இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு; பேராசிரியர்கள் கைலாசபதி, இந்திரபாலா ஆகியோருக்கு நன்றி செலுத்துவது அவசியம்

கடந்த பதினான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் வரலாற்றைப் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தும் நிலை பாடத்திட்டத்தில் காணப்படவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய நாகரிகம் ஒரு பாடமாக 1976 இல் அங்கீகரிக்கப்பட்டு ஆரம்பமானதன் பின்னரே இலங்கை முஸ்லிம்களின் வரலாறு அப்பல்கலைக்கழக மட்டத்தில் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாகக் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை அங்கீகரித்த அப்போதைய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே. கைலாசபதி, பீடாதிபதி பேராசிரியர் கே. இந்திரபாலா ஆகியோருக்கு விசேடமாக நாம் நன்றி செலுத்த வேண்டும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு “இலங்கையில் இஸ்லாம்” என்னும் நூலினை அறிமுகம் செய்து உரையாற்றுகையில் பேராசிரியர் கே. எம். எச். காலிதீன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சென்ற ஆண்டு பங்களாதேஷ் டாக்காவில் இஸ்லாமிய மகாநாட்டு அமைப்பின் இர்ஸிகா என்னும் ஆய்வு நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தென்னாசியாவில் இஸ்லாமிய நாகரிகம் என்னும் சிம்போசியத்தில் முன்வைக்கப்பட்ட பேராசிரியர் காலிதீன் அவர்களின் ஆய்வுக் கட்டுரை நூலாக வெளியிடப்பட்டது.

தொடர்ந்து அங்கு உரை நிகழ்த்திய பேராசிரியர் காலிதீன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவு மேற்குலக வரலாறு, இந்திய வரலாறுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், இலங்கை முஸ்லிம்களின் அரசியல், கல்வி, கலாசார பின்னணிகளில் கவனம் செலுத்தி பிரபல்யமான இஸ்லாமிய நாகரிக வரலாற்றையும், அதன் சர்வதேச செல்வாக்கையும் தெளிவுபடுத்தும் வகையில் அதன் பாடத்திட்டத்தை அமைக்க வேண்டும். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இதற்கு மிகவும் பொருத்தமான உயர் கல்வி நிறுவனமாகும்.

உலக நாகரிகங்களை ஒன்றுபடுத்தும் பணியில், இன்றைய உலகில் இஸ்லாமிய நாகரிகம் முன்னின்று பணியாற்றி வருகின்றது. பல இனங்கள், சமூகங்கள், குழுக்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தி மனித நாகரிகத்தைக் கட்டியெழுப்புவது அதன் பணி எனவும் இஸ்லாம் கருதுகிறது. அப்பணியை முன்னெடுப்பது எமது கடமையாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *