கனடா உதயன் பத்திரிகை தாக்கப்பட்டது! முன்பு வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு பத்திரிகையை அகற்றி இருந்தது! : த ஜெயபாலன்

Uthayan_Canada15 வருடங்களாக கனடாவில் வெளிவருகின்ற கனடிய உதயன் பத்திரிகை பெப்ரவரி 20 இரவு தாக்கப்பட்டு உள்ளது. 10,000 பிரதிகள் வெளியாகின்ற வாரப்பத்திரிகை கனடாவில் இடம்பெறுகின்ற அரசியல் கயிறு இழுப்பில் சிக்குண்டு தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரியவருகின்றது. கனடிய உதயன் பத்திரிகையின் ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் இது பற்றி தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் ‘உன்னுடைய நண்பர்கள் இலங்கை சென்று மகிந்தவைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்கள். நீ உன்னுடைய ஒபிஸ்க்கு போய்ப் பார். உனக்கு ஒரு செய்தி கிடைக்கும்.’ என்று தொலைபேசியில் தெரிவித்ததாகக் கூறினார். மேற்படி தாக்குதலால் 12000 டொலர்கள் நட்டம் ஏற்பட்டு உள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸார் மேற்கொண்டு உள்ளதாகவும் உதயன் ஆசிரியர் தெரிவித்தார்.

கனடிய உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதற்கு தேசம்நெற் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து உள்ளது. ஊடகங்களின் சுயாதீனமான செயற்பாடுகளைத் தடுக்கின்ற இவ்வன்முறைச் சம்பவங்கள் மிக மோசமானவை என்றும் இவற்றுக்கு எதிராக அனைத்து உரிமை அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தேசம்நெற் கேட்டுக்கொண்டுள்ளது. மக்களுக்கு தகவல் அறியும் சுதந்திரத்தை தடுக்க முனைகின்ற இவ்வாறான நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்ல எனவும் தேசம்நெற் குறிப்பிட்டு உள்ளது.

வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் வெளிவருகின்ற உதயன் பத்திரிகை வழமை போன்று பெப்ரவரி 19 வெள்ளிக்கிழமை வெளியானது. அதன் பிரதிகள் வர்த்தக ஸ்தாபனங்களுக்கும் பொது இடங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு இருபத்திநான்கு மணிநேரத்தில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது தெரியவில்லை என்று தெரிவித்த உதயன் ஆசிரியர் இச்சம்பவத்திற்கு முன்னர் தனக்கு சில தொலைபேசி மிரட்டல்கள் விடப்பட்டதாகவும் அந்தப் பின்னணியிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

Logendralingam_Lமே 2009 வரை கனடாவில் இடம்பெற்ற போராட்டங்களுக்கு தான் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கி வந்ததாக தேசம்நெற்க்குத் தெரிவித்த உதயன் ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் மே 2009க்குப் பின் அன்று போராடியவர்களிடையே ஏற்பட்ட பிளவும் இதற்கு ஒரு காரணம் எனத் தெரிவித்தார். அண்மையில் கனடாவில் இடம்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பை முன்னெடுத்த குழுவினர் ஏற்கனவே தங்களது பத்திரிகையை வியாபார நிறுவனங்களில் இருந்தும் பொது இடங்களில் இருந்தும் அகற்றியதை அவர் சுட்டிக்காட்டினார். வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கு சார்பான ஆக்கங்களை வெளியிட்ட போதும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று காரணம் கூறியே கனடிய உதயன் பத்திரிகையை அவர்கள் அகற்றியதாகத் தெரிவித்தார் லோகேந்திரலிங்கம்.

கனடா உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதை கனடா தமிழீழச் சங்கத்தின் பிரதிநிதி துரைராஜாவும் கண்டித்திருந்தார். இது தொடர்பாக தேசம்நெற்க்கு கருத்துத் தெரிவித்த துரைராஜா ‘உதயன் பத்திரிகை செய்திப் பத்திரிகை என்ற வகையில் கனடாவில் நடைபெறுகின்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்தகொண்டு நடுநிலைமையாகச் செய்திகளை விடுகின்ற பத்திரிகை’ என்றும் ‘அதனைத் தாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது’ என்றும் தெரிவித்தார்.

அண்மையில் கனடிய வர்த்தகக் குழுவொன்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து அனாதைச் சிறார்களுக்குச் சேகரித்த 20 000 கனடிய டொலர்களை ஜனாதிபதியிடம் கையளித்து இருந்தது. இச்சந்திப்பில் கனடிய தமிழர் ஐக்கிய சபை, கனடிய – ஸ்ரீலங்கா வர்த்தக சம்மேளனம் ஆகிய அமைப்புகளில் அங்கம் வகிக்கும் வர்த்தக பிரபலங்கள் குலா செல்லத்துரை, கணேசன் சுகுமார், இருதய மருத்துவ நிபுணர் பொன் சிவாஜி ஆகியோர் கலந்துகொண்டு மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தனர். இவர்கள் கனடிய உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கத்தின் நண்பர்கள்.

‘ஜனாதிபதியைச் சந்தித்தவர்கள் எனக்கு மட்டுமல்ல கனடாவில் உள்ள பலருக்கும் நண்பர்கள்’ என்று தெரிவித்த உதயன் பத்திரிகை ஆசிரியர் அவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்ததிலோ அல்லது ஜனாதிபதியிடம் நிதியைக் கையளித்ததிலோ தனக்கு எவ்வித உடன்பாடும் இல்லையெனத் தெரிவித்தார். மேலும் இச்சந்திப்புப் பற்றிய எவ்வித செய்தியும் உதயன் பத்திரிகையில் வெளிவரவில்லை எனவும் அவர் தெரிவி;த்தார். அச்செய்தியை வெளியிட்டால் தன் மீதும் தனது அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் தனக்கு இருந்ததாகவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவ்வாறான செய்தி எதுவுமே பிரசுரிக்கப்படாத நிலையில் சில ஊடகங்கள் அவ்வாறான செய்தி வெளியாகியதாலேயே தனது அலுவலகம் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளதாகவும் உதயன் ஆசிரியர் குற்றம்சாட்டினார்.

சுதந்திரமாக ஊடகங்களை நடாத்த முடியாத அளவுக்கு சுயதணிக்கை செய்து செய்திகளை வெளியிட வேண்டிய நிலை இன்னமும் கனடாவில் உள்ளதாக தனது மனவருத்தத்தை வெளியிட்ட லோகன் லோகேந்திரலிங்கம் உதயன் பத்திரிகை தாக்கப்பட்டதற்கு எதிராக 300 000 மக்கள் வாழும் கனடாவில் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையும் இடம்பெறாதது மனவருத்தத்தை ஏற்படுத்துவதாகம் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

Show More
Leave a Reply to NANTHA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • jo
    jo

    காட்டுமிராண்டித்தனமான செயல். புலிகள் தொடர்ச்சியாக ஊடக சுதந்திரத்தின் மேல் தாக்குதல்களை மேற்கொண்டு வந்துள்ளனர். சபாலிங்கம் தாயகம் ஜோர்ஜ் குருசேவ் தேடகம் டி.பி.எஸ. ஜெயராஜ் இளையபாரதி எனத் தொடர்கின்றது. சுதந்திரத்தின் மேல் நம்பிக்கையற்ற சுதந்திரம் வேண்டும் கோழை புலிகள்.

