‘சம்பந்தர் ஐயாவை மலைபோல நம்பியிருந்தேன். ஆனால்….”: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியுடன் நேர்காணல்: – புன்னியாமீன் –

thangeswary.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேட்புமனுப் பத்திரத்திலும் இவர் கையொப்பமிட்டுள்ளார்.  தங்கேஸ்வரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடவே இறுதி நேரம் வரை காத்திருந்த போதிலும் கூட இறுதி நேரத்தில் அவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் வழங்கப்படவில்லை.  இது விடயமாக தேசம்நெற் இணையத்தளத்திற்கு தங்கேஸ்வரி பிரத்தியேகமாக அளித்த பேட்டி கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. 

கேள்வி: ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் நீங்கள் போட்டியிட முன்வந்தமைக்கான காரணம் என்ன?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழேயே போட்டியிட வேண்டும் என்று  இறுதிநேரம் வரை நான் காத்திருந்தேன். ஆனால், இறுதி நேரத்தில் எனது பெயரை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்கிவிட்டதாக உறுதிப்படுத்திக் கொண்டதையடுத்து ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிட முடிவெடுத்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிநேரத்தில் இம்முடிவினை அறிவித்திருந்தால் எனக்கு இத்தேர்தலில் போட்டியிட முடியாது போயிருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான ஒரு நிலையை   ஏற்படுத்துவதற்காகவே அபேட்சகர் பெயர் பட்டியலை தயாரிப்பதில் தாமதத்தைக் காட்டி வந்தது என்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து தங்கள் பெயர் ஏன் நீக்கப்பட்டது?

பதில்: இது பற்றி எனக்கு எந்தவிதமான உத்தியோகபூர்வமான பதில்களும் தரப்படவில்லை. ஆரம்பத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள்  கூட்டமைப்பு பட்டியலில் மட்டக்களப்பு மாவட்ட வேட்புமனுவில் என்னை இணைத்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார். அவரால் தரப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படுமென்றே நான் இறுதிநேரம் வரை எதிர்பார்த்திருந்தேன். எனக்கு கிடைக்கும் நம்பகமான தகவல்களின்படி ஏற்கெனவே நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துவிட்டதாக கூட்டமைப்பில் எனது சகோதர பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவர் இரா. சம்பந்தன் ஐயாவிடம் பொய்யாகக் கூறியதாகவும்  இதனை வைத்துக் கொண்டே சம்பந்தன் ஐயா இந்தமுடிவை எடுத்ததாக அறியமுடிகின்றது. நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவத்தைப் பெறும் முடிவினை நேற்றிரவே (20.02.2010) எடுத்தேன். அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எனக்கு இடம் ஒதுக்கப்படாது என்று தெரிந்த பின்பே.

கேள்வி: இது பற்றி தலைவர் சம்பந்தன் அவர்கள் தங்களிடம் விசாரித்தாரா?

பதில்: இல்லை. நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டதாக அவர் என்னிடம் எந்தவிதமான கேள்விகளையும்  கேட்கவில்லை.  ஓர் அனுபவமிக்க சிரேஸ்ட தலைவர் என்ற வகையிலும், ஒரு கௌரவமிக்க தலைவர் என்ற வகையிலும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் என்னிடம் விசாரித்த பின்பே முடிவினை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்காமை வேதனைக்குரிய விடயம். சம்பந்தன் ஐயாவை ஒரு தலைவர் என்ற வகையில் நான் மலைப்போல் நம்பியிருந்தேன். ஆனால், அவர் இவ்வாறு நடந்து கொண்டது என்னால் ஜீரணிக்க முடியாதுள்ளது.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு பாராளுமன்ற கூட்டமைப்பு ஆசனங்கள் வழங்கப்போவதில்லை என தலைவர் ஆர். சம்பந்தன் லண்டனில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சில புலம்பெயர்ந்த ஊடகங்கள் செய்திகளையும், கட்டுரைகளையும் கூட  வெளியிட்டிருந்தன. இது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்.?

பதில்: இது பற்றி நான் இணையத்தளங்கள் வாயிலாக செய்தி அறிந்தேன்.  லண்டணிலிருந்து சிலர் என்னிடம் நேரடியாக தொடர்புகொண்டும் கதைத்தனர். 

இவ்விடத்தில் ஒரு விடயத்தைக் கேட்க விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப்  புலிகளால் நியமிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கு ஆசனங்களை வழங்குவதில்லையென தலைவர்  தெரிவித்திருந்தால்

விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் தான் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார்களா?    

புலிகளால் நியமிக்கப்படாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற  உறுப்பினர்கள் புலிகளுக்கெதிராகவா செயற்பட்டனர்.?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் . கடந்த காலத்தில் புலிகளின் ஆணைப்படியே செயல்பட்டதை இவர்கள்  மறந்துவிட்டார்களா?

சம்பந்தன் ஐயா கூறியபடி இருப்பின் தற்போதுள்ள 22  அங்கத்தவர்களில் யாருக்குத் தகுதியுள்ளது?

கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையும் முடிவினை நீங்கள் குறிப்பிடுவதைப் போல இவ்வளவு கெதியாக எவ்வாறு எடுத்தீர்கள்.?

பதில்: இந்நேரம் வரை (இப்பேட்டி வழங்கப்பட்டது 21ம் திகதி இரவிலாகும்)  நான் சுதந்திரக் கட்சியில் அங்கத்துவத்தைப் பெறவில்லை. நேற்று முன்தினம்   ஜனாதிபதி அவர்கள் என்னிடம் தொடர்புகொண்டார். நேற்று  பசில் ராஜபக்ஸ அவர்கள் என்னிடம் கதைத்தார்.  அச்சந்தர்ப்பத்தில் இன்று  ஜனாதிபதி அவர்களை நேரடியாகச் சந்திக்க ஏற்பாடு   செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்று சந்திக்கவில்லை. இருப்பினும்,  சுதந்திரக்  கட்சியில் இணைவதை நான் முடிவாக எடுத்துவிட்டேன். (22ம் திகதி ஜனாதிபதி அவர்களை தங்கேஸ்வரி நேரடியாக சந்தித்துள்ளார்.)

கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பொதுவேட்பாளர் சரத்பொன்சேக்காவை நீங்கள் ஆதரித்தீர்கள். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடிவெடுத்துள்ளீர்கள்.  இதனை சந்தர்ப்பவாத அரசியலாக தங்கள் வாக்காளர்கள் கருதமாட்டார்களா?

பதில்: கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சரத்பொன்சேக்காவை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஏனெனில்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  சரத்பொன்சேக்காவை ஆதரிக்க வேண்டுமென்று முடிவெடுத்த பின்பு கட்சியின் முடிவினையேற்று நடக்க வேண்டிய கடமை எமக்குள்ளது. இவ்வடிப்படையிலேயே கட்சியின் முடிவுக்கமையவே சரத்பொன்சேக்காவை நான் ஆதரித்தேன்.

கேள்வி: அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் முடிவினை  எடுக்கும்போது தாங்களும் அதனை ஆதரித்ததாக ஊடகங்களில் செய்திகள்  வெளிவந்தனவே.

பதில்: இதில் உண்மையில்லை. ஜனாதிபதித் தேர்தலின்போது சரத்பொன்சேக்காவை  ஆதரிக்க வேண்டுமென கட்சியின் தலைமை உட்பட சிலரின் முடிவே அங்கு எடுபட்டது. முடிவெடுக்கப்பட்ட பின்பு கட்சியின் போக்குக்கு இணங்க வேண்டியது. அதன் அங்கத்தவர்கள் என்ற வகையில் எமது கடமை என்பதை நீங்கள்  உணர்ந்து கொள்வீர்கள்.

கேள்வி: தங்கள் தற்போதைய முடிவினை தங்கள் தொகுதி வாக்காளர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

பதில்: நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரைப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயல்பட்டு வருகின்றேன். எமது பிரதேச மக்களுக்கு இன்று பிரதானமாக தேவைப்படுவது அபிவிருத்தியே. இந்த மக்களிடையே அடிப்படை பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது இப்பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியமானதாகும். கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையின் கீழ் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள விடயத்தை எமது பிரதேச தலைவர்களிடம் கதைத்தபோது அவர்களில் 90வீதமானோர் தமது ஆதரவினை   வழங்கினர். ஜனாதிபதியின் தலைமையின் கீழ் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்குண்டு.

கேள்வி: இத்தேர்தலில் உங்கள் தொகுதி மக்களிடம் எந்த அடிப்படையில் வாக்குகளைக்  கேட்கவுள்ளீர்கள்.?

பதில்: பிரதேச அபிவிருத்தியை முதன்மைப்படுத்தியே மக்களிடம் வாக்குகளைக் கேட்கவுள்ளேன்.

கேள்வி: தங்கள் பிரதேச அபிவிருத்தியினை தற்போதைய ஜனாதிபதியின் மூலமாக  நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்குள்ளதா?

பதில்: நிச்சயமாகவுள்ளது. ஜனாதிபதி அவர்கள் தேசத்தின் அபிவிருத்தியை முதன்மைப்படுத்தியே மஹிந்த சிந்தனை இரண்டினை முன்வைத்துள்ளார். எனவே, நான் வெற்றி பெறுமிடத்து எனது பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும்,  பிரதேச அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

கேள்வி: கடந்த பாராளுமன்றத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தால் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும் ஒதுக்கீட்டுப் பணத்தினை மக்களுக்காக செலவிடாமல் திரைச்சேரிக்கே  திரும்பியதாக சில கருத்துக்கள் நிலவுகின்றன. இது பற்றி தங்களது கருத்து  என்ன? தங்களது ஒதுக்கீட்டுப் பணத்தினை மக்களுக்காக  முறையாகப்  பயன்படுத்தினீர்களா?

பதில்: இது பற்றி எனக்கு முழுமையாகப் பதிலளிக்க முடியாது. ஆனால், எனக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டுப் பணத்தினை நான் முறையாக ஆண்டுதோறும் என் தொகுதி அபிவிருத்திக்காக வழங்கியுள்ளேன். எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்தப் பணமும் திரைச்சேரிக்கு திரும்பிச் சென்றதில்லை.

கேள்வி: வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த பல வருடங்களாக தமது தொகுதி பக்கமே தலைகாட்டியதில்லை எனவும் தற்போது சில மாதங்களாகத் தான் அவர்களது முகங்களை தொகுதி மக்களால் காணமுடிகின்றது என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றனவே. இது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: இக்கருத்துக்களில் உண்மையுண்டு. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தன்னால் சில ஆயுதகுழுக்களின் பயமுறுத்தலினாலும் கொலை அச்சுறுத்தல் காரணமாகவும்  தொகுதிக்குச் செல்லவில்லை என்பது  உண்மை.  தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவதாயின் எனது சொந்த வீடு கூட தாக்குதலுக்குட்பட்டது. நான் பல வருடங்களாக சேகரித்து வைத்திருந்த பல   தொல்பொருட்கள் கூட அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது எனக்கென என்  தொகுதியில் சொந்த வீடில்லை. வாடகை வீடொன்றையே நான் பெறவுள்ளேன்.  உயிரச்சம் காரணமாக எமது கட்சியின் ஆலோசனைப்படி நான் கொழும்பிலேயே தங்கியிருந்தமையால் எனது தொகுதிக்கு செல்ல முடியவில்லை. தற்போது இத்தகைய அச்சுறுத்தல்கள் இன்மை காரணமாக எமக்கு எமது தொகுதிகளுக்குச் சென்றுவர முடிகின்றது. நான் கொழும்பில் இருந்தாலும்  எனது தொகுதி மக்களுக்காக வேண்டி ஆற்ற வேண்டிய சேவைகளை  ஆற்றியுள்ளேன்.  அம்மக்களின் பிரச்சினைகளை இயலுமான வரை தீர்த்துள்ளேன். எனக்கு ஒத்துழைப்பாக எனது செயலாளர் என் தொகுதியிலே இருந்தார். இதனால் தொகுதி மக்களுக்கும் எனக்குமிடையிலான தொடர்பில் இடைவெளி  ஏற்படவில்லை என்றே எண்ணுகின்றேன்.

கேள்வி: வடக்கு கிழக்கில் கடந்த கால யுத்த அனர்த்தங்களின்போது  பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாகவும்ää பாதிக்கப்பட்ட நிலையிலும் இருக்கின்றார்கள். வடக்கு கிழக்கு பகுதிகளில் போட்டியிடக் கூடிய அரசியல் கட்சிகள் பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை  அதிகரிக்க வேண்டுமென்று பெண்ணுரிமை அமைப்புக்கள் கோரிக்கைவிட்டு வருகின்றன.  இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா?

பதில்: நிச்சயமாக இல்லை.  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் கடந்த தேர்தலில்  இரண்டு பெண் பிரதிநிதிகள் தெரிவாகினர். ஒன்று நான். மற்றயவர் யாழ்  மாவட்டத்தில் பத்மினி. இந்த இருவருக்குமே இம்முறை தமிழ்த்தேசியக்  கூட்டமைப்பில் ஆசனம் மறுக்கப்பட்டுள்ளது. பெண்கள் உரிமை சம்பந்தமாக  எவ்வளவு கோசங்கள் எழுப்பியபோதிலும்கூட அவற்றின் முக்கியத்துவம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு விளங்கமாட்டாது. விளங்கிக் கொள்ள  வேண்டிய தேவையுமில்லை.

கேள்வி: அவ்வாறாயின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் எந்தவொரு பெண் வேட்பாளரும் இல்லை என்று குறிப்பிடுகின்றீர்களா?

பதில்: அவ்வாறுதான் தோன்றுகின்றது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //சம்பந்தன் ஐயாவை ஒரு தலைவர் என்ற வகையில் நான் மலைபோல் நம்பியிருந்தேன்.//

    உண்மை தான் நீங்க உங்க பதவிக்காகவும் பணத்துக்காகவும், சம்மந்தரை நம்பியிருந்தீங்க. அதேபோல் உங்களைத் தெரிவு செய்த மக்கள் தங்கள் அடிப்படையிருப்பிற்கே கூத்தமைப்பு ஏதாவது செய்யுமென நம்பியிருநதார்கள். ஆனால் கூத்தமைப்பினரும் வழமைபோல் தமது பதவியையும் வருவாயையும் மட்டுமே, எப்படித் தக்க வைத்துக் கொளள்ளலாமென்ற சிந்தனையில் அன்றுமிருந்தனர் இன்றுமிருக்கின்றனர். அன்று கூத்தமைப்பு வேட்பாளராகத் தங்களைத் தெரிவு செய்த கருணா தான், இன்றும் வெத்திலையில் போட்டியிட தங்களுக்கு உதவியுள்ளார். ஆரம்பித்திலிருந்தே உங்களுக்கு சம்மந்தர் இடம் தர மாட்டாரென்ற உண்மை தெரிந்து, உடனடியாக நீங்கள் கருணாவைத் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளைத் தொடர்ந்ததும் தெரியும். ஏதோ இறுதி நேரத்தில் தான் அரசுடன் இணைந்ததாக கதையளந்தால் நாம் எல்லோரும் அப்படியே நம்பிடுவோமென்று நம்புகின்றீர்கள் போல. அதுசரி உங்கள் தொகுதி நிதியெல்லாம் தாங்கள் அப்படியே உங்கள் தொகுதிக்கே செலவு செய்ததாக கதையளக்கும் நீங்கள், அப்படி உங்கள் தொகுதிக்கு அந்தப் பணத்தை வைத்து, என்னென்ன வேலைகள் செய்தீர்கள் என்பதையும் எடுத்து விட்டிருக்கலாமே……

    Reply
  • Ahmad Nadvi
    Ahmad Nadvi

    Dear Thangeswary,
    I’m sorry I cannot write in Tamil using Tamil fonds,.
    How shamful is it that you contest in this election. Just imegine if your former boss had given a place to contest as a TNA candidate you would have definitely taken that opportunity.

    Therefore it is obviouse that your prime concern always have been your own interest and nothing eles. How can you represent people if you have no political knowledge or common sense. If Ranil Rajapakse had asked you to contest under UNP you would also have said yes. What sort of politician are you?

    How poor the Tamils are? Why cannot you voters dismis this selfish woman. It seems that voters don’t care any more otherwise they owuld not tolerate this kind of woman. Waste of tax payers money by way of her salary.

    Reply
  • john
    john

    தங்கேஸ்வரி அடுத்த தேர்தலில் நீங்கள் எந்த கட்சியில் வேட்பாளராக இருப்பீர்கள்?

    Reply
  • Ra.ruban.
    Ra.ruban.

    வடக்கில் டக்ளஸ் பெரும்பாலும் அவுட். பசிலின் நம்பிக்கைக்குரியவராக அவர் விளங்கவில்லை. இதன் பிரதிபலிப்பே சிறுபான்மைத்தமிழர் மகாசபை ரிஎம்விபி ஆகியன களம் இறக்கப்பட்டுள்ளன.

    சிவாஜியோ பத்மினியோ எடுபடுவார்கள் போல் தெரியவில்லை.

    கூட்டமைப்பை தவிர சனத்திற்கு வேறு தெரிவு இல்லை. சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் கஸ்ரம் இருக்கு. ஆனாலும் ஆள் சுழி. தேசியப்பட்டியலை குறி வைச்சுப்போடுவார்.

    கஜேந்திரன் பொன்னம்பலம் முதிரச்சியில்லா அரசியல் ஆடுகிறார்.

    ரிஎம்விபி கிழக்கில் ஒரு ஆசனம் எடுத்தாலே வெற்றிதான்.

    சித்தார்த்தன் – சிறிதரன் அரசியல் படிக்கவேண்டியிருக்கு. வெறும் அறுவை மட்டும் போதாது.

    தமிழ்மக்களுக்கு ஒருஅளவுக்காவது தேறக்கூடிய தலைமைகள் ஏன் உருவாகவில்லை? இனியாவது உருவாகுமா?

    எதிர்க்கட்சிகள் தமிழ்கட்சிகளின் பலவீனமே மகிந்தாவின் பலம்.

    பல்லி சொன்னதுபோல மகிந்தாவின் பலத்தைக் குறைக்கவேண்டியது இன்றைய தேவை. ஜனாதிபதி தேர்தலில் பல்லி இக்கருத்தை முன்வைத்தாலும் தொடர்ந்து வாதிடக்கூடிய அளவுக்கு அவர் அல்லது அவ பலமாயிருக்கவில்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //எதிர்க்கட்சிகள் தமிழ்க் கட்சிகளின் பலவீனமே மகிந்தாவின் பலம்.//

    முற்றிலும் உண்மை. ஆனால் எமது தமிழ்க் கட்சிகள் இன்னும் சிதவடைந்து, அந்தப் பலவீனத்தை அதிகரிக்கின்றனவே தவிர குறைக்கவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்னும் உசுப்பேற்றும் அரசியலையே நம்புகின்றார். அதனாலேயே விநாயகமூர்த்தி இவரை விட்டு கூத்தமைப்பில் சங்கமமாகியுள்ளார். தமிழர்களில் என்று மக்களையும் மண்ணையும் நேசிக்கும் புதிய தலைமைகள் உருவாகின்றனவோ, அன்றுதான் பலவீனம் பலமாக மாறும்.

    Reply
  • மாயா
    மாயா

    //எதிர்க்கட்சிகள் தமிழ்க் கட்சிகளின் பலவீனமே மகிந்தாவின் பலம்.//

    இது இன்றைய தேவை. சிங்களத் தலைமையை ஆட்டி வைத்த பெளத்த பிக்குகளின் வாயில் பிளாஸ்டர் ஒட்டிய மகிந்தவின் சாமர்த்தியம் , இதுவரை எந்த சிங்கள அரசியல் தலைமைக்கும் இல்லாத தில். அடுத்தது இந்த இனவாத கட்சிகளையும் , எதிரிக் கட்சிகளையும் உதிரிகளாக்கியது. முன்னமே ஜேவீபி 2-3 ஆக முட்டிக் கொள்கின்றன. இனிவரும் காலங்களில் அனைத்துக் கட்சிகளும் உதிரிகளாக கடித்து குதறிக் கொண்டு சின்னா பின்னாமாகும். புலத்திலும் அது நிச்சயம்.

    இதுவே இலங்கை மக்களின் ஒற்றுமைக்கு முத்தாய்ப்பாகும். அதை பலர் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். அதுவே நாளைய இலங்கையின் சுபீட்சத்துக்கும் வழி வகுக்கும்.

    முதலில் இனவாத பெயர் கொண்ட தமிழ் – சிங்கள கொலைகார கட்சிகள் அழிய வேண்டும்.

    Reply
  • palli
    palli

    //முற்றிலும் உண்மை. //
    உன்மைதான் ஆனால் தமிழருக்கு பலன் வருமா??

    //தமிழர்களில் என்று மக்களையும் மண்ணையும் நேசிக்கும் புதிய தலைமைகள் உருவாகின்றனவோ, அன்றுதான் //
    இது சாத்தியமில்லாத போதும் இதுவே தமிழருக்கு குறைந்த பட்ச்ச வாழ்வாவது கிடைக்க வழி வகுக்கும்:

    சரியான கனிப்பு பார்த்திபன்;

    Reply
  • NANTHA
    NANTHA

    //இது இன்றைய தேவை. சிங்களத் தலைமையை ஆட்டி வைத்த பெளத்த பிக்குகளின் வாயில் பிளாஸ்டர் ஒட்டிய மகிந்தவின் சாமர்த்தியம் , இதுவரை எந்த சிங்கள அரசியல் தலைமைக்கும் இல்லாத தில். அடுத்தது இந்த இனவாத கட்சிகளையும் , எதிரிக் கட்சிகளையும் உதிரிகளாக்கியது. முன்னமே ஜேவீபி 2-3 ஆக முட்டிக் கொள்கின்றன. இனிவரும் காலங்களில் அனைத்துக் கட்சிகளும் உதிரிகளாக கடித்து குதறிக் கொண்டு சின்னா பின்னாமாகும். புலத்திலும் அது நிச்சயம்.//

    நல்லதொரு கணிப்பு. உண்மையாகிக் கொண்டிருக்கும் ஒரு செயல்பாடு. பல கட்சிகள் காலம் முழுவதும் மகிந்தவின் எதிர்கட்சியாகவே இருக்கப்போகின்றன. சில கட்சிகள் மஹிந்த அரசுக்கும் தமிழர்களுக்கும் “பாலம்” என்று கூறி வியாபாரம் செய்யவும் போகின்றன.

    Reply
  • rohan
    rohan

    மாயா//இதுவே இலங்கை மக்களின் ஒற்றுமைக்கு முத்தாய்ப்பாகும். அதை பலர் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். அதுவே நாளைய இலங்கையின் சுபீட்சத்துக்கும் வழி வகுக்கும்.//

    ஆனால், தமிழர் தலைமை என்றும் ஒன்றும் இல்லையே!
    நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள். யாருக்கு இப்போது ஒரு உயர்மட்ட கைத்தொழில் மையம் திருமலையிலோ கிளினொச்சியிலோ தேவை?

    அடிப்படை வசதிகளான, உணவு, உறைவிடம், கல்வி, சுகாதாரம் எதுவும் முதலில் வேண்டாமா?

    Reply
  • மாயா
    மாயா

    //rohan on February 27, 2010 2:06 am
    ஆனால், தமிழர் தலைமை என்றும் ஒன்றும் இல்லையே! அடிப்படை வசதிகளான, உணவு, உறைவிடம், கல்வி, சுகாதாரம் எதுவும் முதலில் வேண்டாமா?//

    தமிழர் தலைமைகள் , தமக்காகவும், தமது குடும்பத்துக்காகவும் பாராளுமன்றம் சென்றும், அப்பாவிகளுக்குள் வன்முறையை ஊக்குவித்து , ஆயுதமும் தூக்க வழி காட்டினவே தவிர , அது தமிழருக்காகன நலனுக்காக அல்ல என்பது , கடந்த காலத்தை நோட்டம் விட்டால் புரியும். அந்த அளவு சுயநலமாக சிங்களவனே இருந்ததில்லை.

    தமிழ் , தமிழ் என்று நாமெல்லாம் செத்தோமே தவிர, பசியால் நாம் செத்ததில்லை. பள்ளி செல்ல விடவில்லை என நாம் செத்தில்லை. எனவே தமிழ் தலைமைகள் ஒரு போதும் மக்களது வாழ்வாதாரம் குறித்து யாரும் சிந்தித்ததில்லை.

    ஏனைய உலக நாடுகளோடு நோக்கும் போது, உணவின்றி பெரிதாக இலங்கையில் எவரும் செத்ததில்லை. காட்டு பழங்களை கொய்து சாப்பிட்டுக் கூட வாழக் கூடிய இயற்கை பூமி இலங்கை. யுத்தமே இல்லாமல் பல நாடுகளில் மக்கள் இறக்கிறார்கள். நம் பூமியில் யுத்தம்தான் சுனாமியை விட மக்களைக் காவு கொண்டது. இலங்கையில் , அடிப்படைக் கல்வி இலவசம். பல்கலைக் கழக அனுமதிகளில் மட்டுமே பிரச்சனை. சுவிஸ் போன்ற நாடுகளுக்கு அகதிகளாக வந்தோருக்கு , படிக்க அனுமதியில்லை. தமது தகுதிக்கு வேலை செய்ய அனுமதியில்லை. எவரும் விரும்பாத வேலைகளே கிடைத்தன. இன்று வாயில் விரல் வைக்குமளவுக்கு உயர்ந்து நிற்கிறார்கள். அனைத்தையும் மதியால் வென்று இங்கு வந்தோர் வாழ்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் இலங்கையில் பெரிதாக படித்தவர்கள் இல்லை. உயர்வாக வாழ்ந்தோரும் இல்லை. இதற்காக எவரும் போராடவில்லை. ஆனால் கிடைத்ததை பிடித்துக் கொண்டு எழும் சாதுர்யமும் , தைரியமும் கீழ் மட்ட தமிழனிடம் என்றும் உண்டு. அதை மழுங்கடித்து , சாவு வரை காவு கொண்டவர்கள்தான் இலங்கையில் இருந்த , இருக்கும் தமிழ் தலைமைகள். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

    உறைவிடம் , நாலு கிடுகுக்குகளைக் கொண்டு ஒரு குடில் போட்டுக் கொண்டு அரச நிலங்களில் வாழலாம். அந்த அளவு நிலப்பரப்பு , யாருமற்று சும்மா கிடக்கிறது. சில காலம் வாழ்ந்தாலே அதை சொந்தமாக்கிக் கொள்ளலாம். அது சட்டம்.

    இனி குண்டு விழாது. யாரும் கைது செய்ய மாட்டார்கள். யுத்த களத்துக்கு தள்ளிக் கொண்டு போக மாட்டார்கள். பலிகளாக்க மாட்டார்கள் என, நிம்மதியாக இருக்கலாம் என்ற நிலை உருவானாலே போதும், அது அடுத்த நடவடிக்கையில் ஈடுபட அது மன தைரியத்தைக் கொடுக்கும். நம்பிக்கைக் கொடுக்கும். புலிகள் , மக்களிடம் இருந்ததையும் அழித்து நடு வீதியில் அம்போ என விட்டு விட்டார்கள். இவை வறுமையினால் ஏற்பட்டதல்ல. இதற்காக புலத்தில் இருந்து போராட்டத்துக்கு பணம் கொடுத்தோர் , மாதா மாதம் புலிகளுக்கு கொடுத்ததில் 1 சதவீதம் கொடுத்தாலே , வீதியில் நிற்கும் மனிதர்கள் வாழ்வில் வெளிச்சம் கிடைக்கும். அது இன்றைய தேவை. அதை விட்டு வட்டுக் கோட்டையும் , நாடு கடந்த தமிழீழமும் இன்றைய தேவையல்ல. அதை உணர்ந்தாலே அங்கிருக்கும் உறவுகள் குறித்து புலத்து மக்கள் நினைக்கிறார்கள் என நினைப்பார்கள்? இல்லையென்றால் புலத்து தமிழருக்கும் , இலங்கை தமிழ் அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் இருக்காது.

    சுகாதாரம், இலவச வைத்திய சேவை எல்லோருக்கும் இருக்கிறது. இது பொது.

    அந்த மக்கள், ஒரு பிடி சாதத்தோடு நிம்மதியாக வாழ்ந்தாலே இப்போதைக்கு போதும். இருக்கும் தமிழ் தலமைகள் மாடி வீட்டில் இருந்து கொண்டு , கொட்டிலைக் கூட சுடுகாடாக்கவே , இன்றும் வழி காட்டுகிறார்கள். புலத்து அரசியல் வங்குரோத்துகளும் , அந்த அப்பாவிகளை வைத்து தமது மடியை நிரப்பவே காரியங்களை செய்கிறார்கள். திட்டங்களை போடுகிறார்கள். இவர்களை விரட்ட வேண்டிய தார்மீக பொறுப்பு புலம் பெயர் மக்களிடமும் உண்டு.

    மகிந்த குடும்பம் கூட தனது மடியை நிரப்புகிறார் என தெரிந்தாலும் , அதனால் சில நன்மைகள் கிடைப்பதை பார்க்க முடிகிறது. ஏனைய தலைமகள் செய்யாதவை அல்ல இவை. அப்போதைய யுத்தம் அதை மறைத்தது. இன்று யுத்தம் இல்லாததால் இதுவே முக்கிய செய்தி. சந்திரகா லண்டனில் மாளிகை வாங்கியதை விடவா? ரணில் , அமெரிக்காவில் பெறும் பணத்தை விடவா? ஏன்? ஜேவீபிக்கு கூட பணம் அமெரிக்க அரசால்தான் கிடைக்கிறது. இது வியப்பானது. ஆனால் உண்மை.

    மகிந்த சிந்தனைக்குள், பல காலம் முன்னமே , GA , AGA போன்ற அரசு அதிகாரிகள் கைகளுக்கு பிராந்திய கட்டுப்பாடுகள் மாற வேண்டும் எனும் திட்டம் முன் வைக்கப்பட்டது. கலந்துரையாடப்பட்டது. அதில் பாராளுமன்ற உறுப்பினர்களது எண்ணிக்கை குறைப்பு மிக முக்கியமானது. அது இனி வரும் காலங்களில் நடைமுறைக்கு வரும். அது இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னராக இருக்கலாம். பாராளுமன்றத்தில் மட்டுமே அரசிய்வாதிகளுக்கு முதன்மை, பிராந்திய நடைமுறைகள் படித்த அரசு உத்தியோகத்தர் கைகளுக்கு செல்ல வேண்டும் என்பது சிங்கள புத்தி ஜீவிகளின் திட்டம். அதை மகிந்த ஏற்றுள்ளார். அதன் முதல்படி வன்னி மக்களை பார்க்கும் திட்டம் , வவுனியா அரச அதிபர் கைகளில் ஒப்படைக்கப்பட்டு , வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அது அரசுக்கு பூரண வெற்றி. இதுவே அரசியல்வாதிகள் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தால் , நிலமை மிக மோசமாக மாறியிருக்கும். சில குளறுபடிகளாலும் , பெரிதாக தாக்கம் இல்லை.

    தவிர, ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அளிக்கப்படும் வசதி வாய்ப்புகள் , ஊதியம் , பென்சன் , பாதுகாப்பு போன்றவற்றுக்கான செலவீனங்கள் ஒரு கிராமத்தை முன்னேற்ற போதுமானது. அவர்களது வெட்டிச் செலவை இல்லாமல் பண்ணி, இதனடிப்படையில் ஒவ்வொரு கிராமமாக முன்னேற்றினாலே நாட்டின் பாதி முன்னேறும். அடுத்தவை எல்லாம் தானாக, அந்த மக்களாலே முன்னேறும். எனவே ஊதாரி தலைமைகளான , மொழி வாதம் , இனவாதம் பேசி மக்களை மனநோயாளர் ஆக்குவோர் இல்லாமல் போய் , இனவாதமற்று மக்களை நேசிக்கும் , நாட்டை நேசிக்கும் தலைமைகள் மிஞ்சி, ஏனையவர்கள் இல்லாமல் போக வேண்டும். அதுவே இன்றைய தேவை. அது எதிர்காலத்தில் நடக்கும். அதை பார்த்து உலகம் வியக்கும். அழிந்து போன ஜெர்மனியும், யப்பானும் உலகையே வியக்க வைக்கும் என்றால் , இலங்கை முத்து. அது எதிர்காலத்தில் ஜொலிக்கும். இந்த வரம் புலம்பெயர்ந்தோர் சென்று வாழக் கூட வழியாகும்.

    Reply
  • Ajith
    Ajith

    Madam,
    Now you have reached Himalaya. No problem.

    Reply