வன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு 5 மாதிரி வினாத்தாள்கள் விநியோகம் : பி எம் புன்னியாமீன்

261009school_child_dp.jpgவன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான தேசம்நெட், சிந்தனைவட்ட நிவாரண உதவித்திட்டத்தின் முதற் கட்டமாக கணிதம்,  வரலாறு, தமிழ்மொழியும் இலக்கியமும், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய ஐந்து பாடங்களுக்குமான முதலாம் கட்ட மாதிரி வினாத்தாள்களை இவ்வாரம் வழங்கவுள்ளது.

தற்போது அகதி முகாம்களிலுள்ள மக்கள் பலவிதமான தேவைகளுக்கு உட்பட்டவர்களாக இருந்த போதிலும் கூட,  நீண்ட கால அடிப்படையைக் கருத்திற்கொண்டு மாணவர்களின் கல்விநிலை பாதிப்படையக் கூடாது என்பதைக் கருத்திற்கொண்டு சிந்தனைவட்டமும்,  தேசம்நெற்உம் கல்விசார்ந்த நிவாரண நடவடிக்கைகளை முன்னேடுக்க திட்டமிட்டு சில செயற்பாடுகளை மேற்கொண்டது. முதற் கட்டமாக தரம் 05 புலமைப் பரிசில் மாணவர்களுக்கு எம்மால் மேற்கொள்ளப்பட்ட நிவாரண செயற்றிட்டம் எமக்குப் பூரண வெற்றியைத் தந்தது. குறிப்பாக எமது முதற் திட்டத்தின் கீழ் 4872 மாணவர்கள் நேரடியாகப் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிவாரணக் கிராமங்களிலுள்ள மாணவர்களுக்கு பல சுயேட்சை நிறுவனங்கள் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாகவும்,  அனைத்து முகாம்களிலுமுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டும் பரந்துபட்ட திட்டங்களை சுயேட்சை நிறுவனங்கள் முறையாக மேற்கொண்டதாக அறியமுடியவில்லை. இதனைக் கருத்திற்கொண்டே மாணவர்களின் பௌதீக வசதிகளைவிட மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டு நாம் கல்வித் தரத்தை உயர்த்தும் முகமாக முதற் கட்டமாக புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வி உதவிகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினோம்.

அதன் தொடர்ச்சியாகவே க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கும் கல்வி நிலையை அபிவிருத்தி செய்யக்கூடிய திட்டத்தினை வகுத்தோம். இத்திட்டம் வகுக்கப்படும் போது கல்வி செயற்பாட்டுடன் ஈடுபாடுடைய புத்திஜீவிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வியதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசித்து க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி அபிவிருத்திற்கென விசேட திட்டமொன்றினை வகுத்தோம்.

எமது திட்டத்தை வகுக்கும்போது நாம் குறிப்பாக பின்வரும் விடயங்களை விசேடமாக கவனத்தில் கொண்டோம்.

01. நிவாரண கிராமங்களிலுள்ள மாணவர்கள் வடக்கின் யுத்தம் காரணமாக 6 மாதங்கள் மற்றும் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலங்களில் பாடசாலை கல்வியை பெற முடியாது இருந்தமை

02. யுத்த பாதிப்புக்களினால் மாணவர்களின் மானசீகமான பாதிப்புக்களை கருத்திற் கொண்டமை

03. சாதாரண தர பரீட்சை தரம் 10, 11 பாடப்பரப்புக்களை உள்ளடக்கியதாக அமையும். எனவே, பாடசாலைகளில் கற்க முடியாதுபோன பாடஅலகுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தமை.

04. நிவாரண கிராமங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் பாடப் புத்தகங்கள் தவிர, மேலதிக கல்வியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழிகாட்டிகளோ,  வசதிகளோ இல்லாதிருந்தமை.

05. புதிய பாடத்திட்டத்தைத் தழுவி இப்பரீட்சை நடைபெறுகின்ற போதிலும்கூட, யுத்த சூழ்நிலை காரணமாகவும் முகாம்களின் சில அசௌகரியங்கள் காரணமாகவும் கல்வித் திணைக்களத்தால் வழங்கப்படக்கூடிய பயிற்சிக் கருத்தரங்குகளில் முறையாக நலன்புரி கிராம ஆசிரியர்களுக்கு வழங்கப்படாதிருந்தமை.

