விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் -03 : மிகப் பெரும் மீதி முறை சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு நன்மை பயக்கத்தக்கதே – புன்னியாமீன்

election_cast_ballots.jpgவிகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் 6 படி முறைகளில் போனஸ் ஆசனத்தை வழங்குதல்,  குறைந்த பட்சம்  5 வீத வாக்குகளைப் பெறாத கட்சிகள் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல் போன்ற இரண்டு படி முறைகளையும்,  இந்த இரண்டு படிமுறைகளினூடாகவும் இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், கடந்தவாரம் நோக்கினோம். ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் ஏனைய முறைகள் பற்றி இன்று நோக்குவோம்.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் மூன்றாவது படி முறை தொடர்புடைய வாக்குகளை கணிப்பீடு செய்வதாகும். இதனையும், நாம் ஏற்கனவே குறிப்பிட்ட உதாரணம் மூலமாகவே விளக்குவோம். அதாவது x எனும் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆசனங்கள் உள்ளன என்றும், இந்தப் 10 ஆசனங்களுக்குமாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் 3 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன என்றும்: போட்டியிட்ட கட்சிகளும், குழுக்களும் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளன எனவும் கொள்வோம்.

கட்சி A  = 5400 வாக்குகள்
கட்சி B  = 3600 வாக்குகள்
கட்சி C  = 1410 வாக்குகள்
சுயேட்சைக்குழு 1 = 540 வாக்குகள்
சுயேட்சைக்குழு 2 = 750 வாக்குகள்
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 11850
நிராகரிக்கப்பட்ட வாக்கு 150
செல்லுபடியான வாக்கு 11700

இரண்டாம் படி  முறையின் கீழ் வெட்டுப் புள்ளி வாக்கினைப் பெறாத சுயேட்சைக்குழு 1 போட்டியிலிருந்து நீக்கப்பட்டது.

மூன்றாவது படி முறை தொடர்புடைய வாக்குகளைக கணிப்பிடுதல்.

இங்கு தொடர்புடைய வாக்குகள் எனும் போது தேர்தல் முடிவுகளின் படி ஒரு அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்புடைய வாக்கினைக் குறிக்கும். அதாவது,  ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் இருந்து,  5 வீதத்துக்குக் குறைவான வாக்குகளைப் பெற்று நீக்கப்பட்ட கட்சிகள் பெற்ற வாக்குகளையும்,  நிராகரிக்கப்பட்ட வாக்குகளையும்,  கழித்துப் பெறப்படுவதே தொடர்புடைய வாக்குகளாகும். 

தொடர்புடைய வாக்குகள் = அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – (நீக்கப்பட்ட வாக்குகள் +  நிராகரிக்கப்பட்ட வாக்குகள்)

எமது உதாரணப்படி அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 11, 850 . இவ்வாக்குகளில் இருந்து நீக்கப்பட்ட வாக்குகள் 540 உம், நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 150உம் கழிக்கப்பட்டு பெறப்படுவதே தொடர்புடைய வாக்குகள் ஆகும்.

அதாவது
தொடர்புடைய வாக்குகள்  = 11850 – (540+150)  = 11160
இங்கு பயன்படுத்தப்படும் வாக்குகள் 11160 மட்டுமே.

4வது படிமுறை – முடிவான எண்ணைக் கணிப்பீடு செய்தல்

ஓர் ஆசனத்தைப் பெற குறைந்தபட்சம் ஒரு கட்சி புறைந்த பட்சம் பெற வேண்டிய வாக்கே முடிவான எண்ணாகும். அதாவது ஆசன எண்ணிக்கையில் இருந்து ஒன்றைக் கழித்து வரும் விடையினால் தொடர்புடைய வாக்குகளை வகுத்தல் வேண்டும்.

முடிவான எண் = தொடர்புடைய வாக்குகள்/ ஆசன எண்ணிக்கை – 1

எமது உதாரணப்படி
முடிவான எண்  = 11160 /  (10-1)  =  1240

ஏற்கனவே போனஸ் ஆசனம் வழங்கப்பட்டமையால் இங்கு மொத்த ஆசன எண்ணிக்கையிலிருந்து 1 கழிக்கப்படும். எமது உதாரணப்படி 1240 வாக்குகளைப் பெற்ற ஒவ்வொரு அரசியல் கட்சிகளும்,  குழுக்களும் ஓர் ஆசனத்தைப் பெற உரித்துடையதாகும்.

5வது படிமுறை – முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்

போட்டியிலுள்ள ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற மொத்த வாக்குகளை முடிவான எண்ணால் வகுத்து முழுமையான எண்ணுக்கமைய ஆசனங்களை வழங்குதல்.

எமது உதாரணப்படி 

A கட்சி பெற்ற வாக்குகள் 5400/ 1240 = 4
இங்கு  முழுமையான எண்ணுக்கமைய 4 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
354 வாக்குகள் மீதியாகின்றன.

B கட்சி பெற்ற வாக்குகள் 3600/ 1240 = 2
இங்கு  முழுமையான எண்ணுக்கமைய 2 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
903 வாக்குகள் மீதியாகின்றன.

C கட்சி பெற்ற வாக்குகள் 1410/ 1240 = 1
இங்கு  முழுமையான எண்ணுக்கமைய 1 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
137 வாக்குகள் மீதியாகின்றன.

சுயேட்சைக்குழு – 1 போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. சுயேட்சைக்குழு – 2 முடிவான எண்ணைப் பெறாமையால் ஆசனத்தைப் பெறவில்லை. இருப்பினும் சுயேட்சைக்குழு 2 பெற்ற 900 வாக்குகளும் பயன்படுத்தப்படாமையால் இந்த 900 வாக்குகளும் மீதியாகின்றன.

எனவே 5ம் படிமுறை முடிவின்போது 10 ஆசனங்களைக் கொண்ட X தேர்தல் மாவட்டத்தில் ஆசனங்கள் பின்வருமாறு பகிரப்பட்டிருக்கும்.

           கட்சி           போனஸ்    முடிவான எண்ணுக்கமைய
கட்சி   A                         01                                    04
கட்சி B                           –                                      02
கட்சி C                           –                                       01
சுயேட்சை 1                –                                         –
சுயேட்சை 2                –                                         –

5ம் படிமுறை நிறைவில் 08 ஆசனங்களே பகிரப்பட்டிருக்கும் மீதான 2 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ள 6 வது படிமுறையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

6ம் படிமுறை – மிகப் பெரும் மீதி முறை

பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது விகிதாசார முறையில் பிரச்சினைக்குரிய ஆசனங்களைப் பெற, கடைப்பிடிக்கப்படும் மிகப்பெரும் மீதி முறையே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுபான்மைக் கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் வாய்ப்பாக அமைகின்றதெனலாம்.

5ம் படிமுறையின் போது முடிவான எண்ணுக்கமைய ஆசனங்கள் பகிரப்பட்ட பின்பு மிகுதியாக உள்ள வாக்குகளின் பெரும்பான்மைக்கமைய பிரச்சினைக்குரிய ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும். இம்முறையையே மிகப்பெரும் மீதி முறை என அழைப்பர்.

எமது உதாரணப்படி மிகுதிகள் வருமாறு:

A கட்சி மீதி      354 வாக்குகள்
B கட்சி மீதி      903 வாக்குகள்
C கட்சி மீதி       137 வாக்குகள்
சுயேட்சை 2     மீதி     900 வாக்குகள்

எனவே பிரச்சினைக்குரிய 2 ஆசனங்களும் ஆகக் கூடுதலான மீதியைப் பெற்றுள்ள B கட்சிக்கு ஓர் ஆசனம் என்றும்,  இரண்டாவது மீதியைப் பெற்றுள்ள சுயேட்சைக் குழு 2க்கு ஓர் ஆசனம் என்றும் பகிரப்படும்.

எனவே, இறுதித்தேர்தல் முடிவானது பின்வருமாறு அமையும்.

A கட்சி  போனஸ் முறையின் கீழ் 01ஆசனத்தையும்,  முடிவான எண்ணுக்கமைய 4 ஆசனங்களையும், கொண்டதாக மொத்தம் 5 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்.

B  முடிவான எண்ணுக்கமைய 2 ஆசனங்களையும், மிகப் பெரும் மிகுதிக்கமைய ஒரு ஆசனத்தையும், கொண்டதாக மொத்தம் 3 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்.

C முடிவான எண்ணுக்கமைய 1 ஆசனத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ளும்.

சுயேட்சைக் குழு 2 மிகப் பெரும் மிகுதிக்கமைய 1 ஆசனத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ளும். மேற்குறிப்பிட்ட அடிப்படையில் X மாவட்டத்தில் 10 ஆசனங்களும், வழங்கப்படும். 

எனவே குறைவான வாக்குகளைப் பெற்ற போதிலும் கூட மிகப் பெரும் மிகுதி முறையின் கீழ் சுயேட்சைக்குழு 2 இனால் ஓர் ஆசனத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

2000ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலை எடுத்துநோக்கும் போது மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆசனங்களை வென்றெடுக்கவும், தேசிய ஐக்கிய முன்னணி (NUA) சில ஆசனங்களை வென்றெடுக்கவும் மிகப் பெரும் மிகுதி முறையே காரணமாக அமைந்தது. கண்டி தேர்தல் மாவட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணி ஓர் ஆசனத்தை வென்றெடுத்தமைக்குக் காரணம் இந்த மிகப்பெரும் மிகுதி முறையே.

எனவே விகிதாசார தேர்தல்முறை காரணமாக சிறுபான்மைக் கட்சிகளும், மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளும் அதிக பயனைப் பெறுகின்றன என்றால் மிகையாகாது.

விருப்பு வாக்குகள்

ஆசனப்பகிர்வின் போது கட்சிகள் பெற்ற ஆசனங்களுக்கமைய,  வெற்றி பெற்ற கட்சியில் கூடிய விருப்பத் தெரிவினைப் பெற்ற அபேட்சகர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்.

தேசியபட்டியல் மூலம் மீதான பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல் முறை பற்றி அடுத்த வாரம் நோக்குவோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • ali
    ali

    dear punniyameen
    i could see some calculation errors in your article.example, party A 5400V0TES DIVIDED BY 1240 SHOULD BE 4 SEATS BALANCE 440 how come 354 explain.thanks punniyameen very informative.

    Reply