பி வருகின்றோம். அதே நேரம், கிளிநொச்சி – முல்லைத்தீவு தவிர்ந்த பகுதிகளைச் சார்ந்தவர்கள் கிழக்கு மற்றும் வடக்கிலிருந்து சிக்குண்டோர்கள் எனப் பெருந்திரளானோரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம் என்று தெரிவித்த அமைச்சர், மனசாட்சியுடனும், நேர்மையுடனும் மீள்குடியேற்றப் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கி, வவுனியா அரசாங்க அதிபரின் ஊடாகச் செயற்படுத்தி வருவதாகக் கூறினார்.

நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்களை உறவினர்கள் பொறுப்பேற்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பதியுதீன் கூறினார். அதேநேரம், இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தமது உறவினர்கள் ஈடுபட்டிருப்பதாக ஐ. தே. க. உறுப்பினர் பாலித ரங்கே பண்டார முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். மக்களை மீளக்குடியமர்த்தும் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் விளக்கியுள்ளாரென்றும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் வைத்து அரசியல் நடத்தும் நோக்கம் அரசாங்கத்திற்குக் கிடையாதென்றும் அவர் குறிப்பிட்டார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *