முஸம்மிலுக்கு பணம் வழங்கியமைக்கு எதிராக இன்று சட்ட நடவடிக்கை -ஒலிப்பதிவு ஆவணங்களும் ஊடகங்களுக்கு விநியோகம்

mohomad-muzzammil.gifசரத் பொன்சேக்காவை ஆதரித்து அவரது ஊழல் மோசடிகளை மூடிமறைக்கக் கோரியும் முஸம்மில் எம்.பி.க்கு மில்லியன் கணக்கில் பணத்தை வழங்க முற்பட்ட சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.

உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்  இன்று முதல் இதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது. இலஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் கைமாறியமை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதைப் போன்று சம்பவத்துடன் தொடர்புடைய பேச்சுக்கள் இடம்பெற்ற ஒலி நாடாக்கள் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் ஒலிபரப்பிக் காண்பிக்கப்பட்டது.

சரத் பொன்சேகாவுக்கு முஸம்மில் எம்.பி.யின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான இடைத்தரகராக செயற்பட்ட மயோன் முஸ்தபா எம்.பி. முஸம்மில் எம். பி.யுடன் பேரம் பேசுவதை அதில் கேட்கக் கூடியதாக இருந்தது.

அதேபோன்று, கடந்த 14ம் திகதி இராஜகிரியவிலுள்ள ஐ. தே. க. அலுவலகம் ஒன்றில் வைத்து ஐ. தே. க. முக்கியஸ்தரான மலிக் சமரவிக்ரம முஸம்மில் எம்.பி.யுடன் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.

மயோன் முஸ்தபா ஹாபிஸ் நஸீர் அஹமட் (துஆ தலைவர்) மற்றும் சரத் என்று அழைக்கப்படும் ஐ. தே. க.வின் மற்றுமொரு முக்கியஸ்தர் ஆகியோர் இணைந்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தையை முஸம்மில் எம்.பி. மிகவும் இரகசியமான முறையில் தனது உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நவீன ஒலிப்பதிவு இயந்திரம் மூலம் பதிவுசெய்துள்ளார். இந்த உரையாடலையும் இங்கு அவர் ஒலிபரப்பிக் காண்பித்தார்.

சரத் பொன்சேகாவின் ஆயுத ஊழல் மோசடிகளை மூடிமறைக்கவும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவுக்கு எதிராகவும், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதற்கான அறிவித்தலை முஸம்மில் எம்.பி. ஊடாக வெளியிடுவது தொடர்பாக இங்கு கலந்துரையாடியதை கேட்கக்கூடியதாக இருந்தது.

இதற்கான செய்தியாளர் மாநாட்டை நடத்தும் இடம் தொடர்பான முரண்பாடுகள் வந்ததையடுத்து அதனை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக ஐ. தே. க. முக்கியஸ்தர் மலிக் சமரவிக்ரம அந்த இடத்திலிருந்தவாறே ரவி கருணாநாயக்க எம்.பி.யுடன் தொலைபேசி மூலம் பேசுவதையும், மருதானை டீன்ஸ் வீதியிலுள்ள ஒரு இடத்தில் இந்த செய்தியாளர் மாநாட்டை நடத்த ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமையையும் அந்த ஒலி நடாவிலிருந்து கேட்கக் கூடியதாக இருந்தது. ஒலிபரப்பி காண்பிக்கப்பட்ட உரையாடல்கள் சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்டு ஊடகங்களுக்கு இந்த செய்தியாளர் மாநாட்டில் வழங்கப்பட்டது.

இந்த மாநாட்டில் விமல் வீரவன்ச எம்.பி. தகவல் தருகையில் :-

மிகவும் பொறுப்புடனும், ஆதாரபூர்வமாகவும் இந்த தகவல்களையும் இதனுடன் சம்பந்தப்பட்ட ஒளி, ஒலி நாடாக்களையும் நாங்கள் வெளியிடுகின்றோம். சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குமாறு தனக்கு தொடர்ந்து அழுத்தங்கள் தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக முஸம்மில் என்னிடம் தெரிவித்தார். அதனையடுத்து நாங்கள் திட்டமிட்ட சில செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.

இந்த நாட்டிலுள்ள மக்கள் பிரதிநிதிகளை வாங்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் எனது ஆலோசனைக்கமைய நாட்டுக்காக முஸம்மில் எம்.பி. மிகவும் போராட்டத்திற்கு மத்தியில் காட்சிகளையும் பேச்சுக்களையும் ஒளி, ஒலிப்பதிவுகளை செய்துள்ளார்.

இவற்றில் உண்மையில்லை என்று கூறும் எவரும் இதனை உறுதிப்படுத்த முடியும். நாங்கள் தயாராக உள்ளோம். உண்மையானதும், தகுந்த ஆதாரங்களும் இருப்பதால் எந்தவித தயக்கமும் இன்றி சட்டத்தின் முன் இதனை முன்வைக்கவுள்ளோம். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இதற்கான சகல சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

பணம் தருவதாக பேரம் பேசப்பட்டுள்ள போதிலும் ஒரு தொகைப் பணத்தையே முற்பணமாக கொடுத்துள்ளனர். இதற்காக வெள்ளவத்தையிலுள்ள சபயார் ஹோட்டலில் இரண்டு அறைகள் எடுக்கப்பட்டுள்ளன. 105ம் இலக்க அறை முஸம்மில் எம்.பி.க்காகவும், 102ம் இலக்க அறை அவரது மெய்பாது காவலர்களுக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. மயோன் முஸ்தபா, தனது பெயர், அடையான அட்டை இலக்கம் ஆகிய தகவல்களை வழங்கி இந்த இரு அறைகளை பதிவு செய்துள்ளமை ஹோட்டல் பதிவு மூலம் தெளிவாக உறுதியாகின்றது.

எம்.பி.க்களை பணம் கொடுத்து வாங்கும் விடயம் மிகவும் பாரதூரமான விடயமாகும். சரத் பொன்சேகா தான் ஊழல் அற்றவர் என்றும் தன்னுடன் இருப்பவர்களும் நேர்மையானவர்கள் என்றும் கூறித் திரிகின்றார். இலஞ்சம் கொடுத்து எம்.பி.க்களை வாங்குபவர்களிடமிருந்து எவ்வாறு நல்லாட்சியை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஏகாதிபத்தியவாதிகள் தங்களுக்குத் தேவையானதை இந்த நாட்டில் நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். மேற்கத்திய நாடுகளின் பணங்கள் மூலம் இந்த நாட்டு மக்களின் தீர்மானத்தை ஒருபோதும் மாற்ற முடியாது. எனவே, மக்கள் ஒருபோதும் இதனை அனுமதிக்கப் போவதில்லை என்றார்.

முஸம்மில் எம். பி.

சில ஊடகங்கள் கூறுவது போன்று பணத்தைப் பெறும் நோக்கம் இருந்தால் அந்த காட்சிகளையும், பேச்சுவார்த்தைகளையும் ஒளி, ஒலிப்பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை என்று முஸம்மில் எம்.பி. தெரிவித்தார்.  இது போன்ற இலஞ்சம் கொடுக்கும் திட்டங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டுச் சென்றேன் என்று அவர் குறிப்பிட்டார்.

எமது திட்டத்தை சரியான முறையில் நிறைவேற்றுவதற்காக அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடிக்க வேண்டி ஏற்பட்டது.  இதற்காக பொன்சேகாவுக்கு ஆதரவாக சில பொய்களை சொல்ல நேர்ந்ததாக முஸம்மில் தெரிவித்தார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு; ‘கொமான்டோ படையினர் வேண்டுமா? அல்லது என்னிடம் பாதுகாப்பு ஆட்கள் உள்ளனர். எது வேண்டும் என்று ரவி கருணாநாயக்க எம்.பி. கேட்டுள்ளார்.

மயோன் முஸ்தபாவுடனான ஒலி நாடா உரையிலும் இதனை கேட்கக்கூடியதாக இருந்தது.

கடந்த 5ம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்த முஸம்மில், உங்களைப் பற்றி தலைவரிடம் சொல்லியுள்ளேன். இன்னும் சில முக்கியஸ்தர்கள் வரவுள்ளனர். சகலருக்கும் பணம் கொடுக்க தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார். சரத் பொன்சேகா, ரணில், ஜே. வி. பி. மற்றும் முக்கியஸ்தருக்கு இந்த விடயங்கள் தொடர்பாக தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *