குடாநாட்டில் உணவுப் பண்டங்களுக்கு விலை நிர்ணயம்

Jaffna_Roadயாழ்ப் பாண மாவட்டத்திலுள்ள உணவுக் கடைகளில் செவ்வாய்க்கிழமை நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலேயே உணவுப் பண்டங்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும் உணவுப் பண்டங்களின் விலைகளின் பட்டியல் சகல உணவகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவேண்டும் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார். இந்த நடைமுறையைப் பின்பற்றாத உணவகங்களுக்கு எதிராகப் பாவனையாளர் அதிகார சபையின் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உணவகங்களில் சமையல் செய்யும் இடம், உணவு தயாரிப்போர், பரிமாறுபவர்கள், பரிமாறும் இடம் வாடிக்கையாளர்களைக் கவரக் கூடியவாறு சுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றாக வந்து உணவருந்தக் கூடியவாறு உணவகங்களில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.சகல உணவகங்களிலும் விலைகளை குறைத்து உணவுப் பண்டங்களை விற்பனை செய்ய முன்வந்தமைக்கு பாராட்டும் தெரிவித்துள்ள அரசாங்க அதிபர், தேவையேற்படும் போது இந்த வியாபார செயற்பாடுகள் குறித்து தொலைபேசியூடாகவோ, கடிதம் மூலமாகவோ மாவட்ட செயலகத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார்.

உணவுப் பண்டங்களின் தீர்மானிக்கப்பட்ட விற்பனை விலை விபரம் வருமாறு;

சைவ மதிய உணவு (போதுமானளவு) 60 ரூபா,
சைவ மதிய உணவு (அளவானது) 50 ரூபா,
அசைவ மதிய உணவு (போதுமானளவு) 90 ரூபா,
வடை (பெரியது) 20 ரூபா,
வடை (நடுத்தரமானது) 15 ரூபா,
வடை (அளவானது) 10 ரூபா,
றோல்ஸ் (பெரியது) 15 ரூபா,
பற்றீஸ் 10 ரூபா, றொட்டி 10 ரூபா,
தேநீர் 10 ரூபா,
பால் தேநீர் (பால்மா, பசுப்பால்) 20 ரூபா,
இடியப்பம் 4 ரூபா,
பிட்டு (அளவானது) 10 ரூபா,
தோசை 10 ரூபா, அப்பம் (சோடி) 15 ரூபா,
இட்டலி (அளவின் பிரகாரம்) 6 தொடக்கம் 10 ரூபா.

யாழ்.மாவட்டத்தில் உணவுப் பண்டங்களின் விலை அதிகரிப்பு குறித்து யாழ்.செயலகத்தில் கடந்த 5 ஆம் திகதி அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மேலதிக அரச அதிபர், யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலாளர்கள் பாவனையாளர்கள் அதிகார சபை அதிகாரிகள், வணிக கழகப் பிரதிநிதிகள், சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழு செயலாளர், பாவனையாளர் ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதிகள், உணவகங்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

தற்போது அரிசி, மா, சீனி, பால்மா, மரக்கறிகள் என்பனவற்றின் விலைகள் கணிசமான அளவு குறைந்துள்ளதால் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாமை குறித்து இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண நகரைப் பொறுத்தமட்டில் உயர்கல்வி மாணவர்கள், தனியார் கல்வி மாணவர்கள் அரச ஊழியர்கள் பல தேவைகளுக்குத் தூர இடங்களில் இருந்து வருபவர்கள், தென்பகுதிகளில் இருந்து வருவோர் இந்த உணவகங்களையே நாடுகின்றனர். எனவே இவர்களின் நன்மை கருதி உணவுப் பண்டங்களின் விலைகள் குறைக்கப்படவேண்டும் என இங்கு கருத்தும் தெரிவிக்கப்பட்டது.

இங்கு உணவகங்களின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில் உணவுப் பண்டங்கள், தேனீர் என்பனவற்றைக் கூடுதலான தரத்திலேயே பாவனையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதனால் தான் கூடிய அரிசி, தேயிலை என்பன பாவிக்கப்படுகிறது. மேலும் தற்போது அரிசி, மா, மரக்கறி என்பனவற்றின் விலைகள் குறைவடைந்தாலும் சீனி, மீன், விறகு போன்றவற்றின் விலைகள் குறைவடையவில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.இவர்கள் அனைவரதும் கருத்துகளை ஆராய்ந்த பின்னரே உணவுப் பண்டங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *