தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்

hri_Logoதமிழ் பேசும் கட்சிகள் – தமிழ் மற்றும் இஸ்லாமியக் கட்சிகளின் மாநாடு நவம்பர் 19, 20, 21ம் திகதிகளில் சூரிச்சில் இடம்பெறுகிறது. இம்மாநாடு தமிழ் பேசும் கட்சிகளிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு என்று சொல்லப்பட்ட போதும் அவர்கள் எட்ட நினைக்கும் புரிந்துணர்வு தமிழ் பேசும் கட்சிகளிடையேயானதல்ல என்ற சந்தேகங்கள் எழ ஆரம்பித்து உள்ளது. இம்மாநாடு நவம்பர் 12ல் லண்டனில் நடாத்த திட்டமிட்டு இருந்த போதிலும் பின்னர் சூரிச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இம்மாநாட்டில் ஓரிரு கட்சிகளின் தலைவர்கள் தவிர ஏனைய 20 தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரியவருகிறது.

இம்மாநாட்டுக்கு இன்னமும் ஒரு சில தினங்களேயே உள்ள நிலையில் இம்மாநாடு யாரால் நடத்தப்படுகின்றது என்பது பற்றியோ அதன் நோக்கம் பற்றியோ எவ்விதமான உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அழைக்கப்பட்ட கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களுக்குமே தெரியாமல் இம்மாநாடு பற்றிய விபரம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டுக்கு முன்னணியில் நின்று அழைப்புவிட்டவர்களின் விபரம் தற்போது ஓரளவு தெரியவந்துள்ளது. இம்மாநாட்டை சட்டத்தரணி மனோகரன் என்பவரே ஏற்பாடு செய்வதாக சொல்லப்பட்டு வந்தது. ஈஎன்டிஎல்எப் அமைப்பைச் சேர்ந்த இவர் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ரிஎம்விபி அமைப்புடன் இணைந்து செய்ற்பட்டவர் எனத் தெரியவருகின்றது. பெரும்பாலும் அழைப்புகள் சட்டத்தரணி மனோகரனூடாகவே விடுக்கப்பட்டும் இருந்தது. சட்டத்தரணி மனோகரனுக்குப் பின்னணியில் மற்றுமொரு ரிஎம்விபி முக்கியஸ்தரான கிருஸ்ணன் பின்னணியிலுள்ளர். ஆனால் இந்த மாநாட்டில் மனோகரனுக்கு வழங்கப்பட்ட பொறுப்பையே மனோகரன் மேற்கொண்டதாகவும் ஏனைய விடயங்களில் அவர் ஈடுபட்டு இருக்கவில்லை என்றும் தெரியவருகின்றது. இம்மாநாட்டின் பின்னணயில் தமிழர் தகவல் நடுவம் இருப்பதாக இந்நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ள முஸ்லிம் கட்சி ஒன்றின் பிரதிநிதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இம்மாநாட்டு ஏற்பாட்டில் தமிழர் தகவல் நடுவம் முக்கிய பங்கு வகிப்பதாக லண்டனில் உள்ள தமிழ் அரசியல் கட்சிவட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது. மேலும் மனோகரன் தமிழர் தகவல் நடுவம் இந்தியாவில் செயற்பட்ட வேளையில் அதனுடன் அங்கு தொடர்புபட்டு இருந்துள்ளார். மனோகரனுடைய கடந்தகால அரசியல் செயற்பாடுகள் பற்றி பல்வேறு விமர்சனங்களும் உள்ளது.

இம்மாநாட்டில் கட்சியின் தலைவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற கடுமையான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ளதாக இதில் கலந்துகொள்ள உள்ளவொரு கட்சிப் பிரதிநிதி தேசம்நெற்க்கு தெரிவித்தார். இலங்கையில் இருந்து வரவுள்ள கட்சிகளின் தலைவர்களின் பயணச் செலவு ஒரு வாரகாலம் தங்குவதற்கான செலவு என்பனவற்றை மாநாட்டு ஏற்பாட்டாளர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர். அண்ணளவாக இம்மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு 100 000 பவுண்கள் வரை ஆகும் என மதிப்பிடப்படுகின்றது.

இவ்வாறான ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான பொருளாதார பலமும் அரசியல் பலமும் இலங்கை இந்திய அரசுகளுக்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரிஎப் போன்ற புலி ஆதரவு அமைப்புகளுக்குமே உள்ளது. ஆனால் இம்மாநாட்டு ஏற்பாடுகளில் தமிழர் தகவல் நடுவத்தின் ஈடுபாடும் இலங்கையின் ஆளும் கட்சி வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களும் இலங்கை அரசு இம்மாநாட்டின் பின்னணியில் இல்லை என்பதை தெளிவாக்குகின்றது.

இங்கு வரவுள்ள கட்சிகளின் லண்டன் அமைப்பாளர்கள் சிலருடன் உரையாடியதில் இந்திய அரசும் இம்மாநாட்டின் பின்னணியில் இல்லையென உறுதியாகத் தெரிவிக்கின்றனர். இந்த மாநாட்டை ஒழுங்கு செய்யக் கூடியவர்கள் பொருளாதார பலமுடைய பிரிஎப் ம் அரசியல் ஆளுமையைக் கொண்ட தமிழர் தகவல் நடுவமும், மட்டுமே. ஆனால் தங்களுக்கென்று ஒரு தலைமைத்துவ ஆளுமையைக் கொண்டிராமல் தலைமறைவாக இருந்து அவர்களின் பினாமிகளால் வழிநடாத்தப்படும் அமைப்பு 100 000 பவுண் செலவில் இம்மாநாட்டை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. மேலும் பிரிஎப் பின்னணியில் ஏற்பாடு செய்யும் ஒரு கூட்டத்திற்கு இத்தமிழ் பேசும் தலைமைகள் அழைப்பையேற்று வர முற்படாது.

ஆக இந்த மாநாட்டின் பின்னணியில் தமிழர் தகவல் நடுவம் மட்டுமே எஞ்சி நிற்கின்றது. ஆனால் இவ்வாறான ஒரு பாரிய செலவில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்கின்ற வல்லமை தமிழர் தகவல் நடுவத்திற்கு இல்லை என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்பாகக் கருதப்படும் தமிழர் தகவல் நடுவத்தின், அதன் தலைவர் ஆர் வரதகுமாரின் அழைப்பையேற்று இந்த தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் வரமாட்டார்கள் என்பதும் உறுதியானது. ஆகையால் தமிழர் தகவல் நடுவத்திற்குப் பின்னணியில் உள்ளவர்களே இம்மாநாட்டை ஏற்பாடு செய்கின்றனர் என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாததாகின்றது.

அந்த வகையிலும் மேலதிகமாக தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்களும் மேற்கு நாடுகள் குறிப்பாக பிரித்தானிய அரசு இம்மாநாட்டின் பின்னணியில் இருப்பதாக தெரிவிக்கின்றன. அதனாலேயே ஆரம்பத்தில் லண்டனில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பின்னர் பிரித்தானிய அரசின் ஈடுபாடு வெளிப்படாமல் தவிர்க்கப்படுவதற்காக சூரிச்ற்கு இம்மாநாடு இடமாற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மாநாட்டின் திரைக்குப் பின்னால் உள்ளவர்கள் யார்?

International Working Group on Sri Lanka என்ற அமைப்பே இம்மாநாட்டை ஒழுங்கு செய்வதாகவும் Initative on Conflict Prevention through Quiet Diplomacy, தமிழர் தகவல் நடுவம் ஆகியனவே இம்மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்வதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது.

International Working Group on Sri Lanka என்ற அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்ற அமைப்பு. அதன் தலைவராக Richard Reoch என்பவர் இருந்துள்ளார். அதன் பொதுச் செயலாளராக Peter Bowling என்பவர் இருந்துள்ளார். இவ்வமைப்பு இலங்கை மனித உரிமைகள் விடயம் தொடர்பாக மேற்கு நாட்டு அரசுகளுக்கு தகவல்களை பரிமாறியுள்ளனர். ஒரு சில அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மிகமோசமான மனித உரிமைகளை மீறிய இறுதி யுத்தம் தொடர்பாக இவ்வமைப்பு மௌனமாகவே இருந்துள்ளது. இவ்வமைப்புப் பற்றி டிசம்பர் 11 1998ல் அமெரிக்க கொங்கிரஸ்ற்கு அதன் தலைவர் Richard Reoch பின்வருமாறு கூறுகிறார் ‘The International Working Group on Sri Lanka is an independent, non-partisan network of organisations and individuals concerned with the promotion of human rights, development and peace in Sri Lanka. It has a management board in London and an international network that currently comprises humanitarian and advocacy groups in Asia, Australasia, Canada, Europe and the USA as well as Sri Lankan organisations working in the fields of development, peace and human rights.” இவ்வமைப்பின் சார்பில் Richard Reoch யை பிரித்தானிய அரசின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் (Department for International Development of the UK Government) இரு வார வேலைத் திட்டத்தில் இலங்கைக்கு அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தகவல் நடுவத்துடன் இம்மாநாட்டின் ஏற்பாடுகளைக் கவனிக்கும் Initative on Conflict Prevention through Quiet Diplomacy அமைப்பு கனடாவைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற Human Rights Internet அமைப்பின் ஒரு பிரிவாகும். 2007ல் இவ்வமைப்பு ஒரு மில்லியன் டொலர் நிதித் திட்டத்தைக் கொண்டிருந்தது.  இவ்வமைப்பிற்கு கனடிய சர்வதேச அபிவிருத்தி முகவரகம் நோர்வே வெளிநாட்டு அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் நிதி வழங்குகின்றன. இவ்வமைப்புகள் நிதியுதவிக்காக அழைப்பிதழில் சேர்க்கப்பட்டது என்று தங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக அழைக்கப்பட்ட கட்சி ஒன்றின் பிரமுகர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். Human Rights Internet அமைப்பு பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://www.hri.ca/pdfs/HRI%20Annual%20Report%202006-2007.pdf

Human Rights Internet அமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒன்றான Initative on Conflict Prevention through Quiet Diplomacyஅமைப்பு செயற்படுகின்றது. இதன் ஆலோசணைக் குழுவில் பல்வேறு நர்டுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளனர். பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் பெர்னாட் கோச்னர், இந்தியாவில் இந்திர் குமார் குஸ்ரால், முன்னால் இலங்கை ஜனாதிபதி சத்திரிகா குமாரதுங்க ஆகியோர் அவர்களில் சிலர். இவ்வமைப்பின் வேலைத்திட்டங்களில் தமிழ் முஸ்லீம் தேசியக் கட்சிகளை இயக்கங்களை வன்முறையற்ற வழிகளில் பலப்படுத்துவதும் ஒன்றாக உள்ளது. மேலும் சர்வதேசத் தொடர்புகளை ஏற்படுத்தி பேச்சுவார்த்தைகளில் சர்வதேச தொடர்பை பேணுவதும் அதன் வேலைத்திட்டங்களில் ஒன்றாக உள்ளது.

ஆனால் இப்பின்னணிகள் பற்றியெல்லாம் முழுமையான இருட்டடிப்பைச் செய்து இம்மாநாடு ஒழுங்கு செய்யப்படுவதன் நோக்கம் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இம்மாநாட்டில் பங்குகொள்ளும் கட்சிகளுக்கே இவை பற்றிய முழுமையான விபரங்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லீம் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று புரிந்துணர்வை ஏற்படுத்தி பொதுக்கூட்டமைப்பை உருவாக்கவே என்று மட்டும் சொல்லப்பட்டே அனைத்து தமிழ், முஸ்லீம் கட்சிகளும் அழைக்கப்பட்டு உள்ளன.

கட்சித் தலைவர்களுக்குள் மட்டும் ஏற்படுத்தப்படும் புரிந்தணர்வு இலங்கையில் நீண்டகாலம் புரையோடிப் போயுள்ள இன முரண்பாட்டைத் தீர்க்க எவ்வாறு உதவும். தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் முஸ்லீம் தேசியக் கட்சிகளுக்கும் சிங்கள தேசியக் கட்சிகளுக்கும் ஏற்கனவே காலத்திற்குக் காலம் புரிந்துணர்வும் பொது உடன்பாடும் ஏற்பட்டு வந்திருக்கின்றது. அடுத்து வருகின்ற தேர்தலிலும் அந்தப் புரிந்தணர்வும் பொது உடன்பாடும் ஏற்படும். ஆனால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு மட்டும் எப்போதும் தீர்வு எட்டப்படுவதில்லை. அதற்கு சுவிஸ் சொக்லேட் கொடுத்து திரைமறைவில் இன்னுமொரு மாநாடு எதற்கு என்ற கேள்வியை எழுப்பியே ஆக வேண்டியுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு மேற்குலகுக்கு எதிரான அணியில் அணிவகுத்து நிற்பதாலும் மேற்குலகின் ராஜதந்திரங்களுக்கு ஏற்பட்ட தோல்வியினாலும் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றதா என்ற கேள்வி எழுப்பப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த ஓய்வுபெறப் போகின்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை அமெரிக்க உள்ளக பாதுகாப்பு அதிகாரிகள் அவரை ஒரு சந்திப்பிற்கு அழைத்து இருந்தனர். ஆனால் இச்சந்திப்பு போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைக்கானது என்ற அடிப்படையில் செய்திகள் வெளியாகின. ஆனால் இச்சந்திப்பு சரத் பொன்சேகாவை மகிந்த சகோதரர்களுக்கு எதிராக கொம்பு சீவிவிடும் ஒரு யுக்தியாக இருக்கலாம் என்றும் கருத இடமுண்டு.

எப்போதும் திறந்த பொருளாதாரக் கொள்கைகொண்ட மேற்குலகுக்கு உவப்பான ஒரு கட்சி ஐக்கிய தேசியக் கட்சி. ஆளுமையான தலைவரில்லாமல் உள்ள அக்கட்சிக்கு இன்று ஜனாதிபதி மகிந்தவை எதிர்க்கின்ற ஆளுமையை உடையவராக வரக்கூடியவர் சரத்பொன்சேகாவே என்ற வகையில் அமெரிக்க உள்ளக பாதுகாப்பு அதிகாரிகளின் சந்திப்பு குறிப்பிடத்தக்கது. இவற்றின் பின்னணியிலேயே தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் மாநாடும் நோக்கப்பட வேண்டும். இன்று மேற்குலகு இலங்கையில் ஒரு ரெஜிம் சேன்ஜ்யை எதிர்பார்க்கின்றது. புலித் தேசியமும் ரெஜிம் சேன்ஜ் ஒன்றை செய்வதன் மூலம் தனது மனதை ஆற்றிக் கொள்ளத் துடிக்கின்றது.

புரஜக்ற் பீக்கன் திட்டத்தை சர்வதேச நாடுகள் மகிந்த ராஜபக்ச அரசோடும் இந்தியாவுடனும் இணைந்து வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளன. Initative on Conflict Prevention through Quiet Diplomacy யின் மொழியில் சொல்வதானால் தமிழ் தேசியவாதத்தை வன்முறையற்ற வழிக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன. அடுத்து மகிந்த ராஜபக்சவின் ரெஜிமைச் சேஞ் பண்ணுவதை நோக்கி நகர்கின்றன.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்ற கணக்கில் தமிழ் தலைமைகள் சரத்பொன்சேகாவின் கீழ் அணிதிரள காரணங்களைக் கண்டுபிடிக்க ஆரம்பித்துள்ளனர். முஸ்லீம் காங்கிரஸ் ஏற்கனவே யுஎன்பி அணியில் அணிவகுத்து ஏனைய தமிழ் கட்சிகளையும் சிறுபான்மைக் கட்சிகள் என்ற ஸ்லோகத்தில் அணிவகுப்பதற்கான அடுக்குகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. புலித் தேசியம் பேசிய கட்சிகளுக்கும் நபர்களுக்கும் சர்தபொன்சேக்காவை ஏற்றுக் கொள்வதில் சற்றுத் தயக்கம் இருக்கும். ஆனாலும் மேலக மலையக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் ஏற்கனவே சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடித்துள்ளார். மனோ கணேசனுடன் தோளுக்குத் தோள் கொடுத்த சிறிதுங்க ஜெயசூரிய ஜனாதிபதித் தேர்தலில் நின்றாலும் மனோ கணேசன் சரத் பொன்சேகாவின் அணியிலேயே நிற்கப் போகின்றார். ஏனையவர்கள் பலரும் தங்களுக்கான காரணங்களைத் தேடத் தொடங்கி உள்ளனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கும்படி கேட்கும் தமிழ் கட்சிகள் அந்த சுயநிர்ணய உரிமையை வழங்க முன்வருபவர்களுக்கு வாக்களிக்கும்படி எப்போதும் கோரியதில்லை. இப்போதும் அவ்வாறு கோரப் போவதில்லை என்ற நிலையே தென்படுகின்றது.

இலங்கையில் இனமுரண்பாடுகளை கூர்மைப்படுத்தி தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதில் முக்கிய பங்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் உண்டு. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனவுக்கு உண்டு. ஆனாலும் தமிழ் தேசியவாதிகள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பின்னேயே அணிதிரண்டனர். தற்போதும் சரத் பொன்சேகா, கோதபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக மனித உரிமை மீறல், யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்களை வைத்த தமிழ் தேசியம், சரத்பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் நின்றவுடன் அவருக்கு பாவ மன்னிப்பு வழங்கி அவரின் கீழ் அணி திரளத் தயாராகின்றனர்.

சாதாரணமாகவே பேரினவாதக் கட்சிகளில் தொங்கிக் கொள்ளும் இலங்கை சிறுபான்மையினக் கட்சிகளுக்கு, தமிழ் பேசும் இனங்களின் கட்சிகளுக்கு இப்போது சூவிஸ் சொக்லேட்டு தருவதாக மேற்குலகம் சமிஞ்சை செய்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. காலம்காலமாக இருந்துவருகின்ற பேரினவாத நடவடிக்கைகள் இன்னமும் தொடரவே செய்கின்றது. இவை தமிழ் மக்களின் உள்ளங்களையும் இதயங்களையும் வென்றெடுப்பதற்கு மாறாக அவர்களை இலங்கை அரசியலில் நம்பிக்கை அற்றவர்களாக்கி உள்ளது. இந்த நம்பகமற்ற சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கி தமிழ் மக்களின் வாக்கு வங்கியை வைத்து பேரம் பேசுவதற்கு தமிழ்த் தேசிய சக்திகள் தயாராக உள்ளன.

சரத்பொன்சேகா என்ன கோத்தபாய ராஜபக்சவே வந்து ஐக்கிய தேசியக் கட்சியில் நின்றாலும் அவர்கள் தங்கள் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றால் யாருக்கும் வாக்களிக்கும்படி கோருவார்கள். தமிழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் என்றைக்காவது எண்ணி இருந்தால் எப்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வாக்களிக்கும்படி கோரியிருக்க முடியும்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள கட்சிகளும் அதன் தலைவர்களும் :

இம்மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (ரிஎம்விபி), தமிழரசுக் கட்சித் தலைவர் சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மலையக மக்கள் முன்னணித் தலைவர் பொ சந்திரசேகரன், மேல்மாகாண மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் உட்பட 22 தமிழ் முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பேரியல் அஸ்ரப் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரியவருகின்றது. ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இம்மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பவில்லை என்றும் அக்கட்சியின் மற்றுமொரு உறுப்பினரே கலந்துகொள்வதாகவும் மேலும் தெரியவருகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஜேவிபி பா உ சந்திரசேகரன் ஆகியோர் எந்தவொரு கட்சியின் தலைவராகவும் இல்லாததால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகின்றது.

Show More
Leave a Reply to santhanam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

20 Comments

  • vinotharan
    vinotharan

    மக்களும்போராளிகளும் தமது அர்ப்பணிப்புக்களை கொடுத்த இந்த இரத்தம் காய முன்பே இந்த அர்ப்பணிப்புக்களை குறுகிய யுஎன்பி யின் அரசியல்லாபத்திற்கு தார்வார்கப்படுகிறதா? என்ற சந்தேகமே எழுந்துள்ளது.

    மக்களை அல்லது மக்களின் கட்ச்சிகளை ஒற்றுமைப்படுத்துவதாயின் இந்த ஒற்றுமைக்கான சில முயற்ச்சிகள் நாட்டில் எடுக்கப்பட்டது அதில் இலங்கை முஜ்லீம்காங்கிரசின் முன்முயற்ச்சிக்கு அடுத்தபடியாக இந்த முயற்ச்சிகளை நாட்டில் ஏற்ப்பாடு செய்திருக்கலாம் ஆனால் இது எல்லாவற்றையும் விட்டு விட்டு சுவிஸ்ல் இந்த மாநாடு அதுவும் என்ன மாநாடு எதற்காக என்ற எந்தவித அறிவித்தல்களும் இல்லாமல் நடாத்தப்படுவதும் இதில் உள்ள சூழ்ச்சிகள் என்ன> என்றும் சந்தேகங்கள் வலப்பெற்றுள்ளது.

    அண்மையில் லண்டன் வந்திருந்த ஜயலத் ஜயவர்தனே யின் கருத்துக்கு தமிழ் கட்சிகளை தாரை வார்க்கும் ஒரு பின்முயற்ச்சி நடப்பதாகவே இந்த சந்தேகமும் அதைவிட ராஜபக்சவை எதிர்க்கும் தமது சிற்றின்பத்தை ஒப்பேற்றும் நடவடிக்கையாகவுமே இந்த மாநாட பற்றிய சந்தேகங்கள் வலுக்கிறது இந்த யு என் பி தலைவர் தமிழர் தகவல் நடுவத்திற்கு வருகை தந்ததும் அதனை தொடர்ந்து இந்த மாநாட்டை நடாத்த பணங்கள் பெற்பட்டது என்ற சந்தேகம் இது ஒரு ஜரோப்பிய அல்லது அமெரிக் நாட்டின் பின்னணி இருப்பதையும் இந்த பின்னணிகளின் நோக்கம் ஒரு ஏகாதிபத்திய அரசின் எதிர்காலத்திட்டத்திற்கு இந்த புலம்பெயர் அறிவு ஜீவிகள் வழிகோலுவாதாகவே தென்படுகிறது.

    இதைவிட எத்னைள தடவைகள் தமிழர்களை ஏமாற்றிய சுதந்திரக்கட்ச்சியும் யுஎன்பி யும் இன்று இன்னோரு வேடம் போட்டு வந்துள்ளதை கடந்த யுஎன்பி தலைவரின் பேச்சுக்களிலும் அவரது லண்டன் ரேடியோ உரைகளிலும் அவதானிக்க முடிந்ததே

    இன்று எம்முன் உள்ள கேள்வி மக்களுக்காக தமிழர்களின் கட்ச்சிகளை ஒற்றுமைப்படுத்தும் நோக்கம் கொண்ட இந்த மாநாடும் மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் நிலைப்பாடுகளும் இதுவரையில் அந்த கட்ச்சிகளாலோ அல்லது ஏற்ப்பாட்டாளர்களாலோ வெளியிடாததும் இந்த மாநாடு என்ன பயனைத்தரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் இந்த மாநாடு முயற்ச்சி ஒரு முழுமைபெறாத முயற்ச்சியாக அமைந்து எதிர்காத்தின் இன்னோரு தவறாகவும் பதிந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் இதனால் இன்னுமொரு துரோகக் கும்பல் என்ற பெயரையும் வாங்கிவிடாது என நம்புவோம்.