இத்தகைய நிலைகளைக் கருத்திற்கொண்டு டிசம்பர் மாதம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக வேண்டி எம்மால் நடத்தப்படக் கூடிய நிவாரண கல்விச் செயற்றிட்டத்தின் மாணவர்களுக்கு கற்க முடியாது போன தரம் 10,  11 பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும்,  மாணவர்கள் அரசாங்கப் பரீட்சையை இலகுவான முறையில் எதிர்கொள்வதை கருத்திற் கொண்டும் பரீட்சைப் பற்றிய விளக்கத்தை வழங்கக் கூடிய வகையில் மாதிரி வினாத்தாள்களையும் வழங்கத் தீர்மானித்தோம். எமது திட்டப்படி மேற்குறிப்பிட்ட ஐந்து பாடங்களுக்கும் 30 மாதிரிவினாத்தாள்களையும் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற அரசாங்க வினாத்தாள் ஐந்தையும் (இம்மாணவர்களிடம் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இலங்கையில் முதலாவதாக நடைபெற்ற 2008 டிசம்பர் அரசாங்க வினாத்தாள்கள் இருக்கவில்லை.) இவற்றுக்கு மேலதிகமாக புதிய பாடத்திட்டத்தில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள புதிய விடயங்களை உள்ளடக்கிய 42 குறிப்பேடுகளையும் வழங்கத் திட்டமிட்டிருந்தோம். எமது நிவாரண உதவிகள் ஒரு சில நிவாரணக் கிராம மாணவர்களுக்கு மாத்திரம் போய்ச் சேராமல் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள 6290 மாணவர்களுக்கும் சென்றடையக் கூடிய வகையிலே திட்டங்களை தீட்டினோம்.

மேலும் நிவாரணக் கிராமங்களில் உள்ள மாணவர்கள் மீள்குடியமர்த்தப்படுமிடத்து அந்த மாணவர்களுக்கு எமது மாதிரி வினாத்தாள்களையும்,  பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும் வழங்கும் போது மீள்குடியமர்த்தப்படும் இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும், விசேட ஒழுங்குகளை செய்தோம்.  

இவ்விடத்தில் சில உண்மைகளை வெளிப்படையாக குறிப்பிட வேண்டிய ஒரு கட்டாயப்பாடுண்டு. இத்திட்டத்தை மூலமாக முன்னெடுத்த சிந்தனைவட்டம் அமைப்போ தேசம்நெற் அமைப்போ பாரியளவில் நிதியினைக் கொண்டுள்ள நிறுவனங்கள் அல்ல. இதனால் எமது திட்டத்தை நடைமுறைப்படுத்த சில பரோபகாரிகளின் உதவியைப் பெற வேண்டிய நிலையிலேயே எமது முழுமையான திட்டத்தை அவர்களிடம் வழங்கி உதவிகள் கோரினோம். கிட்டத்தட்ட எமது முழுமையான செயற்றிட்டத்தை நிறைவேற்ற எமக்கு சுமார் 30 ஆயிரம் பவுண்கள் தேவைப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மாணவனுக்கு 5 பவுண்களுக்குட்பட்ட ஒரு தொகையை ஒதுக்கீடு செய்வதை அடிப்படையாகக் கொண்டு மேற்படி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருந்தோம். ஒரு மாணவனுக்கு நாம் ஒதுக்கிய 5 பவுண்களிலிருந்தே 30 மாதிவினாத்தாள்களையும் 5 அரசாங்க வினாத்தாள்களையும் 42 வழிகாட்டி குறிப்பேடுகளையும் வழங்க தீர்மானித்திருந்தோம். எனவே, அறிவுபூர்வமாக சிந்திக்கும் எவருக்கும் இது இலாப நோக்கத்தைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமன்று என்பதையும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு திட்டமிட்ட செயற்பாடு என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும். இருப்பினும்,  எமது இத்திட்டத்துக்கு லண்டனிலிருந்து 2000 பவுண்களும், கனடாவிலிருந்து 1180.00. CDN மாத்திரமே கிடைத்தன. இதனால் நாம் திட்டமிட்ட மாதிரிவினாத்தாள்களில் முதலாம் கட்ட மாதிரிவினாத்தாள்கள் ஐந்தை மாத்திரமே எம்மால் வழங்க முடியுமாக இருந்தது.

புலம்பெயர்ந்த நாடுகளில் மாத்திரமல்லாமல் இலங்கையிலும் பல தனவந்தவர்களுடனும், அரசியல் வாதிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தினோம். இலங்கையில் ஒருவரிடமும் நாம் பணமாகக்  கேட்கவில்லை. மாறாக எமது திட்டத்தை வழங்கி குறிப்பிட்ட மாதிரிவினாத்தாள்களை அல்லது வழிகாட்டிப் புத்தகங்களை ஓரிரண்டை அச்சிட்டு தரும்படி மாத்திரமே கோரினோம். எமது திட்டத்தை நன்றாக ஆராய்ந்து எம்முடன் பல தடவைகள் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி அவர்கள் தொடர்புகொண்டு அவரும் உச்ச முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியிலே முடிந்துள்ளதுடன், இலங்கையிலிருந்து எதுவிதமான உதவிகளும் எமக்குக் கிடைக்கவில்லை.

அதேநேரம், இவ்விடத்தில் மற்றும் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். வன்னி அகதி முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிக் குறிப்பேடுகள் தயாரித்துத் தரக்கூடிய உதவியைக் கோரி (பண உதவியல்ல) மொத்தம் 1782 பாடசாலைகளுக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்களை அனுப்பினோம்;.

அக்கடிதத்தின் பிரதியொன்றை கீழே தங்கள் தெளிவுக்காக இணைத்துள்ளோம். அக்கடிதப் பிரதியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 415 பாடசாலைகளுக்கும் இலங்கையில் சகல மாவட்டங்களைச் சேர்த்த தமிழ் பாடசாலைகளுக்கும், கண்டியிலும் கொழும்பிலும் பிரபல்யம் மிக்க தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்தோம். ஆனால்,  வேதனைக்குரிய விடயம். ஒரு பாடசாலையிலிருந்தாவது அல்லது தனியார் கல்வி நிறுவன ஆசிரியரிடமிருந்தாவது எமக்கு ஒரு பதிலாவது வரவில்லை. இச்சம்பவத்தை வைத்து நோக்கும்போது வன்னி முகாம்களிலுள்ள மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாக இவர்கள் கதைப்பதன் அர்த்தத்தை எம்மால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் சில முஸ்லிம் பாடசாலை ஆசிரியர்கள் வினாப்பத்திரங்கள் தயாரிப்பதில் எமக்கு ஒத்துழைப்பினை வழங்கினார்கள். அதே போல வத்தேகம கல்விப்பணிப்பாளர் திரு சிவநாதன் அவர்களும்,  எமக்கு ஆலோசணைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கினார்.  இவ்விடத்தில் இவர்களுக்கு எமது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

விமர்சனங்கள் மேற்கொள்வது இலகு. பத்திரிகை அறிக்கைகள் வெளியிடுவது இலகு. ஆனால்,  ஆக்கபூர்வமான ஒரு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதற்கு மானசீகமான முறையில் ஒத்துழைப்பு வழங்குவது மிகக் குறைவு என்பதை எமது இம்முயற்சிக்கான அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே,  ஒரு உண்மையான இலக்கை நோக்கி திட்டம் தீட்டுவதும் அதை நடைமுறைப்படுத்த முனைவதும் அர்த்தமற்ற ஒரு விடயம் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. எவ்வாறாயினும் கூட, தரம் 05 மாணவர்களுக்கு சுமார் 15ஆயிரம் பவுண் பெறுமதிமிக்க செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நடத்திமுடித்தோம். ஆனால் க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கு சுமார் 2500 பவுண் பெறுமதியான உதவிகளை அதாவது ஒரு மாணவனுக்கு சுமார் 39 பென்ஸ்  பெறுமதியான உதவிகளை மாத்திரமே வழங்கக்கூடியதாக இருந்தது.

இதனையொரு தோல்வியாக நாம் கருதவில்லை. நாம் அகதி மாணவர்களுக்கு உதவ முழுமையாக முயற்சிகள் செய்தோம். எமது முயற்சியால் அம்மாணவர்களுக்கு 5 மாதிரிவினாத்தாள்கள் அனுப்புவதை இச்சந்தர்ப்பத்தில் பெருமையாகக் கொள்கின்றோம்.

மீண்டும் இவ்விடத்தில் நாம் ஞாபகமூட்ட விரும்புகின்றோம். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு எம்மால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிப் புத்தகங்கள், கணக்கறிக்கைகள் போன்ற விபரங்களை தேசம்நெற் வாசகர்கள் பெறவிரும்பினால் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுடன்  தொடர்புகொள்ளுமிடத்து பி.டி.எப். வடிவில் 126 பக்கங்கள் கொண்ட அவ்வறிக்கையை அனுப்பி வைப்போம்.

த ஜெயபாலன் : 0044 208 279 0354 அல்லது 0044 7800 596 786 அல்லது thesam97@hotmail.com
ரி சோதிலிங்கம் : 0044 7846 322 369 அல்லது sothi@btinternet.com
இலங்கையில்:
பி எம் புன்னியாமின் : 0094 812 493 892 அல்லது pmpuniyameen@yahoo.com

._._._._._. 

வன்னி நிவாரண முகாம் மாணவர்களுக்கு நாம் வழங்கிய அதே மாதிரி வினாத்தாள்களையும்,  வழிகாட்டிக் குறிப்பேடுகளையுமே சிந்தனை வட்டம்  அகில இலங்கை ரீதியிலும் விநியோகித்தது. அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவன் லோ. ஸ்ரீகர்சன் அவர்களும் சிந்தனை வட்ட மாதிரி வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் படித்தவரே. நிவாரணக் கிராம  மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. வெளிவந்ததும் அவற்றை பூரணமாக தங்களுக்குத் தருவோம்.

jafna-1.jpg

jafna.jpg

._._._._._. 

கடிதப்பிரதி- இணைப்பு

அதிபர் அவர்கட்கு,

வவுனியா நலன்புரிநிலையங்களில்
க.பொத. சாதாரண தரத்தில் கல்வி பயிலும்
6290 மாணவர்களின் கல்வி அபிவிருத்தி
நிவாரண நடவடிக்கைகளில்
தங்களையும் இணைத்துக் கொள்ளல்.

2009ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேண்டி சுமார் 28இலட்சம் ரூபாய் பெறுமதிமிக்க 04 வழிகாட்டி நூல்களையும் 30 மாதிரிவினாத்தாள்களையும் தனித்தனியாக 4872 மாணவர்களுக்கு வழங்கி நலன்புரிநிலைய ஆசிரியர்கள் துணையுடன் அம்மாணவர்களை வழிகாட்டி சிறந்த முறையில் பரீட்சையை எதிர்நோக்க எமது சிந்தனைவட்டம் வழியமைத்துக் கொடுத்ததை தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

அதேபோல 2009 டிசம்பர் மாதத்தில் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக வேண்டியும் சுமார் 56 இலட்சம் ரூபாய் நிதித்திட்டத்தின் கீழ் கல்வி நிவாரண செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கிலுள்ள நலன்புரிநிலையங்களில் மொத்தம் 6290 மாணவர்கள் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இம்மாணவர்கள் தற்போது கீழ்க்காணப்படும் நிவாரண முகாம்களில் பின்வரும் எண்ணிக்கையில் உள்ளனர்.

வலயம் 0 –     535 மாணவர்கள்
வலயம் 01 –   1261 மாணவர்கள்
வலயம் 02 –   1401 மாணவர்கள்
வலயம் 03 –     912 மாணவர்கள்
வலயம் 04 –     907 மாணவர்கள்
வலயம் 05 –       99 மாணவர்கள்
சுமதிபுரம் நிவாரண முகாம்    156 மாணவர்கள்
வீரபுரம் நிவாரண முகாம்    116 மாணவர்கள்
தர்மபுரம் நிவாரண முகாம்    136 மாணவர்கள்
IDP பாடசாலைகள்   583 மாணவர்கள்
புல்மோட்டை நலன்புரிநிலையம்  184 மாணவர்கள்
மொத்தம்    6290 மாணவர்கள்

பல்கலைக்கழக மட்டத்திலும் சில புத்திஜீகளுடன் இணைந்து நாம் தயாரித்த செயற்றிட்ட அறிக்கையின்படி மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு மாணவர்களுக்கும் 05 பிரதான பாடங்களை மையமாகவும் கொண்டு, ஒவ்வொரு பாடத்திற்கும் 06 மாதிரிவினாத்தாள்களையும்,  பாட அலகு ரீதியான 42 வழிகாட்டிக் கையேடுகளையும் வழங்க முடிவெடுத்துள்ளோம்.

பிரதானமாக புதிய பாடத்திட்டத்திற்கமைய கணிதம், விஞ்ஞானம்,  வரலாறு, தமிழ் மொழியும் இலக்கியமும்,  ஆங்கிலம் ஆகிய 05 பாடங்களுக்கும் இத்தகைய மாதிரிவினாத்தாள்களையும்,  கையேடுகளையும் வழங்க உத்தேசித்துள்ளோம்.

தங்கள் கல்லூரியில் அனுபவமிக்க ஆசிரியர்களின் துணையுடன் அவர்களால் தயாரிக்கப்பட்ட அல்லது புதிதாக தயாரித்துதர விருப்பமுள்ள மாதிரிவினாத்தாள்கள் –  குறிப்பிட்ட 05 பாடங்களுக்குமான கையேடுகள் அல்லது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முக்கியமான குறிப்புகள் காணப்படின் அவற்றின் புகைப்படப் பிரதிகள் ஆகியவற்றை எமக்கு அனுப்பி வைத்தால் எமது கல்வி அபிவிருத்தி சபையின் வழிகாட்டலுடன் அவற்றை வடிவமைத்து நலன்புரிநிலைய மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய முடியும்.

எனவே,  சுமார் 06 மாதங்களுக்கு மேல் பாடசாலை மண்ணையே மிதிக்காத நிலையில் சகலதையும் இழந்து, மிகவும் சிரமங்களின் மத்தியில் கல்வியைக் கற்றுவரும் அகதிமுகாம் மாணவர்களுக்கு இந்த சிறு உதவியை செய்யுமிடத்து அவர்களுக்கான மாபெரும் உதவியாக இருக்கலாம்.

எனவே,  இது விடயமாக கரிசனைக் காட்டி தங்கள் கல்லூரியில் திறமை வாய்ந்த,  அனுபவமிக்க ஆசிரியர்களினூடாக தயாரிக்கப்பட்ட மாதிரிவினாத்தாள்கள்,  பாட அலகு ரீதியான கையேடுகள் இருப்பின் இம்மாத இறுதிக்குள் அனுப்பி வைப்பீர்களாயின் பேருதவியாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்படும் வினாத்தாள்களிலும், கையேடுகளிலும் உரிய ஆசிரியர் பெயர்,  பாடசாலை முகவரி ஆகியவற்றையும் பிரசரித்தே வழங்குவோம்.

சேவைநல நோக்கில் – பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்காக உதவும் இத்திட்டத்திற்கு மேற்குறித்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

மாதிரிவினாத்தாள்களையும், கையேடுகளையும் அனுப்ப வேண்டிய முகவரி:

KALAPOOSHANAM  P.M. PUNIYAMEEN
14, UDATALAWINNA  MADIGE,
UDATALAWINNA – 20802

மிக்கநன்றி
தங்கள்

கையொப்பம் -கலாபூசணம் புன்னியாமீன்
(சிந்தனைவட்டம்)
02.09.2009

மேலதிக வாசிப்புக்கு
http://thesamnet.co.uk/?p=17063

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 Comments

  • சட்டம் பிள்ளை.
    சட்டம் பிள்ளை.

    // யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 415 பாடசாலைகளுக்கும் இலங்கையில் சகல மாவட்டங்களைச் சேர்த்த தமிழ் பாடசாலைகளுக்கும், கண்டியிலும் கொழும்பிலும் பிரபல்யம் மிக்க தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்தோம். ஆனால், வேதனைக்குரிய விடயம். ஒரு பாடசாலையிலிருந்தாவது அல்லது தனியார் கல்வி நிறுவன ஆசிரியரிடமிருந்தாவது எமக்கு ஒரு பதிலாவது வரவில்லை.//

    அறிவை வழங்குவதற்கும் கஞ்சத்தனமா? அல்லது சமூக உணர்வின் புதிய வெளிப்பாடா?

    Reply
  • முஹம்மட் பரீட்
    முஹம்மட் பரீட்

    வன்னி அகதி மாணவர்களுக்காக வேண்டி சிந்தனை வட்டத்துடன் இணைந்து தேசம் நெட்ஆற்றும் பணி மிகவும் உயர்வானது.

    வன்னி முகாம் மாணவர்கள்பற்றி அதிகமாக பேசப்பட்டாலும்கூட மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்ததக்கூடிய திட்டமிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது குறைவாகவே உள்ளன. இவ்வருடம் சாதாரண தரத்தை எழுத உள்ள மாணவர்கள் மேலதிக கற்றலுக்கு வசதிகள் இன்றி மிகவும் சிரமப்படுவதை அவதானிக்க முடிகிறது.

    இத்தகைய மாணவர்களுக்கு தங்களால் வழங்கப்படும் வசதிகள் நிச்சயமாக மிக்க பயனுடையதாகவே இருக்கும். அதே நேரம் ஐந்து வினாப்பத்திரங்கள் மாத்திரம் நீங்கள் அனுப்புவதால் அந்த மாணவர்களின் அறிவுப்பசிக்கு நிறைவான தீனியாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது. இதைப்பற்றி தேசம் நெட் மேலும் கரிசணை காட்டினால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது எமது தாழ்மையான கருத்து.

    நிவாரணக்கிராம மாணவர்களுக்கு நேரடியாக கற்பித்தலில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக

    முஹம்மட் பரீட்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    // விமர்சனங்கள் மேற்கொள்வது இலகு.பத்திரிக்கை அறிக்கைகள் வெளியிடுவது இலகு. ஆனால் ஆக்கபூர்வமான ஒரு செயல்திட்டத்தை நடைமுறைபடுத்தும் போது அதற்கு மானசீகமான முறையில் ஒத்துழைப்பு வழங்குவது மிககுறைவு என்பதை இம்முற்சிக்கான அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.// தேசம்நெற்.புன்னியாமீன்.

    ஆமாம். நிதர்சனஉண்மை. உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன். பல்லியின் வார்த்தைகளில் சொன்னால் அன்னக்காவடி. குமாரியின் வார்த்தைகளில் சொன்னால் கையால்ஆகாத குற்றவுணர்வுள்ள மனிதர்களாக…..
    காலம் கடந்தாவது ஒரு சிறுதொகையாவது “லிட்டில் எயிட்” க்கு அனுப்பிவைக்கிறேன்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    நன்றி சந்திரன்ராஜா.
    மேற்குறித்த செயற்த்திட்டம் தேசம் நெற்றினாலும் சிந்தனை வட்டத்தினராலும் முன்னெடுக்கப்பட்டது. லிட்டில் எயிட் ஆல் அல்ல.

    இந்த திட்டத்திற்கு உதவி செய்ய விரும்புவர்கள் உதவி செய்ய ஒரு இரு வாரங்களே உள்ளது இருவாரங்களில் இந்த திட்டம் செயற்ப்பாட்டில் இருக்கும் என்பதை தெரியப்படுத்த விரும்புகிறோம். எமக்கு கிடைத்த பணத்துடன் எத்தனை மாதிரி வினாத்தாள்கள் செய்ய முடியுமோ அத்தனையே செய்யப்படும்.

    5ம்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசு நிவாரணத் திட்டத்திற்கு லிட்டில் எயிட் மற்றும் இலங்கை இஸ்லாமிய பட்டதாரிகள் அமைப்பினராலும்
    உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

    Reply
  • முஹம்மட் பரீட்
    முஹம்மட் பரீட்

    வன்னி நிவாரணக் கிராமங்களின் நிலையை நேரில் பார்க்கும் இடத்து அங்குள்ள மக்களுக்கு அத்தியவசிய தேவைகளுக்கான சகல வசதிகளும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. உடை, மருந்து வகைகள், உணவு வகைகள் மக்களுக்குத் தேவையான அளவு கிடைக்கின்றன.

    மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை நோக்கும் இடத்து அரசாங்கத்ததால் ஓரளவுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரம், தொண்டர் நிறுவனங்கள் மாணவர்களுக்கான உடைகள், பாதணிகள், அப்பியாசப் புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கி வருகின்றன. ஆனால், அம்மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த திட்டமிட்ட நடவடிக்கைகள், குறைவாகவே உள்ளன. விசேடமாக நிவாரணக்கிராம ஆசிரியர்கள், மேலதிக கற்பித்தலுக்காக வேண்டி உசாத்துணை நூல்கள் இன்றி கஸ்டப்படுகின்றனர்.

    அரசாங்கப் பரீட்சையை எழுத உள்ள இம்மாணவர்கள் பெருமளவில் பாடத்திட்டத்தை நிறைவு செய்யாமலே இருப்பதை காணமுடிகின்றது. இந்நிலையை கருத்திற் கொண்டே அம்மாணவர்களுக்கான பயிற்சியை அதிகரிப்பதற்கு அதிக அளவிலான மாதிரிப்பயிற்சிகள் தேவைப்படுகின்றன. இம்மாதிரிப் பயிற்சிகள் முழுமையான பாடத்திட்டத்தை தழுவிய வகையில் (தரம் 10 உற்பட) அமைந்தால் அதிக பயனுடையதாக இருக்கலாம். எனவே டிசம்பரில் பரீட்சை எழுத உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக அமையும்.

    கல்வியமைச்சின் ஏற்பாட்டின் கீழும், சில தொண்டர் நிறுவனங்களின் ஏற்பாட்டின் கீழும் பல்கலைக்கழக மாணவர்கள், தெற்குப்பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர். இந்த வழிகாட்டல்கள் குறிப்பிட்ட சில நிவாரண கிராமங்களுக்கு மட்டுமே போய் சேர்கின்றன. அதே போல் இல்லாமல் அனைத்து நிவாரண கிராமங்களுக்கும் இங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் தங்கள் உதவிகள் போய் சேர வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். இதனையும் கருத்திற் கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

    மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த தற்போதைய நிலையில் இது போன்ற திட்டங்களைத் தவிர வேறு இல்லை. எனவே ஐந்து வினாத்தாள்களுடன் மாத்திரம் உங்கள் சேவையை மட்டுப்படுத்தி விடாதீர்கள்.

    முஹம்மட் பரீட்
    பேராதனைப் பல்கலைக் கழகம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    சந்திரா பல்லிக்கு இலக்கிய அறிவோ அல்லது எழுத்து நாகரிகமோ தெரியாது; யாதார்த்தம் மனிதர்களது அன்றாட பேச்சுமுறை மட்டுமே தெரியும் என்பதால் இப்படியான (அன்னகாவடி) வார்த்தைகள் அடிக்கடி வந்துவிடுகிறது; அது தவறான வார்த்தையாயின் தணிக்கை செய்துவிடுங்கள்; இருப்பினும் இந்த செயற்திட்டத்துக்கு தாங்கள் உதவியதும் அதை இங்கே பதிவில் இட்டதும் பலரையும் உள்வாங்க முயற்ச்சிக்கும் என நினைக்கிறேன்;

    Reply
  • சட்டம் பிள்ளை
    சட்டம் பிள்ளை

    //chandran.raja காலம் கடந்தாவது ஒரு சிறுதொகையாவது “லிட்டில் எயிட்” க்கு அனுப்பிவைக்கிறேன்.//

    //T Sothilingam மேற்குறித்த செயற்த்திட்டம் தேசம் நெற்றினாலும் சிந்தனை வட்டத்தினராலும் முன்னெடுக்கப்பட்டது. லிட்டில் எயிட்ஆல் அல்ல. இந்த திட்டத்திற்கு உதவி செய்ய விரும்புவர்கள் உதவி செய்ய ஒரு இரு வாரங்களே உள்ளது இருவாரங்களில் இந்த திட்டம் செயற்ப்பாட்டில் இருக்கும் என்பதை தெரியப்படுத்த விரும்புகிறோம். எமக்கு கிடைத்த பணத்துடன் எத்தனை மாதிரி வினாத்தாள்கள் செய்ய முடியுமோ அத்தனையே செய்யப்படும்.//

    கணக்கிலக்கம் ஒன்றை அறிவித்தால் நன்றாக இருக்குமல்லவா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பல்லி! இங்கு இலக்கியஅறிவோ எழுத்துநாகரீகமோ முக்கியமல்ல மனிதநேயமே கவனிக்க படவேண்டியது. அது நிறையவே உங்களிடம் இருக்கிறது. குறை கண்டு கொள்வதற்கு எதுவுமே இல்லை. அல்லது நீங்கள் விட்ட எழுத்துப் பிழையை துணிந்து நின்று ஜெயபாலன் திருத்துவாரா?
    எங்களை விட நீங்கள் உயர்ந்தவரே!. எந்தவித தாழ்வுமனப்பான்மையும் வேண்டாம் முன்பிருந்தது போலவே செயல்படுங்கள். மனிதநேயம் ஓங்கட்டும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சட்டம்பிள்ளை வங்கிகணக்கு இலக்கம் முகவரி எல்லாமே “லிட்டில் எயிட்லில்” அமத்திப்பார்தால் எல்லா விபரமும் வரும். கொடுக்கிறவனுக்கு கேட்கிற உரிமையும் உண்டு என்பதை மானசீகமாக தேசம்நெற் ஏற்றுக்கொள்கிறது. சகல கணக்கு வழக்குகளையும் சல்லிக்காசு பிசகாமல் உங்கள் முன் பார்வைக்கு வைத்திருக்கிறது. இது தான் நவஉலகம்.

    Reply
  • சட்டம் பிள்ளை
    சட்டம் பிள்ளை

    //வங்கிகணக்கு இலக்கம் முகவரி எல்லாமே “லிட்டில் எயிட்லில்” மத்திப்பார்தால் எல்லா விபரமும் வரும். //
    அது “லிட்டில் எயிட்ன் கணக்கு
    //மேற்குறித்த செயற்த்திட்டம் தேசம் நெற்றினாலும் சிந்தனை வட்டத்தினராலும் முன்னெடுக்கப்பட்டது. லிட்டில் எயிட் ஆல் அல்ல.// என சோதிலிங்கம் குறிப்பிடுகிறார்.

    எனவே யாதும் பங்களிப்புகள் வழங்குவதாயின் யாருக்கு எப்படி வழங்குவது? புரியவில்லை….

    ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

    தொடர்பு விபரங்கள்:

    பிரித்தானியாவில்:

    த ஜெயபாலன் : 0044 208 279 0354 அல்லது 0044 7800 596 786 அல்லது thesam97@hotmail.com

    ரி சோதிலிங்கம் : 0044 7846 322 369 அல்லது sothi@btinternet.com

    இலங்கையில்:
    பி எம் புன்னியாமின் : 0094 812 493 892 அல்லது pmpuniyameen@yahoo.com

    2009ம் ஆண்டு ஆகஸ்ட் புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு எம்மால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிப் புத்தகங்கள், கணக்கறிக்கைகள் போன்ற விபரங்களை தேசம்நெற் வாசகர்கள் பெறவிரும்பினால் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுடன் தொடர்புகொள்ளுமிடத்து பி.டி.எப். வடிவில் 126 பக்கங்கள் கொண்ட அவ்வறிக்கையை அனுப்பி வைப்போம்.—புன்னியாமின்

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    முஹம்மட் பரீட் – பேராதனைப் பல்கலைக் கழகம்.
    குழுவினரின் கருத்துக்களுக்கு நன்றி
    0044 7846 322 369 – sothi@btinternet.com

    Reply
  • புன்னியாமீன்.
    புன்னியாமீன்.

    //அறிவை வழங்குவதற்கும் கஞ்சத்தனமா? அல்லது சமூக உணர்வின் புதிய வெளிப்பாடா?// – சட்டம் பிள்ளை

    சட்டம் பிள்ளையின் இக்கேள்விக்கு எனக்கு விடை வழங்கத் தெரியாது. நிவாரணக் கிராம மாணவர்களுக்கு வழங்கவென ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் டியுட்டுகள் கேட்டே இலங்கையிலுள்ள அனைத்துத் தமிழ் பாடசாலைகளுக்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் தபாலிட்டேன். அவர்களுள் ஒருவராவது பதில் வழங்கவில்லை. இச்சம்பவம் உண்மையில் வேதனையைத் தந்தது. அதேநேரம், கண்டியிலும் கொழும்பிலும் மிகப் பிரபல்யம் பெற்ற சில டியுசன் ஆசிரியர்களிடம் நான் தொடர்புகொண்டு அவர்கள் மாணவர்களுக்கு வழங்கும் டியுட்டின் பிரதிகளை கேட்டேன். தருகின்றேன் என்றார்கள். தரவில்லை. சிலநேரங்களில் அவர்களின் இன உறவுகள் அவ்வளவாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். ஆனாலும், இந்த விடயத்தை அனைத்துத் தமிழ் மக்களும் உணர்வுபூர்வமாக சிந்திப்பது காலத்தின் தேவையாகும்.

    நிவாரணக் கிராமங்களில் இருக்கும் சுமார் 70ஆயிரம் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்படைகின்றதென்றால் இதன் எதிரொலி தற்போது புலப்படாது. இன்னும் சில ஆண்டுகள் சென்ற பின்பு வெளிப்படலாம்.

    புன்னியாமீன்.

    Reply
  • புன்னியாமீன்.
    புன்னியாமீன்.

    முஹம்மட் பரீட் இன் கருத்தினை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றோம். உண்மையிலேயே நிவாரணக் கிராமங்களிலுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டியது அனைவருக்கும் கடமையே. இவர்களது கல்வித் தரத்தில் இடைவெளி ஒன்றை விட்டு விட்டால் பிற்காலத்தில் கல்விநிலையில் சமூக ரீதியில் ஒரு பாதிப்பு ஏற்பட இடமுண்டு.

    வவுனியா நிவாரணக் கிராமங்கள் தொடர்பாக அப்பிரதேச கல்வி அதிகாரிகளுடன் நாம் தொடர்புகொண்டு கதைத்த நேரத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தக்கூடிய வழிமுறைகளையே அவர்கள் எம்மிடமிருந்து எதிர்பார்த்தனர். இதற்கமையவே முதற்படியாக தரம் 05 மாணவர்களுக்கான வழிகாட்டல்களை மேற்கொண்டோம். எம்மைப் பொறுத்தவரையில் எமது மனசாட்சியுடன் ஒப்புநோக்கும்போது எம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எமக்கு பாரிய திருப்தியையே அளிக்கின்றது. இம்மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. வெட்டுப்புள்ளி சம்பந்தப்பட்ட பிரச்சினையாலேயே அது தாமதமாவதாக அறியமுடிகின்றது. இம்முடிவுகள் வெளிவந்தவுடன் எமது நடவடிக்கையின் வெற்றிää தோல்விகளைத் தீர்மானித்துக் கொள்ள முடியும்.

    பரீட் – நீங்கள் குறிப்பிட்டது போல எமது செயற்றிட்டம் ஒரு குறிப்பிட்ட நிவாரணக் கிராமத்தை மாத்திரம் மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படவில்லை. அனைத்து நிவாரணக் கிராமங்களையும் கருத்திற் கொண்டு கல்வித் திணைக்களத்தினால் தரப்பட்ட மாணவர்கள் தொகைக்கேற்பவே 6290 மாணவர்களுக்கும் நாம் உதவிகளை வழங்கின்றோம். எனவே அனைத்து மாணவர்களுக்கும் எமது வேலைத்திட்டத்தின் கீழ் உதவிகள் போய்ச்சேரும். அதேநேரம், குறிப்பிட்ட மாணவர்கள் இந்த இடைக் காலத்துக்குள் மீள்குடியமர்த்தப்பட்டால் மீள்குடியமர்த்தப்பட்ட இடங்களுக்கு எமது மாதிரிவினாத்தாள்களை அனுப்ப விசேட ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளோம். இது ஒரு விசேட அம்சமாகும்.

    அதேநேரம், மாணவர்களின் தற்போதைய கல்வித்தரத்தை ஆராய்ந்து படிப்படியாக அம்மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தக்கூடிய வகையிலேயே நாம் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதற்கான நிதி வசதிகள் எமக்குக் கிடைக்கவில்லை. இதனாலேயே எமது திட்டம் தாமதித்தது. ஐந்து வினாத்தாள்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையேற்பட்டது. நிதியினைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி லண்டனில் ஜெயபாலன், சோதிலிங்கம் மற்றும் நண்பர்கள் தம்மாலான உச்ச நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இலங்கையில் நானும் இது தொடர்பாக பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டேன். எமக்கு உரிய ஆதரவு கிட்டவில்லை.

    பரீட்சை டிசம்பர் 2ஆம் வாரத்தில் நடைபெற இருப்பதினால் இன்னும் இரு வாரங்களுக்குள் யாதாவது நிதியுதவி கிடைக்குமிடத்து மேலும் சில மாதிரிவினாத்தாள்களை அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பதை எதிர்பார்க்க முடியாது. எப்படியாயினும் ‘விரலுக்குத் தக்க வீக்கம்’ என்பார்கள். அதே போல எமக்குக் கிடைக்கும் நிதியை வைத்தே நாம் திட்டமிட வேண்டியுள்ளது. ஏனெனில், நாம் பெரியளவில் பணவசதி படைத்தவர்களல்லர்.

    புன்னியாமீன்

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    My dear friends,
    It is very timely action. Our people still demonstrate that terrorism has not totally eliminated our values. Sri Lankans are really great. Pl publish the account numbers.

    :::::::::::::::::::::::
    இலங்கையில் சிந்தனை வட்டத்தின் வங்கிக் கணக்கிலக்கம்
    கணக்கின் பெயர்- CV PUBLISHERS (PVT) LTD
    வங்கி PAN ASIA BANK- KATUGASTOTA BRANCH
    கணக்கிலக்கம்-201664380116

    Reply
  • செல்வன்
    செல்வன்

    வவுனியா நிவாரணக் கிராமங்களில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியவர்களின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும். பரீட்சை திணைக்களம் இன்று (31.10.20090 காலை 10 மணியளவில் வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளரிடம் பெறுபேறுகளை கையளிக்கிறது.

    இதேவேளை பரீட்சை திணைக்களத்தின் http://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தினூடாகவும் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.

    இங்கு பரீட்சைக்கு தோற்றியோருக்கான வெட்டுப்புள்ளி 111 எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவிக்கிறது.

    Reply

  • Warning: printf(): Too few arguments in /home/u126436249/domains/thesamnet.co.uk/public_html/wp-content/themes/deus/functions/comments-custom.php on line 29

    […] http://thesamnet.co.uk/?p=17333 […]

    Reply