    Reply
  • மாயா
    மாயா

    சனநாயகம் மற்றும் பயங்கரவாதம் பேச எந்த அருகதையும் இல்லாதவர்கள் புலிகள். இவை போன்றவை இன்னும் சிறுது காலத்துக்கு தொடரவே செய்யும். அது புலத்திலாகத்தான் இருக்கும். இவர்களது பயங்கரவாதம் தாயகத்தில் முற்றுப் பெற்று விட்டது. அதை புலத்திலாவது தொடராவிட்டால் அது அவர்களது இயலாமை ஆகிவிடும். இவர்களால் தமிழருக்கு ஒருபோதும் நன்மை கிட்டப் போவதில்லை. அதை சாதாரண மக்கள் உணரும் வரை இவை நிற்கப் போவதில்லை. திருட்டை ஊக்குவித்தால் கடைசில் எல்லாம் திருடி முடிந்த பின் எம்மிடம்தான் திருட முடியும். அதை எப்போதோ தடுத்திருக்க வேண்டும். தனக்கு அடி விழும் போதுதானே அடுத்தவன் வலியை நம்மால் உணர முடியும். தொடரட்டும் புலி பயங்கரவாதம். உலகமும் உங்களை உணர, இதை விட்டால் வேறு வழி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இலங்கையில் செய்தித் தணிக்கை, ஊடகங்கள் முடக்கம் என புலத்தில் தினம் தினம் சொல்லும் புலிப்பினாமி ஊடகங்கள், இது பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால் கனடாவில் துரோகப் பத்திரிகையொன்று இனம்தெரியாதோரால் தாக்குதலுக்குள்ளானதாக செய்தியில் சொல்லப்பட்டது. இதிலிருந்தே இவர்களின் தேசியக் கொள்ளை(கை) என்னவென்று நன்றாகவே புரிகின்றது. இந்தப் “புலன்” பெயர்ந்தவர்களுக்கு, புலம் பெயர்ந்த சுயசிந்தனையுள்ள மக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும்.

    Reply
  • Kulan
    Kulan

    பத்திரிகைகளைக் கொழுத்துவது: பத்திரிகை அலுவலகங்களை அடித்துடைப்பது போன்ற செயல்களைச் செய்பவர்கள் கையாலாகாத பேடிகளே. கருத்துக்களைக் கருந்துக்களால் சந்திக்கமுடியாத கருத்தற்றவர்கள்தான் இப்படி நடந்து கொள்பவர்கள். நேரடியாக சந்தித்து கதைக்கத் திராணியற்றவர்கள் தான் தம் கருத்துக்கோ பயந்து தொலைபேசி மிரட்டல்களையும் பலாற்காரத்தையும் கையாளுவர்களாவர். அது சரி கருத்து என்ற ஒன்று இருந்தால் தானே கதைப்பதற்கு. மகிந்தவையும் அவரின் அரசையும் புலிகளும் தான் சந்தித்தார்கள். அதனால்தான் தமிழ்செல்வனைப் போட்டார்களோ? இப்படியாக புலிகளின் வாலுகள் தொடர்ந்து செய்வார்களானால் மக்கள் அரசின் பக்கம் சார்வார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. சரி லோகெந்திரலிங்கத்தைப் பிடிக்காதவர்கள் முகத்துக்கு முகம் கொடுத்து நேராக தன்விருப்பு வெறுப்பைச் சொல்ல முடியாதவர்கள் தமிழீழமாக காணப்போகிறீர்கள். முள்ளிவாய்காலில் கண்டீர்கள்தானே உங்கள் தலைவர்களின் திறமையை. வீரங்கொண்ட பெண்கள் வாழும் தேசங்களில் பேடித்தனமாக நடக்கும் கோளைகள் இனத்தின் அவமானச்சின்னங்களே.

    Reply
  • NANTHA
    NANTHA

    // திருட்டை ஊக்குவித்தால் கடைசில் எல்லாம் திருடி முடிந்த பின் எம்மிடம்தான் திருட முடியும். அதை எப்போதோ தடுத்திருக்க வேண்டும். தனக்கு அடி விழும் போதுதானே அடுத்தவன் வலியை நம்மால் உணர முடியும். //

    மாயாவின் இந்த வரிகள் யாரைப்பற்றி என்பது தெரியாது. ஆனால் “உதயன்” பத்திரிகையை பொறுத்த அளவில் அது உண்மையாகியுள்ளது. லோகேந்திரலிங்கம் “புலிகளையோ” அல்லது அதன் ஏஜண்டுகளான புலம்பெயர் புலிகளின் அராஜகங்கள் பற்றியோ எந்தக் காலத்திலும் விமர்சனங்களோ செய்திகளோ பிரசுரித்தது கிடையாது. ஆனால் “புலிகளின்” ஆதரவு செய்திகள் (உண்மையோ, பொய்யோ) அவரால் தாராளமாக பிரசுரிக்கப்பட்டன.

    மக்கள் தொடர்பு சாதனங்களை அழித்து ஒழிப்பதில் புலிகள்தான் “முதல்வர்கள்”. யாழ் குடா நாட்டிலிருந்து தொலைபேசி மூலம் வெளிநாடுகளுக்கு செய்திகள் பரவாமல் இருக்க புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்த தொலைபேசி பரிவர்த்தனை நிலையத்தையும், அதன் கோபுரத்தையும் தகர்த்தனர். அப்போது கிட்டு சொன்ன காரணம் ” இராணுவம் உபயோகிக்கிறது” என்பதுதான்.

    பின்னர் “ஈழமுரசு” பத்திரிகையை பிடுங்கினார்கள். அதன் உரிமையாளர் மயில் அமிர்தலிங்கம், அலுவலக நிருபர் ஐ. சண்முகலிங்கம் ஆகியோர் புலிகளால் கொல்லப்பட்டனர். உதவி ஆசிரியர் இளவாலை விஜேந்திரன் ஒரு இரவில் ஓட்டம் பிடிக்க வேண்டியதாகிவிட்டது. மற்றவர்களின் கதி பற்றி தெரியவில்லை.

    ஆனால் வெளிநாட்டிலுள்ள “புலி” ஆதரவாளர்கள் “பத்திரிகை சுதந்திரம்” என்று எங்கும் கூக்குரலிடுவதுதான் சகிக்க முடியாத செயல்.

    லோகேந்திரலிங்கம் புலிகளின் பயமுறுத்தல்களுக்கு அடிபணிவாரா அல்லது “புரட்சி” செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    புலிகளை வைத்தும், கனடா அரசின் தமிழர்களுக்கான மானியத்தை வைத்தும் பிழைப்பு நடத்திய லோகேந்திரலிங்கம் நேற்று வரை ஏதாவது மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்தாரா? இவர் நடத்தியது யாவாரப் பலகை, பத்திரிகையல்ல. புலிகளின் பேரால் நடத்தப்பட்ட அராஜகங்களுக்கு துணை போனவர்.
    மேமாதம் கழிய நாடுகடந்த தமிழீழக்காரராகவும் வட்டுக்கோட்டை தீர்மானக்காரராகவும் புறப்புலிகள் பிரிய இவர் எதிர்கால வருமானம் கருதி நாடுகடந்த தமிழீழக்காரராகப் போனார். இந்த யாவாரியுடன் பங்குதாரர்களின் தாக்குதல் ஏனைய தமிழ் மக்களுடனான நிகழ்வாக இணைக்கப் படக் கூடாது. இவரைப் புரட்சியாளராகவும், ஊடகச் சுதந்திர உரிமையாளராக வரிப்பது புலிகளின் சிந்தனையான ‘தம்மோடிருப்பவர் தியாகிகள், எதிர்ப்போர் துரோகிகள் ‘ என்கிற தமிழ் சமூக சிந்தனைதான். புலி எதிர்ப்பு என்கிற உங்கள் மகத்தான கொள்கைக்காக, இவருக்கு மகுடம் சூட்ட நினைப்பது எம் காதில் பூ வைக்கிற வேலை.

    Reply
  • Ajith
    Ajith

    It is not acceptable to attack the media for any reason. However, without any evidence just blaming LTTE for this attack also not acceptable. It is the matter for police to investigate to find out the attackers and bring them under justice. Canada is not like Sri Lanka where police only carry orders from Murderer’s.
    During the last four years, there were number of attacks on media and number of journalists were killed and abducted in the day light in front of security forces. No arrests, No charges. But it is sad that those businessmen handed over 20,000 dollars to the person who was behind the attacks on the media and journalists and massacre of over 100,000 tamils.

    Reply
  • NANTHA
    NANTHA

    // புலிகளை வைத்தும், கனடா அரசின் தமிழர்களுக்கான மானியத்தை வைத்தும் பிழைப்பு நடத்திய லோகேந்திரலிங்கம் நேற்று வரை ஏதாவது மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்தாரா? இவர் நடத்தியது யாவாரப் பலகை, பத்திரிகையல்ல. புலிகளின் பேரால் நடத்தப்பட்ட அராஜகங்களுக்கு துணை போனவர்.//

    மேல் கூறிய கருத்து சரியானதே. ஆனால் எல்லாப் பத்திரிகைகளும் அதே பாணியில்தான் நடத்தப்படுகின்றன! அரச மானியங்கள் வழங்கப்படுவதாக தெரியவில்லை. ஐந்து வருடங்களுக்கு மேலாக வெளிவரும் பத்திரிகைகளுக்கு “அரசின்” விளம்பரங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. அது பெரும்பாலும் “ஒரு” பெரிய தொகையே. புலிகளின் “உலகத்தமிழர்” பத்திரிகைக்கும் அப்படியான விளம்பரங்கள் அது அரசினால் தடை செய்யப்படும் வரை வழங்கப்பட்டன.

    புலிகளோடு முட்டி மோதி அவர்களை துணிந்து “கொலைகாரர்கள்” என்று தாயகம் பத்திரிகையினால் மாத்திரம் எழுத முடிந்தது. அதன் ஆயுளும் “புலிகளால்” அழிக்கப்பட்டது. அதற்காக அதன் வாசகர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.

    //புலி எதிர்ப்பு என்கிற உங்கள் மகத்தான கொள்கைக்காக, இவருக்கு மகுடம் சூட்ட நினைப்பது எம் காதில் பூ வைக்கிற வேலை.//
    லோகேந்திரலிங்கத்துக்கு மகுடம் வைக்க யாரும் முயலவில்லை. அதே நேரத்தில் “புலி எதிர்ப்பு” என்பது என்னுடைய “மகத்தான கொள்கை” என்பதில் எனக்கு எப்போதும் சந்தோஷமே.

    கனடாவில் புலிகளின் காட்டாட்சி நடந்த காலத்தில் அவர்களின் அமைப்புக்களுக்கு முன்னாக மட்டை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த பதினைந்து தமிழர்களில் நானும் ஒருவன் என்பது இன்றும் சந்தோஷமே அந்த நிகழ்வை நேரடியாக பார்த்த லோகேந்திரலிங்கமும், டி பி எஸ் ஜெயராசாவின் ஆட்களும் அந்த நிகழ்வை செய்தியாகப் போடவில்லை. டி பி எஸ் இன் ஆட்கள் போட்டோக்களும் எடுத்தனர். அப்போது உலகத்தமிழர் இயக்கத்தின் “சண்டியன்”பிரிவுக்கு பொறுப்பாக இருந்த நயினாதீவு மொட்டை ரஞ்சன் “சம்மு” என்ற வல்வெட்டித்துறை கிரிமினல் தலைமையிலான சில கேடிகளுடன் வந்ததும் பின்னர் பொலிசாரின் கார்களைக் கண்டு ஓட்டம் பிடித்ததும் நல்ல மறக்க முடியாத நிகழ்வு. கனடா புலிகளுக்கு ரவுடித்தனம் பண்ண மாத்திரமே தெரியும். போலீசாரை கண்டால் போதும் கால் பிடரியில் முட்ட ஓடுவார்கள்.

    லோகேந்திரலிங்கம் ஆகட்டும், குலா செல்லத்துரை ஆகட்டும். கடையுடைத்த கும்பல்களைப் பற்றி தெரிந்தாலும் அவர்கள் பற்றி “பொலிசாருக்கு” தகவல் கொடுக்கப் போவதில்லை.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    நந்தா!
    /….. அவர்கள் பற்றி “பொலிசாருக்கு” தகவல் கொடுக்கப் போவதில்லை. /
    திருடர்கள் போலிசாரிடம் போக முடியாது,தேசத்தில முறையிடலாம். ஒரு பெரிய தொகை, அரசின் விளம்பரங்கள், அரச மானியங்கள் எல்லாம் அரச உளவாளிகளுக்கு வழங்கப்படுகிற சம்பளமென்பதை விட கையூட்டு என்பதே சரியான சொற்பதம்.

    Reply
  • jo
    jo

    நந்தா கூறுவது முற்றிலும் உண்மை. உதயனின் சில பிரதிகளை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. புலி சார்பு செய்திகளே அதிகம். நானறிந்த கனடிய எழுத்தாளர்கள் எவரது ஆக்கங்களும் அதில் இல்லை. விளம்பரங்களும் மரண அறிவித்தல்களும் பக்கங்களை நிரப்பியிருந்தன. முதல் பக்கத்தில் 80 வீதம் விளம்பரம்.

    இயல்பாகவே புலம் பெயர் புலிகளுக்கு பொலிஸ் என்றால் கொலை நடுக்கம்

    Reply
  • NANTHA
    NANTHA

    தமிழ்வாதம் on February 24, 2010 1:44 pm

    // திருடர்கள் போலிசாரிடம் போக முடியாது,தேசத்தில முறையிடலாம். ஒரு பெரிய தொகை, அரசின் விளம்பரங்கள், அரச மானியங்கள் எல்லாம் அரச உளவாளிகளுக்கு வழங்கப்படுகிற சம்பளமென்பதை விட கையூட்டு என்பதே சரியான சொற்பதம்.//

    கனடிய அரசு தமிழ் இலவச பத்திரிகைகளுக்கு “கையூட்டு” அல்லது “லஞ்சம்” கொடுத்து எதையும் சாதிப்பதில்லை. அந்த விளம்பரங்கள் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவருபவையே. இதில் இந்த” தமிழர்கள்” அப்படி என்ன உளவு பார்த்து கனடிய அரசுக்கு தெரியப்படுத்தப் போகிறார்கள்? அப்படி உளவாளிகளாக இருந்திருந்தால் சில வேளைகளில் புலிகளின் வெளிநாட்டு அராஜகங்கள் எப்போதோ முடிந்திருக்கும்!

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    மேற்கத்தைய நாடுகளில் புலிப் பிரமுகர்களாக முதலில் வலம் வந்தவர்கள் இலங்கையின் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள், இலங்கை முன்னைய அரசபணியாளர்கள். இவர்களை அந்தந்த நாடுகள் அங்கீகரித்து, அவர்களிடம் அந்த மக்களை பார்க்கும் பொறுப்பை ஒப்படைத்து, அதற்கு கையூட்டாக சமுக நல நிறுவன அதிகாரிகளாக, சங்கத் தலையாரிகளாக பதவிப்பணம் வழங்கப்பட்டது. இவர்கள் பெட்டிசனெழுதும் தகுதி, கோள் மூட்டும் தகைமை, வழங்குமுளவின் வலிமை என்பதற்கேற்றபடி முன்னேறிக் கொண்டார்கள். இதில் வென்றவர்கள் புலிவாலைப் பிடித்தார்கள். தோற்றவர்கள் புலியெதிர்ப்பாளர்கள் ஆனார்கள். இந்தப் புதிதாகப் பிறந்த புலி ஆதரவாளர்கள் தங்கள் பதவிகளை, சேகரித்த பணத்தை காப்பாற்ற அந்தந்த நாட்டு அரசின் ஆதரவாளர்களாக செயற்பட்டார்கள் என்பதே உண்மை. 911 க்குப் பிறகு இளம் சந்ததியினரை முன்னுக்குத் தள்ளி, பழசுகள் பணப்பெட்டியை இறுகப் பற்றிக் கொண்டார்கள். உதாரணமாக வெளிநாடுகளில் சிறைப்பட்டவர்கள், கலைக்கப்பட்டவர்கள் இந்த இளம் ஆட்கள்தான். ஒரு வயது வந்தவர்களுமல்ல. ‘புலிகளின் வெளிநாட்டு அராஜகங்கள்’ என்பது அந்தந்த நாட்டு அரசுகளால் அங்கீகரிப்பட்ட, தமிழ் மக்களை மந்தைகளாக மாற்றுவதற்கான வழிமுறை. உதயன் உதைப்பு என்பது பங்குச் சண்டை அல்லது இலங்கை அரசோடு ஒத்தோடு விரும்பாத மேற்கத்தைய சிந்தனையின் ஒரு வெளிப்பாடே .’புலி ஆதரவாளர்கள்’ மகிந்தவுடன் போட்டோ பிடிப்பது ஒரு நன்றிக் கடனே. அரசுகளின் சிபார்சுகளே. அரசு எதிரிகளை அரவணைப்பது அவர்களை கருணாவா(அழிக்கவே) ஆக்கவே. அன்பர்களை TILCO (ஆக்கவே)பண்ணவே.

    Reply