    கடந்த 30 வருட போராட்ட அர்ப்பணிப்பை மகிந்தாவிடம் தமிழர்க்கான உரிமையை துருப்புச்சீட்டாக பயன்படுத்தலாமே தவிர யுஎன்பி மீளவும் ஆட்ச்சிக்குவர குறுகிய கட்சி மாற்றத்திற்கு பயன்படுத்திவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

    ரெலோவின் தற்போதய செயற்ப்பாடுகள் தன்னை ஒரு தனிக்கட்ச்சியாகவும் அரச சார்பான ஒரு அரசியற் தந்திரோபாய முயற்ச்சியிலும் இறங்கியிருப்பதும் இந்த சுவிஸ் மாநாட்டில் கலந்து கொண்டு ஒரு மேற்கத்தைய ஆதரவு மகிந்த எதிர்ப்பு மாநாட்டில் யு என்பி யினரின் பின்னணி கொண்ட மாநாட்டிலும் கலந்து கொண்டு சிக்கலில் மாட்டிக்கொள்ளாது எனவும் பேசப்படுகிறது.

    Reply
  • lamba
    lamba

    ஏன் மக்களுக்காக செயற்ப்படுபவர்கள் ஏன் உண்மையுடன் வெளிப்படையாக ஒற்றுமைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கவில்லை இத ஒன்றே போதும் வலுவான சந்தேகங்களுக்கு எமது அமைப்புக்களில் உள்ள குறை என்னவென்றால் இவர்களுக்கு தாம் பல்தேசிய கம்பனிக்குப் பின்னால் நிற்பதையோ அல்லத பல்தேசியக் கம்பனிகள் இவர்களை அறியாமலே இவர்களில் சவாரி செய்வதை இவர்கள் விளங்கிக் கொள்வதில்லை ஒரு ஊடகமாக தேசம் தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியது நேர்மையடன் எனத பாராட்டுக்கள்.

    Reply
  • Saturn
    Saturn

    அரசியலில் எப்போதும் திரைக்குப் பின்னால் நடப்பவை திரைக்கு முன்னால் மக்களால் ஏற்றுக் கொள்ளக்குடிய முறையில் மாற்று வார்தைகளில் பகிரங்கப் படுத்தப்படும். அதுவும் தமிழ் தேசியவாத அரசியலில் பொய்யும் பிரட்டும் தான் வேலைத்திட்டம். இதற்கு கட்சிகள், குழுக்கள், புலி எதிற்பு, புலி ஆதரவு, அரச எதிற்பு, அரச அதரவு என்ற வித்தியாசம் இல்லை.

    ஏன் கட்டுரையாளன் திரைக்குப் பின்னால் நடப்பவற்றை கண்டுகொள்வத்ட்கு முயற்சிக்கின்றார்? திரைக்கு பின்னால் இராவணன் வேடம் போட்டுக்கொண்டு திரைக்கு முன்னால் வந்து இராமனாக நடிக்க முடியாது. இவர்கள் திரைக்கு பின்னால் என்ன செய்தாலும், ஓரளவு அரசியல் விளங்குபவர்கள் திரைக்கு முன்னனல் நடிக்கும் நடிப்பின் சித்திரத்தை விளங்கிக் கொள்வார்கள். இவர்களை அம்பலப்படுத்துவதற்கு ஒன்றும் இல்லை இவர்கள் முழு நிர்வாணம்.

    இந்த கட்டுரை இதில் பங்கு கொள்பவர்கள் என்று பின்வருமாறு சொல்கின்றது, //” இம்மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (ரிஎம்விபி), தமிழரசுக் கட்சித் தலைவர் சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மலையக மக்கள் முன்னணித் தலைவர் பொ சந்திரசேகரன், மேல்மாகாண மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் உட்பட 22 தமிழ் முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.” //
    இவர்களுள் புலி ஆதரவு, புலி எதிற்பு, SLFP, UNP என அணைத்து திசைகளும் இருக்கின்றன. சிலபேர் தேர்தலில் UNP உடன் இணைவது தமிழ் மக்களுக்கு விடிவு என்பார்கள். இவர்களே இந்த மகாநாட்டை மர்மமான முறையில் ஒழுங்கு படுதியிருப்பர்கள். இப்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் மஹிந்த இன்னும் ஒருமுறை வெல்வது சாத்தியமா என்ற ஆய்வை செய்வார்கள். என்ன இருந்தாலும் டக்லஸ் நம்புவார் தனது மந்திரிப்பதவி நிரந்தரம் என்று. இதை விட இன்னும் பல சண்டைகளும் நடக்கும்.

    அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை. இந்த மகாநாட்டில் இவர்கள் ஒருமித்து ஒரு முடிவெடுத்தால் அது ஒரு புதினமாக இருக்க முடியாது. ஆனால் புலம் பெயர்ந்த புலி எதிற்பு குழுக்கள் ஒரு மகாநாடு ஏற்பாடு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த மகாநாடு புலி எதிர்ப்பை வேலை திட்டமாக அங்கீகரிக்க வேண்டும். எந்த ஒரு கட்சியோடும் தேர்தல் உடன்பாடுகளை நிராகரிக்க வேண்டும். இதன் முலம் யார் ஆட்சிக்கு வந்தாலும் “புலம் பெயர்ந்த தமிழருக்கான புலி எதிர்ப்பு மந்திரி” என்ற ஒரு பதவி எங்கள் கையில் இருக்கும். இதன் முலம் நாங்கள் விமர்சகர்கள் என்ற விமர்சனதிற்கு ஒரு முடிவு கட்டி ஆட்சி செய்யும் நிலைக்கு மாறுவோம்

    Reply
  • vinotharan
    vinotharan

    சற்றேன் இந்தக் கூட்டம் புலி எதிர்பாளர்களையும் உள்ளடக்கி முன்னாள் புலிகளே இதை நடத்துகிறார்கள் என்பததான் உண்மை இதற்குப்பின்னால் யுஎன்பி உள்ளதா?
    மக்களுக்காக மக்களுக்காக என்று கத்துவார்கள் ஆனால் மக்களுக்கு தெரியாமல்தான் பேசுவார்கள் சுவிஸ்ல் யார் இந்த கூட்டத்திற்கு போகிறார்கள் என்ன? பேசப்போகிறார்கள் என்பதெல்லாம் வெளியிடாமல் நடப்பது ஒரு கேலிக்குரிய கூத்தாகவே அமையப்போகிறது.

    இவர்கள் இந்தக் கூட்டத்தை நடாத்திவிட்டு பெரிய சிக்கலில் தாமும் மாட்டிக்கொண்டு இலங்கையிலிருந்து வருபலர்களை இலங்கை அரசிடமும் மாட்டிவிடப் போகிறார்கள் போலுள்ளது சிலவேளை இதில் சிலரை அரச எதிர்பாளர்களால் வாங்கவும் உத்தேசித்துள்ளார்களோ தெரியவில்லை எது எப்படி இருப்பினும் இதில் கலந்து கொள்ளும் சிலருக்காவது இலங்கையில் சில பிரச்சினைகளும் உருவாகலாம் என கொழும்பில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.

    காரணம் மகிந்தா இவர்கள் எல்லோரும் தன்னுடன் கதைத்துவிட்டு யுஎன்பி யடன் கூட்டு சேர்ந்தே இந்த கூட்டம் நடைபெறுவதாக உணரத் தொடங்கியுள்ளாராம் திரைமறைவில் நடத்தும் நோக்கம் சிலவேளை ஜரோப்பாவில் உள்ள சிலரையும் அவர்களது நாடகத்தையும் வெளிக்கொணரவும் இது அவசிமாகிறது.

    லண்டனில் உள்ள தமிழர் தகவல் நடுவம் அதன் இயக்குனர் வரதகுமாரும் இவ்வளவு காலமாக செய்து வந்த பணிகளும் அதன் பலாபலன்களும் பற்றிய ஆய்வு தேவையாக உள்ளது இவர்களின் உதவியால் தமிழர்கள் என்ன பெற்றார்கள்?

    Reply
  • thambi
    thambi

    சரி அவர்களும் வந்து ஜரோப்பாவை பார்த்து விட்டுப்போகட்டுமே ஒரு உல்லாசப் பயணமாக விடுங்கோ நடப்பவைகள் நடக்கட்டும் நல்லதாக நடந்து முடிந்தால்சரி

    Reply
  • naane
    naane

    எனக்கு சற்றே ஆச்சரியமாக இருக்கின்றது சட்டத்தரணி மனோகரன்,கிருஸ்ணன் எல்லாம் இன்னமும் இலங்கை அரசியலில் ஏதோ செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று நினைக்க. சட்டத்தரணி கொஞ்சக்காலம் ஈன்டில்ஃப் உடன் இருந்து எம்பி ஆக கனவு கண்டவர். கிருஸ்ணனுக்கு பின்னால் மிகப்பெரிய‌ அரசியல் பின்னணி உண்டு. பாலசிங்கத்தை இந்தியாவிற்கு கூட்டிக்கொண்டு போனதே இவர்தான். பின்னர் புலி உமா, பிரபாவாக உடைய உமாவின் பக்கம் எடுத்து புளொட்டின் லண்டன் பொறுப்பாளராக இருந்தவர். கனக்க கதைக்க மாட்டார் ஆனால் பொல்லாத காரியவாதி. இப்ப இந்தக் கோஸ்டிகளையெல்லாம் சுவிஸ் கொண்டு வந்து என்ன வித்தை காட்டப் போகின்றார்களொ தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்‌

    Reply
  • palli
    palli

    நானே;;;;;;; இந்த மாயவனின் திருவிளையாடல் பலதை தேசம் ஏற்க்கனவே சொல்லிவிட்டது, இருப்பினும் இப்போதய இவரது செயல்பாடு இவர்தான் கருனாவின் மனசாட்ச்சி, இவர் சொன்னால் கருனா ஏதும் செய்வார், ஆனால் இவரை கருனாவுக்கு அறிமுகம் செய்தது பரந்தன் ராஜன், தற்போது இவருக்கு இந்தியாவுக்கு தடா? காரணம் ராசனுக்கு ஆப்பு வைத்ததால் மாயவன் கொழும்புடன் வாழ்க்கை நடத்துகிறார், இதையும் விட வவுனியா கழககாரரும் இவரது வவுனியா வரவை ஆவலுடன் எதிர் பார்க்கினமாம்; எல்லாம் அதுக்குதான், ஆக மாயவன் இப்போது கருனாவின் மனசாட்ச்சி மட்டுமல்ல; பிரபாவின் நிழலாக செயல்பட்ட பாலாபோல் கருனாவுக்கு மாயவன் ;
    தொடரும் மாயவன் லீலைகள்;;;

    Reply
  • santhanam
    santhanam

    மயாவனிற்கு பின்னால் இந்தியாவின் பெரியசக்தி ஒன்று செயற்படுகிறது அது தான் புலிகளையும் கையாணடது.

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    நேற்று சுவிஸ் புறூக்டோப் எனும் இடத்தில் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன் (பிள்ளையான்)உடன் சிலர் நடத்திய ஒரு சந்திப்பில் பிள்ளையான் தனது நிலைப்பாடு தொடர்பான கருத்தாடல்கள் இடம்பெற்றன. பொய்யான அரசியல் பேசாமல், யதார்த்தமாக தமது தவறுகளையும், தற்போதைய அரசியல் சூழலையும் மனம் விட்டு பேசியது பலரையும் கவர்ந்தது என நினைக்கிறேன். அவரது செயலாளர் அசாத் மெளலானா வயதுக்கு மேவிய அரசியல் அறிவோடு கருத்துகளை பகிர்ந்து வியக்க வைத்தார்.

    அனைத்து தரப்பு கேள்விகளுக்கும், ஒரு பழைய போராளியாக இல்லாமல், ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக பிள்ளையான் கருத்துகளை பகிர்ந்தது, நான் மட்டுமல்ல எவருமே சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. இறுதியில் அனைவரோடு உணவருந்தும் போது, அனைவரோடும் நெருக்கமாக உறவாடினார். மக்கள் தொண்டு செய்பவனுக்கு அது அழகு. அத்தோடு பெரிய வார்த்தை பிரயோகம் இல்லாமல், தனக்கு தெரிந்த விடயங்களை பகிர்ந்து கொண்ட விதம், கிழக்கு மாகாணத்தைப் பற்றி அதிக விடயங்களை தெரிந்து வைத்திருப்பதை அனைவருக்கும் உணர்த்தியது. அதற்கு அவரது போராட்ட வாழ்க்கையின் அனுபவங்கள் உறுதுணை செய்துள்ளன என என்னால் உணரமுடிந்தது.

    புலம் பெயர் தேசத்தில் உள்ளவர்கள், தமது பகுதிக்கு வந்து ஏதாவது செய்ய வாருங்கள் என்று அவர் அழைப்பு விடுத்த போது, புலம் பெயர் மக்கள் , சற்று தூரமாக இருக்கிறார்கள் என்பதை அவர் உணர்த்தினார். நம்பி வருவோருக்கு, என்ன வேணும் கேளுங்கள். என்னால் முடிந்ததை செய்கிறேன். முடியாததை தெளிவாக சொல்கிறேன் என்றது தமிழ் அரசியல்வாதிகளிடம் காண முடியாத நம்பிக்கை தரும் பதிலாக மட்டுமல்ல, நம்பகமான ஒரு அரசியல் கலப்பற்ற மனிதராக பலருக்கும் இனம் காட்டியது.

    சந்திப்பு முடிந்து வீடு திரும்பும் போது கிழக்கு மாகாணம், அனைத்து மாகாண ஆட்சிகளுக்கும் ஒரு முன் மாதிரியாக, அனைத்து சவால்களுக்கும் முகம் கொடுத்து, திகழும் எனும் நம்பிக்கை மனதுக்குள் ஏற்பட்டது.

    Reply
  • palli
    palli

    மாயவன் மாயையை பின் பார்ப்போம்;
    அதுக்கு முன் ஒன்றுசேரல் என்னும் படத்தின் பாடல் காட்ச்சி ஒன்றை படமாக்க வந்திருக்கும் நடிகர்கள் ;
    தோழர்;;; டக்கிளஸ்;
    ஜயா ;;;;சங்கரியர்;
    திருவாளர்;; சம்பந்தர்;
    செயலதிபர்;; சித்தாத்தர்;
    முதல்வர்,,,, பிள்ளையான்;
    தலைவர்;;;;;ராவூப்;
    மனிதவாதி;;; மனோ கனேசன்;
    இப்படி இன்னும் பலர் இங்கே வந்திருக்கிராக; ஆனால் பாடல்; இசை; அனைத்தையும் கொழும்பிருந்து மகிந்தா &கம்பெனி கவனிக்க ஒளிப்பதிவை மட்டும் மாயவனுடன் இன்னும் சில மாயவர்கள் சேர்ந்து கையாள சுன்ஸ்சில் இன்று ஆரம்பமாகும் இந்த பாடல் காட்ச்சி புலியின் சமரசம் உலாவும் இடமே என்பதுபோல் பல உலகநாடுகளை மையம் கொள்ளலாம்; சரி இது எமக்கு தேவையில்லாத விடயம் என வைத்து கொண்டாலும் பல்லியின் கேள்வி என்னவெனில் சிலர் நாடு கடந்த ரமில் ஈலம் கேக்கிறார்கள்; மிகுதிபேர்(சிலர்தான்) நாடு கடந்த ஒன்றுகூடல் வைக்கினம்; இவர்கள் இங்கு வந்த இடைவெளியில் அங்கு கருனா எத்த்னை பேருக்கு ஆப்பு வைத்திருப்பார் என நினைக்கும் போதும் இவங்க காமடி பண்ணுறாங்களா,? அல்லது காமடி வில்லன்களா?
    அல்லது அல்லது;;
    தொடரும் பல்லி;;

    Reply
  • palli
    palli

    அஜீவன் நீங்கள் கேட்ட கேள்விகளையும் அவர் சொன்ன பதில்களையும் எழுதினால் நாமும் தெரிந்து கொள்ளல்மாமே; அதேபோல் எனக்கும் சில கேள்விகள் அவரிடம் உண்டு; சிலவேளை அந்த கேள்விகள் கூட சிலரால் கேக்க பட்டிருக்கலாம்தானே,

    Reply
  • Naane
    Naane

    மாயவன் பற்றி முன்னர் நீங்கள் எழுதியவற்றை நான் படிக்கவில்லை ஆனால் இப்பவும் இலங்கை அரசியலில் மாயவனின் பங்கு என்னை அதிசயபட வைக்கின்றது. இவருக்கு இரண்டு மகன்மார்கள் இருந்தார்கள் இப்போது பிரிந்து அவுஸ்திரேலியாவில் என நினைக்கின்றேன்.(முகுந்தன், குமணன், என்ன இயக்க பற்று). இவருடன் தான் நான் நாகராசா, குமணன் ஆகியோரைச் சந்தித்தேன்.

    Reply
  • palli
    palli

    நான் உங்கள் வழி தனி வழி,
    என் வழியோ பொது வழி;

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    பல்லி, பிள்ளையானிடம் நான் கேள்வி கேட்டதை விட , அடுத்த நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலை நான் அவதானிக்க முயன்றேன். அவர் வானோலி பேட்டியில் கருத்து தெரிவிப்பதாக சொல்லியிருந்தார், இன்று அவரை அழைக்க முயன்றேன். கிடைக்கவில்லை. பின்னர் அவரே அழைத்து கருத்தரங்கு முடியட்டும் அதையும் சேர்த்து பேசலாமே என்றார். ஓகே சொல்லிவிட்டேன். உங்கள் கேள்விகளையும் எழுதுங்கள் கேட்டால் போச்சு…

    Reply
  • palli
    palli

    உன்மைதான் கேட்டால் போச்சு; என்ன போச்சு என்பதுதான் கேள்வியே; புரியவில்லையா? புரியாமல் கேட்டால்தான் அவர்களுக்கு பதில் சொல்ல சுலபமாக இருக்கும்; இருப்பினும் அஜீவன் உங்களின் நட்ப்புக்காய் இதோ ஒரு கேள்வி பிள்ளையானிடம் கேழுங்கள்;
    நீங்கள் வட கிழக்கு பிரிவு பற்றி என்ன முடிவில் இருக்கிறியள்? உங்கள் மாஸ்ரரின் யோசனைப்படி கிழக்கு தனிதான் எனில் இந்த கூட்டத்தில் நீங்கள் பங்குகொள்ள என்ன காரனம்?, கிழக்கும் வடக்கும் இரு நாடுகள். இரு நாட்டு தலைவர்களும் புரிந்துனர்வுடன் சுகம் விசாரிக்க வந்ததாக பல்லி எடுத்துக்கலாமா? இல்லை வடக்கும் கிழக்கும் இனைய இது ஒரு சந்தர்ப்பம் எனில் உங்கள் மாமா இதை ஏற்று உங்களை தொடர்ந்தும் முதல்வராய் பணிபுரிய அவர்களது கம்பனியில் இடம் தருவாரா?? இதுவே பல்லியின் கேள்வி;

    Reply
  • santhanam
    santhanam

    ரணில் காசுதந்து இணைப்பார் கொஞ்சம் பொறுங்கோ.

    Reply
  • thenaale
    thenaale

    Tamil, Muslim party heads in Zurich to find solution

    Leaders of all Tamil and Muslim political parties in Sri Lanka were in Zurich yesterday to attend a three-day conference on finding a lasting political solution to Sri Lanka’s ethnic conflict.
    The conference, organised by the Tamil Information Centre (TRC), commenced yesterday (19) and will conclude tomorrow.

    Representatives of the TNA, TULF, EPDP, CWC, UPF, DPF, PLOTE, TELO, ACRC, SLMC, TMVP, and EPRLF (both Naba and Varatha wings) participated.

    The London based Tamil Information Centre, which was an alliance of Tamil militant groups, was founded in 1984 and had its head office in India. It became dysfunctional following the Indo-Lanka Agreement in 1987 and subsequently got amalgamated to the pro LTTE Tamil Rehabilitation Organisation (TRO). After the defeat of the LTTE it had been taken over by the Tamil Diaspora, Tamil political sources said.

    Many senior ex-militants and representatives of the Tamil Diaspora had also been invited to the conference to discuss the present political scenario in Sri Lanka, sources said.

    Tamil Diaspora representatives were scheduled to discuss with the Tamil and Muslim political parties from Sri Lanka how they could reach common ground for a political solution and the strategies the parties needed to adopt to function as a common pressure group, sources said

    When contacted, the General Secretary of the Sri Lanka Muslim Congress (SLMC), M. T. Hassen Ali, MP, confirmed yesterday that Party Leader Rauff Hakeem, Chairman Basheer Cegu Dawood and SLMC Director for International Affairs M. Faiz had left for Zurich.

    The main worry of the minority parties was that the President had called for elections without giving thought to the report of the All Party Representative Conference (APRC) which deliberated in 128 sittings, he said.

    The Tamil National Alliance is represented at the conference by its Leader R. Sampanthan, General Secretary Mavai Senathirajah and Convener Suresh Premachandran.

    EPDP leader Minister Douglas Devananda, too, has left for Zurich. Mano Ganesan, MP leader of the Democratic People’s Front is already in Zurich.

    The Ceylon Workers Congress was represented by its Leader Minister Arumugam Thondaman and General Secretary and Deputy Minister Mutthu Sivalingham. The Upcountry People’s Front was represented by Minister P. Chandrasekeram, TULF by V. Ananda Sangari, National Unity Alliance by Minister Ferial Ashraff, and EPRLF (Varadha Wing) by R. Sritharan. The TMVP is represented by Eastern Province Chief Minister Sivanesathurai Chandrakanthan, ACTC by Gajendrakumar Ponnambalam, MP, TELO by Henry Mahendran, PLOTE by Dharmalingham Siddharthan and TELO (Sri Wing) by Keeran.

    Source :The island

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று கதையளந்து மாட்டி விட்டது போல், சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்களே இந்த சந்திப்பை பின்னாலிருந்து வெளிநாட்டு வெள்ளைகளை களம் புகுத்தி, ஏதோ அவர்களே ஏற்பாடு செய்தது போல ஒரு மாயையை ஏற்படுத்தி தங்கள் எண்ணங்களைக் கச்சிதமாக களம் புகுத்த முனைந்தவர்கள் வேறு எவருமில்லை. நாடு கடந்த தமிழீழம் அமைக்கின்றோமென்று கதைவிட்டு களம் புகுந்துள்ள உருத்திரகுமாரன் குழுவினரே. புலிகளின் பல பில்லியன் பணத்தை வைத்து எல்லாரையும் விலைக்கு வாங்கி விடலாமென புலத்துப் புலிகள் கனவு காணத் தொடங்கி விட்டனர். இவர்களின் கனவுகள் கலைந்து விட்டதை இன்று வெளிவரவிருக்கும் கூட்டறிக்கைகயில் நீங்கள் காணலாம். இன்னும் தமிழர்களைக் காட்டி எப்படித் தமது அரசியல் வியாபாரங்களை நடத்தலாமென்று சிந்திக்கின்றார்களே தவிர, தமிழர்களுக்கு ஒரு தீர்வைப் பெற எவரும் சிந்திக்க முன்வரவில்லை.

    Reply
  • vinotharan
    vinotharan

    ஆக இந்த சுவிஸ் கூட்டம் புலி உருத்திரகுமாரன் யுஎன்பி கூட்டுமுயற்ச்சிக்கு தமிழர் தகவல் நடுவம் களம் அமைத்துக் கொடுத்துள்ளது என்று தெரியவந்துள்ளது லண்டன் வந்த யுஎன்பி ஜயலத் தகவல் நடுவம் உருத்திரகுமாரன் தமது ஆட்சி மாற்றத்திற்கு தமது உயிரை அர்ப்பணித்த போராளிகள் மக்களின் அர்ப்பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    Reply
  • appu hammy
    appu hammy

    I see a snake here. This is a typical Indian behavior to get involved in SL affairs. We have to keep our eyes open. We all remember the 80s vividly and how India destroyed SL. Once it was a beautiful and tolerant county, now we have become a nation that does not treat all our people with dignity. But we can’t solely blame India for our issues as well, just treat minorities well and we can easily avoid Indian intervention. But in the meantime India is trying to increase her influence due to Chinese factor. It is about time to say to India thanks your assistance in last few years, but now keep away for our affairs.

    Reply