தாய்நாட்டைக் கட்டியெழுப்ப சகல இலங்கையரும் நாடுதிரும்ப வேண்டும் நேபாளத்தில் ஜனாதிபதி அழைப்பு

pr-nep.jpgசுதந்திர மடைந்துள்ள தாய்நாடு உங்களை வரவேற்கத் தயாராகவுள்ளது. தாய்நாட்டைக் கட்டியெழுப்ப வெளிநாடுகளிலுள்ள சகல இலங்கையர்களும் நாட்டுக்குத் திரும்ப வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேபாளத்திலிருந்து பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நேபாளத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந் நாட்டில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்தபோதே இத்தகைய அழைப்பை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி:-

தாய் நாடு தற்போது முழுமையாக மீட்கப்பட்டு சகல இன, மத மக்களும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மீள நாடு திரும்பி தாய்நாட்டைக் கட்டியெழுப்ப உரிய பங்களிப்பினை வழங்க வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்படி சந்திப்பு நேபாளம் காத்மண்டு நகரில் இடம்பெற்றுள்ளதுடன் இலங்கை யைச் சேர்ந்த வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு மேலும் தெரிவிக்கையில்:

நான் கடந்த முறை நேபாளத்திற்கு வரும்போது இலங்கையில் தாய்நாட்டை மீட்கும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எனினும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட நாட்டின் தலைவராக நான் இம்முறை நேபாளம் வந்துள்ளேன். தாய்நாட்டை பாரிய அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதே எனது அடுத்தகட்டச் செயற்பாடு. அந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு வெளிநாடுகளில் வாழும் சகல இலங்கையர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

தமது அறிவு, திறமை, உழைப்பு ஆகியவற்றை தாய்நாட்டின் எதிர்கால நலனுக்காக உபயோகப்படுத்த சகல இலங்கையர்களும் அணிதிரள வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் எமது பெருமளவிலான படை வீரர்கள் பலியாகியுள்ளதுடன் பெருமளவிலானோர் அங்கவீனமாகியுமுள்ளனர். இத்தகைய தியாகங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் நாடு முழுமையான அபிவிருத்திக்குள்ளாக்கப்பட வேண்டும்.

“கிழக்கின் உதயம்” கருத்திட்டத்தின் மூலம் கிழக்கிலும் “வடக்கின் வசந்தம்” கருத்திட்டத்தின் கீழ் வடக்கிலும் தற்போது பாரிய அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. யுத்தத்தினால் இடம் பெயர்ந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்தும் பணிகளும் துரித ப்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கிகளை ஏந்திய வடக்கு சிறுவர்கள் தற் போது புத்தகங்களை ஏந்தி பாடசாலை செல்லும் நிலை உருவாக்கப் பட்டுள்ளது. பயங்கரவாதத்தினால் உருக்குலைக்கப்பட்ட அவர்களது எதிர்பார்ப்புக்கள் இன்று நிறைவேறி வருகின்றன.

நாடு பிளவுபட்டிருந்தால் அங்கு ஒருபோதும் தேசிய ஒற்றுமை நிலவ முடியாது. இன்று ஐக்கிய இலங்கையில் சகல இனமும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இலங்கையர் கெளரவமான இனமாக மதிக்கப்படும் நிலை தற்போது உருவாகியுள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, நிமல் சிறிபால டி சில்வா, திஸ்ஸகரலியத்த ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *