சிறையில் இருந்து க தேவதாசன்: சிறைக்கு வெளியே மக்களுக்காகப் போராடியவர் சிறைக்குள் தனக்கான போராட்டத்தை ஆரம்பிக்கிறார்!

K Thevathasanதேவதாசன் சினிமாத்துறையில் மிகுந்த ஆர்வம் உடையவர். இடதுசாரி அரசியல் பின்புலத்தை கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் லண்டன் வந்திருந்தபோது தேசம் சஞ்சிகை புலம்பெயர் சினிமா பற்றிய கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. மேலும் ஈழவர் திரைக்கலை மன்றம் இவரது ஆவணப் பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தது. எப்போதும் தனித்துப் போராடத் தயங்காத இவர் தனியனாகவே சில போராட்டங்களை முன்னெடுத்து பலரின் கவனத்தையும் ஈர்த்தவர்.   –  இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

அப்படிப்பட்ட ஒருவரை கைது செய்து 17 மாதங்களுக்கு மேலாக எவ்வித விசாரணைகளும் இன்றி தடுத்து வைத்திருப்பது எவ்வகையிலும் நியாயமானதல்ல. மேலும் க தேவதாசனுக்கு இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் பதவியை வழங்கியவர்கள் ஜேவிபி யினரே.  திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டமை ஜே.வீ.பி.யின் முக்கியஸ்தரான அனுரதிஸாநாயக்க கலாசார அமைச்சராக இருந்த காலகட்டத்திலாகும். இது உள்வீட்டு அரசியல் விவாதமாகவும் உள்ளது.

இவரது கைது தொடர்பாக லண்டன் வந்திருந்த ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் ஆர் சந்திரசேகரனிடம் கேட்ட போது க தேவதாஸன் தொடர்பாக அரசு சட்டவிரோதமாக நடந்துகொள்வதாகத் தெரிவித்தார். அரசு தனது விரும்பு வெறுப்புகளுக்கு ஏற்ப சட்டத்தைப் பயன்படுத்துவதாக அவர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

._._._._._.

From:
K Thevathasan
No: 9544, J/Ward
New Magazine Prison
Colombo- 09
21-11-2009

To:
The hon.Milinda Moragoda
The hon minister of Justice
Ministry Of Justice
Superior Courts Complex
Colombo-12

கெளரவ அமைச்சர் அவர்கள்,

க.தேவதாஸன் வயது 52 விளக்கமறியல் கைதி இல: 9544 “03-12-2009 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்”

கனகசபை தேவதாஸன் ஆகிய நான் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கச் சந்தேக நபராக கடந்த 17 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன். எனது நிலைப்பாட்டை விரிவாக எழுதி 26-08-2009ல் சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பினேன். சிறைச்சாலை நிர்வாகத்துக்கூடாக 12-11-2009ல் தங்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினேன்.

“என்மீதான சட்டநடவடிக்கை தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும்” என்பதே எனது கோரிக்கை. கடந்த யூலை மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான 4 மாத காலத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்தேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் வெற்று வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டேன்.

கடைசித் தடவையாக நீர் மற்றும் உணவு உட்கொள்ளாமல் 15-10-2009ல் ஆரம்பித்து 11 நாட்கள் தொடர்ந்து எனது உண்ணாவிரதத்தை 25-10-2009ல் நிறைவ செய்தேன். கெளரவ நீதி அமைச்சரான தங்களின் விசேட தகவலுடன் அன்றைய தினம் சிறைச்சாலைக்கு வந்து என்னை சந்தித்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்குறுதியை நம்பி உணவு உட்கொள்ள ஆரம்பித்தேன் ஆனால் எனது கோரிக்கை இம்முறையும் நீதித்துறையால் முற்றாக அலட்சியம் செய்யப்பட்டுள்ளது.

எனவே நீதித்தறை மீது எனக்கு எழுந்துள்ள சந்தேகத்தை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்:

1.
08-09-2009, 16-09-2009, 30-09-2009 ஆகிய திகதிகளில் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு சிறையிலிருந்து சென்று வந்தேன். எனது கைதுடன் சம்பந்தப்பட்ட வேறு ஆட்களின் பெயர்களும் சந்தேக நபர்களாக அந் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டன. ஆனால் அவர்களில் யாரும் அங்கே சமூகமளிக்கவில்லை. நான் அழைக்கப்பட்டது ஏன் என்பது பற்றியோ சமூகமளிக்காத மற்றவர்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றியோ இன்றைவரை எனக்கு எதுவுமே தெரியாது. இதற்கு பின்னர் B 1927/2008 என்ற அதே வழக்கு இலக்கத்தில் 14-10-2009, 28-10-2009, 05-11-2009, 11-11-2009, 16-11-2009 ஆகிய திகதிகளில் வெலிக்கடை விசேட நீதவான் நீதிமன்றத்திற்கு சென்று வந்தேன் எனது பெயர் மட்டுமே இங்கு அழைக்கப்பட்டது. என்மீதான நீதி துறையின் நிலைப்பாடு என்ன என்று அறிய ஒவ்வொரு தடவையும் நான் கேள்வி எழுப்பிய போதிலும் இந்நீதிமன்றம் எனக்குப் பதில் தரவில்லை.

2.
B148/2008 என்ற ஒரு புதிய வழக்கு இலக்கத்தில் 04-11-2009, 18-11-2009 ஆகிய தினங்களில் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்று வந்தேன். இதில் என்னுடன் எவ்வகையிலும் சம்பந்தமேயில்லாத செல்லையா சரத்குமார் என்ற யாரோ ஒரு நபரின் பெயருடன் எனது பெயர் இணைக்கப்பட்டது ஏன்? இதைச் செய்தது யார்? எதற்காக இப்புதிய வழக்கு பதிவு செய்ய்பபட்டுள்ளது? இவை பற்றியும் இற்றைவரை எனக்கு எதுவுமே தெரியாது.

3.
2008யூன் மாதம் தொடக்கம் சுமார் 15 மாதகாலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) விசாரணைக்கு பூரணமாக ஒத்துழைத்தேன். தமிழீழ விடுலைப்புலிகள் இயக்கத்துடனான எனது தொடர்பை ஒத்துக்கொண்டு 26-08-2009ல் கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் வாக்கு மூலம் அளித்தேன். எனக்கு எதிரான வழக்கில் நான் எதிர்த்து வழக்காடப் போவதில்லை என்றும் இவ்வாக்கு மூலத்தில் உறுதியளித்தேன். அப்படி இருந்தும் என்மீதான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில் தாமதம் காட்டப்படுவதன் காரணம் என்ன? எனது தரப்பில் சட்டத்தரணியை நான் நியமிக்கப் போவதில்லை. அப்படியாயின் என் மீதான சட்ட நடவடிக்கை தொடர்பான நிலைவரத்தை நீதித்துறையிடமிருந்து நான் எவ்வாறு அறிவது? அல்லது அறியவே முடியாதா?

4.
கல்கிசை வெலிக்கடை மற்றும் கோட்டை நீதிமன்றங்களில் சிங்கள மொழியிலேயே நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் அவற்றை என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இரு மொழிகளுக்கும் சம இடம் வழங்கும் வகையில் இலங்கையில் அரசியல் யாப்பில் 16வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரசியல் யாப்பின் 24ம் 25ம் சரத்துகள் இம்மொழி உரிமையை உத்தரவாதம் செய்கின்றன. ஆனாலும் “சிங்களம் மட்டும்” என்பதே நடைமுறையாகவுள்ளது. எனது வழக்கு தொடர்பான நீதித்துறையின் ஆவணம் மற்றும் அறிவித்தல் யாவும் தமிழ்மொழியிலேயே தரப்படல் வேண்டும் எனக்கெதிரான வழக்கும் தமிழ்மொழியிலேயே நடைபெறவேண்டும். இது நடைபெறுமா? அல்லது இம்மொழி விவகாரம் என்மீதான சட்ட நடவடிக்கை மேலும் தாமதமாவதற்கு இன்னுமொரு காரணமாகிவிடுமா?

“சட்டம் என்பது கணத்திற்கு கணம் நிகழும் மனித மனமாற்றத்தை உணர்ந்து உள்வாங்கும் திறனற்றது. சித்தார்த்தன் கெளதம புத்தரானதைக் கிரகிக்கும் சக்தி சட்டத்திற்கு கிடையாது. இலங்கையின் இனவிவகாரத்தின் தோற்றுவாய் பற்றி அறிவதில் சட்டத்திற்கு என்ன? அக்கறை? பிரித்தாளும் கொள்கையே பிரிவினை உணர்வின் ஆதிமூலம் என்பதை சட்டம் எவ்வாறு அறியும்? இன்று என்னையும் என் போன்றவர்களையும் சட்ட விரோதிகளாக இனங்காண்பதைத் தவிர சட்டத்தால் வேறேன்ன செய்ய முடியும்?

சட்டத்தாலும் அதனைப் பிரயோகிக்கும் நீதித்துறையாலும் இதையெல்லாம் புரிந்துகொள்ள இயலாதபொழுது “இருப்பு! என்பதை விட “இறப்பு” பற்றிய சிந்தனையே என்னுள் மேலோங்கி நிற்கிறது. “03-12-2009 முதல் சாகும்வரை உண்ணாவிரதம்” மேற்கொள்வது என்ற முடிவுக்கு நான் வர இதுவே காரணம். எனது இம்முடிவு ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் நல்லதொரு பாடமாக அமையட்டும்.

இதன்பொழுது நான் இறக்க நேர்ந்தால் எனது சடலத்தை கொழும்பு மருத்துவ பீட மாணவர்களின் கல்வித்தேவைக்காக அன்பளிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

இங்கனம்
க. தேவதாசன் (ஒப்பம்)
கனகசபை தேவதாசன்
(Kanagasabai thevathasan)

Thevathsan_K_in_Thesam_Meetingக தேவதாசனின் கைது தொடர்பாக தேசம்நெற் வாசகர்கள் வெளியிட்ட கருத்துக்கள்:

யமுனா ராஜேந்திரன்: நண்பர் தேவதாசனை நான் ஈழவர் திரைக்கலை மன்றம் நிகழ்த்திய கலைந்துரையாடலில் சந்தித்திருக்கிறேன். மாற்றுச் சினிமாவின் மீதும் சமூகக் கடப்பாடுடைய உலக சினிமாவின் மீதும் தீவிரமான ஈடுபாடுகள் கொண்டவர் அவர். அவரது கருத்துக்கள் இடதுசாரிச் சாய்வு கொண்டனவாகவே இருந்தன. பொதுவாகவே அதிகாரத்தின் தன்மை எத்தகையது ஆயினும் கலைஞர்கள்தான் அதிகார வேட்டையின் முதல் இலக்குகளாக இருக்கிறார்கள்.

மெலிந்த உடலும் மென்மையான மனமும் மெல்லப் பேசும் இயல்பும் கொண்டவர் அவர். களப்பணியியையும் திரைச் செயல்பாட்டையும் இணைக்க முயன்றவர் அவர். ஈழத் திரைத் துறையில் புகலிடத்தில் ஈடுபட்டிருக்கும் நண்பர்கள் – மனசாட்சியுள்ள தமது சிங்கள இடதுசாரித் திரைத்துறை நண்பர்களையும் சேர்த்துக் கூட்டாக அறிக்கையொன்றினை வெளியிடுவது அவரது விடுதலைக்கான அழுத்தத்தை தருவதாக அமையும் என நம்புகிறேன். அவர் மீதான விசாரணை என எதுவேனும் இருப்பின் அது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் இச்செயல்பாடு அமைய முடியும்.

ஜயக்குமரன்: ஆயுதம் ஏந்துவது தமிழ் இளைஞர்களின் மிகப்பெரும் கனவாக இருந்த காலத்தில்கூட, ஆயுதம் மக்களுடைய உண்மையான விடுதலைக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தவர் தேவதாசன். ஆயுதம் ஏந்தாத அரசியல் எதிப்பாளர்களது செயற்பாட்டுவெளி எந்த அளவிற்கு பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் குறுக்கப்பட்டு விட்டது என்பதை தேவதாசனது கைது வெளிச்சமாக்கியுள்ளது.

பிள்ளை: கைது செய்ப்பட்ட தேவதாஸன் தன்க்குரிய மனித உரிமைகளுடன் இந்த இலங்கை அரசு இவர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை எதிர்கெள்ள சர்வதேச அமைப்புகள் உதவி செய்ய வேண்டிய அவசிய தேவையுள்ளது. இவற்றிக்காக நாம் மனித உரிமைகள் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான உதவிகளை செய்ய வேண்டும் – இதற்கான பணிகளை செய்ய தேசம் நெற் முன்வந்து செய்ய வேண்டும்.

சத்துருக்கன்: கனகசபை தேவதாஸன் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது 1999 மற்றும் 2002 ஆண்டுகளில் தமது கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டதாக ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிரிதுங்க ஜயசூரிய லங்கா டிசெண்ட்டிற்கு தெரிவித்துள்ளார்.

எட்வேட்: தேவதாசன் அவர்கள் சட்டக்கலூரித்தெரிவின் போது தமிழ் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி அவர்களை போராடச்செய்தார். அவர்களூக்காக தனக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் கதைத்துப் பார்த்தார். அவர் ஜனநாயகப் போராட்டத்தில் கடைசிவரைக்கும் நம்பிக்கை வைத்திருந்தார்.

ஜேசுதாஸ்: தேவதாசனை பல்வேறு கூட்டங்களிலும் தனித்தும் சந்தித்திருக்கிறேன். புலிகளுடைய இனவாப் போக்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளிப்படையாகவே தெரிவிப்பவர். இடதுசாரிப் பார்வையுடையவர். அரசின் அராஜகப் போக்குகளையும் கடுமையாக விமர்சிப்வர்.

ராபின் மெய்யன்: புலம்பெயர்ந்த ஜனநாயக ஆர்வலர்கள் ஒரு உண்மையான ஜனநாயகப் போராளியின் கைதைக் கண்டிக்க ஏன் தயங்குகிறார்கள்? தமது எஜமானர்களின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டாம் என்று நினைத்துக் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டு விட்டார்களா? அல்லது பிள்ளையானால் மட்டும்தான் ஜனநாயகம் மலரவேண்டும் என்று காத்திருக்கிறார்களா?

குருவி: முன்னாள் விடுதலை இயக்கமொன்றீன் தலைவரான கரவெட்டியை சேர்ந்த தேவதாசன் பின்னர் அவ் இயக்கம் செயலிழந்து தமிழ்நாட்டில் அவியக்கத்தின் போராளீகள் கைவிடப்பட்டு வேறூ இயக்கங்களீல் சேர்ந்துகொண்டனர்.அதிலும் குறீப்பாக தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவைஎன்.எல்.எவ்.டி ஆகிய அமைப்புகளூடன்நட்பு ரீதியான தொடர்பு வைத்திருந்த தேவதாசன் தமிழ்நாட்டிலிருந்த காலத்தில் திரைப்பட துறாக்குள் பிரவேசித்தார்.அதிலும் தோல்விகண்டு அனாதரவான தேவதாசனை புலிகள் இயக்கத்தினரே காப்பாறீ தமது படகில் இலங்கைக்கு அனுப்பியும் வைத்தனர்.பிற்காலங்களீல் அரசியலில் இருந்து ஒதுங்கி திரைப்பட துரையில் இலங்கையிலும் ஈடுபடத்தொடங்கினார்.இலங்கை தமிழ் திரை வரலாற்றூ ஆவண வெளீயீட்டில் கூடுதல் ஆர்வம் காட்டி செயற்பட்டு வந்தார்.

ரகு: மாற்றுக் கருத்தாளர்கள், மதவாதிகள், சாதிமான்கள், தலித்தியவாதிகள், மாற்று அமைப்பினர், புரட்சிவாதிகள், கொமினிஸ்ற்காரர் நீங்கள் சீன சார்பா இல்லை ரஷ்யசார்பா, ஜனநாயகக்காரர், அறிவுஜீவிகள், புத்திஜீவிகள், கலகக்காரர், பெண்ணியவாதிகள், இலகியவாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள், ஈழவாதிகள், ஒற்றையாட்சிக்காரர், இந்திய ஆதரவுவாதிகள், ஊடகக்காரர்…. புலிவால்கள், புலிஎதிர்ப்பாளர்கள் ….எவரென்றாலும் ஸ்ரீலங்காவில் நீங்கள் தமிழர் எனில் இறுதியில் ஒன்றாய் உறங்குவது பயங்கரவாதி என்கின்ற சமரசம் உலாவும் காட்டில்!

 நாவலன்: 80 களில் தேவதாசன் வடபகுதியில் இடதுசாரி தேசிய விடுதலை இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அதன் தலைவராகவும் செயற்பட்டவர்.வடமராட்சிப் பகுதியில் பல உறுப்பினர்களைக் கொண்டிருந்த இவ்வியக்கம் இந்திய நக்சல்பாரி அமைப்புக்களுடனும் தொடர்புகளைப் பேணிவந்தது புலிகளுக்கெதிரான கருத்தமைவைக் கொண்ட அமைப்புக்களுடன் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திய இவரின் கைது சந்தேகத்திற்குரிய உள்நேக்கம் கொண்டதாகவே இருக்கும்.

Show More
Leave a Reply to DEMOCRACY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    /“சட்டம் என்பது கணத்திற்கு கணம் நிகழும் மனித மனமாற்றத்தை உணர்ந்து உள்வாங்கும் திறனற்றது. சித்தார்த்தன் கெளதம புத்தரானதைக் கிரகிக்கும் சக்தி சட்டத்திற்கு கிடையாது. இலங்கையின் இனவிவகாரத்தின் தோற்றுவாய் பற்றி அறிவதில் சட்டத்திற்கு என்ன? அக்கறை? பிரித்தாளும் கொள்கையே பிரிவினை உணர்வின் ஆதிமூலம் என்பதை சட்டம் எவ்வாறு அறியும்? இன்று என்னையும் என் போன்றவர்களையும் சட்ட விரோதிகளாக இனங்காண்பதைத் தவிர சட்டத்தால் வேறேன்ன செய்ய முடியும்?

    /./ரகு: மாற்றுக் கருத்தாளர்கள், மதவாதிகள், சாதிமான்கள், தலித்தியவாதிகள், மாற்று அமைப்பினர், புரட்சிவாதிகள், கொமினிஸ்ற்காரர் நீங்கள் சீன சார்பா இல்லை ரஷ்யசார்பா, ஜனநாயகக்காரர், அறிவுஜீவிகள், புத்திஜீவிகள், கலகக்காரர், பெண்ணியவாதிகள், இலகியவாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள், ஈழவாதிகள், ஒற்றையாட்சிக்காரர், இந்திய ஆதரவுவாதிகள், ஊடகக்காரர்…. புலிவால்கள், புலிஎதிர்ப்பாளர்கள் ….எவரென்றாலும் ஸ்ரீலங்காவில் நீங்கள் தமிழர் எனில் இறுதியில் ஒன்றாய் உறங்குவது பயங்கரவாதி என்கின்ற சமரசம் உலாவும் காட்டில்!/—————-

    ஐயாமார்களே! ,சிறையில் இருக்கிறார் என்கிறீர்கள், கோடம்பாக்கத்தில் நுழைந்து, “அடியே காந்தா”, என்று சலங்கை ஒலியை பார்க்காமல் மீண்டவர் என்கிறீர்கள். என் சிறை அனுபவம், 1983ஆம் ஆண்டு, இலங்கை கலவரத்தின்போது, சென்னையில், கல்லூரி மாணவர் ஊர்வலம் நடந்தது, அதில் என் கல்லூரி சார்பாக கலந்துக் கொண்டதால், சென்னை மத்திய சிறையில் (17வயது)சிறுவர்கள் பிரிவில் அடைத்து விட்டனர். அப்போது,”அகரம் நாராயணன்” என்ற பிரபல சென்னை ரவுடி, இலங்கை தங்கம் கடத்தல் காரர்களுடன் (காபிபோசா)வந்து தயிர், பருப்பு, நெய்யுடன், சாப்படுகள் கொண்டுவந்து கொடுத்தார். பிறகு தற்போது இந்திய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சரக இருந்து சில மாதங்களுக்கு முன்பு, இலங்கைக்கான தூதுக் குழுவிற்கு தலைமை தாங்கியவர் என்னை “பெயில்” எடுத்தது மறக்க முடியாதது!. அதன் பின் என்னுடைய இலங்கையர் அனுபவம் கசப்பானது!.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /பிரித்தாளும் கொள்கையே பிரிவினை உணர்வின் ஆதிமூலம் என்பதை சட்டம் எவ்வாறு அறியும்?/–அடிப்பட்ட அனுபவத்தால்,அருமையான நிந்தனையை உதிர்த்திருக்கிறார் தேவதாசன்.எந்த சோத்து மூடையும் வாயை திறக்கவில்லை,அடப் போங்கடா!,மலிவான பஸ்மதி அரிசியைத் தேடுங்கள்!- பிரான்ஸிஸ் பியூஜியாமாவை பயன்படுத்தி தேடுதலை நிறுத்துங்கள். அப்துல் கலாம் கற்பனை செய்யுங்கள் என்றார், “நடைமுறை எதார்த்தம்”,உண்மையல்ல. நாம் உலகம் தட்டையாக இருக்கிறது என்ர நடைமுறை எதார்த்தத்தின் படிதான், அன்றாடம் வாழுகிறோம்-இது விலங்கின் குணம். உலகப் பந்தில் ஒட்டிக் கொண்டு,தலைக் கீழாக வெளவ்வால்மாதிரி தொங்குகிறோம் என்று ஜாக்கிறதையாக காலடி எடுத்து நடந்து வாழ்வதில்லை!. ஆனால் அதுதான் உண்மை!. ஆங்கிலேயர்களையும், ஐரோப்பியர்களையும், நாம் வெறுக்கத் தேவையில்லை. ஆனால் அவர்கள் கட்டிவிட்ட “தலைப் பாகையை”, சிக்குப் பிடித்து, பேன் பிடித்து, தலையை அரித்து புண் உண்டக்கிய பின்பும் நாம் கழட்டாமல் அடம் பிடிக்கும் பயித்தியக் காரத்தனத்தை என்னவென்று சொல்லுவது??!!.

    Reply
  • sivam
    sivam

    தேவதாசனின் இந்த கடிதம் தொடர்பாக வாசகர்கள் கவனம் செலுத்த வேண்டும். இவர் ஒரு அரசியல் கைதி, இவரது கோரிக்கைகள் நியாயமானவை.

    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கடிதம் மூலமோ அல்லது மின்அஞ்சல் மூலமாகமோ சம்பந்தப்பட மந்திரியினை வலியுறுத்துவது முக்கியம்.
    இவரது இந்த கடிதத்தினை ஆதரிப்பதன் மூலம் இவரது அரசியலுடன் உடன்படவேண்டிய நிபந்தனை இல்லை. இது அடிப்படை மனித உரிமைகள் தொடர்பானது.

    தேசம்நெட் இது பற்றிய மேலதிக தகவல்களை, மின் அஞ்சல், யாருக்கு அனுப்புவது போன்றவை தொடர்பாக வாசகர்களுக்கு ஆலோசனை வழங்கும்படி வேண்டுகின்றேன்

    Reply
  • Kathir
    Kathir

    Comrade K.Thevathasam must be relased immediately without any delay,if he is not involved with the LTTE terrorism. But we are not sure about his past activities and if he is involved with the Tamil Tiger terrorist activites then he has to be punished for his crime. He is a man with the same ideology not much diffrent from the fascist LTTE leader Prapha’s thinking ,eventhough he has been identified with the left ideology.Dont think that all the left forces are pro people.Dont forget about Kurschev of the great Soviet Union. He is a bad example for a class traitor for ever.He came from the real working class but he who has betrayed his class other than Com.Lenin who was belong to an upper middle class family.

    Reply
  • thenaale
    thenaale

    ஓம்!! யதார்த்தம்…. ஓம்!! யதார்த்தம்!
    மனிதர் உணர்ந்து கொள்ள இது தோழரின் யதார்த்தமல்ல! அதையும் தாண்டி முள்ளிவாய்க்கால் வரையானது!

    Reply
  • Pandiyan Thambirajah
    Pandiyan Thambirajah

    இலங்கை அரசு சட்டரீதியாகத் தான் தொழிற்படுகிறது என இப்பொழுது அங்கு விஜயம் செய்யும் ஜனநாயகவாதிகள் விதந்துரைத்துள்ளனர். அதற்கு பல உதாரணங்களையும் எடுத்து இயம்பியுள்ளனர். புலிப்பாஸிஸத்தை இப்பொழுதுதான் முறியடித்துள்ளோம். எனவே இப்படியான பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க முடியாது என்ற யதார்த்தத்தை உங்களால் புலியாதரவாளர்கள் போல புரிந்து கொள்ள முடியாமை எனக்கு வியப்பாக இருக்கிறது!! எனவே தயவு செய்து யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.

    பாண்டியன்.

    Reply