புலத்தின் பருப்புகள் வன்னி மண்ணில் வேகுமா? : ரி சோதிலிங்கம்

வன்னி முகாம்களில் உள்ள மக்களுடன் நாம் தொடர்ச்சியாக உரையாடி வருவதையும் எம்மால் முடிந்த அளவு உதவிகளை மேற்கொண்டு வருவதையும் தேசம்நெற் வாசகர்கள் அறிந்திருப்பீரகள். அவர்களுடைய தேவைகளுடன் ஒப்பிடும் போது நாம் வழங்கிய உதவிகள் மிகச் சொற்பம். இந்த உதவிகள் அவர்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதிலும் எமது குற்ற உணர்வுகளை குறைத்துக் கொள்ள உதவியது. நாம் தொடர்ச்சியாக உரையாடும் போதுதான் புலம்பெயர்ந்த மக்கள் எவ்வளவுதூரம் வன்னி முகாம் மக்களில் இருந்து அன்னியப்பட்டு உள்ளார்கள் என்பதை உணர முடிந்தது. அந்த மக்களிடம் உள்ள அரசியல் தெளிவும் இராஜதந்திரமும் எந்தப் புத்தகத்தை படித்தாலும் கிடைக்காது. அதனால்தான் மக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று புரட்சியை முன்னெடுத்த கம்யூனிசத் தலைவர்கள் கூறி வைத்தனர்.

ஆனால் அங்கு புலிகள் மக்களை மந்தைகளாகவும் மண்மூட்டைகளாகவும் பயன்படுத்தினர். இங்கு புலத்தில் புலி ஆதரவாளர்கள் புலிகளைக் காப்பாற்ற வன்னி மக்களை பிளக்மெயில் செய்தனர். கம்யூனிசத்தை பின்பற்றுவதாகவும் புரட்சியை முன்னெடுப்பதாகவும் வாய்ச்சவடால் மட்டும் விட்டவர்கள், வன்னி மக்களை அரசின் கைகளில் முற்றாகத் தள்ளிவிட்டனர். புலிகள் மக்களைப் பலிகொடுத்து இலங்கையரசை அம்பலப்படுத்த முயன்றனர். புலம்பெயர்ந்த இந்த வாய்ச்சவடால் புரட்சியாளர்கள் வன்னி முகாம் மக்களை அவலத்திற்குள் விட்டுவைத்தால் இலங்கையரசை அம்பலப்படுத்தலாம் என்றனர். இலங்கையரசை அம்பலப்படுத்த முன்னையவர்கள் மக்களைப் பலிகொடுக்கலாம் என்றனர். பின்னையவர்கள் அவ்வளவு மோசமில்லை வன்னிமுகாம் மக்களை அவலத்திற்குள்ளளேயே வைத்திருக்கலாம் என்றனர்.

நாங்கள் உரையாடியவரை வன்னி மக்கள் இலங்கையரசு பற்றியும் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றியும் மிகத் தெளிவாகவே உள்ளனர். அவர்கள் இலங்கையரசு தமிழ் மக்களுடைய அரசு இல்லை என்ற உணர்வையே கொண்டுள்ளனர். அயல் வீட்டுக்காரன் பாதிக்கப்பட்ட தம்மையும் பிள்ளைகளையும் பராமரிப்பதாகவே மக்கள் உணருகின்றனர். தாங்கள் அடைக்கலம் பெற்ற இடத்தில் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது என உணர்கின்றனர். கிடைப்பதைப் பெற்று தங்களை ஸ்தீரப்படுத்தி தங்கள் காலில் நிற்க முயற்சிக்கின்றனர்.

தங்கள் காலில் உறுதியாக நின்று பலம்பெற்று தங்களை ஸ்தீரப்படுத்திய பின் அவர்கள் தாம் அயல்வீட்டாருடன் சேர்ந்து வாழ முடியுமா அல்லது தனித்து வாழ்வதா என்ற முடிவை எடுப்பார்கள். ஆபத்து என்று வந்தால் அவசரத்திற்கு ஓடிவருபவன் அயல்வீட்டான். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள புலத்து தமிழர்கள் ஆபத்திற்கு வரமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களின் உணர்வுகளும் அந்த மக்களில் இருந்து அன்னியப்பட்டுவிட்டது. இவர்கள் ஒப்புக்கு மாரடிப்பவர்களாகி விட்டனர்.

கடைசியாக வன்னி வெள்ளை முள்ளி வாய்க்காலில் நடைபெற்ற யுத்தத்தின்போது புலிகளின் பக்கத்தே இருந்த பலர் புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது மாவீரர் குடும்பங்கள் என்ற ஒரு கணிப்பு இருந்தது. அதுமட்டுமல்ல இவர்கள் மாவீரர் குடும்பங்கள் என்றபடியால் அவர்கள் அந்த வன்னிப் பிரதேசத்தையும் புலிகளையும் விட்டு வெளியேற முடியாமல் இருப்பவர்கள் என்றும் இவர்களில் பலர் புலிகளுடன் முக்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்ற கணிப்பும் இருந்தது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

இது உண்மையல்ல என்பதும் சாதாரண மக்களையே பலிக்காளாக்கினர் என்பதும் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்த கிளிநொச்சிக்கு இராணுவம் வந்தபோதே அப்போதிருந்து மக்கள் புலிகளின் துப்பாக்கி சூட்டுக்களினிடையேயும் புலிகளின் கட்டுப்பாட்டை மீறியும் பலர் ஓடித்தப்பியுள்ளனர்.

இறுதிக் காலத்தில் இருந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் புலிகள் தமது அழிவுக்காலத்தின் போது மக்களை வலுக்கட்டாயமாக, குழந்தைகளை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு ஒருவர் என்ற தேசவிடுதலை கோசத்தில் இழுத்துப் போயிருந்த அந்த பிள்ளைகளின் தாய் தந்தையர் உறவுகளே. பலர் இந்த யுத்தத்தின் அந்திம காலத்தில் தாமும் இறந்துள்ளனர்.

இவர்களில் பலர் தமது குழந்தைகளை என்றுமே போராட்டத்திற்கு அனுப்பியவர்கள் அல்லர். அல்லது புலிகளின் போர்களுக்கிடையே என்றும் எந்தவித நேரடி ஈடுபாடுகளும் இல்லாமல் இருந்தவர்கள். தமது குழந்தைகளை புலிகள் பறித்துப் போனபோது தமது குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றிட வேண்டும் என்ற துடிப்பே இந்த பெற்றோர்கள் தமது மற்றய குழந்தைகளையும் தம்மோடு வைத்திருந்து இறந்து போயுள்ளனர். அல்லது அவர்கள் இறந்து போக குழந்தைகள் அநாதைகளாகியுள்ளனர்.

பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மீளப் பெறும் முயற்ச்சிகள் சரிவராது என அறிந்தபோது தாம் தப்பியுள்ளனர். சிலர் பாதிக் குடும்பத்தை அனுப்பிவிட்டு பாதி தமது குழந்தைகளை மீட்டு எடுத்துப்போக இருந்தனர். இன்னும் சில இளைஞர்கள் தமது சகோதரங்களை மீட்டு எடுத்துப்போக, இந்த களத்தில் தமது உடன் பிறந்த சகோரதங்களை இந்த நிலையில் விட்டுவிட்டுப்போக முடியாமல் தவித்தனர். இதன்போது தமது உயிர்களையும் இழந்தனர். இந்த உறவுகள் புலத்தில் உள்ள உறவுகள் போன்று ஒப்புக்கு மாரடிக்கவில்லை. வாடகைக்கு உணர்ச்சி வசப்படவில்லை. தங்கள் உயிரைப் பணயம் வைத்து தம் உறவுகளை அழைத்துச் செல்ல தவிப்புடன் நின்றன. அவர்கள் வன்னிமண் பூர்வீகமண் என்ற புலத்து தமிழர்களின் அர்த்தமற்ற கோசங்களுக்காக செல் மழை பொழிந்த யுத்தப் பிரதேசத்தில் நிற்கவில்லை. மரணத்தின் எண்ணிக்கையை வைத்து அரசை அம்பலப்படுத்தும் மூன்றாம்தர அரசியலுக்காக அந்த மக்கள் மரணிக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டனர். அதற்கு புலத்தில் உள்ள புலி ஆதரவுத் தலைமைக்கு முழுமையான பொறுப்புண்டு.

புலிகளில் பெரும்பான்மையானவர்கள் தமது கட்டுப்பாட்டை மீறி தப்பிப் போகும் மக்களை கொலை செய்துள்ளனர். வே பிரபாகரனின் மகன் சார்ஸ்ள்ஸ் அன்ரனியும் அவருடைய இன்னுமொரு தளபதியும் மிக மோசமான முறையில் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக வன்னி முகாமில் உள்ளவர்களுடன் உரையாடியதில் தெரியவருகின்றது. ‘எங்களை விட்டுவிட்டு நீங்கள் தப்பிச் செல்வதா’ என்ற உணர்வில் அவர்கள் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். கடைசி நேரத்திலும் தமது இயக்கத்திலிருந்து தப்பிப் போனவர்களையும் தமது கட்டுப்பாடுகளை முன்பு (சில காலங்களுக்கு முன்னர்) மீறியவர்கள் இந்த வன்மையான போர் காலத்தின்போதும் சுட்டு கொன்று தமது பழிவாங்கல்களையும் செய்துள்ளனர்.

வன்னி மக்கள் இலங்கை இராணுவத்திடம் மனிதாபிமானத்தையும் மனிதநேயத்தையும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் இலங்கை இராணுவம் தம்மை அழிக்க முற்படுகின்ற ஒரு இராணுவமாகவே பார்த்தனர். ஆனால் தங்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் தங்களைப் பணயம் வைத்து தங்கள் மரணத்தின் மீது அரசியலை நடத்த முற்பட்டபோது மக்கள் எதிரியின் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

புலிகளின் பல மாவீரர் குடும்பங்களும் புலிகளின் பல முக்கிய ஆதரவாளர்களும் ஏற்கனவே இந்த யுத்த பிரதேசத்தை விட்டு வெளியேறிவிட்டனர். பலர் படகுகள் மூலம் தப்பி ஓடிவிட்டனர். எஞ்சிய முக்கிய தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களில் சில முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டு விட்டனர். இன்னும் சிலர் சிறையில் உள்ளனர்.

முகாம்களை விட்டு வெளியேறிய பலர் தமது உறவினர்கள் வீட்டிலும் அவர்கள் வீட்டு முற்றத்தில் புதிய ரென்டுகளும் பந்திகள் போட்டும் தங்கியுள்ளனர். இவர்களில் பலருக்கு வாடகை கொடுக்க பணம் கிடையாது. அடிப்படை உடுப்புக்கள வாங்க பணம் கிடையாது. வன்னிக்குள்ளே போனால் என்ன நடக்குமோ என்ற மனப்பயம் நிறைந்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து தாம் தப்பி ஓடும்போது தம்மை துரோகிகள் என்று பட்டமளித்த ஜபிசி போன்ற ரேடியோக்கள் தொலைக்காட்சிகள் பற்றி அறியாதவர்கள் தலைவரைக் காப்பாற்ற போராட்டம் செய்தவர்கள் போருக்கு பண உதவி செய்தவர்கள் இன்று எங்கு போயினர் என்று அங்கலாய்த்துள்ளனர். புலிகள் அழிந்ததும் போராட்டம் முடிஞ்சுதாமோ?? என்று கேட்கின்றனர். ‘நாம் யார்? இந்தப் போராட்டம் யாருக்காக நடாத்தினார்களாம்? எங்கே இவர்கள்?’ என்ற ஏக்கம். இவர்கள் தங்களுக்காகவா மக்களுக்காகவா இவ்வளவு காலமும் இயங்கினார்கள் என்று ஏமாற்றமடைந்தவர்களாக உள்ளனர்.

தமக்காக ஒருவேளை என்றாலும் உணவு கொண்டுவந்து சேர்த்த சிங்கள மக்கள் பெளத்த துறவிகள் முஸ்லீம்கள் பற்றி நன்றியுடன் பேசுகிறார்கள் ஆனால் வன்னி மக்களின் நலனில் எவ்வித அக்கறையும் இன்றி அந்த மக்களின் பெயரில் அரசியல் நடத்துபவர்களை அந்த மக்கள் எப்போதும் ஏற்றுக் கொள்வார்களா என்பது ஒன்றும் கடினமான கேள்வி அல்ல. மீண்டும் மீண்டும் அந்த மக்கள் இனவாத அரசு நோக்கியும் அதன் கைகளிலுமே விடப்பட்டுள்ளனர். அந்த மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற பொறுப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குமே எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது என்ற வகையிலேயே புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

வன்னி மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் பங்கெடுக்காமல் அவர்களை புரட்சிக்கான தமிழீழத்திற்கான கூலிப்படையாகப் பயன்படுத்தும் புலத்தின் பருப்புகள் வன்னி மண்ணில் வேகுமா?

Show More
Leave a Reply to Maaveeran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

 

7 Comments

 • Maaveeran
  Maaveeran

  sothy , Do you know the meaning of PULAM? pulam means Field

  Reply
 • senthil
  senthil

  தமது கட்டுப்பாட்டை மீறி தப்பிப் போகும் மக்களை கொலை செய்துள்ளனர். வே பிரபாகரனின் மகன் சார்ஸ்ள்ஸ் அன்ரனியும் அவருடைய இன்னுமொரு தளபதியும் மிக மோசமான முறையில் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக வன்னி முகாமில் உள்ளவர்களுடன் உரையாடியதில் தெரியவருகின்றது………….

  இது முற்றிலும் உண்மையானது பிரபாகரன் தான் இவ்வளவுகாலமும் அரசாண்டது காணாது என்று தனது இளவரசனையும் முன்னர் அமீர் தம்பி என விழித்தது போல் சாள்ஸ் அன்ரனியையும் தம்பியென புலிகளின் மூத்த உறுப்பினர்களை அழைக்கப்பண்ணி வணங்காமண்ணுக்கு இளவரசனாக்க முற்பட்டு மண் கவ்விப்போனார். தனயனின் கட்டுப்பாடில்லாத ஏனைய போராளிகளை மதிக்காமை, தம்பியை கவ்விப்பிடித்த இன்னும் சிறுபட்டாளமும் சேர்ந்தே இந்த மக்களைநோக்கி சுட்டு பிரளயம் செய்ததாக புலிகளின் உறுப்பினரும் உறுதிப்படுத்துகிறார். எந்த மக்களுக்காக போராட வெளிக்கிட்டோமோ அந்த மக்களையே சுட்ட தறிகெட்டதனத்துக்காக இந்த இயக்கத்தில் இருந்ததுக்காகவே வெட்கப்படுவதாக கூறினார். இந்த படுகொலைகளில் இளவரசனுடன், இதயன், எழில்செல்வன், திருமலை, பிரதீப் எனச்சில பெயர்களை சொன்னார். இதில் எவரும் உயிருடன் இல்லை. திருமலை என்பவரை முகாமில் வைத்து மக்களே அடித்து கொன்றதாக சொன்னார். இவை அரசனின் ஏவலில் நடந்தவை. இங்கு போராட்டம், புலி அழிவுக்கு முழுக்காரணம் குடும்ப ஆட்சியை பிரபாகரன் கொண்டுவர முயன்ரமையே. ஆனால் பிரபாகரனை காப்பாற்ற சிலர் உண்மையாக மக்களுக்காக களத்தில் நின்றவர்களை துரோகியாக்க முற்படுகின்றனர். உண்மை ஒருநாள் வெளிக்கும்.

  Reply
 • Pirabakaran
  Pirabakaran

  //you know the meaning of PULAM? pulam means Field//Maaveeran
  opposite to uk parliment is a fighting field for pulampeyar people it is a pulam.

  Reply
 • விசுவன் 1
  விசுவன் 1

  புலத்து மக்கள் கொஞ்சம் விழித்து கொள்ள தொடங்கியிருக்கிறார்கள்! புலிகளுக்கு ஆதரவான யாழ் களத்தில் வந்த ஒருவரின் கருத்து….

  இப்படி ஒரு கருத்து இதில் எழுதுவதில் பெரிய உடன்பாடு இல்லை என்றாலும் இப்போது எழுதாது விட்டால் பின்னர் எப்போது?? என்பதால் எழுதுகிறேன். சேரவேண்டியவர்களுக்கு இந்த செய்தி போய்ச் சேர்ந்தால் அதுவே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும். சரி இனிமேல் விசயத்துக்கு வருவோம்.

  சிறீலங்கா கொலைகார அரசின் இனப்படுகொலைத் தாக்குதல்களும் அதற்கு எதிராக விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதல்களும் கூர்மையடைந்த இந்த வருடம்(2009) ஜனவரி மாதம் தொடக்கம் புலம்பெயர் தேசங்களில் வரலாற்றில் இல்லாத பெரிய எழுச்சியும் ஒன்றுதிரளலும் ஏற்பட்டது. இந்தகாலப் பகுதியில் புலம்பெயர் தமிழ்மக்களிடம் பெரியஅளவில் நிதித்தரட்டல்கள் பல்வேறு தரப்பினராலும் விடுதலையின் பெயரால் நடாத்தப்பட்டன.ஒவ்வொரு தேவைகளுக்கும் வித்தியாசமான ஆயுதங்களின் தேவைகளுக்காகவும் என்று சொல்லிச் சொல்லி மிகப்பெரிய தொகை நிதி சேகரிக்கப்பட்டது. புலம்பெயர் மக்களும் தங்களுடைய தாயகபோராட்டம் காப்பாற்றப் படவேண்டும் என்பதற்காகவும் போராட்டத்தை காத்துநின்ற மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தங்களால் இயன்றதைவிடவும் பல மடங்கு அதிகமான நிதியை அள்ளி வழங்கினார்கள்.

  ஆனால் இந்த நிதியை கையாள்பவர்களுக்கு போராட்டத்தின் முடிவு இரண்டு மாதங்களுக்கு முன்னமே ஓரளவுக்கு தெரிந்திருந்ததால் இவர்கள் தங்கள் கையிலிருந்த நிதியை அனுப்புவதில் தாமதங்களையும் இழுத்தடிப்புகளையும் செய்துகொண்டு இருந்தார்கள். அவர்கள் நினைத்ததைப் போலவே அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே முள்ளிவாய்க்காலில் மே மாதம் 19ம் திகதியுடன் மௌனமாகியது. சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு பெரியதொகை பணம் புலம்பெயர் நிதியை கையாள்பவர்களுடையதும் அவர்களின் பினாமிகளின் கைகளிலும் தேங்கியது. மிகவும் கேவலமான முறையிலும் ஈவுஇரக்கம் இல்லாத முறையிலும் இவர்கள் அந்த நிதியை தங்களுடையது ஆக்கிக்கொண்டார்கள். புலம்பெயர் தேசங்களில் பனிக்குள்ளும் மழைக்குள்ளும் இரவுபகலாக தொழிற்சாலைகளிலும் தெருக்களிலும் கடைகளிலும் வேலைசெய்து எமது மக்களால் வழங்கப்பட்ட நிதி மிருகத்தனமாக கொள்ளையிடப்பட்டது.

  இவர்களால் திருடப்பட்ட பணம் இப்போது சென்னையிலும் திருச்சியிலும் கொழும்பிலும் வீடுகளாகவும் விடுதிகளாகவும் சில ஈனங்களால் வாங்கப்பட்டு வருகின்றது. சிலர் கொஞ்சம் வித்தியாசமாக மத்தியகிழக்கு நாடுகளில்கூட சொத்துகளை வாங்கிக் குவிக்கும் அற்பத்தனமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புலம்பெயர் நாடுகளில்கூட கடைகளையும் வீடுகளையும்கூட வாங்கிக் குவிக்கின்றனர். இவர்கள் அனைவரின் பெயர்களும் அவர்கள் வாங்கிக் குவிக்கும் சொத்துக்களின் விபரங்களும் மிகவிபரமாக சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மாமன் மச்சான் சகோதரங்களின் பெயர்களில் வாங்கப்படும் சொத்துக்களின் விபரங்கள் தெளிவாக சேகரிக்கப்பட்டு வருகின்றது. எந்தவிதமான காரணங்களும் இவர்களின் இந்த பகல்கொள்ளைக்கும் திருட்டுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இவர்களின் கைகளில் நிதியாகவும் சொத்துகளாகவும் இப்போது இருப்பது எமது மக்களின் சொத்து. அவர்கள் வியர்வைசிந்தி நொந்து உழைத்தபணம்.

  எனவே இவர்கள் உடனடியாக தங்கள் கைகளில் உள்ள மக்கள் சொத்தை முகாம்களில் அல்லலுறும் மக்களுக்கும் முகாம்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு கைகளில் ஏதுமில்லாமல் அனுப்பப்படும் மக்களுக்கு வீடுகளை வாங்கவும் தொழில் தொடங்கவும் கொடுக்க முன்வரவேண்டும். எமது போராட்டத்தின் கவசமாக நின்ற அந்த வன்னிமக்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இந்த நிதி செலவழிக்கப்பட வேண்டும். மேலும், பல புலம்பெயர் தமிழ்மக்கள் வங்கிகளில் பெரும்தொகையை கடனாக பெற்று கொடுத்தார்கள். தங்களுடைய நண்பர்கள் மூலமும் கடன்பெற்றும் தேசியநிதிக்கு கொடுத்தார்கள்.இதனை அவர்கள் கடனாகவே வழங்கினார்கள். அவர்களின் கடன்தொகைக்கு மாதாமாதம் கட்டவேண்டிய தொகையை இப்போது புலம்பெயர் மேய்ப்பர்கள் கட்டுவதை நிறுத்திவிட்டார்கள்.அவர்கள் தங்களின் மாதவருமானத்தைவிட அதிகமான தொகையை கடனுக்காக கட்டி அல்லலுறுகிறார்கள்.

  மக்களின் நிதியை திருடி வைத்திருப்பவர்கள் இவர்களுக்கும் தாங்கள் வைத்திருக்கும் நிதியை கொடுக்க முன்வரவேண்டும். அதிவிலை கூடிய ஆடம்பர வாகனங்களில் திரியும் இந்த மக்கள்சொத்து திருடர்கள் மக்களுக்கே அனைத்தையும் வழங்க வேண்டும். இவற்றில் கேவலமாக இந்த திருடர்கள் இப்போது தங்களை ஏதாவது ஒரு அணியில் (நாடுகடந்தகுழு, வட்டுக்கோட்டைக்குழு, மக்கள்பேரவைக்குழு, இத்தியாதி… இத்தியாதி) தங்களை மறைத்து நிற்கிறார்கள். இவர்கள் எங்கு நின்றாலும் என்னநிலையில் இருந்தாலும் யாருடைய தயவில் இருந்தாலும் யாரால் அங்கீகாரம் பெற்று இருந்தாலும் இவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்கள் இவர்களை அடையாளம்காண வேண்டும். அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.

  Reply
 • nallurkanthan
  nallurkanthan

  Dont just blame the Tamil terror groups only for the suffering of the people. We have to condemn GG, Thantha Selva, Amir and other leaders who showed comunal politics among the Tamil young generation and motivated them for armed culture.

  Reply
 • BC
  BC

  விசுவன், புலிகளின் ஆதரவு தளத்தில் இப்படி கருத்து வருவது ஆச்சரியமாக உள்ளது. விழித்து கொள்ள தொடங்கியிருக்கிறார்கள்.

  Reply
 • மகுடி
  மகுடி

  //BC on November 1, 2009 9:40 pm விசுவன், புலிகளின் ஆதரவு தளத்தில் இப்படி கருத்து வருவது ஆச்சரியமாக உள்ளது. விழித்து கொள்ள தொடங்கியிருக்கிறார்கள்.//

  யாழ் தளத்தின் உரிமையாளர் , முன்னால் புளொட்காரர். அவர்கள் விழித்துக் கொண்டே , அடுத்தவர்களை படு குழியில் தள்ளியவர்கள். பல படித்த மொக்குகள் அங்கு இன்னும் கனவுக் கதை எழுதுகின்றனர்.

  Reply