இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

Wikramabahu Karunaratnaஜனாதிபதி தேர்தலும்! தமிழ் மக்களும்!

முள்ளிவாய்க்கால் அவலங்களுக்குப் பின்பு நடைபெறும் முக்கியமான தேர்தல் இது. இதில் கலந்து கொள்ளும் ஆர்வம் தமிழ் மக்கள் மத்தியில் அறவே இல்லை. இனப்படுகொலையை ஏவியவனும், அதனை கனகச்சிதமாக செய்து முடித்தவனும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு, தமிழ் மக்களிடம் ஆதரவு தேட வந்துள்ளார்கள். சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட வேண்டிய போர்க் குற்றவாளிகள் இவர்கள். இவர்களை நீதியின் முன்னிறுத்துவதற்கு காலம் எடுக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் இவர்கள் இருவரையும் நிராகரிப்பதன் மூலமாக இவர்கள் தொடர்பான தமது அபிப்பிராயத்தை அனைத்து உலகத்திற்கும் தெரியும்படி செய்தாக வேண்டாமா?

இந்த இரண்டு இன ஒழிப்பாளர்களுள் குறைந்த தீமை செய்தவர் யார் என்று யோசிப்பதற்கு இதுவொன்றும் பட்டிமன்றமல்ல. ஒரு தேசத்தின் எதிர்காலம் பற்றிய நிர்ணயமான கட்டம் இது. இந்த இரண்டு கசாப்புக் கடைகாரருக்கும் ஆதரவு தேட எம்மத்தியில் இருக்கும் குண்டர் படைகள் வேறு ஜனநாயக வேடமிட்டு வலம் வருகின்றன. சரி இப்போதாவது தமிழ் மக்களது தேசிய பிரச்சனைக்கு இருவரில் எவரிடமாவது தீர்வு இருக்கிறதா என்று பார்த்தால், அப்படிப்பட்ட ஒரு விடயம் தொடர்பாக பேசவே பயப்படும் கோழைகள் இவர்கள். அதுமட்டுமல்ல கடந்த காலத்தில் தேசிய பிரச்சனையை உருவாக்கிவிட்டவர்களே இந்த இரண்டு கட்சிகளும்தான். சரி இப்போதாவது தமிழ் மக்கள் தமது கருத்துக்களை சுதந்திரமாக, ஜனநாயகபூர்வமாக முன்வைக்க முடியுமா என்றால் அதற்கும் உரிமைகள் அற்ற நிலைமை!

இருவருமே அயோக்கியர்கள் என்று கூறும் மக்களைப் பார்த்து தமிழ் பச்சோந்திகள் கூறுகிறார்கள். ‘தந்திரோபாயமாக’ வாக்களிப்பதாம் என்று! தந்திரோபாயம் என்ற பெயரில் நாம் கடந்த காலத்தில் செய்தவற்றை திரும்பிப் பார்க்கும் நேரம் இது.
 
1977 ம் ஆண்டு தேர்தலிலேயே எம்மில் பலருக்கு கூட்டணியின் வேடம் தெரிந்தே இருந்தது. ஆனாலும், தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு என்ற வாதம் எம்மை கட்டிப் போட்டிருந்தது. அத்தோடு கிழக்கிலும் வன்னியிலும் சிங்கள் கட்சிகள் வந்தால் நிலைமை மோசமாகிவிடுமோ என்ற பயம் இன்னும் பலரை வேறு திசையில் சிந்திக்க விடாமல் தடுத்தது.

1982 இல் ஜே. ஆருக்கு எதிராக கொப்பேகடுவவை ஆதரிக்க கோரப்பட்டோம். தேர்தல் தருணத்தில் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு போனார் அமிர்தலிங்கம். உள்ளூர் பத்திரிகைகள், தலைவர் ஜே. ஆருக்கு வாக்கு போடச் சொன்னதாக மோசடி செய்தன.

சமாதானப் புறா சந்திரிகாவின் வருகையை ஆதரிக்குமாறு கேட்கப்பட்டோம். சந்திரிகா வந்தார். இரண்டு தவணைகள் பதவி வகித்தார். போனார். தமிழர் பிரச்சனையோ இன்னமும் மோசமாகி விட்டிருந்தது.

ரணிலை தோற்கடிப்பதற்காக பணத்தை வாங்கிக் கொண்டு தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகளை மொத்தத்தில் புலிகள் ஏலம் விட்டார்கள். தமது சவக்குழியை தாமே தோண்டிக் கொண்டார்கள்.

கடந்த காலங்களில் தந்திரோபாயத்தின் பேரால் வாக்களிக்கக் கோரியவர்கள் அதன் விளைவுகளுக்கு ஒருபோதும் பொறுப்பெடுத்ததும் கிடையாது. இப்போது இன்னோர் தடவையும் எந்தவிதமான சங்கடமும் இன்றி, தந்திரோபாயமாக வாக்களிக்கும்படி கேட்கப்பட்டுள்ளோம். இரண்டு பிரதான வேட்பாளர்களும் தேசிய பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை என்பது திட்டவட்டமாக தெரிந்த பின்பும் நாம் ஏன் இந்த கானல் நீருக்கு பின்னால் எமது சக்தியை செலவளிக்க வேண்டும்.

Wikramabahu Karunratnaகடந்த காலத்தில் சிங்கள இடதுசாரிகளது இனவாதம் குறித்தும், அவர்கள் தமிழ் மக்களது உரிமைகள் பற்றி பாராமுகமாக இருந்ததாகவும் திரும்பத் திரும்ப குற்றஞ்சாட்டும் நாம், எமது மனச்சாட்சியை தொட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையிலேயே சிங்கள் இடதுசாரிகள் யாருமே தமிழ் மக்களது உரிமைகளில் அறவே கரிசனை காட்டவில்லையா? இல்லை காட்டினார்கள்! ஆனால் அவர்கள் வெல்லமாட்டார்கள் என்பதால் அவர்கள் எமக்கு கவர்ச்சியானவர்களாக இருக்கவில்லை. அத்தோடு தமிழ் வலதுசாரித் தலைமை உண்மைகளை தெரிந்து கொண்டே தமது வர்க்க நலன்கள் காரணமாக தமிழ் மக்களை தவறாக வழிநடத்தினார்கள். எமக்கு தேவைப்பட்டதெல்லாம் வெல்லும் ஒரு குதிரை! ஆனால் அப்படிப்பட்ட ஒரு குதிரைக்கு இனவாதம் என்ற தீனி தேவைப்பட்டது என்பதை நாம் கவனிக்கத் தவறினோம். நாம் அற்புதங்களை எதிர்பார்த்தோம். மீண்டும் தோல்விகளையே சந்தித்தோம்!

வெளிப்படையாகவே தமிழரது பிரிந்து போகும் உரிமை உட்பட சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுக்கும் ஒரு நேர்மையான இடதுசாரி வேட்பாளரை ஒடுக்கப்பட்ட நாமே ஆதரிக்கவில்லையானால், எப்படி இன்னொரு சிங்கள முற்போக்கு சக்தி தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்க முன்வரும்? அதுவும் சிங்கள பேரினவாத அலைக்கு எதிராக நீச்சல் போட்டுக் கொண்டு!

தமிழ் மக்கள், சிங்கள் மக்களோடு ஐக்கியப்பட்டோ அல்லது தனியாக பிரிந்து போவதன் மூலமாகவோ தமது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வது என்பது, தென்னிலங்கையில் முற்போக்கு ஜனநாயக சக்திகள் பலம் பெறுவதிலேயே பெரிதும் தங்கியுள்ளது. ஆதலால் நாம் உடனடியான தேர்தல் வெற்றி என்ற இலக்கைக் கடந்து சரியான சக்திகளை இனம் கண்டு, அவர்கள் பலத்தில், எண்ணிக்கையில் சிறியவர்கள் ஆனாலும் சரியான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருப்பார்களானால், அவர்களை ஆதரிக்க துணிந்து முன்வர வேண்டும். ‘சொற்பமே ஆயினும் சிறந்ததே நன்று’ என்பதை நாம் மறக்கலாகாது. இப்படியாக நாம் கொடுக்கும் ஆதரவுகள் தாம் எதிர்காலத்தில் தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள் படிப்படியாக பலம் பெறவும், இன்னும் பலர் வெளிப்படையாக வந்து தமிழர் உரிமைக்கான போராட்டத்தை ஆதரிக்கவும் வழி வகுக்கும். இப்போது நாம் செய்வது எமது எதிர்கால வெற்றிக்கான அரசியல் முதலீடாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். நீண்ட கால நோக்கில் சிந்திக்காத எவருமே விடுதலையை வென்றெடுக்க மாட்டார்கள் என்பதை நாம் புலிகளது தோல்வியில் இருந்து கற்றுக் கொண்டாக வேண்டும்.

அந்த வகையில் நீண்ட காலமாக, பல்வேறு நெருக்கடிகளையும் மீறி தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்திற்கு துணிச்சலாக முகம் கொடுத்துவரும் நவ சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த தோழர் விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு செய்துள்ளது. இது இவர் கடந்த காலத்தில் ஆற்றிய பங்களிப்புகள் இப்படிப்பட்ட ஒரு ஆதரவைப் பெறுவதற்கு இவரை தகுதியானவராக ஆக்குகிறது. மற்றும் எதிர்காலத்தில் ஆற்றக்கூடிய தமிழ் மக்களின் உரிமைக்கு ஆதரவான செயற்பாடுகளுக்கு தமிழ் மக்களது ஆதரவானது உரமாக அமையட்டும்.

தோழர் விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் கடந்த காலத்தில் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நாம் அறிவோம். தென்னிலங்கையைச் சேர்ந்த முற்போக்கு சக்திகள் என்ற வகையில் சிறீலங்கா அரசின் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய தமிழ் மக்களின் தலைமை என்ற வகையில்  விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்ததில் எவ்வித தவறும் இருப்பதாக நாம் கருதவில்லை. வேறு முற்போக்கு சக்திகள் களத்தில் இல்லாத நிலையில் விடுதலைப் புலிகளை ஆதரிக்க மறுத்திருப்பது என்பது இன்னொரு விதத்தில் சிங்கள பேரினவாதத்திற்கு துணையாக செயற்படுவதாகவே அர்த்தப்பட்டிருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்கிறோம்.

அதே வேளை இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் இன அழிப்பு யுத்தத்தை நடத்தியவர்களுடன் கைகோர்த்து நிற்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை இன்னமும் அடையவில்லை என்பதை இந்த இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் எதிராக வாக்களிப்பதன் மூலமாக தமிழ் மக்கள் வெளிப்படுத்தியாக வேண்டியுள்ளது.  அத்தோடு வாக்களிக்காமல் விடுவது என்பது கள்ள வாக்களிப்புக்களுக்கும் மற்றும் பலவித தேர்தல் மோசடிகளுக்கும் வழிவகுக்கலாம் என்பதால், தேர்தலில் வாக்களிக்குமாறும் நாம் தமிழ் மக்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

• முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல, புதிய தொடக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் எமது வாக்களிப்பு அமையட்டும்.

• தமிழ் வலதுசாரி தலைமைகளின் ஏகபோகத்திற்கு முடிவு கட்டுவோம்.

• அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் சிங்கள முற்போக்கு, ஜனநாயக சக்திகளுடன் கைகோர்ப்போம்.

மே 18 இயக்கம்.
முடிவல்ல, புதிய தொடக்கம்.

Show More
Leave a Reply to பல்லி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • Karen
    Karen

    இன்றைய முக்கியமான காலகட்டத்தில் நாங்கள் பாராளுமன்ற அரசியலை நம்புவதில்லை என்று மெளனமாக இராமல் மே 18 இயக்கம் வெளிப்படையாகத் தனது கருத்தை முன் வைத்திருப்பது நல்ல விசயம். இன்றைய காலகட்டத்தில் இவர்களின் இந்த முடிவு மிகச் சரியானது என்றே நான் நினைக்கின்றேன். வெல் டன் மே 18. கீப்ற் அப்.

    Reply
  • Sivam
    Sivam

    http://www.socialequality.com/srilanka/unp-d21-ta.shtml

    இலங்கையின் வலதுசாரி தலைவர் முன்னாள் இடதுகள் வழங்கிய சேவைக்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறார்
    விஜே டயஸ்
    11 டிசம்பர் 2009
    இலங்கையில் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி.) தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் ஆற்றிய உரையன்றில், தொழிலாள வர்க்கத்தை பிரதான முதாலளித்துவ கட்சிகளுடன் கட்டிவைத்திருப்பதிலும் மற்றும் அதன் மூலம் முழு முதலாளித்துவ ஆட்சிக்கும் முண்டு கொடுப்பதிலும் மத்தியதர வர்க்க முன்னாள் தீவிரவாதிகள் ஆற்றிய வகிபாகத்தை பற்றி அம்பலப்படுத்தும் தகவலை கொடுத்துள்ளார். அவர் கடந்த ஆண்டுகளில் நவசமசமாஜக் கட்சியினதும் (ந.ச.ச.க.) ஐக்கிய சோசலிச கட்சியினதும் (ஐ.சோ.க.) தலைவர்கள் வழங்கிய ஆதரவுக்கு மனப்பூர்வமாக நன்றிதெரிவித்ததோடு, தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் அவர்களது பிரச்சாரத்துக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

    விக்கிரமசிங்க “சுதந்திரத்துக்கான மேடை” என்ற பதாதையின் கீழ் தென்பகுதி நகரான மாத்தறையில் ஒரு பொதுக் கூட்டத்திலேயே உரையாற்றினார். இந்த சுதந்திரதுக்கான மேடை, அரசாங்கத்தின் அப்பட்டமான ஜனநாயக உரிமை மீறல்கள் தொடர்பாக வளர்ச்சியடைந்து வரும் மக்களின் அக்கறையையும் ஆத்திரத்தையும் தணிக்கவும் அதை பயன்படுத்திக்கொள்ளவும் யூ.என்.பி. அமைத்துக்கொண்ட ஒரு கலைவைக்கூள கூட்டணியாகும். அரசாங்க-சார்பு குண்டர்கள், ஜனவரி மாதம் தனியார் தொலைக்காட்சி நிலையமான சிரச மீது தாக்குதல் தொடுத்ததோடு சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை பட்டப் பகலில் படுகொலை செய்ததை அடுத்தே இந்த மேடை அமைத்துக்கொள்ளப்பட்டது.

    அரசியல் உதவியின்றி வலதுசாரி யூ.என்.பி. க்கு ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலனாக காட்டிக்கொள்ள முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, யூ.என்.பி. இலங்கை முதாலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய கட்சியாகும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை 1983ல் தொடக்கிய யூ.என்.பி., 1994ல் ஆட்சியில் இருந்து தூக்கி வீசப்படும் வரை யுத்தத்தை இரக்கமின்றி முன்னெடுத்தது. ஏனைய அட்டூழியங்களுக்கு மத்தியில், 1980களின் கடைப் பகுதியில் இராணுவத்தையும் அதனுடன் சேர்ந்து செயற்பட்ட கொலைப் படைகளையும் கட்டவிழ்த்துவிட்டு, ஒரு மதிப்பீட்டின்படி 60,000 கிராமப்புற சிங்கள இளைஞர்களை படுகொலை செய்ய வழிவகுத்தமைக்கு யூ.என்.பி. பொறுப்பாளியாகும்.

    ஆனால், சோசலிஸ்டுகள் என்றும் சில சமயங்களில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்றும் கூட சொல்லிக்கொள்ளும் நவசமசமாஜக் கட்சியிலும் ஐக்கிய சோசலிச கட்சியிலும் விக்கிரமசிங்கவால் தங்கியிருக்க முடிந்தது. “சுதந்திரத்துக்கான மேடை” என்ற கூட்டணியில் ஐ.சோ.க. உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்ட அதே வேளை, நவசமசமாஜக் கட்சி இரண்டு மாதங்களின் பின்னர் அதன் உத்தியோகபூர்வ பிணைப்புக்களுக்கு முடிவு கட்டியதோடு “பாசிச-விரோத கூட்டணிக்கு” எச்சரிக்கையுடன் தூர இருந்து ஆதரவளித்தது. ஆயினும், நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன யூ.என்.பி. தலைமையகத்தில் நடந்த பத்திரிகையாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டதோடு கடந்த பெப்பிரவரியில் கண்டியில் நடந்த மாற்று சுதந்திர தின கூட்டத்தில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொண்டார்.

    யூ.என்.பி. யுத்தத்தை ஆதரித்ததோடு ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்ட இராணுவத்தின் கண்மூடித்தனமான ஷெல் வீச்சுக்களையும் நியாயப்படுத்திய அதே வேளை, ஜனாதிபதி இராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட குற்றவியல் யுத்தத்தை எதிர்ப்பதாக நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும் கூறிக்கொள்வதானது இந்த சந்தர்ப்பவாத கூட்டணியானது குறிப்பாக வேடிக்கையானதாகும். எனினும், கட்சிக்குள் “தாராண்மைவாத பிரிவையே” விக்கிரமசிங்க பிரதிநிதித்துவம் செய்கின்றார் எனக் கூறிக்கொண்டு யூ.என்.பி. க்கு ஆதரவளித்ததை நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும் நியாயப்படுத்துகின்றன. யூ.என்.பி. யை ஆதரிப்பதை தவிர தொழிலாள வர்க்கத்துக்கு வேறு தேர்வுகள் இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.

    யூ.என்.பி. யை முன்னாள் தீவிரவாதிகள் ஆதரித்ததன் விளைவு இப்போது வெளிப்படையாகியுள்ளது. மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) தொடர்ச்சியாக நடந்த மாகாண சபை தேர்தல்களில் எதிர்க் கட்சிகளை தோற்கடித்ததோடு இராஜபக்ஷ இப்போது ஜனாதிபதி தேர்தலுக்கு முன்கூட்டியே அழைப்பு விடுத்துள்ளார். மாற்றுக் கொள்கைகளோ அல்லது பொருத்தமான வேட்பாளரோ இல்லாத நிலையில், புலிகளை தோற்கடித்த மனிதராக உயரத்தில் நிற்கும் இராஜபக்ஷவை கீழறுப்பதன் பேரில், சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி.) சேர்ந்து, ஒரு மாதத்துக்கு முன்னர் வரை உயர்மட்ட ஜெனரலாக இருந்த ஜெனலர் சரத் பொன்சேகாவை தமது “பொது வேட்பாளராக” யூ.என்.பி. ஆதரிக்கின்றது.

    சந்தர்ப்பவாத சூழ்ச்சிகளில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியை பொறுத்தளவில் -பத்திரிகை ஆசிரியர் விக்கிரமதுங்க போன்ற விமர்சகர்ககளை படுகொலை செய்த, இராணுவ பின்னணியைக் கொண்ட கொலைப் படைகள் உட்பட யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்பை இராஜபக்ஷவுடன் பங்கிட்டுக்கொள்ளும் ஜெனரல்- பொன்சேகாவை அணைத்துக்கொள்ள அடியெடுத்து வைப்பது ஆகவும் நாணங்கெட்டதாக இருக்கும். எவ்வாறெனினும், யூ.என்.பி. அக்கறை செலுத்தியது போல், நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும் ஏற்கனவே தமது அரசியல் காரியத்தை செய்து முடித்துவிட்டன. அவை யூ.என்.பி. க்கு ஜனநாயக ஆடை உடுத்தியதால், விக்கிரமசிங்கவால் பொன்சேகாவை இராஜபக்ஷவுக்கு ஒரு ஜனநாயக மாற்றீடாக நகைப்புக்கிடமான முறையிலேனும் முன்வைக்க முடிந்துள்ளது.

    குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும் நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியிடமிருந்து யூ.என்.பி. பாதைகளை வகுத்துக்கொண்டுள்ளதோடு, மனத்தாக்கங்கள் எதுவும் இல்லை என்பதை காட்டுவதற்காக கடந் வாரம் மாத்தறையில் நடந்த கூட்டத்தில் விக்கிரமசிங்க பகிரங்கமாக தனது நன்றியுனர்வை வெளிப்படுத்தியுள்ளார். “நாங்கள் சுதந்திரத்துக்கான மேடையை” அமைத்த போது, எங்களது மேடையில் திரு. விக்கிரமபாகு கருணாரட்ன இருந்தார். நாம் சிரமத்தை எதிர்கொண்ட சந்தர்ப்பத்திலேயே அவர் வந்து எங்களுடன் இணைந்துகொண்டார். நாம் அதை மதிக்கின்றோம். அவர் இப்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றார். திரு. சிறிதுங்க ஜயசூரிய [ஐக்கிய சோசலிச கட்சி தலைவர்] ஒரு உற்சாகமான மனிதர். அவரும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர். நான் அவர்களை மனமார வாழ்த்துகிறேன்,” என அவர் விளக்கினார்.

    “எமக்கு தெளிவான அரசியல் வேண்டும். இந்த நாட்டின் அரசியலில் விக்கிரமபாகு கருணாரட்னவும் சிறிதுங்க ஜயசூரியவும் சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். அவர்கள் ஜனநாயகத்துக்கு ஒரு பக்கபலம். அவர்கள் துணிவானர்கள். அவர்கள் சிறந்த ஆட்சிமுறையை ஊக்குவிக்கிறார்கள்,” என விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

    நவசமசமாஜக் கட்சிக்கும் ஐக்கிய சோசலிச கட்சிக்கும் இதைத் தவிர குற்றச்சாட்டுக்கள் வேறு எதுவும் இருக்க முடியாது. வலதுசாரி கோலிச வேட்பாளர் ஜாக் சிராக், 2002 ஜனாதிபதி தேர்தலில் நவ-பாசிச ஜூன்-மரி லு பென்னுக்கு எதிராக பலவித பிரெஞ்சு தீவிரவாத கட்சிகள் தம்மை இரகசியமாக ஆதரித்தமைக்காக நன்றி கூறுவது போன்றதாகும். அல்லது 1999ல் கிழக்குத் தீமோரில் தனது இராணுவ தலையீட்டுக்காக பிரச்சாரம் செய்த ஆஸ்திரேலிய இடது குழுக்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹொவார்ட் பாராட்டுக்களை தெரிவிப்பது போன்றதாகும். ஒரு பொது விதியாக, சாதாரண உழைக்கும் மக்களின் முன்னிலையில் இத்தகைய இழிந்த அரசியல் உறவுகள் தெளிவாக அம்பலப்படுத்தப்படுவதை தவிர்த்துக் கொள்வதற்காக, இத்தகைய பாராட்டுக்களை தெரிவிக்காமல் இருப்பதே நல்லது என சம்பந்தப்பட்ட அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.

    கருணாரட்னவும் ஜயசூரியவரும் விக்கிரமசிங்கவின் கருத்துக்களுக்கு பதிலளிக்கவில்லை. அல்லது, அவை சம்பந்தப்பட்டுள்ள சர்வதேச சந்தர்ப்பவாத அமைப்புக்கள் தமது இலங்கை கிளையினரை விமர்சிக்குமா அல்லது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா? -நவசமசமாஜக் கட்சியைப் பொறுத்தளவில் நான்காம் அகிலத்தின் பப்லோவாத ஐக்கிய செயலகமும் மற்றும் ஐக்கிய சோசலிச கட்சிக்கு சர்வதேச தொழிலாளர்கள் கமிட்டியும் அவற்றின் சர்வதேச அமைப்புகளாகும். யூ.என்.பி. உடன் நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும் கொண்டுள்ள உறவைப் போல் அவற்றின் சமதரப்பினரும் உலகின் ஏனைய பகுதிகளில் உறவுகளைக்கொண்டுள்ளன. மற்றும் அது பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் பலவித வடிவங்களின் சீரழிவின் உற்பத்தியாகும்.

    தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்கான மார்க்சிச போராட்டத்தை நிராகரித்து, பல நாடுகளில் தலைநீட்டிய சமூக ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாத துரோக தலைமைத்துவங்களுக்கு அடிபணிந்து போன மிசேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மன்டேலின் தலைமையிலான நான்காம் அகிலத்தின் சர்ந்தர்ப்பவாத போக்கில் இருந்து பிரிந்து, 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியாகும்.

    அரை நூற்றாண்டின் பின்னர், இத்தகைய முன்னாள் மத்தியதர வர்க்க தீவிரவாதிகள், அரசியல் ஸ்தாபனத்துக்குள் தமக்கென்று ஒரு இடத்தைப் பெற முயற்சித்த நிலையில், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்ற தமது உரிமைகோரலையும் கைவிட்டுவிட்டனர். பெப்பிரவரியில், நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் பிரெஞ்சு பகுதியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (எல்.சி.ஆர்.) தம்மை புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியாக (என்.பி.ஏ.) மாற்றிக் கொண்டு, “ட்ரொட்ஸ்கிசம் சம்பந்தப்பட்ட எந்தவொரு உறவையும்” கைவிட்டதோடு சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளுடன் கூட்டணிக்காக திறந்துவிடப்பட்டுள்ள “ஒரு பன்மைவாத மற்றும் ஜனநாயகக் கட்சியாக உறுதிப்படுத்திக்கொண்டது.

    நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும் யூ.என்.பி. உடனான தமது உறவில், உலகம் பூராவும் உள்ள தமது சம சிந்தனையாளர்கள் எங்கே சென்றுகொண்டிருக்கின்றார்கள் என்பதை மட்டுமே மிகவும் தெளிவாக காட்டியுள்ளனர். சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்துடன் கூட்டணிக்குள் நுழைந்ததன் மூலம், ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படை கொள்கைகளை லங்கா சமசமாஜக் கட்சி காட்டிக்கொடுத்து ஒரு தசாப்தத்தின் பின்னரே, அதில் இருந்து பிரிந்து 1977 நவசமசமாஜக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. நவசமசமாஜக் கட்சி தலைவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து பிளவுபட்டிருந்தாலும், அதன் சந்தர்ப்பவாத அரசியலில் இருந்து அவர்கள் பிரியவேயில்லை.

    லங்கா சமசமாஜக் கட்சியைப் போலவே, நவசமசமாஜக் கட்சியும் பின்னர் ஐக்கிய சோசலிச கட்சியும், யூ.என்.பி. உடன் ஒப்பிடும் போது ஸ்ரீ.ல.சு.க. “குறைந்த கெடுதியாக” இருப்பதாக கூறி ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஏனைய முதலாளித்துவ அமைப்புக்களையும் தாம் இரகசியமாக ஆதரித்ததை நியாயப்படுத்தின. 2002ல் விக்கிரமசிங்க புலிகளுடன் யுத்த நிறுத்தமொன்றை கைச்சாத்திட்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த போதே, யூ.என்.பி. க்கு அவர்கள் அடிபணியத் தொடங்கினார்கள். அந்த ஏகாதிபத்தியவாதிகளின் அனுசரணையிலான “சமாதான முன்னெடுப்பைக்” கொண்டாடும் இடதுசாரித் தலைமைகளாக நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும் மாறின. ஆனால், அந்த பேச்சுவார்த்தைகள் முறிந்து, புதிய யுத்தத்துக்கு தயாராவதற்கு இராணுவத்தை அனுமதிப்பதற்கான தந்திரோபாயமே அந்த யுத்த நிறுத்தம் என இந்த ஆண்டு யூ.என்.பி. யே பிரகடனம் செய்த பின்னரும் அவர்களது உறவுகள் தொடர்கின்றன.

    “சுதந்திரத்துக்கான மேடை” ஸ்தாபிக்கப்பட்டதை அடுத்து, நவசமசமாஜக் கட்சி தலைவர் கருணாரட்ன வலதுசாரி யூ.என்.பி. யின் தேவைகளுக்கு மிகவும் நெருக்கமாக தமது கட்சியை அர்ப்பணித்தார். அவர் லக்பிம வார இதழில் ஒவ்வொரு வாரமும் எழுதும் பத்தியில், ஜூலை 26 அன்று, நவசமசமாஜக் கட்சி “மிகக் குறைந்தளவிலேனும் சோசலிச கோரிக்கைகளுக்காக” தேர்தலில் நிற்கவில்லை மற்றும் -யூ.என்.பி. யின் வழியில்- ஒரு “சுதந்திர ஜனநாயக அரசுக்காகவும்” மற்றும் “ஜனநாயக கோரிக்கைகளுக்காகவும்” அது பிரச்சாரம் செய்யும் என தெரிவித்தார்.

    பொன்சேகாவை விக்கிரமசிங்க அணைத்துக்கொண்ட பின்னரும் கூட, நவசமசமாஜக் கட்சி தலைவர் இன்னமும் யூ.என்.பி. யின் “தாராளவாத பிரிவுடன்” ஒரு தேர்தல் கூட்டை அமைத்துக்கொள்ள பேராவலுடன் எதிர்பார்க்கின்றார். கடந்த வாரக் கடைசியில் ராவய பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் கருணாரட்ன தெரிவித்ததாவது: “எனது ஜனநாயக கோரிக்கைகளுடன் யாராவது உடன்பட்டால் நான் அவரைப் பற்றி [அவரை ஆதரிப்பதை பற்றி] அக்கறை செலுத்துவேன். ஒரு பொது வேட்பாளருக்கு விக்கிரமசிங்கவே ஓரளவுக்கேனும் பொருத்தமானவராவார்.”

    கருணாரட்னவும் ஜயசூரியவும் தங்களை தயக்கத்துடன் ஜனாதிபதி வேட்பாளர்களாக நிறுத்திக்கொள்ளத் தள்ளப்பட்டார்கள். இத்தகைய “சோசலிஸ்டுகளின்” இலக்கு எங்குள்ளது என்பதையிட்டு சோசலிச சமத்துவக் கட்சிக்கு எந்தவொரு மாயையும் கிடையாது. அது, தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார மற்றும் சமூக பேரழிவுக்கு பொறுப்பாளிகளான ஸ்ரீ.ல.சு.க., யூ.என்.பி., மற்றும் அவற்றுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஆளும் வர்க்கத்தின் சகல தரப்பில் இருந்து பிரிந்து, சுயாதீனமாக தொழிலாளர்களை அணிதிரட்டும், சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் விஜே டயஸ் மற்றும் எமது கட்சியின் சோசலிச வேலைத் திட்டத்துக்கும் எதிராகவே இலக்கு வைக்கப்பட்டுள்ளது

    Reply
  • meerabharathy
    meerabharathy

    “மே 18 இயக்கம்” நண்பர்களே….
    காலம் தாழ்த்தியபோதும் பிந்தாமல் முடிவு எடுத்து அறிவித்தமை வரவேற்க்கத்தக்கது….

    “முன்னேறிய பிரிவினர்” என அடையாளப்படுத்திக்கொண்டு….
    சொற்களில் மூன்றாம் தர அல்லது பொதுப்புத்தி மட்ட சொற்களைப் பயன்படுத்துவது அழகல்ல….
    நமது வளர்ச்சி நமது மொழிகளிலும் அதைப் பயன்படுத்தும் முறையிலும் தெரியவேண்டும் என நினைக்கின்றேன்….

    எதிர்வரும் காலங்களில் இதிலும் கவனம் எடுத்து செயற்படுவதன் மூலம் தங்களை “முன்னேறிய பிரிவினர்” என்பதற்குள் அடக்குவீர்கள் என நம்புகின்றேன்…
    “மே 18 இயக்கம்” நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்….
    நன்றி
    மீராபாரதி

    Reply
  • தோழர்
    தோழர்

    அப்படியென்றால் வியூகத்தின் சகோதர இயக்கமான புதிய காத்துகள் புதிய திக்குகள் எல்லாம் யார் யாரையாம் ஆதரிக்கப் போகிறார்கள்.

    Reply
  • santhanam
    santhanam

    யே.வி.பியை ஏன் விட்டு விட்டு ஏன் என்றால் உமாவின் நண்பன் தானே அதனால் தான் கருணாரட்ணவை ஆதாரிக்கிறார்கள் வியூகம் நண்பர்களே …….

    Reply
  • பல்லி
    பல்லி

    தேர்தல் முடிய சொல்லுவார்கள் என நினைக்கிறேன்; தோழர்;

    Reply
  • suganthy arumugam
    suganthy arumugam

    this decision is based purely on principle, without considering pragmatism. I have great respect for Dr Bahu . what will happen when we vote for a candidate who we know for sure is not going to win? I think Mr sambanthan is a pragmatic and a real politician.I think we tamil have no option other than choosing a lesser evil.

    Reply
  • Poddu
    Poddu

    //I think Mr sambanthan is a pragmatic and a real politician.I think we tamil have no option other than choosing a lesser evil.// suganthy arumugam

    Hi Suganthy,
    Do you think last 62 years our leaders didn’t choose lesser evil.
    Do you think is more pragmatic and real politician than Chelva & Amir?

    Reply
  • suganthy arumugam
    suganthy arumugam

    Do we have any other option dear?

    Reply