ஜனாதிபதித் தேர்தலில் தீர்மான சக்தி சிறுபான்மையினத்தினரே. ஆனால், ஆறாவது ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போவது…? – பீ.எம். புன்னியாமீன் –

pon-mahi.jpgஎதிர்வரும் 26ஆந் திகதி இலங்கையில் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றினை நோக்குமிடத்து 1982ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலையடுத்து நாட்டில் சுமுகமான நிலையில் நடைபெறும் ஒரு தேர்தலாகவே இந்த ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிட முடியும்.

1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற வேளையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகளின் பலத்த நெருக்கடிகள் காணப்பட்டிருந்தன. அதேநேரம், தென்னிலங்கையிலும் மக்கள் விடுதலை முன்னணியினரின் எதிர்ப்பு நடவடிக்கைகள் உச்ச நிலையையடைந்திருந்தன. மிகவும் பயங்கரமான ஒரு நிலையிலேயே இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்தனர். 1994ஆம் ஆண்டு மூன்றாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலகட்டத்திலும் விடுதலைப் புலிகளின் தாக்கங்கள் நாடளாவிய ரீதியில் வியாபித்தே காணப்பட்டிருந்தன. இத்தேர்தலில் போட்டியிட்ட பிரதம வேட்பாளர்களில் ஒருவரான காமினி திசாயநாயக்கா கொலை செய்யப்பட்டார். அச்சமிகு சூழ்நிலையில் இத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல 1999ஆம் ஆண்டு நான்காவது ஜனாதிபதித் தேர்தலின்போதும் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தலின்போதும் விடுதலைப்புலிகளின் தாக்கங்கள் அதிகரித்துக் காணப்பட்டிருந்தன. இத்தேர்தல்களில் ஒப்பீட்டு ரீதியாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்களிப்பு வீதம் வெகுவாகக் குறைந்திருந்தன.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலின் நடைபெறும் இக்காலகட்டமானது நாட்டில் மிகவும் ஒரு சுமுகமான நிலைமை நிலவும் ஒரு காலகட்டமாகும். 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்பு விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் பூச்சிய நிலையை அடைந்தன. அதேநேரம், தென்பகுதியில் விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் குண்டுத்தாக்குதல்கள் முற்றுமுழுதாக இல்லாமல் போய்விட்டது. எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் சரி, இலங்கையின் தென்பகுதியிலும் சரி தேர்தல் வாக்களிப்பு தொடர்பான எவ்வித நெருக்கடிகளுமின்றி இயல்பு நிலையில் நடைபெறும் ஒரு தேர்தலாக இத்தேர்தலை இனங்காட்ட முடியும். அரசியல் அவதானிகளின் கருத்துப்படி இத்தேர்தலில் 72க்கும் 78க்குமிடைப்பட்ட வீதத்தினர் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு இயல்பு நிலையயடைந்தாலும்கூட, தேர்தலில் போட்டியிடும் பிரதான அபேட்சகர்களின் ஆதரவாளர்களின் தேர்தல் அடாவடித்தனங்கள் அதிகரித்து வருவதை இத்தேர்தலில் அவதானிக்க முடிகின்றது. ஐக்கிய நாடுகள் சபைகூட இலங்கைத் தேர்தல் வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் 1988ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலே தேர்தல் வன்முறைகள் மிகைத்த ஒரு தேர்தலாக இனங்காட்டப்பட்டது. அத்தேர்தலில் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தையடுத்து தேர்தல் தினம் வரை 500க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இத்தேர்தலின் போது இதுவரை 4 கொலைகள் இடம்பெற்று விட்டன.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தாலும்கூட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவுக்குமிடையிலான போட்டியே முதன்மைப்படுத்தப்பட்டு உள்ளது.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு ஜனாதிபதி ஆதரவு நிலை மிகவும் அதிகரித்தே காணப்பட்டது. யுத்த முடிவின் பின்பு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் இதனை நன்கு வெளிப்படுத்தின. இத்தகைய சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தியே தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுத்தார். இவரின் பிரதான எதிர்பார்க்கையாக ஜனாதிபதித் தேர்தலில் தான் அமோக வெற்றியீட்டுவதுடன்,  அதைத் தொடர்ந்து வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவது இருந்திருக்கலாம். இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் நடைபெற இருந்த போதிலும்கூட, பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் நோக்கம் மேற்குறிப்பிட்டவாறே அமைந்திருக்கலாம். ஆனாலும் யுத்த முடிவடைந்த நிலையில் காணப்பட்ட யுத்த வெற்றி மனோநிலை மக்கள் மத்தியில் படிப்படியாக குறைவடையலாயிற்று. குறிப்பாக இலங்கையில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் யுத்தத்தால் மூடிமறைக்கப் பட்டிருந்தாலும்கூட,  யுத்த முடிவினையடுத்து அப்பிரச்சினைகளும் மெல்ல மெல்ல தலை தூக்க ஆரம்பித்தன.

2009 நவம்பர் மாதமளவில் வடக்கு யுத்த வெற்றிற்கு இராணுவ தலைமை வழங்கிய ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவார் என்ற நிலை தெரிய வந்ததும் யுத்த வெற்றிகள் பகிரப்படுவதைப் போல மக்கள் மத்தியில் ஒரு சலன நிலை ஏற்பட்டது. யுத்த வெற்றிற்கு தனித்துவமான உரிமையாளராகக் காணப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ: சரத் பொன்சேகா களம் இறக்கப்பட்டதும் அவரின் தனித்துவ நிலை மக்கள் மத்தியில் பிளவடைந்து பரவலடையலாயிற்று. எனவே,  ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரே அடுத்த ஜனாதிபதி மஹிந்தவா? பொன்சேகாவா? என்ற நிலை ஐம்பதுக்கு ஐம்பது என்ற நிலையில் தளம்பலடையக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாயிற்று.

இலங்கை சுதந்திரமடைந்தது முதல் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும், ஐக்கிய தேசியக்கட்சி தனித்துவ சக்தியாக யானை சின்னத்தின் கீழ் அனைத்துத் தேர்தல்களையும் எதிர்கொண்டே வந்துள்ளது. ஆனால்,  தனது கட்சியின் தற்போதைய தலைமைத்துவத்தில் நம்பிக்கையிழந்த நிலையிலேயே பொதுவேட்பாளர் என்ற அடிப்படையில் சரத் பொன்சேக்காவை ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தியதுடன்,  இலங்கையில் நடைபெற்ற பிரதான தேர்தலொன்றில் முதல் தடவையாக தனது கட்சி சின்னத்தையும் விட்டுக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எதிர்பார்க்கப்படும் பிரதான எதிர்பார்க்கையாக இருப்பது ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்கா வெற்றியீட்டினால் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை 6 மாதங்களுக்குள் நீக்கப்பட்டு பாராளுமன்ற ஆட்சிமுறை ஏற்படுத்தப்படுமெனவும் பாராளுமன்ற ஆட்சிமுறையின் கீழ் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க நிறைவேற்றதிகாரம் கொண்ட பிரதமராக செயலாற்றக்கூடிய நிலை உருவாகும் என்பதுமாகும்.

ஆனால்,  ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் தான் பதவிக்கு வந்தவுடன் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பேன் என்று வாக்குறுதி வழங்குவது இது முதற் தடவையல்ல. 1994ஆம் ஆண்டு தேர்தலில் அப்போதைய பொதுசன ஐக்கிய முன்னணி வேட்பாளர் சந்திரிக்கா குமாரதுங்க மிகவும் அழுத்தமான முறையில் தான் பதவிக்கு வந்தவுடன் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பல இடங்களில் பல வாக்குறுதிகளை வழங்கினார். இந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்ட நிஹால் கலபதி போட்டியிலிருந்து விலகி சந்திரிக்காவுக்கு ஆதரவளித்தமையும் குறிப்பிடத்தக்கது. அதேபோல மஹிந்த ராஜபக்ஸவும் ஜனாதிபதி ஆட்சிமுறை நீக்கப்படுமென்று வாக்குறுதிகளை 2005ஆம் ஆண்டு அளித்திருந்தார். அச்சந்தர்ப்பத்திலும் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதிக்கு பூரண ஆதரவை வழங்கியது.

ஆனால், அதிகாரத்துக்கு வந்த பிறகு எந்த ஜனாதிபதியும் ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாதொழிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில் பொன்சேக்கா இவ்வாக்குறுதியை எவ்வளவு தூரம் நிறைவேற்றுவார் என்பது இலங்கையில் படித்த மக்கள் மத்தியில் ஒரு கேள்வியை தோற்றுவித்துள்ளது. மறுபுறமாக இவர் இலங்கையில் இராணுவத் தளபதியாக இருந்தவர். ஆகவே அதிகாரம் கைக்குக் வந்தவுடன் அதிகாரத்தை எடுத்த எடுப்பிலே கொடுத்துவிடுவாரா? ஏன்பதும் சிந்திக்கக்கூடிய ஒரு விடயமே. மறுபுறமாக இவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுமிடத்து பிரதம மந்திரியாக ரணில்விக்கிரமசிங்க அல்ல முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா ஏதாவொரு வகையில் கொண்டு வரப்படுவார் என்ற ஒரு ஊகமும் பரவலாக இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிப்பதாயின் அரசியலமைப்பிலே பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மாற்றியமைக்க வேண்டும். ஒரு பிரதான கட்சியே இல்லாத நிலையில் பொன்சேகாவால் இது சாத்தியப்படுமா?…. எவ்வாறாயினும்,  இத்தேர்தலில் சரத் பொன்சேக்கா வெற்றிபெற்றாலும், மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றாலும் உண்மையிலேயே தோல்வியடைப் போவது ஐக்கிய தேசியக் கட்சியும், ரணிலுமே என்பது மக்கள் மத்தியில் பரவலான கருத்தாக நிலவுகின்றது.

மறுபுறமாக பொன்சேக்காவை ஜனாதிபதி பொது வேட்பாளராகக் கொண்டு வருவதில் மக்கள் விடுதலை முன்னணியும்,  ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்த மங்கள சமரவீரவும் பிரதான பாகம் ஏற்றனர். இந்நிலையில் பொது வேட்பாளர் பொன்சேகா ஐக்கிய தேசியக்கட்சியினதும், மக்கள் விடுதலை முன்னணியினதும் வேட்பாளராகவே மக்கள் முன் காட்சியளித்தார். சரத் பொன்சேகா பொது வேட்பாளராக இருந்த போதிலும்கூட, நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக மஹிந்தவும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் இணைவேட்பாளராக பொன்சேகாவும் என்ற நிலையே வலுவடைந்தது.

1956ஆம் ஆண்டின் பின்பு இலங்கை அரசியலில் தேர்தல்களை விரிவாக ஆராயுமிடத்து எந்த சந்தரப்பத்திலும் 30 தொடக்கம் 32 சதவீதத்தினர் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களாகவும், 20 தொடக்கம் 22 சதவீதத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்ளாகவுமே இருந்துள்ளனர். இவ்விரு கட்சிகளுக்கும் நிலையாக வாக்குகளாகக் கூட இவற்றைக் கொள்ளலாம். 1980களின் இறுதியில் மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் ரொஹன விஜயவீர கொல்லப்பட்டதுடன்,  படிப்படியாக ஜே.வி.பி. ஜனநாயக நீரோட்டத்தில் மீண்டும் கலந்தது. பொதுவாக 4 வீதமான வாக்குகள் ஜே.வி.பி.க்கு உள்ளதென கருதப்பட்ட போதிலும்கூட,  தற்போதைய நிலையில் ஜே.வி.பி.க்கு சுமார் 2.5வீதமான வாக்குகள் நிலையான வாக்குகளாக இருக்கலாம் என கணிக்கப்படுகின்றது. இத்தகைய நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியும், பாராளுமன்றத் தேர்தல்களில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் நிர்ணயிக்கும் சக்தியாக 40க்கும் 45 வீதத்துக்குமிடைப்பட்ட மிதக்கும் வாக்காளர்களாகவே உள்ளனர். எனவே,  6வது ஜனாதிபதித் தேர்தலையும் இந்த மிதக்கும் வாக்காளர்களே தீர்மானிக்கப் போகின்றார்கள்.

தேர்தலுக்கு முன்பு ஜனாதிபதித் தேர்தல் களத்தில் நிகழ்ந்து வரும் அதிரடி நிகழ்வுகள் நிலையில் மிதக்கும் வாக்காளர்களையும் தளம்பல் நிலையை  ஏற்படுத்தியது. மஹிந்தவினதும், பொன்சோக்காவினதும் வெற்றி நிலையின் உறுதிப்பாடு நாளுக்குநாள் தளம்பலடைந்து வந்ததையே அவதானிக்க முடிந்தது.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் யுத்தவெற்றியே பலவகைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம். மஹிந்த ராஜபக்ஸவின் பிரசாரத்தில் பிரதான இடத்தைப் பிடித்த கருப்பொருளாக விளங்கியதே தான் 2005ஆம் ஆண்டு பதவிக்கு வரும்போது யுத்தத்தை முடித்துத் தர வேண்டுமென்றே மக்கள் தனக்கு ஆணை தந்தனர் எனவும், அதற்கமைய தனது பதவிக்காலத்தில் உலகிலே பயங்கரவாத இயக்கங்களில் முதலாமிடத்தை வகித்த விடுதலைப் புலிகளை ஒழித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டுக்கு அமைதியை ஏற்படுத்தியதை தனது பதவிக்கால சாதனையாகவே கூறிவந்தார். மறுபுறமாக சரத் பொன்சேக்கா இராணுவத் தளபதி என்ற வகையில் மாவிலாறு பிரதேசத்தில் விடுதலைப் புலிகளை அடக்க மேற்கொண்ட நடவடிக்கையை இறுதிவரை தொடர்ந்து வெற்றிக்கு தானே காரணம் என்பதை கூறிவந்தார்.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை எதிர்வு கூறுவது மிகவும் கடினமான ஒரு விடயம். தேர்தல் நிலவரங்கள் நாளுக்குநாள் மாறிக் கொண்டு வருவதே இதற்குப் பிரதான காரணம். இருப்பினும்,  ஆய்வு ரீதியாக நோக்குமிடத்து இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழக்கூடிய பிரதேசங்களிலும்,  நகர்சார் பிரதேசங்களினதும் ஆதரவு பொதுவேட்பாளர் சரத் பொன்சேக்காவுக்கு இருப்பதையும், சிங்கள மக்கள் செறிவாக வாழக்கூடிய பிரதேசங்களில் குறிப்பாக கிராமப்புற மக்களின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஸவுக்கு சார்பாக இருப்பதையும் இந்நிலையில் அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஒரு பிரதான தேர்தலாகும். உள்ளுராட்சித் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள், பாராளுமன்றத் தேர்தல்கள்  என்பன குறிப்பிட்ட பிரதேசத்தில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் செல்வாக்கு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால்,  ஜனாதிபதித் தேர்தலை எடுத்துநோக்குமிடத்து போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் முழு நாட்டுக்குமுரிய வேட்பாளர். நாடளவில் குறித்த வேட்பாளருக்கு சில பிரதேசங்களில் செல்வாக்கு அதிகரித்திருக்கும். சில பிரதேசங்களில் செல்வாக்குக் குறைவாகக் காணப்பட்டிருக்கும். இலங்கையிலுள்ள 22 மாவட்டங்களிலும் வைத்து உத்தேச ரீதியிலான தீர்மானங்களை எடுப்பதும் கணிப்பீட்டுக் கருத்துக்களைப் பெறுவதும் கடினமான காரியம். அதேநேரம்,  சகல ஆட்சி அதிகாரங்களைத் தீர்மானிக்கக் கூடிய சக்தி இந்த ஜனாதிபதித் தேர்தலினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. இத்தேர்தலில் வெற்றிபெறக்கூடிய அபேட்சகர் சார்பான கட்சி நிச்சயமாக எதிர்வரும் மாதங்களில் நடைபெறக்கூடிய பாராளுமன்ற தேர்தல்களில்  நிச்சயமாக வெற்றியீட்டும். இதில் சந்தேமில்லை.

இலங்கையில் நடைபெற்ற 5வது ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. 2005ஆம் ஆண்டு இத்தேர்தல் நடைபெற்ற காலகட்டங்களில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார் என்ற பரவலான நிலையே காணப்பட்டது. தேசிய சர்வதேச ஊடகங்கள்கூட அன்று ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை முன்கூட்டியே உறுதிப்படுத்தி  கருத்துக்களை வெளியிட்டன. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முதன்மைப்படுத்திய பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்து சுமார் 11 ஆண்டுகளாகிய நிலையில் அக்கட்சியின் போக்கு மீது மக்களுக்கு ஒரு வெறுப்பு நிலை ஏற்பட்டிருந்ததும் மாறாக அச்சூழ்நிலையில் மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பியதும் இந்நிலைக்குக் காரணமாகும்.  2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் சிறுபான்மையின சார்புக் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பகிரங்க ஆதரவினை வெளிப்படுத்தின. ஆனால், அத்தேர்தலின்போது மக்கள் விடுதலை முன்னணியும், இடதுசாரி கட்சிகளும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளித்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செல்வாக்கு நிலை மிகைத்திருந்த காலகட்டமாகவே இக்காலகட்டம் விளங்கிற்று. 2002ஆம் ஆண்டு பிரதம மந்திரியாக ரணில்விக்கிரமசிங்க பதவியேற்றபோது விடுதலைப் புலிகளுக்கும்,  ரணில் அரசாங்கத்துக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் வன்னிப் பிரதேசம் உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளின் கை ஓங்கிய நிலையே காணப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கும் ரணிலுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக விடுதலைப் புலிகளின் ஆதரவு ரணிலுக்குக் கிடைக்குமென்ற நிலைப்பாடு தென்பகுதியில் உறுதியாக நிலவியது.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஒப்புநோக்குமிடத்து சிறுபான்மை இனத்தினர் செறிவாக வாழக்கூடிய மாகாணங்களின் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் சகல மாவட்டங்களிலும் ரணில்விக்கிரமசிங்கவே அமோக வெற்றியீட்டினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 79.51 வீத வாக்குகள் கிடைத்தன.  மஹிந்த ராஜபக்ஸவினால் 18.87 வீத வாக்குகளையே பெறமுடிந்தது. அதேபோல திகாமடுல்லை மாவட்டத்தில் 55.81 வீத வாக்குகளையும், திருக்கோணமலை மாவட்டத்தில் 61.33 வீத வாக்குகளையும் பெற்று ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டினார். வட மாகாணத்தில் வாக்களிப்பில் கலந்து கொள்வதற்கு விடுதலைப் புலிகள் கடைசிநேரத்தில் வாக்காளர்களுக்கு தடைவிதித்தனர். இத்தடையே ரணிலின் தோல்வியை உறுதிப்படுத்திய கருவியாக அமைந்தது. வடமாகாணத்தில் வன்னி மாவட்டத்தில் 77.89வீத வாக்குகளையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 70.20வீத வாக்குகளையும் ரணில்விக்கிரமசிங்க பெற்றபோதிலும்கூட, இம்மாவட்டங்களில் வாக்களிப்போர் வீதம் இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு குறைவாக இருந்தது. வன்னி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களுள் 34.30வீத வாக்குகளும், யாழ் மாவட்டத்தில் 1.21வீத வாக்குகளும் மாத்திரமே பதிவாகின. யாழ், வன்னி மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு திறந்த அடிப்படையில் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டிருப்பின் அந்த வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் ரணிலுக்கே சென்றிருக்க முடியும் என எதிர்பார்க்க முடியும்.

இதேபோல மலையகத்தில் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க அதிகூடிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார். நுவரெலியா மாவட்டத்தில் ரணில்விக்கிரமசிங்க பெற்ற வாக்குகள் 250,428 ஆகும். (70.37வீதமாகும்) இங்கு மஹிந்த ராஜபக்ஸவால் 99, 550 வாக்குகளையே பெற முடிந்தது. இது 27.97 வீதமாகும்.) இதேபோல மலையகப் பகுதியில் பதுளை மாவட்டத்திலும் ரணில் விக்கிரமசிங்கவே வெற்றியீட்டியிருந்தார். மேலும், கண்டி மாவட்டம், மாத்தளை மாவட்டம் ஆகியவற்றிலும் நகர்சார் பிரதேசமான கொழும்பு மாவட்டத்திலும் ரணிலால் வெற்றிபெற முடிந்தது.

கிட்டத்தட்ட மக்களின் மனோநிலைகளையும், மக்களின் எழுச்சிகளையும் பார்க்கும்போது மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் இந்தத் தேர்தலில் சரத் பொன்சேக்காவுக்கு உறுதியான ஆதரவு நிலை காணப்படுகின்றது. ஆனாலும்,  2005ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டிய நுவரெலியா,  பதுளை ஆகிய மாவட்டங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நேரடியாகத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதினாலும் கிழக்கு மாகாணத்தில் கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவான பிரசாரங்கள் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப் படுவதினாலும் கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்குவீதம் குறைவடையலாம் என எதிர்பார்க்கலாம். 23 ஆம் திகதி செப்டம்பர் மாதம் 2008 இல் கனடாவின் “நெசனல் போஸ்ட்” இதழுக்கு சரத் பொன்சேகா வழங்கிய பேட்டியில் “சிறுபான்மையினராக இருக்கின்றோம் என்ற காரணத்துக்காக மித மிஞ்சிய விடயங்களுக்கு அவர்கள் கோரிக்கை விடுக்கக் கூடாது” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். “இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். சிறுபான்மையினர் இங்கு விருந்தாளிகள் மட்டுமே” என்று அவர் ஏற்கனவே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கடைசி நேரத்தில் சிறுபான்மை மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்தடுத்தியுள்ளது என்பது பல அவதானிகளின் கருத்தாக உள்ளது. 

அரசாங்க ஊடகங்கள் தவிர, பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் பொன்சேகா சார்பு நிலையை எடுத்திருப்பதையும் சர்வதேச ஊடகங்கள் மஹிந்தவுக்கு எதிரான முறையில் பொன்சேகாவுக்கு ஆதரவை வழங்குவதையும் வைத்து நோக்குமிடத்து பொன்சேகாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாகவே தோன்றியது. 2005ஆம் ஆண்டிலும் ரணிலின் வெற்றியும் இதேபோல காணப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையை நோக்குமிடத்து,  சிறுபான்மை சமுகத்தினரின் வாக்குகள் அரைவாசிக்கு அரைவாசி இரு பிரதான வேட்பாளர்களுக்கும் பிரிந்து போகலாம் என கருதப்படுகின்றது. அவ்வாறு ஏற்படுமிடத்து ஜனாதிபதித் தேர்தலில் தீர்மான சக்தி சிறுபாண்மை இனத்தவர் வாக்கு என்ற நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

தேர்தலுக்கு முந்திய ஒரு வாரத்தை அவதானிக்கும்போது இலங்கையில் சிங்களக் கிராமப்புறங்களில் மஹிந்த ராஜபக்ஸ ஆதரவு நிலையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் தேசியக் கூட்டணியினர் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள நிலை கிராமப்புற சிங்கள மக்கள் மத்தியில் ஒரு ஐயப்பாட்டையே உருவாக்கியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டணியினர் யுத்த காலத்தில் கடைசி நிமிடம் வரை விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமையவே செயற்பட்டார்கள். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தோல்வியையடுத்து சில சர்வதேச புலம்பெயர்ந்த தமிழர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் நாடுகடந்த தமிழீழத்துக்கான வாக்கெடுப்புகளும் வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கான வாக்கெடுப்புகளும் சிங்கள மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கி விடுமோ என்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்த நிலையில் கடைசிநேரத்தில் இரா. சம்பந்தன் பிரதம வேட்பாளரான சரத் பொன்சேகாவுடனும் மஹிந்த ராஜபக்ஸவுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்கள். அப் பேச்சுவார்த்தைகளின்போது பொன்சேகாவின் பக்கத்திலிருந்து தமக்கு சாதகமான நிலை கிடைத்ததினால் பொன்சேகாவை ஆதரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தல் விடுத்தது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் துரைசிங்கம் இலங்கையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் சரத் பொன்சேக்கா பதவிக்கு வருமிடத்து உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்படுமெனவும், கைதிகளாக்கப்பட்ட விடுதலைப் புலிகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும், வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படும் எனவும் இதன் மூலம் சுயாட்சி,  சுயநிர்ணய உரிமைக்கான வழி திறக்கப்படுமெனவும் தெரிவித்தார். மேற் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சரத் பொன்சேக்கா கையொப்பமிட்டு,  ஒப்பந்தத்துக்கு இணங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இக்கருத்து தமிழ் வாக்காளர்களைக் கவர்வதற்காகக் கூறப்பட்டாலும்கூட,  கிராமம்சார் சிங்கள வாக்காளர்களை வெகுவாகப் பாதித்த ஒரு கூற்றாகவே இருக்கின்றது. அதேநேரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது தேர்தல் பிரசாரங்களின் போது சம்பந்தன் தன்னுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய நேரத்தில் உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட வேண்டும்,  விடுதலைப் புலிக் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும், வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும்,  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் நீக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்ததாகவும் அக்கோரிக்கைகளை தான் தேசத்தின் நலன்கருதி தான் நிராகரித்ததாகவும் தேர்தல் என்பதைவிட தனக்கு நாடு தான் முக்கியம் என பகிரங்கமாக அறிவித்தார். இக்கருத்து ஊடகங்களில் முக்கியத்துவப் படுத்தப்பட்டன.

இந்நிலையில் சிங்கள மக்களை பாதித்த இக்கருத்தானது மஹிந்தவின் ஆதரவு நிலையை சிங்கள மக்கள் மத்தியில் மேலும் உறுதிப்படுத்துவதாகவே காணப்படுகின்றது. தேர்தலுக்கு முந்திய வாரங்களில் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மூலமாக அவர்களின் ஏற்பாட்டின் கீழ் ஒவ்வொரு சிங்களக் கிராமங்களிலும் “வீட்டுக் கென்வசிங்” மூலம் இக்கருத்துக்கள் வாக்காளர்கள் மத்தியில் தனித்தனியாக விதைக்கப்பட்டன. இதனை மஹிந்த சார்பு தேர்தல் பிரசார வியூகங்களில் ஒன்றாகவும் கொள்ளலாம். மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இப்பிரசார வியூகம் மிதக்கும் வாக்குகளிலும் தாக்கங்களை உருவாக்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. மறுபுறமாக சரத் பொன்சேக்கா ஜனாதிபதி வேட்பாளராக நியமனப் பத்திரம் தாக்கல் செய்த பின்பு யுத்த நிலையை காட்டிக் கொடுத்தமைக்கான குற்றச்சாட்டும், அதைத் தொடர்ந்து அவரின் ஆயுதக் கொள்வனவு ஊழல் சம்பந்தமான குற்றச்சாட்டும் இத்தகைய தேர்தல் பிரசாரங்களில் மக்களுக்கு தெளிவுபடுத்தப் பட்டதாகவும் தெரியவருகின்றது.

இத்தகைய தேர்தல் உத்திகள் சிங்களப் பிரதேசங்களில் பொன்சேக்காவின் ஆதரவு நிலையை கடைசிநேரத்தில் சரியச் செய்துள்ளன. ஆட்சி மாற்றம் ஒன்றை வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பது உண்மை. அதேநேரம்,  தற்போது இலங்கையில் நிலவும் அமைதியான நிலைமை தொடர வேண்டும் என்பதையும் விரும்புகின்றார்கள் என்பதும் உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொன்சேகா மீண்டும் பதவிக்கு வரும்போது விடுதலைப் புலிகள் வளர்க்கப்படலாம் என்ற ஒரு ஐயப்பாடு சிங்கள வாக்காளர்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளமையினால் இறுதி நேரத்தில் மஹிந்த ராஜபக்ஸ சிறிய வாக்கு வீதத்தில் வெற்றியீட்டலாம் என்ற நிலை தற்போது வலுவடைந்து வருகின்றது. அது மாத்திமன்றி,  இந்த நிலைமை தொடர்பான பிரசாரங்கள் மிக வேகமாக வாக்காளர்கள் முன் எடுத்துச் செல்லவும் படுகின்றன.

எவ்வாறாயினும் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ளன. சரத் பொன்சேக்கா வெற்றியீட்டினாலும்,  மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டினாலும் அவர்கள் இருவரும் தனித்தனியாக எதிர்பார்ப்பதைப் போன்று கூடிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்ட முடியாது என்பது மாத்திரமே உண்மை.     

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *