பொன்சேகா கைதானதன் எதிரொலி – பொலிஸார் கண்ணீர் புகை, தடியடி

colombo.jpgகைது செய்யப்பட்ட எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டன. இப்பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நேற்று நண்பகல் கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள நீதிமன்றக் கட்டிடத்தொகுதிக்கு முன்பாக எதிரணியினரால் நடத்தப்பட்ட பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர். நண்பகல் 12 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் காலை 10 மணியாகும் போதே தொழில் நுட்பக்கல்லூரிப் பகுதி, டாம் வீதி, அப்துல்ஹமீத் வீதி போன்ற பகுதிகளால் மக்கள் ஊர்வலமாக முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ உருவச் சிலைப்பகுதியை நோக்கி வரத் தொடங்கினர்.

மக்கள் கூட்டம் அதிகமாக வருவதைக் கண்ட பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்த  உஷார் நிலையில் தயாரானார்கள். இதனிடையே முன்கூட்டியே ஆளும்தரப்பு ஆதரவாளர்கள் எனக்கருதப்பட்ட ஒரு குழு பிரேமதாஸ சிலைக்கு பின்பாக கூடிநின்று கற்களைக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி வீசத் தொடங்கினர். இதனால் இருதரப்புக்குமிடையில் மாறி மாறிக் கற்கள் எறியப்பட்டன. இதன் காரணமாக எதிரணிதரப்பில் பலர் காயமடைந்தனர்.

நண்பகல் 12 மணியாகும் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அணிதிரண்டு பொலிஸ் தடைகளையும் உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர். இந்த வேளையில் கலகத்தடுப்புப் பொலிஸார் கண்ணீர் புகையை பிரயோகித்ததோடு குண்டாந்தடியடி பிரயோகத்தையும் மேற்கொண்டனர். அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதிலும் ஆர்ப்பாட்டத்தை தடுக்க முடியாமல் அவர்கள் தடுமாற்றமடைந்து காணப்பட்டனர். மகிந்தவின் அராஜகத்தை முறியடிப்போம், ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய், உண்மையான ஜனாதிபதி ஜெனரல் சரத் பொன்சேகாவே, பயங்கரவாதி கருணாவுக்கு இராஜ உபசாரம், நாட்டைக்காத்த ஜெனரலுக்கு சிறையா? என்பன போன்ற பல சுலோகங்களை கோஷித்த வண்ணம் மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் இந்தப் பேரணியை வழிநடத்தும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல்களால் இடையிடையே சிதறியோடிய மக்கள் மீண்டும் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த இடத்துக்கு திரும்பி வந்தவண்ணமிருந்தனர்.இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் கருஜயசூரிய, ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க மற்றும் மங்கள சமரவீர, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன, ரவி கருணாநாயக்க, தலதா அத்துக்கோரள, சந்திராணி பண்டார போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும், ஏ.கே.எம். முஸம்மில், முஜிபுர் ரஹ்மான் உட்பட மாகாணசபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் எனப் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

12 மணிக்கு அங்கு வருகைதந்த ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா மக்கள் கூட்டத்துக்குள் நுழைந்து தமது நன்றியைத் தெரிவித்தார். அங்கு சிறிது நேரம் நின்ற பின்னர் அவர் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று தமது கணவரை விடுவிக்கக் கோரும் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

ஆர்ப்பாட்டப் பேரணியை தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு எதிரணிகளின் தலைவர்களும் கூடிநின்ற ஆயிரக்கணக்கான மக்களும் நீதிமன்றக் கட்டிடத்துக்கு முன்னால் உள்ள பாதையில் அமர்ந்து சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள் வரை சத்தியாக்கிரகமிருந்த பின்னர் ஆர்ப்பாட்டப் பேரணி பிற்பகல் 1.15 மணியளவில் முடிவுற்றது.

இறுதியில் கருத்துத் தெரிவித்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இது ஆரம்பம் மட்டுமே. தொடர்ந்து நாடு முழுவதும் நாளாந்தம் இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகள் இடம்பெறும். ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும்வரை போராட்டம் நடக்கும். ஆளும் தரப்பின் காடைத்தனத்துக்கோ, பொலிஸாரின் அச்சுறுத்தல்களுக்கோ நாம் அடிபணியப் போவதில்லை எனத் தெரிவித்தனர்.

இதேவேளை, தலைநகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணிக்குச் சமாந்தரமாக நேற்றைய தினம் நுவரெலியாவில் நண்பகல் 12 மணிக்கும் கம்பஹா ரயில் நிலையம் முன்பாக மாலை 5 மணிக்கும் களுத்துறை நகரில் 3.30 மணிக்கும் கண்டி மாநகரில் 4 மணிக்கும் பொலன்நறுவை நகரில் 3.30 மணிக்கும் காலி மாநகரில் 4 மணிக்கும் மாத்தறை நகரில் மாலை 4 மணிக்கும் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • msri
    msri

    மகிந்தஅரசின்> அரசியலும்+அரசு எதிர்ப்பு போர் உத்தியும்> கற்கால மனிதனின் (மனிதக்குரங்கின் கல்கொண்டு தாக்கும்) புரதான+தொன்மைச் சமூகத்திற்கு பின்நோக்கிச் செல்கின்றது! எதிர்காலத்தில் முப்டைகளுக்கு நவீன ஆயுதங்கள் தேவைப்படாது போல் இருக்கிறது. ஆயுத ஓப்பநதங்களை கல் உள்ள நாடுகளோடு செய்யலாம்! அரசு கோமாளித்தனம் ஆகினால்> குரங்குச்சேட்டையே அரசியலாக மாறும்!

    Reply